பொய் மூன்று நிலைகளில் கூறலாம் | ஹதீஸின் உண்மை நிலை என்ன?


சிலர் கூறுகின்றனர்: அல்குர்ஆன் மற்றும் சுன்னாவின் அடிப்படையில் பொய் பேசுவது  அனைத்து விஷயங்களிலும் தடுக்கப்பட்டுள்ளது. ஆனால் குறிப்பிட்ட மூன்று விஷயங்களில் அளவுக்கு மீறாமல் பொய் அனுமதிக்கப்பட்டுள்ளது, எந்த மனிதனுக்கும் ஏதாவது ஒருவகையில் நஷ்டமோ அல்லது குழப்பமோ அல்லது தீமையோ ஏற்படாது என்றிருந்தால்1, போரின் போது 2, சண்டையிட்டுக் கொள்ளும் இருதரப்பினரை சமாதானப்படுத்த 3, ஒரு கணவன் தன் மனைவியிடமும் மனைவி கணவனிடமும் அன்பையும், பாசத்தையும், பரிமாறிக் கொள்வதற்காக கூறிக்கொள்ளும் பொய் ஆகியவை அனுமதிக்கப்பட்டதாகும். இதற்கு ஆதாரமாக கீழ் வரும் ஹதீஸை எடுத்து கூறுகின்றார்கள்.
 
நபி(ஸல்)அவர்கள் கூறியதாக அஸ்மா பின்த் யஸீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: மூன்று விஷயங்களைத் தவிர மற்ற விஷயங்களில் பொய் பேசுவது தடை செய்யப்பட்டுள்ளது. (அவை)

1.ஒருவன் தன் மனைவியை மகிழ்விப்பதற்காக பேசுவது

2.யுத்தத்தின் போது

3.மக்களிடையே சமாதானம் ஏற்படுத்துவதற்காக. (ஆதாரம் ஸஹீஹ் அல் முஸ்லிம், திர்மிதி)


திருக்குர்ஆன் பொய்யை முழுவதுமாக வெறுக்கின்றது, அதிலிருந்து முழுவதுமாக தவிர்ந்திருக்குமாறும் நம்பிக்கையாளர்களுக்கு அறிவுரை கூறுகிறது. பொய் கூறுபவர் மீது சாபமும் இறக்குகிறது. ஆனால் ஹதீஸில் இவ்வாறு மூன்று நிலையில் பொய் கூற அனுமதிக்கப்பட்டுள்ளதே என்று சிலர் கேள்வி கேட்கின்றனர்.
இந்த ஹதீஸ் எவ்வாறான ஹதீஸ்? இதில் கூறப்பட்டுள்ள 'کذب' (பொய்) என்பதற்கு என்ன பொருள்? அதற்கு என்ன விளக்கம் என்பதை பற்றி நாம் கீழே காண்போம்.

இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் இப்படிப்பட்ட ரிவாயாத்துகளை குறைபாடு உள்ளது என தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.......அதாவது அறிவிப்பு செய்பவர்கள் தன் சார்பாக கலப்படம் செய்திருக்கின்றனர். எந்த அறிவிப்புகளில் பொய் என்ற வார்த்தை வந்துள்ளதோ அங்கு மறைத்து கூறுதல் அல்லது விலகிவிடுதல் என்பது கருத்தாகும். அதாவது அதன் மூலமாக சிந்தனை உண்மையான விஷயத்தின் பக்கம் செல்லாதிருக்கும் வகையில் இரு பொருளை கொண்ட சொல்லை பயன்படுத்துதல். (ஃபத்ஹுல் பாரி பாகம் 5 பக்கம் 369)

உதாரணமாக ஹிஜ்ரத்தின் போது ஒருவர் கேட்டதற்கிணங்க ஹஸ்ரத் அபூபக்ர் (ரலி) அவர்கள் இவ்வாறு கூறினார்கள், "ஹாதர் ரஜுலு எஹ்தீனிஸ் ஸபீல்" அதாவது இந்த மனிதர் எனக்கு வழியை கூறுகின்றார்' என்று பதில் அளித்தார்கள். அதாவது நினைப்பவர்  இந்த வழிதான் என்று இவர் கூறுகிறார் போலும் என நினைத்தனர். ஆனால் அவர்களின் இந்த கூற்றுக்கு "நன்மைக்கான வழி" என்று பொருள் ஆகும்.சில மார்க்க சட்ட வல்லுநர்கள் இந்த சம்பவத்தை வைத்து 'ஒருவரை கொலையிலிருந்தும், கொடுமையிலிருந்தும் காப்பாற்றுவதற்காக மறைமுகமான அல்லது உண்மையின் பக்கம் சிந்தனை செல்லாத வகையிலான சொல்லை சொல்வது அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் எங்கு இதன் மூலம் ஒருவரின் உரிமை பறிக்கப்படுகிறதோ, அநாகரீகமான முறையில் உரிமை பறிக்கப்படுகிறதோ அங்கு மறைமுகமான மற்றும் உண்மையை மறைக்கக்கூடிய வார்த்தையை உபயோகித்தல் கூடாது என்று கூறுகின்றனர். (ஃபத்ஹுல் பாரி பாகம் 5 பக்கம் 369)

ஒரு ஹதீஸில் "அல்-ஹர்பு குத்அத்துன்" என்று வந்துள்ளது.(புகாரி ஹதீஸ் நம்பர் 3028,3029). இதன் பொருள் "போர் ஏமாற்றம் அல்லது தந்திரம் ஆகும்". அதாவது போரில் எதிரிகள் குழம்பி, எங்கிருந்து அவர்கள் தாக்கப்படப் போகிறார்கள் என்ற சந்தேகத்தில் ஆழ்ந்து விட வேண்டும் என்பதற்காக உபயோகிக்கப்படும் தந்திரம் மற்றும் திட்டம் ஆகும். பத்ர் மற்றும் உஹது போரின் போது கூட இந்த யுக்தி பயன்படுத்தப்பட்டது. இதனால் எதிரிகள் குழப்பத்தில் மூழ்கி விட்டார்கள். 

"கத்அத்துன்" என்பதற்கு இன்றைய கால ஆங்கில மொழியில் 'War Tactics' என்று கூறப்படுகிறது. இதை தவிர்த்து போரில் வெற்றி கொள்வது அரிது. "கதஅ' என்ற ஒவ்வொரு சொல்லிலும் மறைமுகமான கருத்து காணப்படுகிறது. உதாரணமாக "கதஅத் தரீக்கு அய்யு லம் யுஃப்தன் லஹூ" (அக்ரபுல் மவாரித் - 'கதஅ') அதாவது இந்த வழி எங்கு செல்கிறது என்று அறிய முடியவில்லை என்பதாகும்.

இந்த ஹதீஸை தொடர்ந்து "الکذبُ فی الحربِ" என்ற ஒரு பாடம் வருகிறது. அதாவது போரில் பொய் சொல்லுதல் என்பதாகும். இந்த பாடத்தில் வரும் ஹதீஸை நாம் உற்று நோக்கினால் கூட அந்த ஹதீஸில் (ஹதீஸ் நம்பர் 3031) முஹம்மது இப்னு மஸ்லமா (ரலி) அவர்கள் எதிரியை கொல்லுவதற்கு கையாண்ட தந்திரத்தை மட்டுமே குறிப்பிட்டு சொல்லப்படுகிறது. அந்த ஹதீஸில் இந்த சஹாபி ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களை குறித்து சொன்ன ஒவ்வொரு கூற்றும் பொய் அல்ல; மாறாக அது உண்மையே ஆகும். ஆகவே இங்கு வருகின்ற 'کذب' என்ற சொல்லுக்கு நாம் மேலே குறிப்பிட்டிருந்த பொருள் சரியானதே என்பதை நடுநிலை வாதிகளால் அறிந்து கொள்ள முடியும். 

தீங்கிலிருந்து தப்பிப்பதற்காக இவ்வாறான தடைசெய்யும் திட்டங்களை மேற்கொள்வது "கதப்" (உண்மைக்கு மாற்றமான பொய் கூறுவது) என்ற சொல்லின் விளக்கமாக வருவதில்லை. இதன் காரணமாகவே புகாரி (ரஹ்) அவர்கள் அல்-கதிபு ஃபில் ஹர்பி என்ற பாபை அதாவது தலைப்பை தனியாக வைத்து போரில் கையாளப்படும் கதிப் என்பதற்கு பொய் அல்ல மாறாக தந்திரம் அல்லது மறைமுகமான சொல்லை உபயோகித்தல் என்பதாகும் என்பதை இந்த பாடத்தின் கீழ் வரும் முஹம்மது இப்னு மஸ்லமா (ரலி) அவர்களின் சம்பவம் மூலம் மக்களுக்கு எடுத்து கூறுகின்றார்கள்.

இஸ்லாத்தில் பொய் என்பது எந்நிலையிலும் அனுமதிக்கப்படாத ஒன்றாகும். காரணம் அல்லாஹ் குர்ஆனில் பொய்யை பற்றி கூறும்போது, பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக என்று பல்வேறு இடங்களிலும், பொய்யர்களின் தலையில் ஷெய்தான் குடியிருக்கிறான் என்றும், பொய் பேசாதீர்கள் என்றும் பல்வேறு முறை கூறுகின்றான். இதிலிருந்து போய் கூறுவது எந்நிலையிலும் ஆகுமானதல்ல என்பது தெளிவாகிறது. ஆயினும் இந்த ஹதீஸில் வந்துள்ள کذب என்ற சொல் அரபியில் பரந்த பொருளை கொண்டுள்ளதாக இருக்கிறது.  இதன் ஒரு பொருள்  ஒன்றை கற்பனையாக  நினைத்தல் என்பதாகும். அரபியில் இவ்வாறு கூறுவதுண்டு அதாவது کذب الرّأیُ أی توھّم الامرَ بخلافِ ما ھو بہِ அதாவது ஒரு விஷயத்தை அதற்கு மாற்றமாக கற்பனையாக கருதிக் கொண்டார் என்பதாகும். இவ்வாறு کذبَتْکَ عینُکَ ای أرتْکَ ما لا حقیقۃَ لہُ என்றும் கூறப்படுகிறது. அதாவது கண் சம்பவத்திற்கு மாறானதை காட்டியது. (தாஜுல் உரூஸ் - کذب)

இந்த کذب என்ற சொல் மேலே கூறப்பட்டுள்ள கருத்தின் அடிப்படையிலேயே  புகாரி மற்றும் திர்மிதி ஹதீஸில் கூறப்பட்டுள்ளது. போர் மைதானத்தில் எதிரிகளை வெல்வதற்காக இதே கருத்தை கொண்ட சொல்லை கடைபிடிப்பதற்கு பெயர் 'خدعۃٔ' அல்லது 'کذب' என்று கூறப்படுகிறது. அபூ சுஃப்யான் (ரலி) அவர்களுக்கும் கைஸர் என்ற அரசருக்கும் இடையில் நடந்த சமாதான ஒப்பந்தத்தின் போது நடந்த ஒரு சம்பவமும் கூட இதற்கு சாட்சி பகர்கிறது. அதில் ஆபூ சுஃப்யான் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களைப் பற்றி அவர் இதுவரை எந்த விஷயத்திலும் வாக்கு மீறி இருக்கிறாரா என்று கைஸர் கேட்டதற்கு, அவர் இது வரை எந்த விஷயத்திலும் வாக்கு மீறியதில்லை (அதாவது பொய் பேசியதில்லை) ஆனால் இப்போது அவருடன் ஒரு உடன்படிக்கையை செய்திருக்கிறோம் அதில் அவர் எப்படி நடந்து கொள்கிறார் என்று பார்க்க வேண்டும்' என்று பதில் அளித்தார். இதிலிருந்து நபி (ஸல்) அவர்கள் எவ்விஷயத்திலும், எந்த நேரத்திலும் உண்மைக்கு புறம்பான விஷயத்தையோ பொய்யையோ கூறவில்லை என்பதற்கு அன்று எதிரியாக இருந்த ஆபூ சுஃப்யான் சாட்சி பகர்ந்திருக்கிறார் என்பதை நாம் தெரிந்து கொள்கிறோம். (புகாரி ஹதீஸ் நம்பர் 2941 ஐ காண்க)

ஆகவே முஸ்லிம் மற்றும் திர்மிதி ஹதீஸில் வருகின்ற மூன்று கட்டத்தில் மட்டும் பொய் சொல்லலாம் என்ற ஹதீஸில் கூறப்பட்டுள்ள 'کذب' என்ற சொல்லிற்கு உண்மைக்கு மாற்றமான சொல்லான பொய் என்ற கருத்தில் வரவில்லை; மாறாக, தந்திரமான முறையில் எடுத்து சொல்லுதல் என்ற பொருளிலேயே 'கதிப' என்ற பதம் கையாளப்பட்டுள்ளது. அவ்வாறல்லாமல் நேரடியாக பொய் என்ற சொல்லில் கையாளப்படவில்லை என்பதையே நாம் மேலே குறிப்பிட்டுள்ள ஹதீஸ், அகராதி மற்றும் ஹதீஸின் விளக்கத்தின் படி அறிந்து கொள்ள முடிகிறது.

1 கருத்து:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.