‪பலதார மணம்

இஸ்லாத்தை தாக்க எண்ணுகின்றவர்கள் தேர்தெடுக்கின்ற விஷயங்களில் பலதார மணமும் ஒன்று. ஆனால் இஸ்லாம் சில பிரச்சனைகளுக்குத் தீர்வாகவும் சில நிபந்தனைகளுடன் பலதார மணத்திற்கு அனுமதியளித்திருக்கின்றதேயொழிய பலதார மணம் இஸ்லாத்தின் ஒரு கட்டளை அல்ல.

இஸ்லாம் பலதார மணத்தை அனுமதித்திருப்பது ஏன்? எந்தச் சூழ்நிலையில் ஒரு முஸ்லிம் ஒன்றுக்கு மேல் மணமுடிக்கலாம்? அவ்வாறு மணமுடிப்பவர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? இத்தகைய அனுமதி இல்லாவிட்டால் சமுதாயத்தில் ஏற்படும் சீர்கேடுகள் யாவை? என்பன பற்றியெல்லாம் விளக்குவதற்கு முன்பாக ஏனைய சமயங்கள் இது பற்றி என்ன கூறுகின்றன என்பதைப் பார்ப்போம்.

‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்பதே இந்து சமயக் கோட்பாடு என்று கூறப்படுகிறது. ஆனால் இராமனைத் தவிர ஏனைய “இந்துக் கடவுளர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளையே கொண்டுள்ளனர். தமிழர்களின் கடவுளாகக் கருதப்படுகின்ற முருகருக்கு இரண்டு மனைவியர் கிருஷ்ணருக்கோ எட்டு மனைவியர் ஆதித்திராவிடர்களின் தெய்வமான மதுரை வீரனுக்குக் கூட இரண்டு மனைவியர். கடவுளர்களின் நிலைதான் இவ்வாறென்றால் காப்பியத்தலைவர்களும் புராண நாயகர்களும் கூட பலதாரமுடையவர்களே’ தசரத மகாராஜாவுக்கு எண்ணற்ற மனைவியர் அதில் பட்ட மகிஷிகள் நால்வர் இப்படி ஒரு நீண்ட பட்டியலே தயாரிக்கலாம்.

பைபிளை எடுத்துக் கொண்டாலும் அங்கும் பல தீர்க்கதரிசிகள் பலதாரமுடையவர்களாகவே காணப்படுகின்றனர். 
இஸ்லாம் பலதார மணத்திற்கு அனுமதி அளித்திருப்பதையும் அண்ணல் மாநபி (ஸல்) அவர்கள் மணம் பல முடித்திருப்பதையும் ஏளனக் கண்கொண்டு பார்ப்பவர்கள் இவற்றையெல்லாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

இஸ்லாம் பலதார மணத்திற்கு அனுமதி வழங்கியிருப்பது புதியதோ அல்லது புதுமையானதோ அல்ல. ஒருத்தனுக்கு ஒருத்தி என ஹிந்து சமயக் கோட்பாடு எனக் கூறப்பட்ட போதிலும் ஹிந்து சமய வேத நூற்கள் அதற்கு ஆதரவாக இல்லை. ஹிந்து மத வேத நூற்களில் தொன்மையானதான மனு ஸ்மிருத்தியில் கீழ் வருமாறு காணப்படுகிறது:

"மனைவி குடிகாரியாக இருந்தாலோ அல்லது கணவனுக்கு அடங்காதவளாக இருந்தாலோ அல்லது நிரந்தர நோயாளியாக இருந்தாலோ அல்லது அநாவசிய செலவுகள் செய்கின்றவளாக இருந்தாலோ கணவன் இன்னொரு விவாகம் செய்து கொள்ளலாம்." (ஆதாரம் | மனு 9:18)

"மனைவி மலடியானால் எட்டு வருடங்கள் கழிந்த பிறகும் பிறக்கின்ற குழந்தைகள் இறந்து பிறந்தால் பத்து வருடங்களுக்குப் பிறகும் பெண் குழந்தைகளை மட்டுமே பெற்றுக் கொண்டிருந்தால் பண்ணிரெண்டு ஆண்டுகளுக்குப் பிறகும் எப்போது கணவனை எதிர்த்து பேசி கொண்டிருந்தால் உடனடியாகவும் கணவன் இன்னொரு திருமணம் செய்து கொள்ளலாம்" (ஆதாரம் | மனு 9:81)

மனு ஸ்மிருத்தியில் காணப்படும் இந்த வாசகங்களிலிருந்து நியாயமான காரணங்களின் அடிப்படையில் ஒருவன் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்களை செய்யலாம் என்பது புலனாகிறது.

இஸ்லாமும் இதையே கூறுகிறது. மகப்பேறு மன அமைதி, நல்லொழுக்கம் இவையே திருமணத்தின் நோக்கங்களாகும். ஒரு திருமணம் இந்த நோக்கங்களை நிறைவு செய்யாதிருந்தால் இன்னொரு திருமணத்திற்கு இஸ்லாம் அனுமதி தருகிறது.

திருமணத்தின் மூலம் ஒருவன் தனக்கு வாரிசுகளை தேடிக் கொள்கின்றான். ஒருவனுடைய மனைவி மலடியாக இருந்தால் அவளுடன் மட்டுமே வாழ்ந்து வாரிசற்றவனாக அவன் மரணிக்க வேண்டும் என்பதை நியாயமானதாக ஏற்றுக் கொள்ள இயலுமா? அல்லது

"Where a marriage is childless divorce may be often the right solution"
(Marriage & Morals, Page 96)

மணவாழ்வில் மகப்பேறு இல்லையென்றால் விவாகரத்தே அதற்கு சரியான தீர்வாகும்"

என 'தத்துவஞானி' ரஸ்ஸல் கூறுவதைத்தான் ஏற்றுக் கொள்ள இயலுமா? இத்தகைய நிலையில் ஒருவன் தனது முந்தைய மனைவியை விலக்கி வைக்காது இன்னொரு திருமணத்தை செய்து கொள்வதே சரியான மார்க்கமாகும். கணவனால் புறக்கணிக்கப்படும் ஒரு பெண்ணின் துயரம் எத்தகையது? என்பதை உணராது விவாகரத்திற்கு ஆலோசனை கூறும் இந்தத் தத்துவஞானி போலல்லாது மனித உணர்வுகளுக்கு மதிப்பளித்து இஸ்லாம் நடுநிலையான பாதையைக் காட்டுகிறது.

திருமணம் மனிதனுடைய பாலுணர்வுகளுக்கு வடிகாலாக அமைகிறது. ஒருவனுடைய மனைவி நிரந்தர நோயாளியாக இருந்து தாம்பத்திய உறவுகளுக்கு தகுதியற்றவளாக இருந்தாள் அவன் இன்னொரு திருமணம் செய்து கொள்வதே நல்லது. அதற்குத் தடை இருக்குமேயானால் அவன் தனது ஒழுக்க நிலையிலிருந்து தவறி தவறிழைக்கக்கூடும். இத்தகையதொரு பிரச்சனைக்கு தீர்வாகவும் இஸ்லாம் பலதார மணத்திற்கு அனுமதி வழங்கியிருக்கிறது.

பலதாரமணம் அனுமதிக்கப்பட்டுள்ள முஸ்லிம் சமுதாயத்தில் விபச்சாரம் மிகக்குறைவாக உள்ளதென்று J.D சண்டர்லெண்டு என்பவர் தமது ஆசியாவின் மிகப்பெரும் மார்க்கங்கள் எனும் நூலில் குறிப்பிடுகிறார்.

பலதாரமணத்திற்கு இஸ்லாம் அனுமதி வழங்கியிருப்பது தனிமனிதனின் குடும்பப்பிச்சனைகளுக்கு தீர்வாக மட்டுமல்லாது சமூக கூட்டு வாழ்க்கையில் எழும் பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமைந்துள்ளது. விதவைகளுக்கு மறுவாழ்வு வழங்கும் பிரச்சனையிலாகட்டும், அனாதை பெண்களுக்கு ஆதரவு தரும் பிரச்சனையிலாகட்டும் பல்வேறு காரணங்களால் மணமாகாது காலங்கழிக்கும் பெண்களின் பிரச்சனையாகட்டும் இவைகளுக்கெல்லாம் நல்லதொரு வழியாக பலதாரமணம் அமைந்திருக்கிறது. பலதாரமணத்திற்கு தடையிருக்குமானால் மேற்கண்ட பிரச்சனைகளுக்கு தீர்வில்லாமல் விபச்சாரம் போன்ற சமூக சீர்கேடுகளுக்கு அவை காரணங்களாக அமையும்.

பலதாரமணத்திற்கு இஸ்லாம் சில நிபந்தனைகளை விதித்துள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் முடிப்பவர் மணமுடிக்கின்ற மனைவிகளுக்கு வசதி வாய்ப்புகளை செய்து தருகின்ற தகுதிபெற்றவராக இருக்க வேண்டும். மனைவிமார்களுக்கிடையில் எவ்வித ஏற்றத்தாழ்வோ வேறுபாடோ பாராட்டாது ஒரே விதமாக நடத்த வேண்டும். அவ்வாறு நடத்த முடியாதவர் ஒரு மனைவியோடு திருப்தியடைய வேண்டும் என்றே திருக்குர்ஆன் கூறுகிறது.

இரு மனைவிகளை உடைய ஒருவர் அவ்விரு மனைவிகளையும் எல்லா விதத்திலும் சமமாக நடத்த தவறினால் மறுமையில் அவர் பக்க வாதத்தால் பாதிக்கப்பட்டவராக எழுப்பப்படுவார் என அண்ணல் நபி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

பலதாரமணம் என்னும்போது வரம்பில்லாமல் பெண்களை மணந்து கொள்ளலாம் என்பது அதற்கு பொருள் அல்ல. ஒருவர் நான்கு மனைவிக்கு மேல் கொண்டிருப்பது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டிருக்கிறது.
சுருக்கமாக இஸ்லாம் பகுத்தறிவின் அடிப்படையில் அமைந்த ஓர் உன்னதமான மார்க்கமாகும். அது மட்டுமல்ல அது மனித உணர்வு, இயல்பு இவைகளுக்கு ஏற்ற மார்க்கமாகவும் மனித வாழ்வில் தோன்றும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும் மார்க்கமும் ஆகும்.
(அபுல் புஷ்ரா)

கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.