மதவெறியை ஒழித்து சமாதானத்தை நிலை நாட்டுங்கள்!

(பாகிஸ்தான் | ஷேக் புராவிலிருந்து தம்மைச் சந்திக்க வந்திருந்த 62 முஸ்லிம் பெரியவர்கள் மத்தியில் ஹஸ்ரத் நான்காவது கலீஃபத்துல் மஸீஹ் மிர்ஸா தாஹிர் அஹ்மது (ரஹ்) அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு)

மதத்தின் பெயரால் பகைமையைச் பரவச் செய்வது அந்த மதத்திற்கு இழைக்கப்படும் அநீதியாகும். இதைவிட அறியாமையும் அக்கிரமும் வேறில்லை. இதன் விளைவாக இன்றைய உலகில் நாத்தீகம் பரவுகின்றது. கம்யூனிஸ் நாடுகளில் கோடிக்கணக்கான மக்கள் நாத்திகர்களாக மாறிவிட்டார்கள் என்றால் அவர்களிருந்த கிருத்தவ உலகில் பாதிரிகள் மதத்தின் பெயரால் அக்கிரமங்களை செய்ததை அவர்கள் கண்டிருந்ததுதான் அதற்குக் காரணம். எந்தக் கடவுளின் பெயரால் அக்கிரமங்களும் அநியாயங்களும் நடைபெற்றனவோ அந்தக் கடவுள் எப்படிப்பட்டவனாக இருப்பான் என்று சிந்தித்த அவர்கள் மதம் என்பது வெறும் கட்டுக் கதைகளின் தொகுப்பு என்ற முடிவுக்கு வந்தார்கள்.

நம்முடைய முஸ்லிம் சமுதாயத்தின் நிலையும் இதுதான். அல்லாஹ்வின் பெயரால், அண்ணல் மாநபியின் பெயரால் இங்கும் வெறுப்பையும் வைராக்கியத்தையும் வளர்க்கின்ற வகையில் போதனைகள் செய்யப்படுகின்றன. இதில் சிந்தனைக்குரியது என்னவென்றால், ஒரு தாய் தனது பிள்ளைகளில் ஒருவனைக் கொலை செய்ய இன்னொரு பிள்ளையை ஏவுவாளா? அவ்வாறு யாரேனும் சொல்வதென்றால் அறிவுள்ள எவரும் அதனை நம்பமாட்டார். ஆனால் எல்லோருக்கும் சிந்திக்கின்ற சக்தி ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அதனால் பொதுவாக முஸ்லிம்கள் மார்க்க விஷயத்தில் தங்களுடைய ஆலிம்களின் பேச்சைக் கேட்டு அதன்படி நடக்கின்றார்கள். ஆனால் அந்த ஆலிம்கள் வழிதவறிப் போவதை அவர்கள் உணர்வதே இல்லை.
நீங்கள் ஏக இறைவனுடன் தொடர்பு கொண்டவர்கள் என்றால் அந்த இறைவன் வெறுப்பு வைராக்கியம், பகைமை, இவற்றை வளர்க்கும் போதனைகளை தரவில்லை என்பதை நம்புங்கள். அவன் முழுக்க முழுக்க அன்பு நேசம், ஒற்றுமை இவற்றிற்கு வழிகோலும் போதனைகளைத்தான் தந்திருக்கின்றான். இதனை இன்றைய முஸ்லிம் சமுதாயம் சிந்தித்து உணர வேண்டும்.


திருக்குர்ஆன், அண்ணல் மாநபி (ஸல்) அவர்களை "ரஹ்மதுல் லில்ஆலமீன்" முழு உலகிற்கும் ஓர் அருட்கொடை என்று கூறியிருப்பதை நினைவில் கொள்ளுங்கள். மக்களிடம் வெறுப்பு வைராக்கியமும் கொண்டிருந்த ஒரு நிகழ்ச்சியை நபிபெருமானாரின் வாழ்வில் காண முடியாது. அவர்கள் தமது எதிரிகளிடம் கூட பகைமை பாராட்டவில்லை. அன்பு, நேசம், கருணை இவை மட்டுமே அந்த அற்புதகரமான உள்ளத்தில் எப்போதும் அலைமோதிக் கொண்டிருந்தது.

ஆனால் இந்த மேலான முன்மாதிரிகளுக்கும் உயரிய போதனைகளுக்கும் முரணாக இங்கு (அதாவது பாக்கிஸ்தானில்) நடைபெறுகிறது. சின்னச் சின்ன கருத்து வேறுபாடுகள் காரணங்காட்டி நபிபெருமானாரின் பெயரால் மக்களை தூண்டிவிடு இன்னாரை கொலை செய்யுங்கள், இவர்களைத் தீர்த்துக் கட்டுங்கள், கல்லால் அடியுங்கள், இவர்களுடைய வீட்டைக் கொள்ளையடியுங்கள் நெருப்பிட்டு கொழுத்துங்கள் என்று போதிக்கப்படுகின்றது. இதன் விளைவாக குழப்பங்களும் கலவரங்களும் நடைபெறுகின்றன. ஆனால் இதைப் பற்றிக் கேட்பதற்கு ஆளில்லை. இப்படி துர்போதனை செய்கின்றவர்களைப் பார்த்து இதுவா நபிபெருமானாரின் முன்மாதிரிகை? இதுவா நபித்தோழர்களின் நடைமுறை? என்று கேட்பதற்கு மக்களுக்கு தைரியமோ ஈமானோ இல்லை. முழு உலகிற்கும் அருட்கொடையாகத் தோன்றிய அந்த அண்ணலின் பெயரிலா இத்தகைய அக்கிரமங்கள் நடைபெற வேண்டும்? இருளும் ஒளியும், மரணமும் வாழ்வும் ஒன்றாக இணைய முடியுமா? அன்பையும் நேசத்தையும் தவிர வேறெதனையும் போதிக்காத மதத்தின் பெயரிலா நீங்கள் வன்முறையில் ஈடுபடுகின்றீர்கள்?

ஏந்தல் நபி பெருமானார் (ஸல்) அவர்கள் எத்தகைய கருணையுள்ள கொண்டவர்கள் என்பதை பாருங்கள்; ஒரு பயணத்தின் போது நபி பெருமானார் (ஸல்) அவர்கள் ஒரு பறவையின் அழும் குரலை கேட்டார்கள். நீங்கள் எத்தனையோ பறவைகளின் குரலைக் கேட்கின்றீர்கள். ஆனால் அதனை சட்டை செய்வதில்லை. ஆனால் நபி பெருமானார் (ஸல்) அவர்களோ அந்தப் பறவையின் குரலிலிருந்து வேதனையும் துக்கத்தையும் உணர்ந்து அதனைக் கவனிக்க ஆணையிட்டார்கள். யாரோ ஒருவன் அந்த பறவையின் குஞ்சை எடுத்துச் சென்றுவிட்டிருந்தான் என்பது தெரிய வந்தபோது உடனடியாக அதைக் கண்டுபிடித்து குஞ்சை அந்த பறவையின் கூட்டில் வைக்க வேண்டுமென நபிபெருமானர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். குஞ்சு மீட்கப்பட்டு அதன் தாயிடம் சேர்க்கப்பட்ட பிறகுதான் நபிபெருமானர் (ஸல்) அவர்கள் நிம்மதி பெருமூச்சிவிட்டார்கள்.
இத்தகைய கருணையின் வடிவமான நபிபெருமானரின் பெயரால் பள்ளி வாசல்களிலேயே வன்முறைக்கு அடித்தளம் போடப்படுகிறது. ஆனால் முழுச் சமுதாயமும் இதனை கவனிக்காது தூங்கிக் கொண்டிருக்கிறது. இப்படி செய்யலாமா என்று கேட்க இங்கு நாதியில்லை. இறைவனுக்கு அஞ்சுங்கள். உங்களுடைய இச்செயல் இறைவனையும் அவனது திருத்தூதரையும் இழிவுப்படுத்துகின்ற செயலேயாகும் எனச் சொல்வதற்கும் யாருக்கும் தைரியம் இல்லை.
இறைவனுடைய பெயரால் அவனுடைய அடியார்கள் மீதே இவர்கள் அம்பெய்வது மிக வேதனைக்குறியதாகும். எதுவரை இந்தச் சமுதாயத்தில் இறையச்சமும் இறைபக்தியும் இல்லையோ அதுவரை இதற்கு இறையருள் கிடைக்கப் போவதில்லை. இந்தச் சமுதாயம் நாளுக்கு நாள் வீழ்ச்சி அடைவதற்கும் இங்கு வெட்க கேடான செயல்களும் குழப்பங்களும் பெறுகிவிட்டதற்கும் இதுவே காரணம். ஒரு சமுதாயத்தின் நிலை இவ்வாறு இருந்தால் அந்தச் சமுதாயத்தின் மீது இறைவன் கருணை காட்டுவானா? ஒரு சமுதாயத்தில் சொற்ப அளவாவது இறையச்சமும் இறைபக்தியும் இருந்தால்தான் அதன் மீது இறைவனுடைய கருணையும் அருளும் இறங்கும்.
இனி கருத்து வேறுபாடுகளைக் களைவதற்கான ஒரு இலேசான வழியைச் சொல்லித் தருகின்றேன். ஒருவர் இறைவன் புறமிருந்து அனுப்பப்பட்டவரா இல்லையா என்பது பற்றிய உண்மையை இறைவனே நன்கு அறிந்தவன் ஆவான். அதனால் ஒருவர் இறைவன் புறமிருந்து வந்தவரா இல்லையா என்பதை நாம் ஏன் அந்த இறைவனிடத்திலே கேட்கக் கூடாது? இதைப்பற்றிய உண்மை இறைவனுக்குத் தெரியுமா அல்லது ஆலிம்களுக்குத் தெரியுமா?
ஒருவர் தாம் ஓர் இறைத்தூதர் எனப் பிரகடனம் செய்கிறார். ஒரு ஜமாத்தையே உருவாக்குகிறார். அந்த ஜமாஅத் இஸ்லாமிய பிரச்சாரத்தை உலகெங்கும் செய்கின்றது. ஆனால் அவ்வாறு பிரகடனம் செய்தவர் பொய்யர் என ஆலிம்கள் தீர்ப்பளிக்கின்றனர். இதைக் கண்ட மக்கள் அவரை அலட்சியப் படுத்துகிறார்கள். ஆனால் மறுமையில் இவர்கள் 'இறைவா, நீ அனுப்பியவரை ஏற்றுக் கொள்ளக் கூடாது என ஆலிம்கள் தீர்ப்பளித்தார்கள். அதனால் நாங்கள் அவரை நிராகரித்தோம் என்று கூற முடியுமா? அவ்வாறு கூறினால் இறைவன் அதனை ஏற்றுக் கொள்வான் என எந்த மார்க்க நூலிலாவது கூறப்பட்டிருக்கிறதா?
திருக்குர்ஆன் என்ன கூறுகின்றது தெரியுமா? இறுதி நாளில் சிலர் இறைவா! இந்தப் பெரியவர்கள் தான் எங்களை வழிகெடுத்தார்கள் நாங்கள் நேர்வழி பெறுவதை இவர்களே தடுத்தார்கள்' என்று கூறுவார்கள். அப்போது இறைவன் இரண்டு கூட்டமும், வழிகெட்டவர்களும் வழி கெடுத்தவர்களும் நரகத்திற்குரியவர்கள் என்று கூறுவான்.
ஆலிம்களின் சாட்சியம் ஏற்கப்பட்டு அவர்களுடைய சிபாரிசால் நீங்கள் காப்பாற்றப்படுவீர்கள் என நீங்கள் மனப்பால் குடிப்பதாக இருந்தால் அந்த ஆலிம்கள் பின்னால் செல்லுங்கள். ஆனால் அவர்களுடைய தீர்ப்போ சிபாரிசோ ஏற்றுக் கொள்ளப்படாது என இறைவனே கூறியிருக்கும்போது நீங்கள் ஏன் அவர்கள் பின்னால் போகின்றீர்கள்?
பீர், ஷேக், தங்கள் என்று தங்களை கூறிக்கொள்ளும் சிலர் கியாம் நாளில் தங்களுடைய சிபாரிசு ஏற்றுக் கொள்ளப்படும் என்று கூறி அப்பாவி முஸ்லிம்களை ஏமாற்றுகிறார்கள்.
இப்படித்தான் ஒரு பீர் சாஹிப் ஒரு செல்வந்தரிடம் போய் உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறீர்களா? என்று கேட்டார். அதற்கு அந்தச் செல்வந்தர் ஆம் என்றார். உங்களுக்கு சிராத் எனும் பாலத்தை கடக்க வேண்டுமே என்ற கவலை இருக்கிறதா? என்று பீர் கேட்டார்.; அதற்கும் ஆம் என்றார் செல்வந்தர். நீங்கள் இதற்கெல்லாம் கவலைப்படத் தேவையில்லை. நான் அழைத்துப் போகிறேன் என் பின்னால் வந்தால் அந்த பாலத்தை எளிதாகக் கடந்து விடலாம் என்று பீர் கூறினார். இதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று அந்த செல்வந்தர் கேட்ட போது. உங்களுடைய எருமையை எனக்கு தந்து விட வேண்டும் என்று பீர் கூறினார். இதை நம்பிய செல்வந்தர் அதற்கு ஒப்புக் கொண்டார். ஆனால் பீர் சாஹிப் எருமையை நெருங்கிய போது அது முரண்டு பிடித்தது. மீண்டும் பீர் சாஹிப் செல்வந்தரிடம் வந்து தாங்கள் சிராத் பாலத்தை எளிதாகக் கடக்க வேண்டுமென்று நினைத்தால் இந்த எருமையை எனது வீட்டிற்கு கொண்டு வார வேண்டும் என்று சொன்னார்.
அப்பாவியான் அந்தச் செல்வந்தர் எருமையை இழுத்துக் கொண்டு பீர் சாஹிபுடன் நடந்தார். வழியில் ஒரு மோசமான பாலம் குறுக்கிட்டது. செல்வந்தர் எருமையுடன் அந்தப் பாலத்தை இலேசாகக் கடந்து மறுபக்கம் சென்று விட்டார். ஆனால் அந்த பீர் சாஹிப் காலிடறி கீழே விழுந்துவிட்டார். இதை கண்ட செல்வந்தர் இந்த சின்ன பாலத்தையே உம்மால் கடக்க முடியவில்லையே நீர் எவ்வாறு சிராத் பாலத்தை கடக்க எனக்கு உதவுவீர்? என்று பீரைப் பார்த்து கோபமாக கேட்டுவிட்டு தனது எருமையுடன் வந்த வழியில் திரும்பி சென்று விட்டார்.
திருக்குர்ஆனே அவர்கள் தமது சுமைகளையே சுமக்க இயலாதவர்களாக இருக்கும்போது உங்களுடைய சுமைகளை எவ்வாறு சுமப்பார்கள் என வினவுகின்றது. பல்வேறு சுமைகள் அவர்களை அழுத்திக் கொண்டிருக்கின்றன. தங்களுடைய நஃப்ஸை கட்டுப்படுத்த இயலாத நிலையில் அவர்கள் பாவங்களில் மூழ்கியிருக்கிறார்கள். இவ்வாறு இருக்க அவர்களால் எவ்வாறு உங்களை பாவங்களிலிருந்து மீட்க முடியும்? மறுமையில் எவராலும் பிறருடைய சுமையை சுமக்க இயலாது என இறைவனே கூறுகின்றான்.
எனவே மிக எளிதான வழி இறைவனிடமே பிரார்த்திப்பதாகும். அவனுடைய தீர்ப்பையே தெரிந்து கொள்ள முயற்சியுங்கள். ஹஸ்ரத் அஹ்மத் (அலை) உண்மையாளரா இல்லையா என்பதை இறைவனிடமே கேளுங்கள். ஏனெனில் இந்த வாழ்க்கை நிலையில்லாதது. இறைவன் புறமிருந்து நமக்கு எப்போது அழைப்பு வருமென நமக்குத் தெரியாது. இறப்பு எப்போது எங்கு வரும் என்பதை யாராலும் சொல்ல முடியாது. அதனால் இறைவன் புறமிருந்து தோன்றியவராகத் தம்மைக் கூறும் ஒருவரை ஏற்பதா நிராகரிப்பதா என்பதை நீங்கள் உங்களுடைய இறப்புக்கு முன்னால் தீர்மானித்தாக வேண்டும். அவரை ஏற்றாலும் ஏற்கா விட்டாலும் எதுவும் ஆகப்போவதில்லை என்று அலட்சியமாக இருக்கக்கூடிய ஒரு விஷயமல்ல இது.
காதியானிலிருந்து எழுந்த அந்தக் குரல் உண்மையானதென்றால் அது குறித்து மறுமையில் உங்கள் ஒவ்வொருவரிடமும் கேட்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அது உண்மையற்றதென்றால் அதை ஏற்காமலிருப்பது தவறாகாது. ஆனால் அதை எப்படி தெரிந்து கொள்வது? அதற்கான ஆன்மீக ஞானம் உங்களுக்கு இல்லை. அது பற்றி ஆராயவும் உங்களுக்கு வாய்ப்பில்லை. கண்ணை மூடிக் கொண்டு ஏனையோரின் பேச்சைக் கேட்டு முடிவிற்கு வருவது உலக விவகாரங்களில் சரியானதாக இருக்கலாம். ஆனால் ஆன்மீக விஷயங்களுக்கு அது பொருந்தாது.
எனவே நீங்கள் இறைவனிடம் இவ்வாறு வேண்டுங்கள், இறைவா! மார்க்கத்தின் பெயரால் வெறுப்பையும் பகைமையையும் வளர்க்கின்ற இவர்கள் நல்லவர்கள் என்றால் திருக்குர்ஆனின் போதனைகளும் நபிபெருமானரின் நடைமுறைகளும் அதற்கு ஏன் முரண்பட வேண்டும்? எவரை இவர்கள் பொய்யர்கள் என்று கூறுகின்றார்களோ அவர் உண்மையாளராக இருந்தால் அவரை ஏற்று உனது அருளைத் தேடுவதற்கான நல்வாய்ப்பை எனக்கது தந்தருள்வாயாக.
உளப்பூர்வமாக இறையச்சத்துடனும் நீங்கள் இவ்வாறு பிரார்த்தித்து வருவதாக இருந்தால் இறைவனே உங்களுக்கு வழிகாட்டுவான்.
"இறைவா! மரணிக்க செய்பவனும் மீண்டும் எழுப்புகின்றவனும் நீயே. எங்களை கண்காணிப்பவனும் நீயே, நானே எதுவும் தெரியாதவனாக இருக்கின்றேன். அதனால் நீயே எனக்கு நேர்வழியை காட்டிதர வேண்டும். அதுமட்டுமல்ல, ஹிதாயத் கிடைத்தப் பிறகு அதிலே நிலை நிற்கின்ற உறுதிபாட்டையும் எதிர்ப்புகளை தாங்குவதற்கான மன உறுதியையும் நீயே தந்தருள வேண்டும். இவ்வாறு தூய உள்ளத்துடன் ஒருவர் பிரார்த்தித்தால் அத்தகையவருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டாமல் இருக்க மாட்டான்.
நமக்கிடையேயுள்ள பிணக்குகளைத் தீர்த்துக் கொள்ள இது ஒன்றே வழி.
உலகின் நிலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டு வருகிறது. யாருடைய வாழ்வும் யாரும் உத்திரவாதம் தர இயலாது. எனவே எவ்வளவு விரைவாக சமாதானத்தின் பக்கம் வர இயலுமோ அவ்வளவு விரைவாக நாம் அதன் பக்கம் வந்தாக வேண்டும் அதில்தான் நன்மை இருக்கின்றது.
(பத்ர் பத்திரிக்கை | 10-07-1983)

கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.