(இறந்து போன ஒருவரின் ஆவியையோ
ஆன்மாவையோ கூப்பிட முடியுமா? அதனுடன் பேச முடியுமா? அதனிடம் கேள்வி கேட்டுப் பதில் பெற முடியுமா? என்ற
கேள்விகளுக்கு ஹஸ்ரத் நான்காவது கலீஃபத்துல் மஸீஹ் மிர்ஸா தாஹிர் அஹ்மது (ரஹ்)
அவர்கள் அளித்த பதில்)
திருக்குர்ஆன்,
ஹதீஸ், இமாம் மஹ்தி (அலை) அவர்களின் நூல்கள் மற்றும்
அனுபவங்கள் எனக்கு முன்னுள்ள கலீஃபாக்களின் கருத்துகள் ஆகியவற்றை நீங்கள்
படித்திருந்தால் இது பற்றி தெளிவாக தெரிந்திருக்க முடியும். இறந்து போனவர்களின்
ஆன்மாக்களோடு எவராலும் தொடர்பு கொள்ள இயலாது என்று கூறுவதற்கில்லை. ஆனால் அவ்வாறு
முடியுமென்றால் அது ஆன்மீகக் காட்சியில் மட்டுமே சாத்தியம். எனினும் எது முடியாதது, எது தப்பு, எது தவறு என்பதெல்லாம்
திருக்குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் நான் முன்பே சொன்ன மூலாதாரங்களிலும்
காணக் கிடக்கின்றன.
ஆன்மா பிரிந்து போவது குறித்து
திருக்குர்ஆனின் ஒரு குறிப்பை முதலில் நான் உங்களின் கவனத்திற்கு கொண்டு
வருகின்றேன். திருக்குர்ஆன் கீழ்வருமாறு கூறுகிறது:
"அவர்களுள் ஒருவருக்கு மரணம்
வந்து விட்டால் அவர் (மன்றாடி இவ்வாறு) கூறுவார்: என் இறைவா! என்னை திரும்ப
அனுப்பி வீடு. நான் விட்டு வந்த இட(மாகிய உலக)த்தில் நற்செயல்களை நான் செய்வதற்காக
(என்னை திரும்பவும் அங்கு அனுப்பிவிடு) அது நடக்கக் கூடியதன்று. நிச்சயமாக அது
அவன் பேசும் வெறும் பேச்சாகும். அவர்கள் மீண்டும் எழுப்பப்படும் நாள் வரை
அவர்களுக்குப் பின்னால் ஒரு தடை உள்ளது. (எனவே அவர்கள் உலகிற்கு ஒரு போதும்
திரும்ப வரமாட்டார்கள்)" (23:100,101)
இது, 'பிரிந்து போன ஆன்மாக்கள்' பூமிக்கு ஒரு போதும்
திரும்பி வராது என்பதைத் தெரிவிக்கும் திருக்குர்ஆனின் மிகத் தெளிவான
அறிவிப்பாகும்.
எனினும் இந்தச் செய்தியை நாம்
புரிந்து கொண்டாலும் 'திரும்புதல்' என்பதில்
இன்னும் ஒரு வழி உள்ளது. அது எவ்வகையான வழி? விட்டுச் சென்ற
உடலுக்குத் திரும்ப இயலாது என்றாலும் ஆவி திரும்ப வர இயலும் என விவாதிக்க இயலும்.
ஆனால் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்)
அவர்களின் அனுபவங்கள் இதையும் தள்ளுபடி செய்து விடுகிறது. சுவர்க்கத்தில் ஆன்மாக்கள்
ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு காட்டப்பட்டது. குறிப்பாக உஹது போரில்
உயித்தியாகம் செய்த ஒரு நபித்தோழர் இறைவனுடன் உரையாடும் ஒரு நிகழ்வு ஆன்மீகக்
காட்சியாக ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுக்குக் காட்டப்பட்டது.
அந்த நபித்தோழரின் மகன் கவலையாலும்
துக்கத்தாலும் வாடி இருந்ததைக் கண்ட ஹஸ்ரத் நபிகள் நாயகம் ﷺ அவர்கள்,
உங்களின் துக்கத்தை இலேசாக்கும் ஒன்றை நீங்கள் கேட்க விரும்புகின்றீர்களா என்று
அவரிடம் கேட்க வினவினார்கள். பின்னர் அவருடைய தந்தையை சுவர்க்கத்தில் கண்டதையும்
ஹஸ்ரத் நபிகள் நாயகம் ﷺ அவர்கள் விபரித்தார்கள்.
அந்த நபித்தோழர் இறைவனின் முன்னாள்
வந்த போது அவர் தனது உயிரை இறைவழியில் அர்ப்பணித்தது குறித்து மகிழ்ந்த இறைவன்,
அவர் விரும்பும் வெகுமதியைக் கேட்கச் சொன்னான். அதற்கு அந்த நபித்தோழர் தன்னை
மீண்டும் உலகுக்கு அனுப்பச் சொன்னார். அவ்வாறு இறைவன் அவரை அனுப்பினால் அவர்
மீண்டும் இறைவழியில் தனது இன்னுயிரை அர்ப்பணிப்பதாகவும்,
இவ்வாறு நூறுமுறை நடைபெற வேண்டும் என்றும் கூறினார். அதற்கு அவர் கூறிய காரணம்
இறைவழியில் உயிரை அர்ப்பணிப்பதில் கிடைக்கும் சுகமும் இன்பமும் ஈடிணையற்றது
என்றார். அதற்கு இறைவன் இறந்தவர் மீண்டும் பூமிக்கு வருவதை தடை செய்யும் சட்டத்தை
தான் விதித்திருப்பதாகவும் இது திருக்குர்ஆனில் தெளிவாகக்
குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் கூறினான். இங்கு ஆன்மாவுக்கோ உடலுக்கோ பூமிக்குத்
திரும்ப இயலாது என்பது தெளிவுப்படுத்தப்பட்டிருக்கிறது. (நல்லடியார்களின்) ஆன்மாக்கள்
இறைவனுடன் வைக்கப்பட்டுள்ளன. அங்கு அவற்றிற்கு பேரின்பமும்,
பேருவகையும் கிடைக்கிறது. இந்நிலையில் அவற்றை திரும்ப அனுப்புவதற்கு எந்த
அவசியமும் இல்லை. அவசியமற்றதை இறைவன் ஒரு போதும் செய்வதில்லை. ஆன்மா இவ்வுலகிறக்கு
திரும்பினாலும் அவற்றிற்கு வாழ்வின் விவகாரங்களில் பங்கு பெற இயலாது. நன்மையையோ
தீமையையோ செய்ய முடியாது. இது கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய ஒன்று.
இது தொடர்பான இன்னொரு செய்தி
வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஹதீஸ்களை படிக்கின்ற போது ஹஸ்ரத் நபிகள்
நாயகம் ﷺ அவர்கள் இறந்து போன அவர்களின் கொடிய எதிரிகளை விளித்து அடக்கம்
செய்யப்பட்ட இடங்களில் நின்று கொண்டு 'எங்களின் இறைவன் எங்களுக்கு வாக்களித்தவை
உண்மையானவை என்று நீங்கள் கண்டு கொண்டீர்களா? என்று நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். இதனை கண்டு ஹஸ்ரத் உமர் (ரலி) அவர்கள்
அல்லாஹ்வின் தூதரே! கேட்க இயலாத இறந்தவர்களிடமா தாங்கள் பேசுகிறீர்கள்? என்று வினா எழுப்பினார்கள். அதற்கு நபிகள் நாயகம் ﷺ அவர்கள் எனது
செய்தி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டால் நீங்கள் இவ்வுலகில் கேட்பதை விட
தெளிவாகக் கேட்பார்கள் என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இறந்து போனவர்களின் ஆவிகள்
இவ்வுலகிற்கு மீண்டும் வரும் அவர்களோடு பேசலாம் என்ற தவறான கொள்கைக்கு ஆதாரமாகக்
காட்டப்படுவதுண்டு. எவ்வாறிருப்பினும் மேற்கண்ட இரண்டு ஹதீஸ்களும் ஆவிகள் வருவது
பற்றிய எந்தக் குறிப்பும் இல்லை. என்ன கூறப்பட்டிருக்கிறது என்றால்,
ஆவிகள் எப்படியோ ஒரு வகையில் அவற்றிற்கு கூறப்படுகின்றவற்றை கேட்கின்றன
என்பதேயாகும்.
இது தொடர்பான இன்னொரு விஷயம்,
நபிகள் நாயகம் ﷺ அவர்கள் தமது தோழர்களுக்குச் சொன்னது,
அவர்கள் அடக்க ஸ்தலங்களில் நுழையும்போது "அஸ்ஸலாமு அலைக்கும் யா அஹ்லல்
குபூர்" கல்லறைகளில் இருப்பவர்களே உங்களுக்கு அமைதி உண்டாவதாக என்று கூற
வேண்டும். இந்தச் செய்தி அவர்களுக்கு எப்படியேனும் தெரிவிக்கப்படவில்லை எனில் இந்த
வாழ்த்தை அவர்கள் எவ்வாறு கேட்பார்கள்? இதிலிருந்து
கல்லறைகளை சுற்றி அங்கு அடக்கப்பட்டவர்களின் ஆவிகள் நிற்கின்றன என்று நாம் தவறாக
கருதி விடக்கூடாது. மாறாக அந்தச் செய்தி ஒரு வகையான தொடர்பு முறையில்
அவர்களுக்குத் தெரிவிக்கப்படுகின்றன என்றே புரிந்து கொள்ளப்பட வேண்டும். இது
முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.
நாம் தொடர்ந்து ஆராய வேண்டிய விஷயம்
என்னவென்றால், நபிகள் நாயகம் ﷺ அவர்கள் நம்மை வீட்டில் அல்லது வெளியில்,
பகலில் அல்லது இரவில் இறந்தவர்களோடு பேசுமாறு ஏன் கூறவில்லை?
என்பதாகும். அடக்கஸ்தலங்களில் வாழ்த்துச் சொல்வதைத் தவிர இறந்தவர்கள் தொடர்பாக
வேறு எந்தச் செயல்பாட்டையும் அவர்கள் கூறாதது ஏன்? இரண்டு
போன ஒருவரின் ஆன்மாவிற்கும் அவரது கல்லறைக்கும் ஓர் ஆன்மீகத் தொடர்பு இருக்கலாம்
என்பதையே இது உணர்த்துகிறது. ஆன்மாவிற்கும் அதன் கல்லறைக்குமிடையே விபரிக்க இயலாத
ஒரு தொடர்பு இருந்த போதிலும் ஆன்மா மருவுலகிலுள்ள தனது இருப்பிடத்தை விட்டு நீங்கி
கல்லறைக்கு வரும் என்று நம்மால் எண்ணயியலாது. எப்படியிருப்பினும் ஆன்மாக்கள்
நமக்கு பதிலளிக்கும் என்று நாம் கருதினால் அதற்கு என்ன ஆதாரம் நம்மிடமிருக்கிறது.
இது ஆன்மீக காட்சிகளிலேயே சாத்தியம். இதற்கு ஏராளமான முஸ்லிம் சூஃபிகள் சான்று
காட்டியுள்ளனர்.
இந்த சூஃபிகள்,
இக்கால கடின நெஞ்சமுள்ள முல்லாக்களைப் போன்றவர்கள் அல்ல. மாறாக, இவர்கள் தமது வாழ்நாள் முழுவதையும் இறையன்பிலும் இறைவணக்கத்திலும் கழித்த
இறையச்சமுள்ள மக்கள். இத்தகையோர் தமது பெரியவர்களின் கல்லறைகளில் அவர்களிடம்
எதையும் கோராமல் அவர்களுக்காக இறைவனை வேண்டிய நேரங்களில் ஆன்மீக காட்சிக்கு
வயப்பட்டிருந்தார்கள் என்பது ஆதாரப்பூர்வமான வரலாற்றிலிருந்து புலனாகிறது. இவர்கள்
இத்தகு ஆன்மீகக் காட்சிகளில் உண்மையில் உரையாடுவது போன்று ஆன்மாக்களுடன்
உரையாடுகிறார்கள்.
எனினும் இக்கால ஆன்மீக வாதிகளின் சில
வாதங்களிலிருந்து இது முற்றிலும் வேற்பட்ட ஒன்று. இந்த ஆன்மீக வாதிகளோ நீங்கள்
நினைத்த இடத்திற்கு ஆவிகள் வரும் அல்லது அங்கு தோன்றும் என்கிறார்கள்.
இறந்தவர்களின் கல்லறைகளை அவர்கள் இவற்றோடு தொடர்பு படுத்தவுமில்லை. மேலும் அவர்கள்
ஆன்மீக காட்சியிலல்லாது நீங்கள் முற்றிலும் விழித்திருக்கும் நிலையில் ஆவிகள்
உங்களிடம் வந்து உரையாடும் என்று கூறுகின்றனர். நீங்கள் மற்றவர்களுடன் உரையாடிக்
கொண்டிருக்கும் அதே நேரத்தில் ஆவிகளுடனும் பேசலாம் செய்திகளைப் பெறலாம் என்பதே
இதற்குப் பொருள். எவ்வாறாயினும் இவற்றிற்கு திருக்குர்ஆன்,
ஹதீஸ், இஸ்லாமிய மகான்களின் அனுபவங்கள் ஆகியவற்றில் எவ்வித
ஆதாரமும் இல்லை.
கஷ்ஃப் எனப்படுவது ஓர் ஆன்மீக அனுபவமாகும்.
இந்த நிலையை அடையும் ஒருவர் அதில் மறுவுலக பொருள்களைக் கூட காணயியலாது. உயிருள்ள
ஒருவரது ஆவி மாறுவுலகிற்கு செல்கிறது என்றோ பொருட்கள் இடம் பெயர்கின்றன என்றோ இது
பற்றி கருத இயலுமா? இத்தகு காட்சியில் ஒருவர் அவர் இதற்கு முன்
காணாத பொருள்களையும் இடங்களையும் காண முடியும். ஆனால் அப்படிக் காண்கின்றவர் அவர்
இருக்கின்ற இடத்தில் இருந்த படியே அவற்றைக் காண்கின்றார். அவர் காணும் பொருள்களும்
இடங்களும் கூட அவரிடம் வருவதில்லை.
இது எவ்வாறு இருக்கிறது என்றால்,
ஹஸ்ரத் நபிகள் நாயகம் ﷺ அவர்கள் ஜெருசலம் நகருக்குச் சென்றிருப்பது போன்று ஓர் ஆன்மீகக்
காட்சியில் கண்டார்கள். அவர்கள் அதுபற்றி மக்களிடம் பேசிய போது ஒரு யூதர்
குறுக்கிட்டு அந்த நகர் எப்படி இருந்தது என்று கேட்டார். இந்த யூதர் ஜெருசலம்
நகருக்கு சென்று வந்தவர். ஹதீஸில் வருகிறது, நபிகள் நாயகம் ﷺ அவர்கள் சிறிது நேரம் மவுனமாக இருந்தார்கள். ஏனெனில்
அவர்கள் அந்த நகரை ஓர் ஆன்மீக காட்சியில்தான் கண்டிருந்தார்கள். அதனால் அந்த நகர்
எவ்வாறு அமைந்திருந்தது என்பது அவர்களுக்கு தெளிவாகத் தெரியவில்லை. இந்த இக்கட்டான
தருணத்தில் அவர்களுக்கு மற்றுமொரு ஆன்மீக காட்சி காட்டப்பட்டது. அவர்கள் மேடையில்
நின்றிருந்த நிலையில் ஜெருசலம் நகரின் முழுத் தோற்றம் அவர்கள் முன் வந்தது. சாலமன்
ஆலயமும் ஏனைய முக்கியமான இடங்களும் அதில் தெரிந்தன. நபி ﷺ
அவர்கள் அவற்றைப் பார்த்து அப்படியே மக்களிடம் விபரித்தார்கள். உண்மையில்
ஜெருசலம் நபி ﷺ அவர்களிடம் வரவில்லை. அப்படி வந்திருந்தால் மக்களெல்லாரும்
அதனைக் கண்டிருப்பார்கள். ஆனால் நபி ﷺ
அவர்களைத் தவிர வேறு எவரும் அதனைக் காணவில்லை.
இஸ்லாமியச் செய்திகளில் ஆவிகளைக்
கண்டதும் சந்தித்ததும் கல்லறைகளிலேயே நிகழ்ந்ததாகக் கூறப்பட்டிருக்கிறது. ஏனெனில்
ஆன்மாக்களுக்கு அவற்றின் கல்லறைகளுடன் தொடர்பு உண்டு எனக் கூறப்படுகிறது. எனினும்
இந்தத் தொடர்பு எத்தகையது என்பது நமக்கு புரியாத ஒரு புதிராகும்.
இமாம் மஹ்தி (அலை) அவர்கள் இதனை
முழுமையாக ஆதரித்துள்ளார்கள். நாஸ்திகர்களும் நம்பாதவர்களும் என்ன சொன்ன போதிலும்
சொந்த அனுபவத்தின் அடிப்படையில் ஆன்மாவிற்கும் அதன் உடல் புதையுண்ட கல்லறைக்கும்
தொடர்புண்டு என அவர்கள் ஆணித்தரமாகக் கூறியுள்ளார்கள்.
நீங்கள் பயபக்த்தியுள்ளவராக இருந்தால்,
நீங்கள் இறைவனை வேண்டினால், நீங்கள் உங்களின் மனத்தை
தூய்மைப்படுத்தவும் அதிலுள்ள கசடுகளை அகற்றவும் தேவையான ஆன்மீகப் பயிற்சிகளை
மேற்கொண்டால், உங்களின் உள்ளம் தூய்மை அடைந்து மெருகூட்டப்
பெற்றால் அப்போது உங்களுக்கு அத்தகு ஆன்மீகக் காட்சிகள் காட்டப்படும். அவற்றில்
இறந்து போனவர்களின் ஆன்மாக்களுடன் தொடர்பு ஏற்படுத்த இயலும். அது காட்சியாக
இருந்தாலும் அது உண்மையாக இருக்கும். சிலசமயம், நீங்கள்
காணுகின்ற ஆன்மா, உண்மையான - இதற்கு முன் நீங்கள் அறியாத
சிலவற்றை கூறவும் கூடும்.
இறுதியாக ஒன்றைக் குறித்து எச்சரிக்கை
செய்ய விரும்புகிறேன். ஆன்மாக்களுக்கோ, ஆவிகளுக்கோ மக்களுக்குப் போதிக்க இறைவன் அதிகாரம்
வழங்கவில்லை. ஆவிகள் இறைவனின் தூதுவர்களாக பணிபுரிவதில்லை. ஆவிகளின் தூதுச் செய்திகளை
மக்கள் கேட்டு அதன்படி அவர்கள் நடக்க வேண்டும் என்பன போன்ற எந்தக் குறிப்பும் திருக்குர்ஆனிலோ, ஹதீஸ்களிலோ இமாம் மஹ்தி (அலை) அவர்களின் நூல்களிலோ இல்லை. ஏனைய இஸ்லாமிய மகான்களின்
இலக்கியங்களில் கூட இவை இல்லை. இறைவனின் செய்தித் தொடர்பு ஏற்பாட்டில் ஆவிகளுக்கு இடமில்லை.
அதில் வானவர்களும் மனிதர்களுமே தூதர்களாக பங்குபெறுகின்றனர்.
ஆன்மீகக் காட்சிகளிலல்லாது வேறு வகையில்
ஆவிகள் பேசியதாக எந்தக் குறிப்பும் இஸ்லாமிய இலக்கியங்களில் இல்லை. ஆனால் சூஃபிகள்
மற்றும் மகான்களின் வரலாறுகளில், அவர்கள் இறந்து போனவர்களின் ஆன்மாக்களுடன் பேசியது
பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. ஆனால் இவை எதுவும் பௌதீகமானவை அல்ல, மாறாக அவையாவும் கஷ்ஃப் என்னும் ஆன்மீக நிலையிலேயே நிகழ்ந்திருக்கின்றன.
இதற்கு ஆதாரம் என்னவென்றால், இப்படிக்
காணப்பட்ட ஆன்மாக்கள் அவற்றின் மனித உருவிலேயே காணப்பட்டன. ஆனால் அந்த ஆன்மாக்கள் மனித
உடல்களுக்குள் மீண்டும் புகுந்து கொள்ளவில்லை. அவை காட்சியின் போது உண்மையில் மனித
உரு எடுக்கவுமில்லை. இதற்கு இறைவன் அனுமதி அளிக்கவுமில்லை. அது மட்டுமல்ல அந்த உடல்கள்
எப்போதோ சிதைந்து மண்ணோடு மண்ணாகிப்போயிருக்கும்.
இவ்வாறெல்லாமிருந்தும் ஒருவர் வேறு வகையாக
சிந்தித்தால், அவர், ஆவிகளை மனிதக் கண்களால் காண இயலாது.
ஏனெனில் அவற்றிற்கு உருவம் இல்லை என்பதை உணர வேண்டும். ஆவிகளை எவரும் கண்டதில்லை. ஆன்மா
சடப்பொருளுக்கு மிக நெருக்கமாக இருப்பது ஒரு மனிதன் இறக்கும் தருவாயில்தான். அப்போதுதான்
அது மனித உடலிலிருந்து வெளியேறும். ஆவி காணக்கூடியதாக இருந்தால் இந்தச் சந்தர்ப்பத்தில்தான்
காணப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. ஆனால் அதனைக் கண்டவர் எவருமில்லை.
சில மகான்கள் குறிப்பிட்ட ஓர் ஆவியுடன்
அதன் கல்லறையில் பேசியதாகவும் அதனோடு இருந்தது மட்டுமல்லாமல் அதனோடு உணவருந்தியதாகவும்
கூறியிருந்தால் நிச்சயமாக அது அவர்கள் கண்ட ஆன்மீக தரிசனமே ஆகும். இது இக்காலத்தில்
தொலைக்காட்சியில் நேருக்கு நேர் உரையாற்றுவது போன்றதாகும். நாம் காண்பது ஒரு காட்சியே
தவிர உடலளவில் அவ்விருவரும் அதில் (தொலைக்காட்சி பெட்டியில்) இல்லை. எனினும் அவர்கள்
இருவரும் உரையாடுவதை நம்மால் காணவும் கேட்கவும் முடிகிறது.
(ரிவிவ் ஆஃப் ரிலீஜியன்ஸ், டிசம்பர்
2000 இதழிலிருந்து எடுக்கப்பட்டது. தமிழாக்கம் : மதிப்பிற்குரிய கலீல் அஹ்மது சாஹிப்
(மர்ஹூம்))


கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None