திரு மறையில் இருந்து ஹஸ்ரத் ஈஸா(அலை) அவர்களின் மரணத்தை உறுதி செய்யும் 30 வசனங்கள்

1. ஈஸாவே! நான் உமக்கு (இயற்கையான) மரணத்தைத் தருவேன். உமக்கு எனது சந்நிதியில் உயர்வு தருவேன்,  நிராகரிப்பவர்களி(ன் குற்றச்சாட்டுகளி)லிருந்து உம்மைத் தூய்மைப் படுத்துவேன். உம்மை பின்பற்றுபவர்களை நிராகரிப்பவர்களைவிட இறுதிநாள் வரை மேலோங்கச் செய்வேன். பின்னர் என்னிடமே திரும்பிவர வேண்டியதிருக்கிறது. அப்பொழுது நான், நீங்கள் கருத்து வேறுபாடு கொண்டிருக்கின்றவற்றில்  உங்களுடையே தீர்ப்பு வழங்குவேன் என்று அல்லாஹ் கூறிய நேரத்தை (நினைத்துப் பாருங்கள்( )திருக்குர்ஆன் 3: 56 (

2. மாறாக அல்லாஹ் அவருக்குத் தன்னிடம் உயர்வைக் கொடுத்தான். அல்லாஹ் வல்லவனும் நுண்ணறிவுள்ளவனுமாவான். (திருக்குர்ஆன் 4: 159 )

3. நீ எனக்குக் கட்டளையிட்டபடி என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள் என்பதையே நான் அவர்களிடம் கூறினேன். நான் அவர்களுடன் இருந்த காலம் வரை, அவர்களுக்கு நான் சாட்சியாக இருந்தேன். ஆனால் நீ எனக்கு மரணத்தை தந்தபின், நீயே அவர்களைக் கண்காணித்தவனாக இருந்தாய்; மேலும் நீயே எல்லாவற்றிற்கும் சாட்சியாளனாக இருக்கிறாய். (திருக்குர்ஆன் 5: 118)


4. அவருடைய மரணத்திற்கு முன் அவரிடம் நம்பிக்கை கொள்ளாத ஒரு (கோத்திரத்த)வரும் வேதத்தையுடையவருள் இருக்கமாட்டார். அவர் மறுமை நாளில் அவர்களுக்கு எதிராகச் சாட்சி கூறுபவராக இருப்பார். (திருக்குர்ஆன் 4: 160)


5. மர்யமின் மகன் மஸீஹ் ஒரு தூதரே அன்றி வேறில்லை. நிச்சயமாக அவருக்கு முன்னுள்ள தூதர்கள் மரணமடைந்து விட்டனர். அவருடைய தாயார் நேர்மையான பெண்ணாக இருந்தார். அவர்கள் இருவரும் உணவு உண்டு வந்தனர். அவர்களுடைய நன்மைக்காக அடையாளங்களை எவ்வாறு நாம் விளக்கிக் கூறுகின்றோம் என்பதையும், அவர்கள் எவ்வாறு திருப்படுகின்றனர் என்பதையும் பார்ப்பீராக. (திருக்குர்ஆன் 5: 76)


6. நாம் அத் தூதர்களுக்கு உணவு உண்ணாத உடல்களை வழங்கவில்லை. அவர்கள் மிக நீண்ட காலம் வாழ்ந்ததுமில்லை. (திருக்குர்ஆன் 21: 9)


7. முஹம்மது ஒரு தூதர் மட்டுமே ஆவார். அவருக்கு முன் தோன்றிய எல்லாத் தூதர்களும் மரணமடைந்து விட்டனர். எனவே அவர் மரணமடைந்து விட்டாலோ, கொலை செய்யப்பட்டாலோ, நீங்கள் உங்கள் குதிகால்களில் திரும்பிச் சென்று விடுவீர்களோ? தமது குதிகால்களில் திரும்பிச் சென்று விடுவோரால் ஒருபோதும் அல்லாஹ்வுக்குச் சிறு இழப்பையும் ஏற்படுத்த முடியாது. அல்லாஹ் நன்றி செலுத்துவோருக்கு நிச்சயமாக நற்பலன் வழங்குவான். (திருக்குர்ஆன் 3: 145)


8. உமக்கு முன்னர், எந்த மனிதருக்கும் என்றென்றும் வாழும் (மிக நீண்ட) வாழ்க்கையை நாம் வழங்கியதில்லை. எனவே நீர் மரணித்து, அவர்கள் மட்டும் என்றென்றும் (மிக நீண்ட நாள்) உயிருடன் இருப்பதா?. (திருக்குர்ஆன் 21: 35)


9. அவர்கள் (தமது சகாப்தத்தை முழுமைப்படுத்தி) மரணமடைந்து விட்ட ஒரு சமுதாயத்தினர். அவர்கள் சம்பாதித்த(இலாபமும் நஷ்டமுமான)து அவர்களுக்கே. நீங்கள் சம்பாதித்த(இலாபமும் நஷ்டமுமான)து உங்களுக்கே. மேலும் அவர்கள் செய்தது பற்றி உங்களிடம் கேட்கப்படமாட்டாது. (திருக்குர்ஆன் 2: 135)


10. நான் எங்கிருந்தாலும் அவன் என்னை அருள் நிறைந்த (ஒரு)வனாக ஆக்கியுள்ளான். நான் உயிருடனிருக்கும் வரை தொழுகையையும், ஸக்காத்தையும் அவன் எனக்கு கட்டாயக் கடமையாக்கியுள்ளான்.


மேலும் என் தாயாருடன் மிக்க நல்ல முறையில் நடந்து கொள்பவனாக என்னை ஆக்கியுள்ளான். என்னை ஆணவம் கொண்டவனாகவும், இரக்கமற்றவனாகவும் ஆக்கவில்லை. (திருக்குர்ஆன் 19:32-33)

11. நான் பிறந்த நாளிலும் எனக்குச் சாந்தி கிடைத்தது. நான் மரணமடையும் நாளிலும், எனக்கு உயிரளித்து மீண்டும் நான் எழுப்பப்படும் நாளிலும் (எனக்கு சாந்தி கிடைக்கும். (திருக்குர்ஆன் 19: 34)

12. மக்களே! நீங்கள் மீண்டும் எழுப்பப்படுவது குறித்து ஐயத்திற்குள்ளாகியிருந்தால், (நினைவில் கொள்ளுங்கள்) நாம் (நம் ஆற்றலை) உங்களுக்குத் தெளிவாக்க நாம் உங்களை முதலில் மண்ணிலிருந்து படைத்தோம். பின்னர் விந்திலிருந்தும், அதன் பின்னர் (முன்னேற்றத்தை வழங்கி) ஒட்டிக் கொள்ளும் தன்மையினைக் கொண்ட ஒரு நிலையிலிருந்தும், பின்னர் சதைத் துண்டிற்கு நிகரான ஒரு நிலையிலிருந்தும் படைத்தோம். அது குறைவான அல்லது முழுமையான ஒரு சதைத் துண்டின் வடிவமாக இருந்தது. நாம் விரும்புவதனை, குறிப்பிட்ட ஒரு காலம் வரை கருப்பைகளில் தங்கி இருக்கச் செய்கின்றோம். பின்னர் நாம் உங்களை ஒரு குழந்தையின் வடிவில் வெளிப்படுத்துகிறோம். பின்னர் நீங்கள் உங்களுடைய வலிமையினை (வலிமை வாய்ந்த வயதினை) அடைய, உங்களை வளரச் செய்கிறோம். உங்களுள் சிலர் தமது (இயல்பான) வயதையடைந்து மரணமடைகின்றனர். உங்களுள் இன்னுஞ்சிலர் மிக முதிய வயதை அடைகின்றனர். இதனால் அவர்கள் அறிவைப் பெற்றிருந்த பின்னரும், எதுவுமறிவதில்லை. நீர் பூமியை(ச் சில காலங்களில்) வறண்டு, உயிரற்றதாகக் காண்கின்றீர். பின்னர் நாம் அதன் மீது (மழை) நீரை இறக்கும் போது, அது பொலிவு பெற்று, செழுமையடையத் தொடங்குகின்றது. அழகு வாய்ந்த எல்லா வகையான வயல்களையும் அது முளைக்கச் செய்கின்றது. (திருக்குர்ஆன் 22: 6)


13. மேலும் ஷெய்த்தான் இதன் மூலம் (இம்மரத்தின் மூலம்) அவ்விருவரையும் (அவர்களின் அந்தஸ்திலிருந்து) விலக்கி விட்டான். (இவ்வாறு) அவன் அவர்கள் இருந்த நிலையிலிருந்து அவர்களை வெளியாக்கி விட்டான். எனவே நாம் (அவர்களிடம் இங்கிருந்து) வெளியேறி விடுங்கள் என்று கூறினோம். உங்களுள் சிலர் சிலருக்குப் பகைவர் ஆவீர்கள். (குறிப்பிட்ட) ஒரு காலம் வரை இதே பூமியில் உங்களுக்கு வாழுமிடம், வாழ்க்கைக்குத் தேவையான பொருள்களும் (ஏற்படுத்தப்பட்டு) உள்ளன (என்பதை நினைவில் கொள்ளுங்கள்). (திருக்குர்ஆன் 2: 37)


14. நாம் எவருக்கு நீண்ட ஆயுளை வழங்குகின்றோமோ அவரது உடல் வலிமையைக் குன்றச் செய்கின்றோம். அவர்கள் அறிந்து கொள்ள வேண்டாமா? (திருக்குர்ஆன் 36: 69)


15. அல்லாஹ் தான் உங்களை ஒரு பலவீனமான நிலையிலிருந்து படைத்து, பலவீனத்திற்குப் பின்னர் வலிமையினை அளித்து, வலிமைக்குப் பின்னர் பலவீனத்தையும், முதுமையையும் ஏற்படுத்தினான். தான் நாடுவதை அவன் படைக்கின்றான். அவன் நன்கு அறிபவனும், முழுமையான ஆற்றல் பெற்றவனுமாவான். (திருக்குர்ஆன் 30: 55)


16. இவ்வுலக வாழ்க்கை, மேகத்திலிருந்து நாம் பொழியச் செய்யும் தண்ணீரைப் போன்றதாகும். இதன் பின்னர் மக்களும் கால்நடைகளும் உண்ணுகின்ற பூமியின் விளைச்சல், அத்துடன் கலந்து விடுகிறது. எதுவறையெனில் பூமி (அதன் மூலம்) தனது அணிகலன்களைப் பெற்று வனப்புடன் தோற்றமளிக்கிறது. மேலும் அதில் வாழ்பவர்கள் தாங்கள் (அதன் விளைச்சலை) ஒன்று திரட்டிக்கொள்ளத் தகுதி பெற்றதாக எண்ணுகின்றனர். அப்போது அதன் மீது இரவிலோ பகலிலோ நம்முடைய (ஆக்கினைப் பற்றிய) கட்டளை வருகிறது. நேற்று இவ்விடத்தில் (எதுவுமே) இல்லாதிருந்தது போன்று நாம் அதனை அறுவடை செய்த வயலைப்போல் ஆக்கிவிடுவோம். சிந்தித்து செயலாற்றுபவர்களுக்கு இவ்வாறே நாம் (நம்முடைய) வசனங்களை மிகத் தெளிவாக விளக்குகின்றோம். (திருக்குர்ஆன் 10: 25)


17. இதன் பிறகு அந்த விந்தை ஒட்டுகின்ற ஒரு பொருளாக உருவாக்கினோம். அடுத்து அந்த ஒட்டுகின்ற பொருளை சதைக் கட்டியாக உருவாக்கினோம். பின்னர் அந்த சதைக் கட்டியை எலும்புகளாக உருவாக்கினோம். பிறகு அந்த எலும்புகளுக்குச் சதையை அணிவித்தோம். பின்னர் அதனை மற்றொரு படைப்பாக வளர்ச்சியடையச் செய்தோம். எனவே படைப்போருள் மிகச்சிறந்தவனாகிய அல்லாஹ் மிக்க அருளுக்குரியவனாவான்.


பின்னர் நீங்கள் அதற்குப் பிறகு நிச்சயமாக மரணமடைபவர்களே.  (திருக்குர்ஆன் 23: 16-15)

18. அல்லாஹ் மேகத்திலிருந்து தண்ணீரை இறக்குவதை நீர் பார்க்கவில்லையா? அதனை பூமியில் ஊற்றுகளாக ஓடச் செய்கின்றான். பின்னர் அவன் அதனைக் கொண்டு பல்வேறு நிறங்களைக் கொண்ட புற்பூண்டை வெளிப்படுத்துகின்றான். பிறகு அது உலர்ந்து விடுகிறது. பின்னர் அது மஞ்சள் நிறமாவதை நீர் காண்கின்றீர். பின்னர் அவன் அதனைப் பதராக ஆக்கி விடுகின்றான். நிச்சயமாக இதில் அறிவுடையவர்களுக்கு நற்போதனை இருக்கிறது.  (திருக்குர்ஆன் 39: 22)


19. உமக்கு முன்னர் நாம் அனுப்பிய தூதர்களெல்லாரும் உணவு உண்டனர். கடை வீதிகளில் நடமாடினர். நாம் உங்களுள் சிலரைச் சிலருக்கு சோதனையாக்கியுள்ளோம். (முஸ்லீம்களாகிய) நீங்கள் பொறுமையைக் கடைப்பிடிக்கின்றீர்களா? (இல்லையா என்பதனைக் காண அவ்வாறு செய்துள்ளோம்) உமது இறைவன் நன்கு பார்ப்பவனாவான். (திருக்குர்ஆன் 25: 21)


20. மேலும், அவர்கள் அல்லாஹ்வையன்றி எவர்களை அழைக்கின்றனரோ அவர்களால் (பொய்க் கடவுளரால்) எதனையும் படைக்க முடியாது. மேலும் அவர்களே (இறைவனால்) படைக்கப்பட்டவர்கள்.


அவர்கள் மரணமடைந்தவர்கள்; உயிருள்ளவர்கள் அல்ல. மேலும் எப்போது எழுப்பப்படுவர் என்பதனை (க் கூட) அவர்கள் அறிவதில்லை. (திருக்குர்ஆன் 16: 21-22)

21. முஹம்மது உங்களுள் எந்த ஆணுக்கும் தந்தை இல்லை. ஆனால் (அவர்) அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் கா(த்)தம் ஆகவும் விளங்குகின்றார். மேலும் அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவனாவான். (திருக்குர்ஆன் 33: 41)


22. (இறையச்சத்துடன் நடப்பவர்களாகிய) அவர்கள் தூயவர்களாய் இருக்கும் நிலையில், வானவர்கள் அவர்களின் உயிர்களைக் கைப்பற்றி உங்களுக்கு சாந்தி உண்டாவதாக, உங்களுடைய நற்செயல்களுக்குப் பதிலாக நீங்கள் சுவர்க்கத்தில் நுழையுங்கள் என்று கூறுவார்கள். (திருக்குர்ஆன் 16: 33)


23. நிம்மதியடைந்த ஆன்மாவே!


நீ உன் இறைவனிடம் திருப்தியடைந்தவாறும், அவன் (உன்னிடம்) திருப்தியடைந்தவாறும் (அவனிடம்) திரும்பி வருக.

தேர்ந்தெடுக்கப்பட்ட என் அடியார்களுக்கிடையே நுழைந்து விடுக. (என உன் இறைவன் உன்னிடம் கூறுகின்றான்.

மேலும் நீ என் தோட்டத்தில் நுழைந்து விடுக. (திருக்குர்ஆன் 89: 28-31)

24. அல்லாஹ்வே உங்களைப் படைத்தான். பின்னர் அவனே உங்களுக்கு உணவளித்தான். பின்னர் அவன் உங்களை மரணிக்கச் செய்வான். பின்னர் அவன் உங்களை உயிர்பெறச் செய்வான். உங்களால் (இறைவனுக்கு) இணையாக்கப்பட்டவர்களுள் எவரேனும் இச்செயல்களில் எதையாவது செய்கின்றாரா? அவன் தூய்மையானவன். மேலும் அவர்கள் (அவனுக்கு) ஏற்படுத்தும் இணைகளை விட்டும் அவன் மிக்க மேலானவன். (திருக்குர்ஆன் 30: 41)


25. (பூமியாகிய) இதன் மீது உள்ளவையெல்லாம் அழியக்கூடியவையே;


புகழுக்கும், கண்ணியத்திற்குமுரிய உம் இறைவனின் அருள் நிலைத்திருக்கும். (திருக்குர்ஆன் 55: 27-28)

26. நிச்சயமாக இறையச்சமுடையவர்கள், தோட்டங்களிலும், ஆறுகளிலும் இருப்பர்


எல்லாம் வல்ல அரசனிடத்திலுள்ள நிலையான கண்ணியம் மிக்க இருப்பிடத்தில் இருப்பர்.  (திருக்குர்ஆன் 54: 55-56)

27. நன்மை கிடைக்கும் என்ற நற்செய்தியினை ஏற்கனவே எம்மிடமிருந்து பெற்றவர்கள், அதிலிருந்து (நரகத்திலிருந்து) வெகு தொலைவில் விலகியே இருப்பார்கள்.


அவர்கள் அதன் சப்தத்தைக் கூடக் கேட்க மாட்டார்கள். தங்கள் உள்ளம் விரும்பும் நிலையிலே அவர்கள் என்றென்றும் இருப்பர். (திருக்குர்ஆன் 21: 102-103)

28. நீங்கள் எங்கிருந்தாலும், வலிமைவாய்ந்த கோட்டைகளில் நீங்கள் இருந்தாலுஞ் சரியே மரணம் வந்து உங்களைப் பிடித்துக் கொள்ளும். (மேற்க்கூறப்பட்ட) அவைகளுக்கு ஏதேனும் நன்மை ஏற்பட்டால் இது அல்லாஹ்விடமிருந்து வந்ததென்று கூறுகின்றனர். அவர்களுக்கு ஏதேனும் தீமை ஏற்பட்டால் இது உம்மிடமிருந்து வந்ததென்றும் கூறுகின்றனர். (இவை) எல்லாமே அல்லாஹ்விடமிருந்து வந்தவை என்று நீர் கூறுவீராக. இந்த மக்களுக்கு என்ன நேர்ந்தது? எவ்விஷயத்தையும் விளங்கிக் கொள்வதன் பக்கம் இவர்கள் நெருங்குவதே இல்லை. (திருக்குர்ஆன் 4: 79)


29. அல்லாஹ் தன் தூதருக்கு அவர்களிடமிருந்து வழங்கிய போர்க்களப் பொருள்களுக்காக, நீங்கள் குதிரைகளையோ, ஒட்டகங்களையோ ஓட்டவில்லை. எனினும் அல்லாஹ் தன் தூதர்களுக்கு, தான் நாடுபவர்கள் மேல் அதிகாரத்தை வழங்குகிறான். அல்லாஹ் எல்லாவற்றிற்கும் பேராற்றல் பெற்றவனாவான். (திருக்குர்ஆன் 59: 7)


30. அல்லது, உமக்குத் தங்கத்தாலான வீடொன்று இருத்தல் வேண்டும்; அல்லது, நீர் வானத்திற்கு ஏறிச் செல்ல வேண்டும்; நாங்கள் படிக்கத் தக்க ஒரு நூலை எங்களுக்குக் கொண்டு வராத வரை, நீர் வானத்திற்குச் சென்றதையும் நாங்கள் நம்பமாட்டோம். நீர் கூறுக: 'என் இறைவன் தூய்மையானவன்; நான் ஒரு மனிதனாகிய தூதரேயன்றி வேறு அல்லன்'. (எனவே என்னால் வானம் செல்ல இயலாது). (திருக்குர்ஆன் 17: 94)




(நன்றி-இஸாலே அவ்ஹாம்)

கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.