இங்கிலாந்தில் மிகப்பெரிய பள்ளிவாசல்


பள்ளிவாயிலுக்கு அரபியில் மஸ்ஜிது என்று பெயர். மஸ்ஜிது என்றால் ஸஜ்தா செய்யுமிடம் என்று பொருள். பள்ளிவாயில் என்பது இறைவனிடம் ஸஜ்தா செய்து அவனிடம் மன்றாடி கேட்கும் இடமாதலால் அதற்கு அப்பெயர் வழங்கலாயிற்று.

ஒரு முஸ்லிம் ஐவேளை தொழுகைகளை வீட்டில் தொழுவதற்கும், பள்ளிவாயிலில் சென்று ஜமாஅத்தாக தொழுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. தனியாக வீட்டில் தொழுவதை விட பள்ளிவாயிலில் சென்று ஜமாஅத்தாக தொழுவதானல் பல மடங்கு அதிக நற்கூலி கிடைக்கிறது என நபி மொழியில் வந்துள்ளது.

பள்ளிவாயில் கட்டுவதன் சிறப்பு பற்றியும் ஹஸ்ரத் நபிகள் நாயகம் அவர்கள் நமக்கு அறிவுறுத்தியுள்ளார்கள். 'எவர் அல்லாஹ்வுக்காக இவ்வுலகில் பள்ளி வாயிலைக் கட்டுகிறாரோ அவருக்காக அல்லாஹ் மறுமையில் சுவர்க்கத்தில் வீட்டைக் கட்டுவான்' என ஹஸ்ரத் நபிகள் நாயகம் அவர்கள் நற்செய்தி கூறியிருக்கிறார்கள். இதிலிருந்து பள்ளிவாயில் காட்டும் பணியில் பொருள் தியாகம் செய்வதன் சிறப்பினைத் தெரிந்து கொள்ளலாம்.


அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் உலகெங்கிலும் தம் பொருள் தியாகத்தின் மூலம் ஏராளமான பள்ளிவாயில்களைக் கட்டிவருகின்றது. இதன் வரிசையில் நான்காவது கலீஃபத்துல் மஸீஹ் ஹஸ்ரத் மிர்ஸா தாஹிர் அஹ்மது (ரஹ்) அவர்கள் சென்ற 1995 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி இலண்டனிலுள்ள ஃபஸ்ல் பள்ளி வாயிலில் இங்கிலாந்திற்கென தலைமையக பள்ளி வாசலுக்கான திட்டத்தை அறிவித்தார்கள்.

மாடர்ன் பள்ளிவாயில் என்ற பெயரில் அறிவிக்கப்பட்ட இத்திட்டத்திற்காக ஹுஸூர் அவர்கள் 5 மில்லியன் பவுண்டுகள் (இந்திய ரூபாய் சுமார் 30 கோடி) நிர்ணயித்திருந்தார்கள். ஆனால் குறிப்பிட்ட சிலக் காரணங்களால் திட்டமிட்டபடி கட்டடப் பணி நடக்கவில்லை. இது பற்றி ஹுஸூர் அவர்கள் தமது 23.2.2001 ஆம் தேதி ஜுமுஆ உரையில் குறிப்பிடும்போது, சில தீமைகளில் சில நன்மைகளும் மறைந்திருப்பது உண்டு. இந்த மாடர்ன் பள்ளிவாயில் மற்றும் அந்தப் பகுதியை விட்டு விடுவதே பொருத்தமாக இருந்தது எனக் கூறினார்கள். ஏனெனில் இது பற்றி விசாரித்த போது, ஆண்டில் 4 க்கு மேற்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது, குறிப்பிட்ட எண்ணிக்கையை விட அதிகமான வாகனங்களை நிறுத்தக் கூடாது போன்ற பல்வேறு அர்த்தமற்ற நிபந்தனைகளை கவுன்சில் வகுத்திருந்தது.

புதிதாக கட்டப்படவிருக்கும் மாடர்ன் பள்ளிவாயில் பற்றி ஹுஸூர் அவர்கள் தமது 16.2.2001 ஆம் தேதி ஜுமுஆ உரையில் இவ்வாறு கூறினார்கள்:
"எனக்கு மீண்டும் 5 மில்லியன் பவுண்டுகள் திட்டத்தை எடுத்து வைக்க வேண்டியது ஏற்படுகிறது. 5 மில்லியன் (பவுண்டுகள்) திட்டம் என்று நான் சொல்லும் போது இதனை உள்ளூர் ஜமாஅத் கொடுக்க முடியாது..... இங்கிலாந்து ஜமாஅத் சந்தாக்களில் ஏற்கனவே அதிகமாக ஈடுபட்டிருக்கிறார்கள். பல்வேறு சந்தாக்களில் அல்லாஹ்வின் அருளினால் மனம் திறந்து பங்கு பெற்று வந்திருக்கிறார்கள்; இனியும் பங்கு பெற்று வருவார்கள். எனவே நான் இந்த திட்டத்தை முழு உலகிற்கும் விரிவு படுத்துகிறேன். உதாரணமாக ரப்வாவின் மூன்று அன்ஞ்சுமன்களையும் நோக்கிக் குறிப்பாக நான் கூறுகிறேன். சத்ர் அன்ஞ்சுமன் அஹ்மதிய்யா, தஹ்ரீக்கே ஜதீத், வக்ஃபே ஜதீத் ஆகிய இந்த  மூன்று அன்ஞ்சுமன்களும் இயன்றவரை சேமித்து எஞ்சிய தொகையை மாடர்ன் பள்ளி வாயில் கட்டடப் பணிக்காக நமக்கு ஏற்பாடு செய்து தரட்டும். அவ்வாறே அமெரிக்கா, கனடா, ஜப்பான், ஆகிய ஜமாஅத்துகளிடமும் எனது கோரிக்கை என்னவென்றால், கட்டாயச் சந்தாவில் எந்த விதமான பாதிப்பும் ஏற்படாத வகையில் நமது இந்தத் திட்டத்திற்காக அனுப்பி வைக்கட்டும்".

கலீஃபத்துல் மஸீஹ் அவர்கள் எந்தவொரு திட்டத்தை எடுத்து வைத்தாலும் அதில் தம் சார்பாகவும், தம் சந்ததிகள் சார்பாகவும் பத்தில் ஒரு பகுதியை கொடுப்பது வழக்கம். இந்த அடிப்படையில் இங்கிலாந்தில் இரண்டு ஆண்டுகளுக்குள் கட்டபடவிருக்கின்ற இந்த மாடர்ன் பள்ளிவாயிலுக்கான மொத்தம் 50 இலட்சம் பவுண்டுகள் (சுமார் 3 கோடி இந்திய ரூபாய்) ஹுஸூர் அவர்கள் தம் சார்பாகக் வழங்கினார்கள் என்பது குறிப்பிடத் தக்கதாகும். அடுத்து இரண்டு ஆண்டுகளுக்குள் மக்கள் இந்தத் தொகையை செலுத்திவிட்டால் பெருங்கஷ்டங்கள் எளிதாகிவிடும் என ஹுஸூர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அதாவது 2003 ஆம் ஆண்டுக்குள்.

ஹுஸூர் அவர்களின் இந்த வேண்டுகோளுக்கிணங்க முழு உலகத்திலுமுள்ள அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் அதற்கு அடுத்த வாரத்திலேயே 3.3 மில்லியன் பவுண்டு வாக்குறுதிகளை அளித்தது. அதில் பெரும் பகுதியினை செலுத்தியும் விட்டனர். பாகிஸ்தான், கனடா, அமெரிக்கா, ஐரோப்பா, ஜெர்மனி, மத்திய கிழக்கு ஜமாஅத்துகள் அற்புதமான தியாகங்களை செய்தனர்.

அஹ்மதி பெண்கள் தமது பழைய, அழகிய முன்மாதிரியின் படி தங்கள் நகைகளை இந்த மாடர்ன் பள்ளிவாயில் கட்டடப் பணிக்காக வழங்கினார்கள். இவர்கள் இதற்கு முன்னரும் தம் கைகளிலும், கழுத்துகளிலும் இருந்த நகைகளை தியாகம் செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பலனாக அப்பெண்களின் கழுத்துகளையும், கைகளையும் மொட்டையாக இருக்க விடாமல் அல்லாஹ் தனது வாக்குறுதிக்கேற்ப அவற்றை மீண்டும் நகைகளால் நிரப்பிவிட்டான்.
ஜெர்மனியிலுள்ள அஹ்மதி பெண்கள் தம் நகைகளை தம் கணவரின் மூலமாக இலண்டனுக்கு கொடுத்தனுப்பினார்கள். சில சின்னச் சின்னக் குழந்தைகள் சில்லரை சில்லரையாக சேமித்து வைத்திருந்த பணத்தை அப்படியே இந்த மாடர்ன் பள்ளி வாயிலுக்காக அனுப்பியுள்ளார்கள்.

ஒருவர் நீண்ட காலமாக வீடு கட்ட திட்டமிட்டிருந்தார். அதற்காக அவர் சேமித்து வைத்திருந்த பெருந்தொகையை இந்தப் பள்ளிவாயிலுக்காக தந்துள்ளார்.

இந்த திட்டத்தில் இந்திய ஜமாத்துக்களும் பங்கு பெற வேண்டும் என காதியானிலுள்ள பைத்துல் மால் ஆமத் இன் ஆஃபிசர் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள். இதன் அடிப்படையில் இந்தியாவில் ஜமாஅத்திலுள்ள எல்லா ஆண்களும் பெண்களும் இந்த அருளுக்குரிய பள்ளிவாயில் திட்டத்திற்காக தத்தமது ஜமாஅத் பொருளாளரிடம் வாக்குறுதி கொடுத்து அதனை நிறைவேற்றவும் செய்தனர். ஒன்றிரண்டு ஆண்டுகளுக்குள் இந்தப் பள்ளிவாயில் இங்கிலாந்திலேயே மிகப் பெரிய பள்ளிவாயிலாக இருக்கும் எனவும் ஹஸ்ரத் கலீஃபத்துல் மஸீஹ் அவர்கள் நம்பிக்கை தெரிவித்திருந்தார்கள்.

இதன் அடிப்படையில் இந்த மாடர்ன் பள்ளி ஹஸ்ரத் ஐந்தாவது கலீஃபத்துல் மசீஹ் (அய்யாதஹூல்லாஹுத் தஆலா பினஸ்ரிஹில் அஸீஸ்) அவர்களின் காலத்தில் மொத்தம் 15 மில்லியன் பவுண்ட் செலவில் கட்டி முடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு ஹுஸூர் அவர்கள் இந்த பள்ளியை 3 ஆம் தேதி அக்டோபர் மாதம் 2003 ஆம் ஆண்டு அன்று திறந்து வைத்தார்கள். இந்த பள்ளிக்கு மஸ்ஜிது பைதுல் ஃபுத்தூஹ் என்ற மற்றொரு பெயரும் உண்டு. 5.2 ஏக்கர் பரப்பரளவில் கட்டப்பட்டிருக்கும் இந்த பள்ளிவாசலில் சுமார் 10,000 பேர் ஒரே நேரத்தில் தொழலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹஸ்ரத் நான்காவது கலீஃபத்துல் மஸீஹ் (ரஹ்) அவர்களின் எதிர்ப்பார்ப்பிற்கிணங்க இந்த பள்ளி பிரிட்டனின் பெரிய பள்ளியாக இருப்பது மட்டுமல்லாமல் மேற்கு ஐரோப்பாவிலும் மிகப்பெரிய பள்ளியாக திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் உலக அளவில் மிகப்பெரிய பள்ளிகளில் மஸ்ஜிது பைத்துல் ஃபுத்தூஹ் பள்ளிவாசல் 15 வது இடத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. (மேற்கோள்: http://thewondrous.com/worlds-top-20-largest-mosques/) அல்ஹம்துலில்லாஹ்.

இந்த பள்ளியை குறித்து மேலும் அறிய:

https://en.wikipedia.org/wiki/Baitul_Futuh_Mosque

கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.