ஹஸ்ரத் மிர்ஸா பஷீருத்தின் மஹ்மூது அஹ்மது இரண்டாவது கலீஃபத்துல் மஸீஹ் (ரலி) அவர்கள் 1944 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 ஆம் தேதி அன்று நிகழ்த்திய சொற்பொழிவில் அறிவித்த முன்னறிவிப்பு
இஸ்லாமிய வரலாற்றில் உள்ளத்தைத் தொடுகின்ற பல நிகழ்ச்சிகளை காண முடிகிறது. அவற்றில், ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற ஒரு வரலாற்றுச் சம்பவம் என்னை பெரிதும் கவர்ந்தது. ஸ்பெயின் நாட்டில் முஸ்லிம்கள் கிருஸ்துவ சக்திகளின் தாக்குதலை சமாளிக்க இயலாது திணறிக் கொண்டிருந்த நேரம் அது. முஸ்லிம்களின் கோட்டை கொத்தளங்களெல்லாம் கிருஸ்துவர்களின் வசமாயின. எஞ்சியிருந்த ஒரே கோட்டையும் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான கிருஸ்துவ போர் வீரர்களால் முற்றுகையிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் சில நிபந்தனைகளை முஸ்லிம்கள் ஏற்பதாயிருந்தால் அவர்களுக்கு உயிர் பிச்சை அளிப்பதாக எதிரிப் படையினர் கூறினர். ஆனால் அந்த நிபந்தனைகளை ஏற்பதாயிருந்தால் முஸ்லிம்கள் ஸ்பெயினில் தன்மானத்தோடு வாழயியலாது.
தன்மானத்தை விட உயிரை பெரிதாக கருதிய அப்போதிருந்த முஸ்லிம் அரசரும், படைத்தளபதிகளும் இந்த நிபந்தனைகளை ஏற்பதென முடிவு செய்தனர். ஆனால் அப்துல் அஸீஸ் என்ற ஒரே தளபதி மட்டும் அதனை விரும்பவில்லை. கிருஸ்துவ சபைகள் விதிக்கின்ற நிபந்தனைகளை ஒருபோதும் ஏற்கக்கூடாது என ஆணித்தரமாக அவர் சொன்னார். 'நமது முன்னோர்கள் நமது இரத்தத்தைச் சிந்தி இந்த மண்ணிலே இஸ்லாத்தை நிலை நாட்டினார்கள். அதனை உங்களுடைய கரங்களாலேயே அழித்து விட எண்ணுகிறீர்களா? என ஆத்திரத்தோடு அவர் கேட்டார். அதற்கு ஏனைய தளபதிகள் ' நிபந்தனையை ஏற்காவிட்டால் நாம் அனைவரும் அழிந்துவிடுவோம், எதிரிகளை வெற்றிகொள்ள வேறு மார்க்கம் இருந்தால் சொல்லுங்கள்' என்று தளபதி அப்துல் அஸீஸிடம் கேட்டார்கள்.
அதற்கு அவர், எதிரிகளை எப்படி வெல்லுவது என்பதல்ல இப்போது நம்முன்னுள்ள கேள்வி, மாறாக நமது கடமை என்ன என்பதுதான் என்றார். தொடர்ந்து அவர் தன்மானத்திற்கு அறைகூவல் விடும் கிறுஸ்துவர்களின் நிபந்தனைகளை ஏற்று ஈனப்பிரவிகளாக உயிர் வாழ்வதை விட இறப்பதே மேல், இத்தகையதொரு முடிவை எடுத்து, நாம் நம்மால் இயன்றதை செய்வோம். முடிவை இறைவனிடம் விடுவோம் என்று முழங்கினார்.
ஆனால் முஸ்லிம் அரசனும் தளபதிகளும் அவ்வாறு செய்வது தற்கொலைக்குச் சமம் என ஏளனமாக்க் கூறினர். அதற்கு அப்துல் அஸீஸ், " வாழ்ந்தால் மானத்தோடு வாழ வேண்டும் இல்லை என்றால் மடிவது மேல். நீங்கள் வேண்டுமானால் அவர்களின் நிபந்தனைகளை ஏற்று உங்களின் அருமையான உயிர்களை பாதுகாத்துக்கொள்ளுங்கள். ஆனால், நான் உயிருக்கு அஞ்சி இஸ்லாத்தின் கொடியை எதிரிகளின் கையில் ஒப்படைக்க மாட்டேன்" என்று கூறிவிட்டு உருவிய வாளோடு எதிரிப் படையினுள் புகுந்தார். பலரை வெட்டி வீழ்த்தினார். இறுதியில் இஸ்லாத்திற்காக தமது இன்னுயிரை ஈந்த தியாகிகளில் ஒருவரானார்.
அப்துல் அஸீஸ் என்பவர் இந்த தியாகத்தால் ஸ்பெயின் நாட்டில் முஸ்லிம்கள் வீழ்ச்சியுறுவதைத் தடுக்க இயலவில்லை என்பது உண்மை என்றாலும் அவருடைய தியாகம் வரலாற்றிலே இடம்பெற்று விட்டது. அதுமட்டுமல்ல, இறைவனளவில் என்றென்றும் வாழ்கின்ற ஷஹீதாக அவர் புகழ் பெறுகின்றார். உயிரைக் காப்பாற்றிக்கொள்ள இஸ்லாத்தில் கெளரவத்தை விலைப்பேசிய அந்த வீணர்களைப் பற்றி எண்ணுகின்ற போது அவர்களைச் சபிக்கத்தான் தோன்றுகிறது. அதே நேரத்தில் அப்துல் அஸீஸ் அவர்கள் நம் நினைவில் தோன்றும்போதெல்லாம் நாம் அவருக்காக பிரார்த்திக்கின்றோம். அதுமட்டுமல்ல, ஸ்பெயின் மண்ணில் அப்துல் அஸீஸ் அவர்கள் சிந்திய இரத்தம் வீணாகிவிடக்கூடாது. மாறாக இஸ்லாம் அதன் எழுச்சிமிக்க நாட்களை அம்மண்ணில் மீண்டும் காண வேண்டும் என்ற எண்ணம் நம் உள்ளத்திலே பிறக்கின்றது.
முஸ்லிம்கள் தன்மானமிக்கவர்கள், தன்மானமில்லாதவர்கள் முஸ்லிம்களென அழைக்கப்படுவதற்கு தகுமானவர்கள் அல்ல என்று சொல்வதைக் காட்டிலும் இமாம் மஹ்தி (அலை) அவர்கள் கூறுவது போன்று முஸ்லிம்களின் தன்மானமும், சுயகொளரவமும் என்றும் நிலைக்கக்கூடியது மட்டுமல்ல, அது மென்மேலும் வருப்பெறக்கூடியது என்றே கூற வேண்டும். இது உண்மை என்றால், அப்துல் அஸீஸ் அவர்களின் வீரமிக்க அச்செயலுக்கு பிரதிபலன் இல்லாமல் போகாது. அவரது ஆவி (உணர்வு) உண்மை முஸ்லிம்களுக்கு ஓர் அறைகூவலாகவே அமையும். அப்போது உண்மை முஸ்லிம்கள் ஸ்பெயின் மண்ணில் மீண்டும் இஸ்லாத்தின் வெற்றிக் கொடியை நாட்டுவார்கள்.
அப்துல் அஸீஸ் அவர்களின் ரூஹ் நம்மை அழைக்கிறது. நமது ரூஹுகளும் அதை நோக்கி அப்துல் அஸீஸே தாங்கள் ஓர் உண்மை முஸ்லிம் என்பதை நிரூபித்துவிட்டீர்கள். நீங்கள் அங்கு தனியாக விடப்படமாட்டீர்கள். இன்று அண்ணல் மாநபியின் உண்மை தாசர்கள் இறைவனின் ஆணையை எதிர் நோக்கியுள்ளனர். அது கிடைக்க பெற்றதும் பறைவகளைப் போல் பறந்து ஸ்பெயின் நாட்டிற்கு வருவார்கள். அங்கு இறையொளியான இஸ்லாத்தை மீண்டும் மலரச் செய்வார்கள்.
ஒன்று ஸ்பெயின் மக்கள் இறைவனை நிராகரிப்பதையும் அவனுக்கு இணைவைப்பதையும் விட்டுவிடுவார்கள் அல்லது முஸ்லிம்களை எதிர்த்து தங்களை அழித்துக் கொள்வார்கள். அன்று முஸ்லிம்களின் காதுகளைப் பிடித்து அந்நாட்டிலிருந்து வெளியேற்றிய மக்கள் தங்களின் காதுகளை தங்களின் கைகளால் பிடித்தபடி அண்ணல் மாநபி (ஸல்) அவர்களின் ரவுலா ஷரீஃபிற்கு வந்து, நபிகள் கோமானே, இதோ உங்களின் அடிமைகள் வந்திருக்கின்றோம். எங்களை மன்னிப்பீர்களாக! தனித்துப் போரிட்ட அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்களின் உணர்வு வீணாகிவிடவில்லை என்று கூறுவார்கள்.
[அல்-ஃபஸல் வாரப் பத்திரக்கை | 6-5-1944 | அஹ்மதிய்யத் வரலாறு பாகம் 10 பக்கம் 174]
இவ்வாறு இஸ்லாம் அடியோடு அழிக்கப்பட்டு சுமார் 700 வருடங்களுக்குப் பிறகு அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தின் தாயியாக மதிப்பிற்குரிய கரம் இலாஹி ஸஃபர் ஸாஹிப் முதல் இஸ்லாமியப் பிரச்சாரகராக ஸ்பெயின் மண்ணில் தனியாக காலெடி எடுத்து வைக்கிறார்கள். அங்கு அப்போது இஸ்லாமிய பிரச்சாரத்தை பப்ளிக்காக செய்வது அனுமதியல்லாததாக இருந்தது.
அன்னார் இறை உதவியுடன் அவனிடம் துஆ செய்த வண்ணம் களத்தில் இறங்கி தமது வாழ்வாதரத்திற்காக நறுமணம் கடையை (பிளாட் ஃபார்மில்) திறந்து ஹிக்மத்தை கையாண்ட வண்ணம் இஸ்லாத்தின் பிரச்சாரத்தை செய்து வந்தார்கள்.
அவர்களின் இந்த துவக்க முயற்சியின் பலனாக அல்லாஹ் 1982 இல் மஸ்ஜித்
பஷாரத் என்ற ஓர் அழகான இறை ஆலையத்தை முதன்முதலில் அங்கு திறந்து வைக்கும் பாக்கியத்தை அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்திற்கு வழங்கினான். இந்த பள்ளியை அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தின் நான்காவது கலீஃபத்துல் மஸீஹ் (ரஹ்) அவர்கள் திறந்து வைத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None