ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) வாக்களிக்கப்பட்ட மஸீஹ் மற்றும் மஹ்தி
அவர்கள் கூறுகின்றார்கள்:
தொழுகை என்பது,
சிறப்பான ஒரு பிரார்த்தனை ஆகும். ஆனால், மக்கள் இதனை ஒரு
பாரமாகக் கருதுகின்றனர். எந்தத் தேவையும் இல்லாத இறைவனுக்கு,
மனிதன் இறைவனை வணங்க வேண்டும், திக்ரு செய்ய வேண்டும் என்பது
தேவையில்லாததுதான். ஆயினும் தொழுகை, திக்ரு முதலியவற்றில்
உள்ள பயன்கள் மனிதனுக்கே கிடைக்கின்றன. இவற்றின் மூலம் மனிதன் தான் குறிக்கோளை
அடைகிறான்.
இக்காலத்தில் வாழ்கின்ற மக்களின் நிலை
கண்டு எனக்கு மிகவும் வருத்தம் ஏற்படுகிறது. அவர்களுக்கு வணக்க வழிபாடுகளிலும்,
நியாய நேர்மைகளிலும் பற்றில்லை. இவற்றில் பற்றில்லாததற்கு காரணம் உலகில் பொதுவாகப்
பரவியிருக்கும் விஷம் என்ற சடங்கு சம்பிரதாயங்களைக் கண் மூடித்தனமாகப்
பின்பற்றுவதனால் தான் மக்களின் உள்ளத்தில் இறைவன் மீது இருக்க வேண்டிய பற்று
இல்லாமல் போயிற்று. வணக்கத்தில் கிடைக்கின்ற இன்பமும் அவர்களுக்குக்
கிடைப்பதில்லை.
உலகில் இறைவன் படைத்துள்ள எல்லாப்
பொருள்களிலும் ஓர் இன்பத்தை வைத்திருக்கின்றான். இதைப் போன்று வணக்கத்திலும்
சிறப்பான இன்பத்தை படைத்திருக்கின்றான்.
சுவையும்,
மனமும் நிறைந்த ஓர் உணவில் நோய்வாய்ப் பட்டவருக்கு சுவை கிடைப்பதில்லை; அவ்வுணவு அவருக்குக் கசப்பாகவும், அதைக் கண்டாலே
எரிச்சலாகவும் இருக்கிறது. இவ்வாறே எவர்களுக்கு வணக்கத்தில் இன்பமும், சுவையும் கிடைக்கவில்லையோ அவர்கள், தங்களுடைய
ஆத்மீகத்தில் நோய் இருக்கிறது என்பதைத் தெரிந்து அதற்காகக் கவலைப்பட வேண்டும்.
'நான் ஜின்களையும் மனிதர்களையும் என்னை
வணங்குவதற்காகவே படைத்துள்ளேன் என்று இறைவன் கூறுகின்றான். நான் சொன்னதைப் போன்று, உலகிலுள்ள எல்லாப் பொருள்களிலும் ஓர் இன்பத்தை இறைவன் வைத்துள்ளான். இது
உண்மையானால், வணக்கத்தில் இன்பம் ஏன் இருக்கா? உண்மையிலேயே வணக்கத்தில் அதிக இன்பம் இருக்கிறது. அவ்வின்பத்தை
சுவைக்கும் தகுதி வேண்டும். அவ்வளவுதான்.
தானியங்கள்,
பலகாரங்கள் பழங்கள் முதலியவற்றைச் சுவைத்து மனிதன் இன்புறுகின்றான். அழகிய
பொருள்களைக் கண்டு இன்பம் அடைகின்றான். இனிமையான ஓசைகளைக் கேட்டு மகிழ்ச்சி
அடைகின்றான். இவ்வாறு எல்லாவற்றிலும் இன்பம் இருக்கிறது என்றால், வணக்கத்தில் மட்டும் எப்படி இன்பம் இல்லாமற் போய்விடும்?
ஆண், பெண்ணை இணையாகப்
படைத்துள்ளோம் என்று இறைவன் கூறுகின்றான். இவ்விணைப்பில் இன்பத்தையும்
படைத்துள்ளான், இதில் இன்பத்தை படைக்காமல் மக்களை
பெற்றெடுப்பதே நோக்கமாக இருக்குமானால், ஆணும் பெண்ணும்
பாலுணர்வை விரும்பமாட்டார்கள். இத்தொடர்பில் அவர்களுக்கு இன்பம் கிடைக்கிறது. சில
அறிவீனர்கள், மக்களைப் பெற்றெடுத்தல் என்ற
நோக்கத்திற்கல்லாமல், இன்பம் சுவைக்க வேண்டும் என்ற
நோக்கத்திற்காக மட்டும் இத்தொடர்பை வைத்திருக்கின்றனர்.
எல்லா இன்பத்தை விடவும் மேலான இன்பம்
வணக்கத்தில் இருக்கிறது. ஆண், பெண் உறவில் ஆண்மையுள்ளவரே இன்பம் பெற
முடியும்; ஆண்மையில்லாதவரால் இன்பம் பெற இயலாது; நோய் வாய்பட்ட ஒருவரால் உயர்தரமான உணவில் சுவை காண முடியாது; இதை போன்று வணக்கத்தில் எவருக்கு இன்பம் கிடைக்கவில்லையோ அவர்
துர்பாக்கியசாலியும் ஆத்மீக நோயும் உள்ளவராவார்.
ஆண், பெண் உறவு சிறிது
காலத்திற்குரியது. ஆனால் நிரந்தரமான உண்மையான பேரின்பம் இறைவனுக்கும்
மனிதனுக்குமுள்ள தொடர்பில் தான் உள்ளது.
உணவில் ஒருவனுக்கு சுவை
கிடைக்கவில்லையானால், அவர் மருத்துவரிடம் சென்று தனது
குறைபாடுகளை எடுத்துச் சொல்கின்றார்; தமக்கு உணவில் சுவை
கிடைக்க வேண்டும் என்பதற்காகப் பணம் செலவளித்து, கஷ்டங்களை
பொருத்துக் கொள்கின்றார்.. உடலுறவில் இன்பம் கிடைக்காதவர்,
சில நேரங்களில் பெருங்கவலைக்குள்ளாகி, தற்கொலை செய்து
கொள்ளவும் முற்பட்டு விடுகின்றார். இதனால் எத்தனையோ மரணங்களும் நிகழ்ந்து
இருக்கின்றன.
ஆனால் எவருக்கு வணக்கத்தில் இன்பம்
கிடைக்கவில்லையோ, அவர் ஏன் கவலையடைந்து, அதற்காக
முயற்சியை மேற் கொள்ளாமலிக்கின்றார்?
உலக இன்பத்திற்காகப் பல்வேறு
முயற்சிகள் மேற்கொள்ளும் மனிதன் நிரந்தரமான உண்மையான மகிழ்ச்சியையும் இன்பத்தையும்
பெற ஏன் முயற்சிகளை மேற்கொள்வதில்லை? தற்காலிகமான இன்பத்திற்கு மருத்துவம்
உள்ளது என்றால் வணக்கத்தில் கிடைக்கும் நிரந்தரமான இன்பத்திற்கு மருத்துவம்
இல்லாமற் போய்விடுமா? நிச்சயமாக இதற்கு மருத்துவம் உண்டு.
ஆனால் இந்த இன்பத்தைப் பெற நிரந்தர
முயற்சி தேவை. திருக்குர்ஆனில் ஓரிடத்தில் இறைவன் நல்லவர்களைப் பெங்களுக்கு
ஒப்பிட்டுக் கூறியுள்ளான். நம்பிக்கை கொண்டவர்களை ஹஸ்ரத் மர்யம் (அலை)
அவர்களுக்கும், ஃபிர்அவ்னின் மனைவி ஆசியா அவர்களுக்கும் ஒப்பிட்டு
கூறியுள்ளான். இதிலுள்ள ரகசியம் என்னவென்றால்,
இணைவைப்பவர்களிலிருந்து நம்பிக்கை கொண்டவர்களை இறைவன் படைக்கின்றான் என்பதேயாகும்.
ஆணுக்கும்,
பெண்ணுக்கும் இடையிலுள்ள தொடர்பை போன்று, அப்து என்ற
அடிமைக்கும் ரப்பு என்ற வளர்ப்பவனுக்கும் இடையில் ஒரு தொடர்பு உள்ளது.
ஆணுக்கும் பெண்ணுக்குமுள்ள தொடர்பு
இன்பமானதாக அமைந்திருக்குமானால், அத்தொடர்பு மிகச் சிறந்ததும் பயன் அளிக்கக்
கூடியதுமாகும். இல்லை என்றால் இல்லற வாழ்க்கை சீரழிந்து,
குறிக்கோள் நிறைவேறாது போய்விடும். இதனால் ஆண் வேறிடத்திற்கு சென்று நாசமடைந்து, பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றான். இதில் குழந்தைகள் பிறந்து விட்டாலோ, பல தலைமுறைகள் வரை இத்தீங்கு தொடர்கின்றது. ஆண் ஒரு பக்கம்
கெட்டலைகின்றான் என்றால், பெண் வேறொரு பக்கம்
கெட்டலைகின்றாள். இதன் காரணமாக இருவருக்குமே உண்மையான அமைதி கிடைப்பதில்லை.
உண்மையான இல்லற வாழ்க்கையிலிருந்து விலகி கொள்வதால், பல்வேறு
தீமைகளும், குழப்பங்களுமே விளைகின்றன.
இதே போன்று மக்கள் ஆத்மீக
இணைப்பிலிருந்து அகன்றுவிட்டால், ஆத்மீக தொழுநோயாளிகளாகி விடுவார்கள்.
ஒருவருக்கு ஆத்மீக இன்பம் கிடைத்து
விட்டால் அவர் உலகத்திலுள்ள இன்பங்களை விட அந்த ஆத்மீக இன்பத்திற்கே எப்போதும்
முதலிடம் கொடுத்துக் கொண்டிருப்பார் என்று சூஃபிகள் கூறுகின்றனர். இந்த இன்பம்
வாழ்வில் ஒரு தடவையாவது தமக்குக் கிடைத்து விட்டால், அதற்காக அவர் தம்
வாழ்வையே அர்ப்பணம் செய்ய ஆயத்தமாகிவிடுவார்.
ஆனால் உலகில் பெரும்பாலார் இந்த
உண்மையை புரியவில்லை. இத்தகையவர்களின் தொழுகைகள், தரையில் முட்டி
முட்டி எழுவதேயாகும்; ஓர் உடற்பயிற்சியை போன்று கஷ்டத்தைச்
சகித்து கொண்டு உட்கார்ந்து எழுந்திருப்பதேயாகும்.
இன்னொரு விஷயத்தை கவனிக்கும்போது
எனக்குத் தாங்க முடியாத வருத்தம் ஏற்படுகின்றது; சிலர் தொழுவதன்
நோக்கம், உலகில் தமக்கு மதிப்பும்,
மரியாதையும், பதவியும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே
தொழுகிறார்கள். பின்னர் அவர்களுக்கு இவ்வாசை நிறைவேறியும் விடுகிறது. இத்தகு
போலியான வணக்கத்திற்கு இந்த அந்தஸ்து கிடைக்க முடியுமென்றால், உண்மையாக வணங்குபவர்களுக்கு இதைவிட மிகப் பெரிய அந்தஸ்து ஏன் கிடைக்க
முடியாது என்ற எண்ணம் இவர்களுக்கு ஏற்படுவதில்லை. அதற்காக அவர்கள் கவலைப்படுவதும்
இல்லை.
மக்கள் வணக்கத்தில் அலட்சியமாக இருப்பதற்கும்
சோம்பேறிகளாக இருப்பதற்கும் காரணம், இறைவன் வணக்கத்தில் எந்த இன்பத்தை
வைத்திருக்கின்றானோ, அந்த இன்பம் அவர்களுக்கு கிடைக்கவில்லை
என்பதேயாகும். பெரிய நகரங்களில் வாழும் மக்களிடத்திலோ இதைவிட மோசமான நிலையே
காணப்படுகிறது. அங்கு நூற்றுக்கு இருவர் கூட தங்கள் இறைவன் முன் உண்மையான
பற்றுதலுடன் தலை சாய்ப்பதில்லை. இதற்கு காரணம் அவர்கள் வணக்கத்தினால் கிடைக்கும்
இன்பத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளாததும் அதைச் சுவைத்துப் பார்க்காததும் ஆகும்.
பலர் தங்களுடைய வேலைகளில் மூழ்கி இருக்கின்றார்கள்; பாங்கு
ஒலியை அவர்கள் கேட்கக் கூட விரும்புவதில்லை; அந்த ஒலியால்
அவர்களின் உள்ளம் வருத்தமடைகிறது. இத்தகையவர்கள் மிகவும் துர்பாக்யசாலிகளே ஆவர்.
நான் உங்களிடம் சொல்ல விரும்புவது
என்னவென்றால், நீங்கள் இறைவனிடம் மிகுந்த ஆர்வத்துடனும் உருக்கத்துடனும்
இறைவா; நீ உணவு வகைகளிலும் பழங்களிலும் எங்களுக்கு
இன்பங்களையும் சுவைகளையும் வழங்கியிருப்பது போன்று,
தொழுகையிலும் எங்களுக்கு இன்பத்தையும் சுவையையும் தந்தருள்வாயாக! என்று
பிரார்த்தனைச் செய்ய வேண்டும்.
தொழாதவர்கள்,
தொழுகையை ஒரு தண்டனையாகக் கருதுகிறார்கள். அவசியமில்லாமல் அதிகாலைக் குளிரில் எழுந்து, உளூ செய்து, இன்பமான தூக்கத்தை விட்டுவிட்டு ஏன்
தொழ வேண்டும் என்று நினைக்கின்றனர்.
ஒரு குடிகாரனுக்கு போதுமான அளவிற்குப்
போதை வரவில்லை என்றால், மேன்மேலும் குடித்துக் கொண்டே
இருக்கின்றான். அறிவுள்ள ஒரு நல்ல மனிதர் இதிலிருந்து நல்ல பாடத்தை கற்றுக்
கொள்ளலாம். அதாவது தொழுகையைத் தொடர்ந்து தொழ வேண்டும்;
அவருக்கு அதில் இன்பம் கிடைக்கும் வரை தொழுது கொண்டே இருக்க வேண்டும்.
குடிகாரனுக்கு ஒரு வகை இன்பத்தை பெறுவதே குறிக்கோளாக இருப்பது போன்று, வணங்குபவரும் தமது எல்லா சக்திகளையும் பயன்படுத்தி வணக்கத்தில் இன்பத்தை
பெரும் குறிக்கோளைக் கொண்டிருக்க வேண்டும். குறைந்த பட்சம்,
குடிகாரனின் ஆசையையும், துடிப்பையும் போன்று வணங்குபவர், வணக்கத்தில் இன்பத்தைப் பெற்றே தீர வேண்டும் என்ற ஆர்வத்துடனும்
துடிப்புடனும் பிரார்த்தனை செய்தால், அவருக்கு இன்பம்
கிடைத்துவிடும் என்று உறுதியாக கூறுகின்றேன்.
தொழுகையினால் கிடைக்கும் பயங்களையும்
கவனத்திற் கொள்ள வேண்டும். தொழுகைகள் தீமைகளை அழித்து விடுகின்றன என்று இறைவன்
கூறியுள்ளான். திருக்குர்ஆனின் இன்னோரிடத்தில் நிச்சயமாகத் தொழுகை
வெட்க்ககேட்டிலிருந்தும் பகிரங்கமான தீமையிலிருந்தும் தடுக்கின்றது என்று இறைவன்
கூறுகின்றான்.
ஆனால் தொழுது வருபவர்கள் கூட
தீமைகளைச் செய்கின்றனர். இதனை நாமெல்லாரும் காண்கிறோம். இதற்குக் காரணம்,
அவர்கள் தொழுகின்றார்களென்றாலும் அவர்களின் ஆன்மா தொழவில்லை. உண்மையான தொழுகையை
அவர்கள் நிறைவேற்றவில்லை. சடங்கு சம்பிரதாயமாகத் தரையில் முட்டி முட்டி
எழுகின்றார்கள்.
அவர்களின் ஆன்மா மரணமடைந்திருக்கிறது.
தொழுகையை அதற்குரிய நிபந்தனைகளுடன் ஒருவர் நிறைவேற்றும்போது,
அது அவரது ஏனைய தீமைகளை அழித்து விடுகிறது. தொழுகையில்,
உட்காருதல், நெற்றியை கீழே வைத்தல் முதலிய செய்கைகளுடன், ஆன்மாவும் சேர்ந்து முழுமையான பணிவுடன் செயல்படுமானால் இன்பம், மகிழ்ச்சி, ஒளி, அமைதி
முதலியவை கிடைக்கும்.
இதனை இன்னும் தெளிவாகக்
கூறிவிடுகின்றேன். ஒருவர் எத்தனையோ நிலைகளைக் கடந்து தான் மனிதன் ஆகின்றான்.
அதாவது அவன் விந்துதுளி நிலைக்கு வருவதற்கு முன்னால்,
பல்வேறு வகையைச் சேர்ந்த பொருட்களாக இருந்தான்; பின்னர்
விந்து துளியானான் இதில் பல்வேறு நிலைகளை கடந்த பின்னர்,
குழந்தையானான். பிறகு வாலிபனானான். அடுத்து முதியவன் ஆகின்றான். இந்த நிலைகளை
எல்லாம் கடந்து செல்லும் மனிதன், இறைவனுடைய ருபூபிய்யத்
என்னும் வளர்ப்பை ஒவ்வொரு நேரமும் நினைத்துப் பார்த்தால் தன்னை இறைவனுக்கு
அடிமையாக்குவதற்குத் தகுதி பெற்றவனாக ஆகிவிடுவான். இதன் மூலம் நான் உங்களுக்குத்
தெரிவிக்கும் கருத்து என்னவென்றால், நம்மை முற்றிலும்
அடிமையாக்கிக் கொண்டு இறைவனுக்கும் நமக்கும் இடையில் தொடர்பை ஏற்படுத்திக்
கொள்வதனால் மட்டுமே தொழுகையில் இன்பமும் மகிழ்ச்சியும் கிடைக்கும்.
இறைவனுக்கு முன் நம்மை நாம்
ஒன்றுமில்லாதவர்களாக ஆக்கிக் கொள்ளாதவரை உயர் தரமான இன்பத்தை பெற இயலாது. மனிதனுடைய
ஆன்மா இறைவன் முன்நிலையில் முழுமையாக பணியும் போது அந்த ஆன்மா ஊற்று நீர் போன்று
இறைவனை நோக்கி செல்கிறது. அந்த ஆன்மாவுக்கு இறைவன் அல்லாதவர்களுடனுள்ள தொடர்பு
முழுமையாக அறுந்து விடும் போது இறைவனுடைய அன்பு அதற்குக் கிடைக்கிறது. இந்த
நிலையில் மனிதனின் ஆர்வமும், இறைவனின் ஆர்வமும் சேர்ந்து ஒரு புதுமையான
நிலையை உருவாக்குகிறது.
இதற்கு பெயரே தொழுகை. இத்தகு
தொழுகைதான் தீமைகளைப் பஸ்பமாக்கி அழிக்கிறது. இது தான் ஒரு பிரகாசத்தை நமக்கு
வழங்குகிறது. இத்தகைய வணக்கத்தை கொண்டவர்களுக்கு ஆபத்துகளின் போது இந்த வெளிச்சம், அவற்றிலிருந்து
அவர்களைக் காப்பாற்றுகின்றது. இதனைக் குறித்தே, நிச்சயமாக
தொழுகை, வெட்கக் கேட்டிலிருந்தும்,
பகிரங்கமான தீமைகளிலிருந்தும் தடுக்கின்றது என்று இறைவன் கூறுகின்றான்.
இத்தகைய தொழுகையை கொண்டவர்களின்
உள்ளங்களில் பிரகாசமான விளக்கு ஒன்று ஏற்றி வைக்கப்படுகின்றது. எவர்கள் முழுமையாக
இறைவனுக்கு பணிந்து, இறைவனுக்காக எவ்வளவு இழிவடைந்து, அவன் கட்டளைக்கு முற்றிலும் கட்டுப்பட்டு நடக்கின்றார்களோ, அவர்களுக்கே இந்த பாக்கியம் கிடைக்கும். இது கிடைத்த பின்னர் தீமை செய்ய
வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்படுவது சாத்தியமில்லாமல் ஆகிவிடும். தீய
எண்ணம் ஏற்பட முடியாத நிலை வந்துவிட்டால், தீமைகளை செய்வது
எங்ஙனம்? பாவமானவற்றின் பக்கம் அவர்களின் பார்வை செல்லவே
முடியாமலாகிவிடும். இத்தகையவர்களுக்கு கிடைக்கும் இன்பத்தைப் பற்றி சொற்களால்
விவரிக்க என்ன முடியவில்லை.
நினைவில் வைத்துக் கொள்ளத்தக்க விஷயம்
ஒன்று உள்ளது. சரியான பொருளில் தொழுகை என்பது துஆ என்னும் வேண்டுதலால்
நிகழ்வதாகும். இறைவன் அல்லாதவர்களிடத்தில் வேண்டுவது நம்பிக்கை கொண்டவர்களின்
ரோஷத்திற்கு முற்றிலும் மாறுபட்டதாகும். ஒருவர் மிகவும் தாழ்மையோடு இறைவனிடம்
மட்டும் வேண்டாதவரை, அவர் உள்ளபடி உண்மையான முஸ்லிமும் அல்லர்.
உண்மையான நம்பிக்கையாளர் என்று சொல்வதற்கும் தகுதி பெற்றவருமல்லர்.
இஸ்லாத்தின் சரியான பொருள் என்னவென்றால்,
இதனை தழுவியவரின் உள்ளும், புறமும் அமைந்திருக்கின்ற எல்லா
சக்திகளும் இறைவன் முன் அற்பணமாகியிருத்தல் வேண்டும். ஓர் இன்ஜின் இரயில்
பெட்டிகளை இழுத்து செல்வதைப் போன்று ஒரு மனிதர் தமது எல்லா எண்ணங்களையும்
செயல்களையும் தொழில்களையும் இறைவன் என்ற இன்ஜினுக்கு கீழ் அமைத்துக் கொள்ளாதவரை
அவர் இறைவனின் ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்டவராக இருக்க முடியாது. நான் எனது கவனத்தை, எல்லா வானங்களையும் பூமியையும் படைத்த இறைவன் பக்கமாகத் திருப்பிவிட்டேன்
என்று ஒருவர் சொல்லும் போது, உண்மையிலேயே அவர் அவ்வாறு
திருப்பி விட்டார் என்றால், ஐயமின்றி அவர் முஸ்லிமும்
முஃமினும் (நம்பிக்கையாளர்) ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்டவரும் ஆவார்.
ஆனால் எவர் இறைவனிடமட்டுமல்லாமல்,
மற்றவர்களிடமும் வேண்டுகின்றாரோ, அவர் மிகவும்
துர்பாக்கியசாலியேயாவார். இது தொழுகையை விட்டுவிடுவதற்கும்,
வணக்கத்தில் சோர்வு ஏற்படுவதற்கும் காரணமாக அமையும். ஏனென்றால், ஒரு மரத்தின் கிளைகளை ஆரம்பத்தில் ஒரு பக்கமாகச் சாய்ந்து வளருமாறு
செய்தால் அது அப்பக்கமே சாய்ந்து வளர்ந்து உறுதியாகி விடுவது போன்று ஒருவர்
அல்லாஹ் அல்லாதவைகளுக்கும் பணிந்தால், மனதின் சக்திகளும், ஆன்மாவின் சக்திகளும் அவற்றின் பக்கமே முழுமையாக சாய்ந்துவிடும். மேலும்
இறைவன் புறமிருந்து ஒரு கடின தன்மை அவருடைய உள்ளத்தில் உருவாகி, அவ்வுள்ளத்தை உறைந்ததாகவும் கல்லைப்போன்றதாகவும் ஆக்கிவிடும். அம்மரக்
கிளைகளை மறுப்பக்கமாகத் திருப்ப முடியாமல் ஆகிவிடுவது போன்று, அவருடைய உள்ளமும், ஆன்மாவும் நாளுக்கு நாள் இறைவனை
விட்டு தூரம் விலகிக் கொண்டே போகும். எனவே ஒருவர் இறைவனை விட்டு விட்டு
மற்றவர்களிடம் வேண்டுவது, மிகவும் பயங்கரமானதும், அபாயகரமானதுமாகும்.
ஆகவே தொழுகையை தொடர்ந்து நிறைவேற்றி
வருவது மிகவும் அவசியம் ஆகும். இப்படிச் செய்து வருவதால்,
முதலில் உறுதியான ஒரு பழக்கம் ஏற்பட்டுவிடும்; கவனமும்
இறைவனின் பக்கம் திரும்பிவிடும். பின்னர் படிப்படியாக இறைவன் பக்கமே முழுக் கவனம்
செலுத்தும் காலம் வந்து சேரும். இந்த நிலை ஏற்படும்போது,
மனிதன் ஒரு பிரகாசத்திற்கும், இன்பத்திற்கும் உரியவனாகி
விடுகின்றான்.
இறைவன் அல்லாதவர்களின் பால் கவனம்
செலுத்துவதால் விளையும் தீமைகளை விளக்கும் சொற்கள் எனக்குக் கிடைக்கவில்லையே என்று
வருந்துகின்றேன். மக்களிடம் வேண்டுவது அவர்களுக்குச் செய்யும் வணக்கம் ஆகும்.
இத்தகையவர்களை இறைவன் தன்னிடமிருந்து தூக்கி எறிந்து விடுகின்றான். ரோஷமுள்ள
ஒருவர், தமது மனைவி மற்றொருவருடன் தொடர்பு கொண்டிருப்பதை அறவே
விரும்பமாட்டார்; அவ்வாறு தொடர்பு கொண்டிருந்தால், அத்தீயவளை கொன்று விடுவது அவசியமெனக் கருதுவார். இதனால் சில வேளைகளில்
கொலைகள் கூட நிகழ்ந்து இருக்கின்றன. இவ்வாறே ஏகத்துவமும் ரோஷத்தை கொண்டதாகும்.
வேறெவருக்கும் அடிமையாக இருப்பதையோ, வேறெவரிடமாவது வேண்டுதல்
செய்வதையோ இறைவன் அறவே விரும்புவதில்லை. தம்மை முழுமையாக ஏகத்துவத்தில் பிணைத்துக்
கொள்ளாத ஒருவரால் இஸ்லாத்தின் மகிமையை தெரிந்து கொள்ள முடியாது; அவருக்கும் அதன் மீது சரியான பற்றும் இருக்காது. தீய எண்ணங்களும் தீய
செயல்களும் தான் என்ற அகம்பாவமும் பெருமையும் தன்னை விட்டு அகன்று மிகுந்த பணிவு
ஏற்படாதவருக்கு, தொழுகையில் இன்பமும் கிடைக்காது; அதில் மகிழ்ச்சியும் ஏற்படாது. அவர் இறைவனுடைய உண்மையான அடியாராகவும்
இருக்க முடியாது.
இறைவனுக்கு உண்மையான அடியாராக
இருக்கக் கற்றுக் கொடுப்பது தொழுகையேயாகும்.
நீங்கள் இறைவனுடன் உண்மையான தொடர்பை
ஏற்படுத்திக் கொள்ள விரும்பினால், தொழுகையில் உங்களை நிரந்தரமாகப் பிணைத்துக்
கொள்ளுங்கள்.
உங்கள் உடல்,
ஆன்மா, உங்கள் நோக்கங்கள், ஆர்வங்கள்
உணர்ச்சிகள் எல்லாம் தொழுகையாகிவிடும் அளவிற்கு உங்களை அதில் பிணைத்துக்
கொள்ளுங்கள்.
இந்த நிலை ஏற்பட்டு விடுமானால்,
தொழுகையின் இன்பத்தையும் அதில் கிடைக்கும் மகிழ்ச்சிகளையும் உங்களால் சுவைக்க
முடியும்.
(மல்ஃபூஸாத்,
பாகம் 1 பக்கம் 21-34)


கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None