(ஹஸ்ரத் நான்காவது கலீஃபத்துல் மஸீஹ்
மிர்ஸா தாஹிர் அஹ்மத் (ரஹ்) அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு)
.....................................................................................................................................
رَبَّنَا
ہَبْ لَنَا مِنْ اَزْوَاجِنَا وَذُرِّيّٰتِنَا قُرَّۃَ اَعْيُنٍ
وَّاجْعَلْنَا لِلْمُتَّقِيْنَ اِمَامًا
"ரப்பனா ஹப்லனா மின் அஸ்வாஜினா வ
துர்ரியாதினா குர்ரத அயுனின் வ ஜஅல்னா லில்முத்தகீன இமாமா" (25:75)
நான் இப்போது ஓதிய திருமறை வசனத்தில்
பிரார்த்தனை வடிவில் இறைவன் நம்பிக்கையாளர்களுக்கு சில போதனைகளைச்
செய்திருக்கின்றான். அவற்றில் இரண்டை இங்கு குறிப்பிட்டு விளக்க விரும்புகிறேன்.
முதலாவதாக ஒரு நம்பிக்கையாளன்
இறைவனிடம் இவ்வாறு பிரார்த்திக்கின்றான், "இறைவா! நீ எங்களுடைய மனைவி மக்களை
எங்கள் கண்களுக்கு குளிர்ச்சி தரக் கூடியவர்களாக ஆக்கியாருள்வாயாக!
இரண்டாவதாக,
அவன் தொடர்ந்து இவ்வாறு பிரார்த்திக்கின்றான், "இறைவா! எங்களை நல்லடியார்களுக்குத் தலைவர்களாக்கி எங்களை கண்களுக்கு
குளிர்ச்சியூட்ட வழிவகைகளை செய்தருள்வாயாக! நாங்கள் எங்களுக்குப் பின்னால் 'ஃபாஸிக்கீன்' களை விட்டுச் செல்கின்றவர்களாக்காமல்
இருப்பாயாக!
இந்த பிரார்த்தனையை இறைவனே கற்றுத்
தருவதிலிருந்து ஓர் உண்மையை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. நல்லடியார்களான
சந்ததியினரைப் பெறுவதே உண்மையில் நம் கண்களுக்கு குளிர்ச்சித் தரக் கூடியதாகும்.
நம்முடைய மக்களை இறையச்சம் மிகுந்தவர்களாகவும் நல்லடியார்களாகவும் காண்பதை விட
நமது கண்களுக்கு குளிர்ச்சித் தரக்கூடியது எதுவுமில்லை.
இந்த கருத்தை ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட
மஸீஹ் (அலை) அவர்கள் தமது ஒரு கவிதையில் மிக அன்போடு இவ்வாறு கூறுகின்றார்கள்:
"நான் திரும்பச் செல்கின்றபோது,
அதாவது நான் இவ்வுலகை விட்டுப் பிரிகின்றபோது என்னுடைய மக்களெல்லாம் இறைபக்தியில்
நிலைத்திருப்பதை நான் காண வேண்டும்."
ஏனெனில் ஒரு மனிதன் அவனது மரணத்
தருவாயில் இறுதியாக தனது மக்களைக் காணும் போது ஏற்படுகின்ற குளிர்ச்சியும்
திருப்தியும் அம்மக்களில் இறைபக்தி நல்லொழுக்கமும் ஆகிய நல்லியல்புகளைக் காணும்
போதே ஏற்படுகின்றது.
எனவே முதலாவதாக நான் ஜமாஅத்திடம்
வேண்டிக் கொள்வேன் நாம் ஒழுக்கமும் இறைபக்தியுமுள்ள பிள்ளைகளை விட்டுச்
செல்கின்றவர்களாக இருக்க வேண்டும். தீய நடத்தையுள்ள பிள்ளைகளை இவ்வுலகில் விட்டுச்
செல்கின்றவர்களாக நாம் ஒரு போதும் இருக்கக் கூடாது. ஆனால் இது பிரார்த்தனை
மூலமாகவே சாத்தியமாகும். ஏனெனில் அல்லாஹ் இந்தப் போதனையை பிரார்த்தனை வடிவில் தான்
நமக்கு எடுத்துரைக்கின்றான்.
நாம் நம்முடைய முயற்சியாலும்
நல்லுபதேசங்களாலும் மட்டும் இதனைச் செய்துவிட முடியாது. அதற்கு பிரார்த்தனை மூலமாக
இறையுதவியை தேடவும் வேண்டும். சுருக்கமாகச் சொல்வதென்றால்,
நாம் நமது பிள்ளைகளுக்காக அவர்கள் நல்லவர்களாக வாழ்வதற்கு நாம் அடிக்கடி
பிரார்த்திக்க வேண்டும். இந்தப் பிரார்த்தனையை பிள்ளைகள் பிறந்த பிறகு
மட்டுமல்லாது அவர்கள் பிறக்கு முன்னரும் செய்து வர வேண்டும். ஏனெனில் சில இறைத்
தூதர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு பிறகு பிறக்கப் போகின்றவர்களுக்காகப்
பிரார்த்தித்திருக்கின்றனர்.
இப்ராஹீம் நபியவர்கள் (அலை)
கஅபத்துல்லாஹ்வில் தொழுகும் போதெல்லாம் கேட்டிருந்த பிரார்த்தனைகள் ஆயிரக் கணக்கான
ஆண்டுகளுக்கு பிறகு அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வருகையால் நிறைவேறின.
அவர்கள் ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் தமது சந்ததியினருக்காகவும்
பிரார்த்தித்திருந்தார்கள். எனவே நீங்கள் உங்களுடைய பிள்ளைகளுக்காக மட்டுமல்லாது
அவர்களுடைய பிள்ளைகளுக்காகவும் உங்களுடைய வருங்கால சந்ததியினருக்காகவும்
பிரார்த்தித்து வர வேண்டும். அவர்கள் இறை பக்தியும் நல்லொழுக்கமும் மிகுந்தவர்களாக
வாழ நீங்கள் பிரார்த்தித்து வர வேண்டியது அவசியமாகும்.
அடுத்து,
இறைவா! நல்லடியார்களுக்கு தலைவர்களாக எங்களை ஆக்குவாயாக என்ற பிரார்த்தனையை அந்த
இறைவனே கற்றுத் தருகின்றான். இதில் இஸ்லாம் காணும் தலைமை எப்படிப்பட்டது என்பது
எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இஸ்லாம் கூறும் தலைமை ஏனைய சமுதாயங்களில் காணப்படும்
தலைமைப் பீடங்களை விட முற்றிலும் மாறுபட்டதொன்றாகும்.
ஒரு சமூகத்திற்கோ அமைப்பிற்கோ
தலைவராகுவது அவ்வளவு பெரிய விஷயமல்ல. தீய நடத்தை, சோம்பேறித்தனம்
இவையுடைய மக்களுக்கு தலைவராகுவது என்பது மெச்சத் தகுந்தது அல்ல. அந்த பதவி
இறைவனின் சாபத்திற்கே வழிகோலும். ஃபிர்அவ்னுக்குக் கிடைத்த தலைமைப்பதவி அவனுக்கும்
அவனது மக்களுக்கும் நாசத்தையும் இறை சாபத்தையுமே தந்திருந்தது. எனவே பதவி 'தக்வா' வின் - இறையச்சத்தின் அடிப்படையில் அமைய
வேண்டும். நல்லடியார்களின் இறையச்சமிக்கவர்களின் ஜமாஅத் உங்கள் பின்னால் நிற்கின்றதென்றால் அது இறைவனின் அருளுக்கும்
அன்பிற்கும் வழியமைக்கும்.
இந்தக் கருத்தை நாம் தீவிரமாகச்
சிந்திக்கின்ற போது அஹ்மதிய்யா கிலாஃபத் - தலைமைப் பீடம் பெற்றிருக்கின்ற
சக்தியின் இரகசியம் நமக்கு புலப்படும்.
ஜமாஅத் என்ற முறையில் 'தக்வா' வில் நீங்கள் எந்த அளவு முன்னேறுவீர்களோ அந்த அளவு அஹ்மதிய்யத்
மகத்துவமும் பலமும் பெறும். ஒரு கலீஃபா எந்த அளவில் 'தக்வா' வில் முன்னேறுவாரோ அந்த அளவில் ஜமாஅத் நல்ல தலைமையைப் பெறும்.
இவ்விரண்டும், அதாவது கலீஃபாவும்,
ஜமாஅத்தும், ஒன்றாக ஒன்றோடொன்று இணைந்து தக்வாவில் முன்னேறிய
வண்ணம் இருக்க வேண்டும்.
எனவே நீங்கள் எனக்காகவும் நான்
உங்களுக்காகவும் இறைவனுடைய திருச் சன்னிதானத்தில் பணிந்து பிரார்த்திக்க வேண்டியது
அவசியம். இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படும் 'தக்வா' வில் முன்னேற
நான் பிரார்த்தித்த வண்ணமிருப்பேன்.
உங்களுடைய இமாம் - தலைவர்
என்ற முறையிலும் மசீஹின் கலீஃபா என்ற முறையிலும் எனக்கு எந்த அளவில் அதிகமாக முத்தகீன்களுடைய
இறைபக்தியுடையவர்களுடைய ஜமாஅத்கள் கிடைக்குமோ அந்த அளவில் இஸ்லாத்திற்காகப் பணியாற்றிட
முடியும். ஆன்மீக உலகில் எண்ணிக்கைக்கு முக்குதியத்துவமில்லை. அண்ணல் நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள் இவ்வுலகில் தோன்றியிருந்த போது அவர்கள் தனி மனிதனாக இருந்தார்கள். அப்போது
எம்பெருமானாரோடு இந்த உலகை ஒப்பிட்டால் அது அம்மாநபியின் கால் தூசுக்கு கூட பெறுமதி
வாய்ந்ததாக இருக்கவில்லை. நபிபெருமானர் இறைவனின் ஒரே பிரதிநிதியாக இவ்வுலகில் இறங்கினார்கள்.
அந்த மாமனிதருக்காக இந்த உலகம் பலியிடப்பட்டிருந்தாலும் இறைவனின் சன்னிதானத்தில் எந்தக்
குறைபாடும் ஏற்படாது.
இறைவனிடம் தரத்திற்கே மதிப்பிருக்கிறது.
அதிக எண்ணிக்கைக்கு அல்ல, எந்தச் சமுதாயத்தில் உயிரோட்டமும் தக்வாவின்
தரமும் இருக்குமோ அந்த சமுதாயம் கவர்ந்திழுக்கும் காந்த சக்தியை பெறுகிறது. அச்சக்தியின்
மூலமாக அது இவ்வுலகையே கவர்ந்திழுக்கும். இவ்வாறு உலகம் இறைபக்தி உள்ளவர்களுடன் வந்து
சேரத் துவங்குகின்றது. இதன் மூலம் இறைவன் புறமிருந்து ஒரு புதிய திட்டம் உருவெடுக்கின்றது.
நமது ஜமாஅத் இறையச்சம் மிக்கவர்கள் மிகுந்த
ஜமாஅத்தாக விளங்க நாம் பிரார்த்தித்து வர வேண்டும்.
தலைவனாகவும், தொண்டனாகவும்
செயல்படுகின்ற தன்மையை இஸ்லாம் மட்டுமே காட்டித் தந்துள்ளது. இத்தன்மை ஏனைய மதங்களில்
இல்லை. ஒரு சமுதாயத்தின் தலைவர் அச்சமுதாயத்தின் தொண்டன் ஆவார் என்ற தத்துவத்தை ஏந்தல்
நபியவர்கள் (ஸல்) நமக்குச் சொல்லி தந்தார்கள். உங்களின் தலை மீது தலைமைப் பதவி கிரீடம்
வைக்கப்பட்டிருப்பது உலகிற்கு தொண்டாற்றவே ஆகும். உங்களுக்கு மற்றவர்கள் ஊழியம் செய்ய
வேண்டும் என்று நீங்கள் எண்ணினால் அப்பதவி உங்களிடமிருந்து விரைவில் பறிக்கப்படும்
என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் மக்கள் நலனிற்காக, மக்களுக்கு
தொண்டு செய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள மிக மேலான சமுதாயமாக இருக்கின்றீர்கள் என்ற
திருக்குர்ஆன் வசனத்தில் போதித்துள்ள தத்துவமும் இதுவே!
எனவே இறைவன் புறமிருந்து நாம் பெற்றுள்ள
பதவியை நினைவில் கொண்டு மக்கள் நலனுக்கா நாம் பாடுபட வேண்டும். நாமே அல்லாஹ்வின் பிரதிநிதிகளாக, அவனுடைய
பார்வையில் உயிர்த்துடிப்பு உள்ளவர்களாக இருக்கின்றோம். நமக்கு முன்னால் உலகின் எந்தப்
பெரும்பான்மையினரும் ஒரு பொருட்டல்ல இந்த உயரிய நிலையை நாம் ஒரு போதும் மறந்துவிடக்
கூடாது. இந்த மேலான பதவி மக்கள் நலனுக்காக பாடுபடவே நமக்குத் தரப்பட்டிருக்கிறதேயொழிய
அவர்கள் மீது அதிகாரம் செலுத்துவதற்காக அல்ல மக்களின் உள்ளங்களை அன்பு நேசம் இவற்றால்
நாம் வெல்ல வேண்டும்.
திருக்குர்ஆன் கூறும் இந்த அறிவுரையின்படி
தக்வாவின் வழியில் நடக்க நமக்கு இறைவன் உதவி புரிவானாக.
இறுதியாக நபிபெருமானர் (ஸல்) அவர்கள் கூறி
ஓர் அறிவுரையை உங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். அவர்கள் சொன்னார்கள், "கட்டளையைக்
கேட்டதும் அதற்கு கீழ்படியும் தன்மை உங்களிடையே வளர வேண்டும். கேட்பதற்கும் அதன்படி
நடப்பதற்கும் மிடையில் இடைவெளி இருக்கக் கூடாது" நபிபெருமானார் (ஸல்) அவர்கள்
இவ்வுலகிலிருந்து விடைபெறும் தருவாயில் மொழிந்த இவ்வாசகங்கள் உயிரோட்டமுள்ள ஒரு ஜமாஅத்தின்
அடிப்படைக் கோட்பாடாக அமைந்திருக்கின்றது.
தக்வாவின் பாதையில் சரிவர நடந்து இறையருளை
பெறுகின்ற நல்வாய்ப்பை அந்த இறைவனே தருவானாக. ஆமீன்.
(ஆகஸ்டு, செப்டம்பர் 1982 இல் வெளிவந்த சமாதான வழியிலிருந்து எடுக்கப்பட்டது)


கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None