முபாஹலா | ஓர் உண்மைக்கான இறுதி அளவுகோல்

ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்:
ரப்பனஃப்தஹ் பைனனா வ பைன கவ்மினா ஃபில் ஹக்கி வ அன்த கைருல் ஃபாத்திஹீன் (7:90)

"எங்கள் இறைவா! எங்களுக்கும் எங்கள் சமுதாயத்திற்குமிடையில் உண்மையான தீர்ப்பை வழங்குவாயாக! நீயே தீர்ப்பளிப்பவர்களில் எல்லோரையும் விடச் சிறந்தவனாக இருக்கிறாய். (திருக்குர்ஆன்)

அல்லாஹ் என்னை வாக்களிக்கப்பட்ட மஹ்தி மஸீஹாக அறிவித்த நாளிலிருந்து, தங்களை முஸ்லிம்கள் என்று கூறிக் கொண்டிருப்பவர்கள் என் மீது கடுமையான கோபமும் வெறுப்பும் கொண்டு என்னை காஃபிர் என்று கூறியதோடு அளவுக்கு மீறி எனக்கெதிராக அக்கிரமங்களைச் செய்து வந்தனர். முதலில், திருக்குர்ஆன், நபிமொழி ஆகியவற்றிலிருந்து எனது வாதத்திற்கான ஆதாரங்களை இவர்களுக்கு எடுத்துக் காட்டி வந்தேன். ஆனால் அவர்கள் வேண்டுமென்றே அந்தச் சான்றுகளை அலட்சியப்படுத்தினர். பின்னர் எனது இறைவன், எனது உண்மைத் தன்மைக்கு ஆதாரமாக ஏராளமான இறையடையாளங்களை வெளிப்படுத்தினான். ஆனால் இதிலிருந்தும் இவர்கள் பயன் பெறவில்லை.

பின்னர் இவர்களுள் சிலர் "முபாஹலா" எனும் பிரார்த்தனைப் போட்டியில் இறங்கினர். வேறு சிலர் முபாஹலா இல்லாமல், தமக்கு இல்ஹாம் வந்ததாகக் கூறி அவர்களுடைய வாழ்நாளில் நான் மரணித்து விடுவேன் என அறிவிப்புச் செய்தார்கள். ஆனால் இவர்கள் எல்லாம் எனது வாழ்நாளிலேயே நாசத்திற்கு ஆளானார்கள்.

ஆனால் அந்தோ பரிதாபம்! இவையெல்லாம் நடந்தும் மக்களுடைய கண்கள் திறக்கப்படவில்லை. இது இறைவனால் உருவாக்கப்பட்ட ஓர் ஆன்மீக ஜமாஅத்தாக இல்லாமல் மனிதக் கரங்களால் உருவாக்கப்பட்ட ஒன்றாக இருந்தால் எல்லா வகையிலும் இவர்களுக்கு தோல்வி கிடைத்திருக்காது என்பதை இவர்கள் சிந்திக்கவேயில்லை.

திருக்குர்ஆன் இவர்களைப் பொய்யராக்குகின்றது. "முபாஹலா"க்களின் முடிவுகளும் இவர்களைப் பொய்யராக்குகின்றது. கடந்த இருபத்தாறு ஆண்டுகள் இவர்களை உண்மையின் பக்கம் அழைத்துக் கொண்டிருக்கும் இந்த இறை தூதனை பொய்யாக்குவதற்கு இவர்களின் கையில் வேறு என்னதான் இருக்கிறது!?

"யுஸிப்கும் பஅதுல்லதி யயிதுக்கும்" (40:29)

உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட நாசங்களில் சில உங்களுக்கு வந்து சேரும்" என்ற திருமறை வசனத்தின் சுவையை இன்னும் இவர்கள் அனுபவிக்கவில்லையா?

"பொய்யனுக்கு நாசம் உண்டாவதாக" என எனக்கெதிராக பிரார்த்தனை செய்து அதனை தனது "பைஸே ரஹ்மானி" என்னும் நூலில் அறிவித்திருந்த மௌலவி குலாம் தஸ்கீர் இப்போது எங்கே?

தமதுக்கு இல்ஹாம் வந்ததாகக் கூறி, எனது மரணத்தை முன்னறிவித்து என்னுடன் முபாஹலா செய்த ஜம்முவைச் சார்ந்த மௌலவி சிராக்தீன் எங்கே? ஏராளமான முரீதுகளைக் கொண்ட பகீர் மிர்ஸா எங்கே? இவர் ஆரவாரத்துடன் எனது மரணத்தை முன்னறிவிப்புச் செய்திருந்தார். (என்னைப்பற்றி) இவன் அடுத்த ரமலான் மாதத்திற்குள் எனது வாழ்நாளில் மரணம் அடைந்துவிடுவான் எனக் கூறி இருந்தார். ஆனால் ரமலான் வந்ததும் இவர் 'பிளேக்' கிற்குப் பலியானார். எனக்கெதிராக 'முபாஹலா' செய்து தனது வாழ்நாளில் நான் மரணிப்பேன் என்று முழங்கிய ஸஅதுல்லாஹ் லூதியானவி இப்போது எங்கே? இவர் எனது வாழ்நாளில் மரணித்துப் போனார்.

லக்கேக்கையைச் சார்ந்த மௌலவி முஹியுத்தீன் இப்போது எங்கே? இவர் என்னை ஃபிர்அவ்ன் என வர்ணித்து தனது வாழ்நாளில் நான் மரணித்து விடுவேன் எனவும் கூறி தமக்குக் கிடைத்த பல 'இல்ஹாம்' களையும் வெளியிட்டிருந்தார். அவரும் எனது காலத்தில் மாண்டுவிட்டார். அஸாயே மூஸா எனும் நூலின் ஆசிரியரான பாபு இலாஹி பக்ஷ் இப்போது எங்கே? இவர் தன்னை மூஸாவென்றும் என்னை ஃபிர்அவ்ன் என்றும் கூறி நான் அவருடைய வாழ்நாளில் மரணிப்பேன் என முன்னறிவிப்பு செய்திருந்தார். ஆனால் இறுதியில் அவரும் தனது அஸாயே மூஸா எனும் நூலின் மீது பழி போட்டு பிளேக்கிற்குப் பலியாக மிக மோசமான நிலையில் இறந்து போனார்.

'இய் யகு காதிபன் ஃப அலைஹி கித்புஹூ' (40:29)

இவர் பொய்யரென்றால் அதற்குரிய தண்டனை இவரை வந்தடையும் என்ற திருமறை வசனம் என்னிடத்து நிறைவேற வேண்டுமென்று இவர்கள் அனைவரும் விரும்பினர். ஆனால் இவர்களே அந்த திருவசனத்திற்கு ஏற்ப நாசமடைந்து விட்டனர்.

"வ இய்யக்கு ஸாதிக்கன் யுஸிப்கும் பஅளல்லதி யயிதுகும்"

இவர் உண்மையாளர் எனில் உங்களுக்கு விதிக்கப்பட்ட நாசங்களில் சில உங்களுக்கு வந்து சேரும் என்ற திருமறை வசனத்திற்கு ஏற்ப அல்லாஹ் இவர்களுக்கு தண்டனை வழங்கி அதன் மூலம் எனது உண்மையை நிலை நாட்டினான்.

இவ்வளவு அடையாளங்களில் அல்லாஹ்வின் தீர்ப்பு இவர்களுக்குப் போதாதா? என்ன! ஆயினும் எதிரிகள் நிராகரித்துக் கொண்டிருப்பது அவசியமானதொன்றாகும். ஏனெனில் இருபத்தாறு ஆண்டுகளுக்கு முன்பே அல்லாஹ் எனக்கருளிய இல்ஹாமை நான் 'பராஹீனே அஹ்மதிய்யா' என்னும் தனது நூலில் பதிவு செய்திருக்கிறேன். அது, "உலகில் ஓர் எச்சரிப்பாளர் தோன்றினார். ஆயினும் உலகம் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் இறைவன் அவரை ஏற்றுள்ளான். மேலும் வல்லமை மிகு தாக்குதல்களால் அவருடைய உண்மையை வெளிப்படுத்துவான்!" என்பதாகும்.

எனவே, எனது உண்மை உலகில் பிரகடனமாகும் வரை அல்லாஹ் தனது தாக்குதல்களை விலக்கிக் கொள்ளமாட்டான். 
(சஷ்மயே மஃரிஃபத்)

கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.