இறைவனுக்கு முக்கியத்துவம் அளியுங்கள்

ஹஸ்ரத் அஹ்மத்(அலை) அவர்களின் போதனைகள்:

நாம் கைக்கொள்ள வேண்டிய விஷயங்களாவன: எல்லாவற்றையும் படைத்து, காத்து வளர்க்கின்ற எல்லாம்வல்ல என்றும் நிலைத்து நிற்கின்ற ஏகனான ஓர் இறைவன் இருக்கிறான் என்று உளப்பூர்வமாக, உறுதியாக நாம் நம்பவேண்டும். அந்த இறைவன் என்றும் மாறாத இயல்புகளை உடையவன் என்றும் நாம் நம்பவேண்டும். அவன் யாருடைய மகனுமல்ல; அவன் யாரையும் பெற்றெடுக்கவுமில்லை. அந்த இறைவன் துன்பத்தில் உழலக்கூடியவனோ சிலுவையில் அறையப்படக் கூடியவனோ இறந்து போகக் கூடியவனோ அல்லன். இவை அனைத்திலிருந்தும் அவன் தூய்மையானவன். அவன் எத்தகையவனென்றால் அவன் மிகத் தூரத்தில் உள்ளவனாக இருந்த போதிலும் மிக அருகிலேயே இருக்கின்றான். மிக அருகிலுள்ளவனாக இருந்த போதிலும் மிகத் தூரத்திலேயே இருக்கின்றான். அவன் ஏகனாக இருந்த போதிலும் அவனுடைய தோற்றங்கள் பலவாகும். மனிதன் தன்னை மாற்றிக் கொள்கின்றபோது அவ்விறைவன் அவனுக்குப் புதுவிதமாகத் தோற்றமளிக்கிறான். மனிதன் தன்னை மாற்றிக்கொள்ளும்போது ஒரு மாறுதலான இறைவனை காணுகின்றான். ஆனால் இறைவன் மாறுவதில்லை. விபரீதமான மாற்றமெதுவும் அவனிடத்து ஏற்படுவதுமில்லை. அவன் மாறாத முழுமையான இயல்புகளை உடையவன்.((கிஷ்தி நூஹ்)


இறைவன் எத்தகைய தன்மை உடையவன்?
நீங்கள் இறைவனுக்காக ஆகிவிட்டால்,அவன் உங்களுடையவனாய் ஆகிவிடுவான் என்பதனை நிச்சயமாக அறிந்துகொள்ளுங்கள். நீங்கள் உறங்கிக் கொண்டிருக்கையில் இறைவன் உங்களுக்காக விழித்துக் கொண்டிருப்பான். நீங்கள் உங்கள் பகைவர்களைக் குறித்து கவனமற்றிருக்கும்போது அவன் அவர்களைக் கண்காணித்து வருவான்.மேலும் உங்களுக்கு விரோதமான அவர்களது சதித்திட்டங்களை எல்லாம் முறியடிப்பான். உங்களிறைவன் எத்தகைய வல்லமை மிக்கவன் என்பதை நீங்கள் இதுவரை அறிந்ததில்லை. நீங்கள் இதனை அறிந்திருந்தால் இவ்வுலகிற்க்காக கவலைப்படும் ஒரு நாளும் உங்களுக்கு வராது. தன்னிடம் ஒரு செல்வக் குவியலைகொண்டுள்ள ஒருவன் அதிலிருந்து ஒரு பைசாவை இழந்துவிட்டால் அதற்க்காக கண்ணீர் வடிப்பானா?கூச்சல் போடுவானா? அல்லது தன்னை மாய்த்துக் கொள்வானா? இவ்வாறிருக்க இறைவன் உங்களது ஒவ்வொரு தேவையின் போதும் உங்களுக்கு எப்போதும் வழங்கக்கூடிய கருவூலமாக இருக்கிறான் என்பதனை நீங்கள் அறிந்திருந்தால் நீங்கள் உலகிற்காக தம்மை இழந்த நிலையில் மயங்கி இருப்பானேன்?(கிஷ்தி நூஹ்)


மேலும் கூறுகின்றார்கள்:
 
ஒரு மனிதன் மனந்திருந்தி நன்மையின் பக்கம் எண்ணத்தைச் செலுத்தும்போது இறைவனும் ஒரு புதிய தோற்றத்துடன் அம்மனிதனிடத்திலே தன்னை வெளிப்படுத்திக் கொள்கின்றான். மனிதன் அறவழியிலே முன்னேறுகின்றபோது ஒவ்வொரு படித்தரத்திலும் இறைவனின் வல்லமையை எடுத்துக்காட்டும் தோற்றங்களும் அவனிடத்திலே ஒளிவீசிப் பிரகாசிக்கின்றன. எவர்களிடத்திலே அபூர்வமான மாற்றங்கள் எற்படுமோ அவர்களிடத்திலே இறைவனின் சக்தி அற்புதமாக, அவனுடைய மாறாத வழக்கப்படி வெளிப்படுகின்றது. இவையே அற்புதம் எனப்படுவனவற்றில் அடிப்படையாகும்.

இத்தகைய இறைவனே நமது உறுதிமொழியில் குறிப்பிடப்படுகின்ற இறைவனாகும். எனவே அந்த இறைவன் மீது நீங்கள் நம்பிக்கைக் கொள்ளுங்கள். உங்கள் உயிரை விடவும் உலக சுகபோகங்களை விடவும் எல்லாவித உறவு முறைகளைவிடவும் மேலாக அவனுக்கே முக்கியத்துவம் அளியுங்கள். அவனுடைய வழியிலே நேர்மையையும் தூய்மையையும் துணிவுடன் கடைபிடியுங்கள். உலகம் தன்னுடைய செல்வத்திற்கும் இன பந்துக்களுக்கும் தரும் முக்கியத்துவத்தை இறைவனுக்குத் தருவதில்லை. ஆனால் நீங்கள் அவனையே பற்றிப் பிடிக்கவேண்டும். அப்போதுதான் அவனது ஜமாஅத்தைச் சார்ந்தவர்களாக நீங்கள் எழுதப்படுவீர்கள்.(கிஷ்தி நூஹ்)


மேலும் கூறுகின்றார்கள்:
இறைவன் கிடைப்பதற்குரிய பெரும் கருவூலமாக இருக்கிறான். நீங்கள் ஒவ்வோர் அடி எடுத்துவைக்கும்போதும் அவன் உங்களுக்கு உதவி புரிகின்றவனாய் இருக்கிறான் எனவே அத்தகைய இறைவனுக்கு மதிப்பளியுங்கள்.அவனில்லாமல் நீங்கள் ஒரு பொருட்டல்ல, உங்களது வழிவகைகளும் திட்டங்களும் ஒன்றுமற்றவையாகும். நீங்கள் உலகப் பொருள்கள்மீது முற்றிலும் சார்ந்திருக்கின்ற பிற சமுதாயத்தினரை ஒருபோதும் பின்பற்றாதீர்கள். பாம்பானது மண்ணைத் திண்பதுபோல் அவர்கள் உலகின் அற்பப் பொருள்களையே தின்றுள்ளனர். கழுகுகளும் நாய்களும் பிணங்களைத் தின்பதைப்போல் அவர்களும் உலக இச்சை என்னும் பிணங்களையே கவ்விப் பிடித்துள்ளனர்.அவர்கள் இறைவனை விட்டும் வெகு தூரம் சென்றுவிட்டனர்.அவர்கள் மனிதர்களைத் தெய்வமாக மதித்து வணங்கினர் பன்றியைத் தின்றனர், மதுவை தண்ணீரைப்போல் அருந்தினர் அவர்கள் அளவுக்கு மீறி உலகப் பொருள்கள் மீது விழுந்ததாலும் இறைவனிடமிருந்து உதவி தேடாததாலும் மரணித்துப் போயினர்.ஒரு புறாவானது தனது கூட்டிலிருந்து பறந்து செல்வதைப்போல் அவர்களிடமிருந்து ஆன்மீக ஆவி பறந்து போய்விட்டது. (கிஷ்தி நூஹ்)

மேலும் கூறுகின்றார்கள்:
எவர் இறைவனுக்காக நெருப்பில் வீழ்வாரோ அவர் அதிலிருந்து காப்பாற்றப்படுவார். எவர் இறைவனுக்காக அழுவாரோ அவரே பிறகு சிரிப்பவராக மாறுவார். எவர் அவனுக்காக உலகிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வாரோ அவருக்கு அவ்வுலகம் கிடைக்கும்.நீங்கள் உளப்பூர்வமாக, தூய்மையாக, தீவிரமாக இறைவனுடன் நட்பு கொள்வீர்களாயின் அவனும் உங்களுடைய நண்பனாக ஆகிவிடுவான். உங்கள் மனைவிமார்கள் மீதும் உங்களுடைய ஏழைச் சகோதரர்கள் மீதும் நீங்கள் கருணை காட்டுங்கள். அப்போதுதான் வானத்தில் உங்களுக்கு கருணை காட்டப்படும். உண்மையாகவே நீங்கள் இறைவனுக்காக ஆகிவிடுவதென்றால் இறைவனும் உங்களுக்காக ஆகிவிடுவான். இவ்வுலகு ஆயிரக்கணக்கான ஆபத்துகள் நிறைந்த இடமாக இருக்கிறது. பிளேக் என்னும் கொடிய நோய் அந்த ஆபத்துகளில் ஒன்றாகும். நீங்கள் உளப்பூர்வமான இறைநம்பிக்கை கொண்டவர்களாக இருங்கள். அப்போதுதான் இந்த ஆபத்துக்களை இறைவன் உங்களிடமிருந்து அகலச் செய்வான. வானத்திலிருந்து ஆணை பிறக்காமல் பூமியில் எந்த ஆபத்தும் ஏற்படுவதில்லை. வானத்திலிருந்து கருணை இறங்காமல் பூமியில் ஏற்பட்ட ஆபத்து நீங்குவதுமில்லை. எனவே கிளையை பிடிக்காமல் ஆணிவேரைப் பற்றிப்பிடிப்பதுவே புத்திசாலித்தனமாகும். (கிஷ்தி நூஹ்)
 

கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.