(ஹஸ்ரத் மிர்ஸா பஷீருத்தீன் மஹ்மூத்
அஹ்மது இரண்டாவது கலீஃபத்துல் மஸீஹ் (ரலி) அவர்களின் தஃப்சீரே கபீர் (திருக்குர்ஆனின் விளக்கவுரை) நூலிலிருந்து)
"எக்காளம் ஊதப்படும் நாளில் (அது
நிகழும்). மேலும் நாம் அந்நாளில் குற்றவாளிகளை, அவர்களின் கண்கள் நீல
நிறமாக இருக்கும் நிலையில் எழுப்புவோம்.
அவர்கள் தங்களுக்குள் நீங்கள் பத்து
(நூற்றாண்டுகள்) தான் இவ்வுலகில் மேலோங்கி) இருந்தீர்கள் என்று மெதுவாக பேசிக்
கொள்வார்" (20:3,104)
14 ஆம் நூற்றாண்டுகளுக்கு முன்
அருளப்பட்ட திருக்குர்ஆன், தற்காலத்தில் நடக்கவிருப்பவை பற்றியும்
தெளிவாக எடுத்துக் கூறுகின்றது.
மேற்கூறப்பட்ட வசனங்கள் தற்காலத்தைக்
குறித்து இவ்வாறு அறிவிக்கின்றன:
அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் எல்லா
மக்களும் ஏகத்துவத்தை, ஒப்புக் கொள்ளாமல் பல கடவுள்களை வணங்கி
வரும் எல்லா இனத்தவர்களும் இக்காலத்தில் (20 வது நூற்றாண்டில்) நாங்களும்
முஸ்லிம்களை போன்று ஒரே இறைவனைத்தான் ஒப்புக் கொண்டிருக்கிறோம் என்று வாதம்
செய்வார்கள். எங்களைப் பற்றி மற்றவர்கள் தவறாகப் புரிந்து கொண்டார்கள்.
உண்மையிலேயே நாங்களும் ஏகத்துவத்தைத் தான் நம்பியுள்ளோம் என்று இந்துக்களும், கிறித்தவர்களும் ஏனைய மதத்தினரும் அறிவிக்கத் தொடங்கிவிடுவார்கள்.
எல்லா இனத்தவர்களிடத்தும்
விழிப்புணர்ச்சி தோன்றும் காலத்தில் இந்த முன்னறிவிப்பு நிறைவேறும். மிகவும்
அதிகமாக இறைவனுக்கு இணைவைப்பவர்கள் நீல நிறக்கண்களை உடையவர்களாய் இருப்பார்கள்.
ஐரோப்பிய நாட்டு மக்களிடத்தும், அமெரிக்க நாட்டு மக்களிடத்தும் 20 வது
நூற்றாண்டில் ஷிர்க் என்னும் இறைவனுக்கு இணைவைத்தல் அதிகமாக காணப்படும்.
அவர்கள் ஆரம்பத்தில் தமது வல்லரசின்
மீது கொண்ட பெருமையின் காரணமாகத் தாங்கள் நிரந்தரமாக ஆட்சி புரிந்து கொண்டிருக்கப்
போவதாக நினைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் தற்காலத்தில் அவர்கள் தங்களுக்குள்
நம்முடைய வயது ஓராயிரம் ஆண்டுதான், அதற்குள் நாம் பெருமையடித்து இறைவனின்
ஏகத்துவத்தை மறந்துவிட்டோம் என்று இரகசியமாகப் பேசத் தொடங்கிவிடுவார்கள்.
இதனை அடுத்து இறைவன்;
"அவர்களது மார்க்கத்தின்படி
அவர்களுள் மிகவும் சிறந்த முறையில் நடப்பவர் (அவர்களிடம்) நீங்கள் சிறிது காலமே
தங்கியிருந்தீர்கள் என்று கூறும்போது அவர்கள் என்ன சொல்வார்கள் என்பதனை நாம் நன்கு
அறிகின்றோம்." (20:5)
இவ்வசனத்தில் அமெரிக்கா,
ஐரோப்பா ஆகிய இரு நாடுகளின் முன்னேற்றம் அவர்கள் உலகில் ஆதிக்கம் செலுத்திய காலம் 'யவ்மன்' ஓராயிரம் ஆண்டு காலம் என்று
சொல்லப்பட்டிருக்கிறது.
ஏனென்றால், 'உமது இறைவனிடம் ஒரு நாள் என்பது, (சில வேளைகளில்)
உங்கள் கணக்கின்படி ஆயிரம் வருடங்கள் போன்றதாகும்.' (22:4)
என்று இறைவன் கூறியுள்ளான்.
எனவே இங்கு யவ்மன் (ஒரு நாள்) என்பது ஓராயிரம்
ஆண்டுகளையே குறிப்பிடும்.
ஆகவே அமெரிக்கா,
ஐரோப்பிய நாடுகளின் ஆட்சி காலம் பத்து நூற்றாண்டுகளாகிய ஓராயிரம் ஆண்டுகளேயாகும்.
இந்த ஓராயிரம் ஆண்டுக் காலத்தில் அவர்கள் செய்து வந்த தீமைகளின் காரணமாக
அவர்களுக்குச் சரியான தண்டனைகள் கிடைக்கும்போது, அவர்கள் வாழ்ந்து
வந்த உல்லாச வாழ்க்கையின் காலம் மிகக் குறைவாக இருந்ததாகவே தோன்றும். அதாவது இதனை
இப்படியும் விளக்கலாம்; நீங்கள் மிகக்குறுகிய காலமே உலகில்
முன்னேற்றம் பெற்றுத் திகழ்ந்தீர்கள் இறுதியில் நீங்கள்
பேரழிவிற்குள்ளாகிவிட்டீர்கள்.
இதற்கு பிறகு இறைவன் இவ்வாறு கூறுகின்றான்:
"மலைகளைப் பற்றி அவர்கள் உம்மிடம்
வினவுகின்றனர். நீர் கூறுவீராக! என் இறைவன் அவற்றை உடைத்துத் துண்டு துண்டாக்கி
தூசி போன்று தூவிவிடுவான்.
பின்னர் அவற்றை ஒரு வெற்றுத் திடலாக
விட்டுவிடுவான்.
நீர் அதில் எந்த பள்ளத்தையோ,
மேட்டையோ காண மாட்டீர்.
அந்நாளில் மக்கள் ஓர் அழைப்பவரைப்
பின்பற்றுவார்கள். அவரது போதனையில் எந்தக் கோணலும் இருக்காது. அளவற்ற அருளாளனின்
குரலுக்கெதிரான குரல்களெல்லாம் அடங்கிவிடும். எனவே முணுமுணுப்பைத் தவிர
வேறெதனையும் நீர் கேட்க மாட்டீர்.
அந்நாளில் அளவற்ற அருளாள(னாகிய
இறை)வன் எவருக்கும் (பரிந்து பேச) அனுமதி வழங்கியுள்ளானோ,
எவருக்காகப் பேசுவதை அவன் விரும்புவானோ அவருக்கே அன்றி வேறொருவருக்கும் பரிந்துரை
பயனளிக்காது." (20:106-110)
இவ்வசனங்களின் கருத்து இவ்வாறாகும்.
நீல நிறக் கண்களுடைய அமெரிக்கர்களும், ஐரோப்பியர்களும் திருக்குர்ஆனின் முன்னறிவிப்புகளை
படிக்கும்போது, கிறித்தவ ஆட்சிகளெல்லாம் அழிந்துவிடும் என்ற
திருக்குர்ஆனின் கூற்று உண்மையானால், நம்முடைய பிரபுக்கள், சர்வதிகாரிகள், பெரும் பெரும் தலைவர்களெல்லாம்
எங்கே போய்விடுவார்கள் என்று அவர்கள் கேட்பார்கள்.
அதற்கு இறைவன் மேற்கூறப்பட்ட வசனங்களில்
அவர்களெல்லாம் அழிக்கப்பட்டுவிடுவார்கள். எல்லா நாடுகளிலும் மக்களாட்சி
நிறுவப்பட்டுவிடும். அதன் காரணமாக மக்களெல்லாம் படிப்படியாகத் திருக்குர்ஆனைக்
கொண்டு வந்தவரின் குறளுக்குச் செவி சாய்க்கத் தொடங்கி விடுவார்கள். அவரின்
போதனைகளில் எந்தக் குறைபாடும் இருக்காது. இறைவனின் குரலுக்கு மதிப்பும்,
உயர்வும் அளிக்கப்படும். இறைவனுக்கு இணை வைப்பவர்களின் குரலுக்கு மதிப்பு
குறைந்துவிடும். அது பழிக்கத்தக்கதாயும், நகைக்கத்தக்கதாயும்
ஆகிவிடும் என்று பதிலளிக்கின்றான்.
ஒரு காலத்தில் கிறித்தவராக மாறுவது
மிகப்பெரிய அந்தஸ்தாக கருதப்பட்டது. ஆனால் அதன் பின்னர் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வது
பொருத்தமானது, இது முன்னேற்றத்திற்குரிய மிகவும் அவசியமானது என்று மாக்கள்
திட்டவட்டமாகத் தெரிந்து கொள்வார்கள்.
அடுத்து இறைவன் கூறுகின்றான்:
"அந்நாளில் உயிருள்ளவனும்
நிலைத்திருப்பவனும், நிலைத்திருக்கச் செய்பவனுமாகிய இறைவன் முன், பெரும் பெரும் மனிதர்களெல்லாம் பணிந்து விடுவர். அநீதி இழைப்பவர் தோல்வி
அடைவார்.
நம்பிக்கை கொண்டவராக இருக்கும்
நிலையில் நற்செயல்களைச் செய்பவர், எவ்வகை அநீதிக்கும் உரிமை இழப்பிற்கு
அஞ்சமாட்டார்.
இவற்றின் கருத்தாவது,
இந்த முன்னறிவிப்பு, நிறைவேறும் காலத்துக்கு முன்னால்
முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கும், உரிமை
இழப்பிற்கும் அவர்கள் அஞ்சியவர்களாக இருப்பார்கள். ஆனால் இந்த முன்னறிவிப்பு
நிறைவேறும் காலத்தில் கிறித்தவர்கள் கூட இஸ்லாத்தைத் தழுவிவிடுவார்கள்.
அப்போதுதான் முஸ்லிம்கள் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதியிலிருந்தும், உரிமை இழப்பிலிருந்தும் பாதுகாக்கப்படுவார்கள்.
இரு பெரும்
சக்திகளின் அழிவும் இஸ்லாத்தின் வெற்றியும்
"இறுதியில் யாஜூஜ் மாஜூஜும் திறந்து விடப்படும்பொழுது,
அவர்கள் எல்லாக் குன்றுகளையும், கடல் அலைகளையும் தாண்டி
உலகில் பரவிவிடுவர்." (21:97)
அதாவது இரஷியாவுக்கும்,
மேற்கு நாடுகளுக்கும் உலகில் பரவ சுதந்திரமளிக்கப்படும் அவர்கள் உலகின் மலைகளின்
சிகரங்களைத் தாண்டியவர்களாகவும் உலகில் பரவிவிடுவார்கள் என்பதன் கருத்து, அவர்களின் அமைப்புகளுக்கு உலகில் வெற்றி கிடைக்கும் என்பதேயாகும். இன்று
அவர்களுக்கு வெற்றி கிடைத்து கொண்டிருப்பது கண்கூடு. கடல்களில் தத்தம் போர்த்
தளங்களை அமைத்துக் கொண்டிருப்பதும் யாவரும் அறிந்ததேயாகும்.
இக்காலத்தில் ஒரு பக்கம் இரஷியா தனது
செல்வாக்கை ஒரு பாதி உலகத்திலும், மறுபக்கம் மேலை நாடுகள் தமது செல்வாக்கை
மற்றொரு பாதி உலகத்திலும் செலுத்தி இருக்கிறது. அவ்விரண்டு அமைப்புகளும் தத்தமது
கொள்கைகளை மக்கள் மீது திணிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றன.
ஓர் அமைப்பு தனது குடியரசை அதில்
எத்தனைக் குறைகள் இருப்பினும் உலகில் பரப்புவதற்காக முயற்சிகளை
மேற்கொண்டிருக்கிறது. மற்றோர் அமைப்போ, குடியரசின் உயிரை அடக்க விரும்புகிறது.
இவ்விரு அடிப்படைகளும் இக்காலத்தில் உலகில் ஒன்றையொன்று எதிர்த்துப் போட்டியிட்டு
கொண்டு வெற்றி பெரும் முயற்சியில் இறங்கி இருக்கின்றன.
இந்த இரு பிரிவுகளும் உலகில்
வெற்றியினைக் கண்டு விட்டனர். முழு உலகமும் இந்த இரு பிரிவுகளில் ஏதாவது ஒன்றைப்
பின்பற்றக் கூடியதாகத்தான் இருக்கிறது.
உலகின் ஒரு பாதி மேற்கத்திய
மக்களாட்சி முறையை விரும்பி ஏற்றுக் கொண்டிருக்கிறது. மறு பாதி சர்வாதிகாரத்தை
ஏற்றுக் கொண்டிருக்கிறது.
இறுதியில் உண்மையான இஸ்லாமிய ஆட்சிக்கே
வெற்றி கிடைக்கும். இதற்கு மாற்றமான சக்திகளும், ஆட்சிகளும்
முறியடிக்கப்படும் என்று இறைவன் திருக்குர்ஆனில் கூறுகின்றான்.
உண்மையான இஸ்லாமிய ஆட்சிக்கு மாற்றமான
இந்தச் சக்திகள் உலகில் நீண்ட நாள் ஆட்சி புரிந்து விட்டன. அவை தீமைகளில் வரம்பைக்
கடந்து விட்டன. எனவே இறைவனின் கோபத்திற்கும், சாபத்திற்கும் அவை உட்பட்டு விட்டன. இனி நபிகள்
நாயகம் ஹஸ்ரத் முஹம்மது (ஸல்) அவர்களின் ஆட்சி உலகின் மீண்டும் நிறுவப்படும். இறைவனே
இல்லை என்று சொல்லக்கூடிய சக்திகளெல்லாம் நிச்சயமாக அழிக்கப்பட்டுவிடும். அவற்றிற்கு
ஆதரவாக உலகின் எவ்வளவு பெரிய வல்லரசுகள் துணை நின்றாலும் அவை அழிவது நிச்சயம். உண்மையிலேயே
அந்நாள் உலகிற்கு மாபெரும் வாழ்த்துக்குரிய நாளாகும். நம்முடைய இறைவனின் ஆட்சி மீண்டும்
மலரும். நம்முடைய நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கொடி மீண்டும் பட்டொளி வீசிப் பறக்கத்தான்
போகிறது. அவர்களால் வழங்கப்பட்ட சாந்தி, சமாதானம் அமைதியின் தூது
மீண்டும் இவ்வுலகில் பரவும். விரோதிகளின் குரல்களெல்லாம் அடைப்பட்டு போய்விடும். அவர்கள்
படுதோல்வி அடைந்ததை பகிரங்கமாக ஒப்புக் கொள்வார்கள். தங்களின் இழி செயல்களை நினைத்துப்
பார்த்து மிகவும் வெட்கித் தலை குனிவார்கள்.
யாஜூஜ் மாஜூஜ் என்னும் இரஷியாவும், மேலை
நாடுகளும் இன்னும் சில வருடங்களில் அவற்றில் நடக்கும் தீமைகளினால் அழிவிற்குள்ளான பிற்கு
இறைவனால் தோற்றுவிக்கப்பட்ட உண்மை இஸ்லாமாகிய அஹ்மதிய்யா ஜமாஅத்தின் மூலம் , முன்னேற்றத்திற்கான அறிகுறிகளே காணப்படாமல் கிடக்கும் முஸ்லிம்கள் மீண்டும்
வல்லமையும், வெற்றியும் அடைந்தவர்களாகி விடுவர். இந்த ஜமாஅத்தின்
மூலம், இஸ்லாம் முழு உலகிலும் வெற்றி பெரும்.
இந்த வசனங்களுக்கு பிறகு இஸ்லாத்தின் பகைவர்களுக்கு
ஏற்படப்போகும் அவலநிலைகளைப் பற்றி இறைவன் கூறுகின்றான்.
இரஷியாவின் அழிவைப் பற்றியும், அமெரிக்காவின்
அழிவைப் பற்றியும் இன்னொரு வசனம் இவ்வாறு கூறுகின்றது:
"இரு பெரும் சக்திகளே!
விரைவில் நாம் உங்களிடம் வரவிருக்கிறோம்" (55:32)
இவ்வசனம் இரஷ்யாவையும், அமெரிக்காவையும்
குறிப்பிடுகிறது. இதன் கருத்து, நாம் சிறிது காலக்கெடு வழங்கிவிட்டு
உங்கள் இருவரையும் அழித்து விடுவோம் என்பதாகும்.
"எனவே நீங்கள்
இருவரும் உங்கள் இறைவனது அருள்களுள் எதனையெல்லாம் மறுப்பீர்கள்? (55:33)
அதாவது, எண்ணற்ற முன்னேற்றங்களை
உங்களுக்கு வழங்கினோம். அவற்றிற்கு நீங்கள் நமக்கு நன்றி செலுத்தாமல் நாம் வழங்கிய
இஸ்லாத்தைப் புறக்கணித்தீர்கள் என்று நாம் அவர்களிடம் கேட்போம்.
இதனையடுத்து அவர்களுக்கு ஏற்படும் அழிவைப்
பற்றி இறைவன் பின்வருமாறு கூறுகின்றான்:
"புகையில்லாத தீச்சுடரும், தெளிவான
தீச்சுவாலையும் உங்களுக்கு எதிராக அனுப்பப்படும் எனவே உங்களாலே உங்களுக்கு (ஒருவர்
மற்றொருவருக்கு) ஒரு போதும் உதவி செய்ய இயலாது. (55:36)
அவர்களுக்கு ஏற்படப்போகிற பரிதாபகரமான
முடிவிற்கு காரணம், இவர்கள் செய்த பாவங்களேயாகும். அந்த பாவங்களுக்குரிய
தண்டனை தாமாகவே வந்து அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்.
தமிழில்: மர்ஹூம் P.M. முஹம்மது அலி H.A (சமாதான வழி இதழிலிருந்து எடுக்கப்பட்டது)


கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None