இஸ்லாமும் கருத்து சுதந்திரமும்

மனசாட்சி சுதந்திரம், கருத்து சுதந்திரம், மார்க்க சுதந்திரம் ஆகியவை ஒவ்வொரு மனிதனின் பிறப்புரிமையாகும். மேலும் இஸ்லாம், அதன் அனைத்து அம்சங்களையும் ஏற்றுக் கொண்டவாறு மனிதனின் கண்ணியத்தையும் மதிப்பையும் நிலைநாட்டிய முதல் மார்க்கமாகும். திருக்குர்ஆனின் பார்வையில் ஒவ்வொரு மனிதனுக்கும் மார்க்கத்தின் அடிப்படையிலும், இன, நிற மற்றும் சமுதாயத்தின் அடிப்படையிலும் எந்தவொரு மார்க்கத்தையும் ஏற்றுக் கொள்வதற்கும் அதை மேற்கொண்டு நடப்பதற்கும் அதன்படி செயல்படுவதற்கும் விரும்பினால் அதை விடுவதற்கும் முழுக்க முழுக்க உரிமை உண்டு. திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்:
"மார்க்கத்தில் எவ்வித கட்டாயமுமில்லை. (ஏனென்றால்) நிச்சயமாக நேர்வழிக்கும் தவறான வழிக்கும் இடையிலுள்ள வேறுபாடு மிகத் தெளிவாகி விட்டது." (2:257)
அவ்வாறே இன்னொரிடத்தில் இவ்வாறு கூறுகின்றான்:
"உங்கள் மார்க்கம் உங்களுக்கும், எனது மார்க்கம் எனக்கும் உள்ளது." (109:7)
அல்லாஹ் மற்றோரிடத்தில் இவ்வாறு கூறுகின்றான்:
"நீர் கூறுவீராக: உமது இறைவனிடமிருந்து வந்ததுதான் உண்மையாகும். எனவே எவர் விரும்புகிறாரோ அவர் நம்பிக்கை கொள்ளட்டும்; எவர் விரும்புகிறாரோ அவர் நிராகரிக்கட்டும்." (18:30)
எந்தவொரு மார்க்கத்தை ஏற்றுக் கொள்வதும் ஒவ்வொரு மனிதனின் அடிப்படை உரிமையாகும். இஸ்லாம் நீதி, நேர்மையை நிலைநாட்டுவதற்காக கீழ்வருமாறு போதிக்கின்றது:
"ஒரு சமுதாயத்தின் பகைமை, உங்களை நீதியுடன் நடக்காதவாறு தூண்ட வேண்டாம். நீங்கள் நீதியுடன் நடந்து கொள்ளுங்கள். இதுதான் இறையச்சத்திற்கு மிக நெருக்கமானதாகும். (5:9)


அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தின் தோற்றுநரும் இமாமும் வாக்களிக்கப்பட்ட மஸீஹும் ஆகிய ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது காதியானி (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்:
"ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பலவந்தமாக முஸ்லிமாக்குவதற்காக வாளேந்தினார்கள் என இக்காலத்தின் அரைவேக்காட்டு முல்லாக்கள் உடனே கூறிவிடுகின்றனர். இது முட்டாள்தனமும் கடுமையான அறிவீனமுமாகும்..... மேலும் இந்த சந்தேகங்களிலேயே புரியாத பாதிரிமார்களும் சிக்கியிருக்கின்றனர். ஆனால் இந்த பலவந்தம் பற்றிய குற்றச்சாட்டை இந்த மார்க்கத்தின் மீது சுமத்துவதை விட பெரிய பொய் எதுவும் இருக்க முடியாது. அதன் முதல் வழிகாட்டாலே மார்க்கத்தில் எவ்வித கட்டாயமுமில்லை என்பதாகும். மாறாக, நமது நபி (ஸல்) மற்றும் நபித்தோழர்களின் போர்கள் நிராகரிப்பவர்களின் தாக்குதல்களிலிருந்து தம்மைக் காத்துக் கொள்வதற்காக இருந்த்து. அல்லது சமாதானத்தை நிலைநாட்டுவதற்காக இருந்தது. மேலும் எவர்கள் வாளின் மூலமாக மார்க்கத்தை தடுக்க விரும்பினார்களோ அவர்களை வாளினால் புறந்தள்ள வேண்டும் என்பதற்காக இருந்தது." (தர்யாக்குல் குலூப் பக்கம் 16)

ஒவ்வொருவரும் தமது மார்க்கத்தை தப்லீக் செய்வதற்கும் பரப்புவதற்கும் இஸ்லாம் ஒவ்வொருவருக்கும் உரிமை வழங்குகிறது. அதன் விளைவாக எவர் விரும்புகிறாரோ அவர் எந்த மார்க்கத்தை வேண்டுமானாலும் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் அதில் எந்தவிதமான பலவந்தமோ வற்புறத்தலோ ஆகுமானதன்று. மாறாக, அன்புடனும், நேசத்துடனும் ஒருவர் மற்றவருடன் கண்ணியத்துடனும், மரியாதையுடனும் இந்தப் பணியைச் செய்ய வேண்டும் என்ற கட்டளை உள்ளது.

எனவே இஸ்லாம் கருத்து சுதந்திரம் என்பதை சான்றாகக் கொண்டு மார்க்கத்தை ஏற்று கொள்பவர்களுக்கு, எந்த மார்க்கத்தை உண்மை என அறிந்து உண்மை என ஏற்றுக் கொண்டு பல்வேறு மேன்மைகளால் நிரம்பியது எனப் புரிந்து எவர் ஏற்றுக் கொள்கிறாரோ அதை அவர் சந்தேகமின்றி அன்புடனும் நேசத்துடனும் மற்றவர்களுக்கு எடுத்து கூறலாம் என்ற உரிமையை வழங்கி இருக்கின்ற அதே நேரத்தில் அவ்வாறு எடுத்துரைத்த பிறகு அதை ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக் கொள்ளாதிருப்பதும் கேட்பவரின் முழு அதிகாரத்திற்கு உட்பட்டதாகும் என்றும் இஸ்லாம் கூறுகிறது.

கருத்து சுதந்திரத்தைப் பொருத்தவரை ஒவ்வொருவரும் தத்தமது மார்க்கத்தை பிரச்சாரம் செய்யலாம் என்ற உரிமையை இஸ்லாம் ஏற்றுக் கொண்டிருக்கின்ற அதே நேரத்தில் அது எந்த மார்க்கத் தலைவர்களையோ அல்லது பெரியார்களையோ தெய்வங்களையோ அவமரியாதை செய்வதற்கோ, எள்ளிநகையாடுவதற்கோ அவர்களை ஏசிப்பேசுவதற்கோ ஒருபோதும் அனுமதியளிக்கவில்லை. இஸ்லாத்தில் சிலை வணக்கத்திற்கு அனுமதி இல்லையென்றாலும், இறைவனுக்கு இணைவைப்பது கடுமையாக தடுக்கப்பட்டுள்ளது என்றாலும் இஸ்லாம் மற்ற மார்க்கத்தைச் சேர்ந்தவர்களின் தெய்வங்களை தவறாகப் பேசுவதற்கோ அல்லது அவற்றைப் பழித்துரைப்பதற்கோ ஒரு போதும் அனுமதியளிக்கவில்லை. அல்லாஹ் கூறுகின்றான்:
"அல்லாஹ்வையன்றி அவர்கள் அழைப்பவற்றை நீங்கள் ஏசாதீர்கள்; இல்லையாயின், அவர்கள் அறியாமையினால் அல்லாஹ்வை ஏசுவார்கள்." (6:109)

அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தின் தோற்றுநர் (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்:
"பாருங்கள். இறைவனுடைய போதனையின்படி சிலை என்பது ஒன்றுமற்றதாகும். ஆயினும் சிலைகளைப் பழிதுரைப்பதிலிருந்தும் உங்கள் நாவுகளைத் தடுத்து வைத்துக் கொள்ளுங்கள்; மேலும் மேன்மையாக மட்டுமே புரிய வையுங்கள் என்ற நல்லொழுக்கத்தை இறைவன் முஸ்லிம்களுக்கு கற்றுக் கொடுக்கின்றான்." (பைகாமே சுலஹ் பக்கம் 32)

ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு தமது வாழ்க்கை முழுவதும் பகைவர்களின் பகைமை இருந்த போதிலும் பலவிதமான தொல்லைகள் கொடுக்கப்பட்ட போதிலும் இஸ்லாத்தின் அன்பு நிறைந்த இந்த போதனையின்படி அவர்கள் செயல்படுத்தி கட்டினார்கள். அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தின் இமாமும் ஐந்தாவது கலீஃபத்துல் மஸீஹும் ஆகிய ஹஸ்ரத் மிர்ஸா மஸ்ரூர் அஹ்மது (அய்யதஹுல்லாகுத் தஆலா.....) அவர்கள் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தூய வாழ்க்கையைப் பற்றிக் குறிப்பிட்டவாறு இவ்வாறு கூறுகிறார்கள்:
"மாக்கவில் நுபுவ்வத் வாதத்திற்குப் பிறகு 13 ஆண்டு கால வாழ்க்கை எவ்வளவு கடுமையாக இருந்தது என்பதை அறியாதவர் யார்? அது எவ்வளவு துன்பம் மிக்கதாக இருந்தது? அவர்களும் அவர்களின் தோழர்களும் எவ்வளவு துக்கங்களையும் துயரங்களையும் தாங்கிக் கொண்டார்கள்? நண்பகலில் சுடுமனலில் கிடத்தப்பட்டனர். சூடான கல் அவர்களின் நெஞ்சுகளில் வைக்கப்பட்டது. சவுக்கால் அடிக்கப்பட்டார்கள். பெண்களின் கால்கள் இரண்டாக பிளந்து கொல்லப்பட்டனர். கொலை செய்யப்பட்டனர். ஷஹீதாக்கப்பட்டனர். அவர்களின் மீது பலவிதமான கொடுமைகள் இழைக்கப்பட்டன. ஆனால் நமது நபி (ஸல்) அவர்கள் அந்த நிலைமையிலும் மென்மையான உள்ளத்தையும் கருணையில் உயர்ந்த அந்தஸ்தையும் நிலைநாட்டினார்கள். மக்காவிலிருந்து வந்து கொஞ்ச காலம்தான் கழிந்திருக்கும். எல்லா துன்பங்களும் அப்போது புதியவையாகவே இருந்தன. ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுக்கு தனது துன்பங்களை விட தன்னை ஏற்றுக் கொண்டவர்களுக்கு ஏற்பட்ட துன்பங்கள் பற்றி அதிகமான உணர்விருந்தது. ஆயினும் அவர்கள் இஸ்லாமிய போதனையையும், கொள்கையையும், கோட்பாட்டையும் உடைக்கவில்லை. அவர்களின் இயல்பின் அங்கமாக இருந்த நல்லொழுக்கத்தைத் தகுதியை போதனையின் பகுதியை அவர்கள் முறிக்கவில்லை. இன்று பாருங்கள். மேற்கத்திய நாடுகள் எவர்களுடன் போரிடுகின்றதோ அவர்களுடன் என்னவெல்லாம் செய்கின்றன!.....
மதீனாவில் ஓர் ஒப்பந்தம் நடைபெற்றது. அந்த ஒப்பந்தத்தின் கீழ் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்ன அம்சங்களை வைத்தார்களோ அறிவிப்பில் வருவதை நான் உங்கள் முன் எடுத்துரைக்கிறேன். ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எவ்வாறு அந்த சூழ்நிலையில் நல்லிணக்கத்தை உருவாக்க முயற்சி செய்தார்கள். மேலும் சமூகத்தில் அமைதி நிலைபெற வேண்டும்; மனிதத்துவத்தின் மேன்மையும் நிலைபெற வேண்டும் என்ற வகையில் அந்த சமூகத்தில் அமைதியை நியலைநாட்ட அவர்கள் என்ன விரும்பினார்கள்? ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் மதீனா சென்ற பிறகு அவர்கள் யூதர்களுடன் செய்து கொண்ட உடன்படிக்கையின் சில நிபந்தனைகள் இவையாகும்:
1) முஸ்லிம்களும் யூதர்களும் ஒருவருக்கொருவர் அனுதாபத்துடனும் கலப்பற்ற தன்மையுடனும் இருப்பார்கள். ஒருவர் மற்றவருக்கு எதிராக வரம்பு மீறவோ அநீதியிழைக்கவோ மாட்டோம்.
2) இரண்டாவது நிபந்தனை: ஒவ்வொரு சமுதாயத்திற்கும் மார்க்க சுதந்திரம் உண்டு.
3) மூன்றாவது நிபந்தனை: அங்கு வாழ்கின்ற அனைவருடைய உயிர்கள், உடைமைகள் பாதுகாக்கப்படும். எவராவது அநீதி இழைத்தாலோ அல்லது கொடுமை இழைத்தாலோ அன்றி அவற்றிற்கு கண்ணியமளிக்கப்படும்.....
இதுதான் மார்க்க சுதந்திரம் மற்றும் மத நல்லிணக்கம் ஆகியவற்றை நிலைநாட்டுவதற்கு ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் காட்டிய உயர் தகுதி. அப்படி இருந்தும் அவர்கள் அநீதியிழைக்கப்பட்டார்கள் என்றும், வாளின் பலவந்தத்தினால் இஸ்லாத்தை பரப்பினார்கள் என்றும் குற்றம் சாட்டுவது மிகவும் கொடுமையான செயலாகும். (இஸ்லாம் கருத்து சுதந்திரம் என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்ட மேற்கோள் | பக்கம் 26 முதல் 40 வரை. ஃபஸ்லே உமர் பிரிண்டிங் பிரஸ். காதியான் பதிப்பு 2013)

தற்போது நாம் கடந்து கொண்டிருக்கும் இந்த காலகட்டம் கல்வியின் ஒலி பரவியிருப்பதன் அடிப்படையில் சென்ற அனைத்து காலங்களை விடவும் முன்னேற்றம் பெற்றதாகும். ஆனால் இந்த காலகட்டத்தின் ஒரு பேறிழந்த நிலை என்னவென்றால், இப்படிப்பட்ட ஒளிமிக்க காலகட்டத்திலும் மக்கள் அறிவுடையவர்கள் என அழைக்கப்பட்டும் கருத்து சுதந்திரம் என்பதன் கருத்தைப் புரிந்து கொள்ளவில்லை. மாறாக, மற்றவர்களின் மார்க்கத்தை மார்க்கத் தலைவர்களை அவமதிப்பதையும் , தமக்கு எதிரான மார்க்கத்தை கொண்டவர்களின், ஏற்றுக் கொள்பவர்களின் உள்ளங்களுக்கு தூக்கம் கொடுப்பதையும் ஆகுமானதாகக் குறிப்பிடுகிறார்கள். அதன் விளைவாக ஒவ்வோர் இடத்திலும் தீவிர வாதம் தலைதூக்கி நிற்கிறது.

அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தின் இமாம், ஐந்தாவது கலீஃபத்துல் மஸீஹ் ஆகிய ஹஸ்ரத் மிர்ஸா மஸ்ரூர் அஹ்மது (அய்யதஹுல்லாகுத் தஆலா....)அவர்கள் உலகில் பரவி வரும் இந்த அமைதியின்மையைப் பார்த்து கடந்த சில ஆண்டுகளாக அமைதியையும், சமாதானத்தையும் நிலைநாட்டுவதற்காக தமது முயர்ச்சிகளை தீவிரமாக்கியிருக்கிறார்கள். இது தொடர்பாக அவர்கள் உலகின் புகழ்பெற்ற தலைவர்களாகிய இஸ்லாமிய குடியரசு ஈரான், அமெரிக்கா, கனடா, இஸ்ரேல், சவூதி அரேபியா, சீனா, பிரித்தானியா, ஜெர்மனி, ஃபிரான்ஸ் மற்றும் கிறித்தவ மார்க்கத் தலைவர் போப் ஆகியவருக்கு அமைதி, சமாதானம், மற்றும்
ஒற்றுமை ஒருமைப்பாடு ஆகியவை தொடர்பான இஸ்லாமிய போதனைகளைக் கொண்ட கடிதங்களை எழுதினார்கள். அத்துடன் அவர்கள் இந்த நாடுகளின் மார்க்க மற்றும் அரசியில் தலைவர்களுக்கு முன்னால் இஸ்லாத்தின் அன்பு மற்றும் நேசம் ஆகியவற்றால் நிரம்பிய போதனைகளை எடுத்து வைத்தார்கள். இந்தக் கடிதங்களையும் சொற்பொழிவுகளையும் ஹுஸூர் அவர்களின் கருத்துச் செறிவுள்ள நூலாகிய World Crisis and Pathway to Peace (இந்நூல் தமிழில் வெளிவந்துவிட்டது) என்பதில் படிக்கலாம். அவ்வாறே அவர்களின் நூலாகிய இஸ்லாம் அவ்ர் ஆஸாதியே ஸமீர் (இஸ்லாமும் கருத்து சுதந்திரமும்) என்பதும் இது தொடர்பான பயனுள்ள செய்திகளைத் தருகின்றன. 

அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தின் இமாம் ஹஸ்ரத் மிர்ஸா மஸ்ரூர் அஹ்மது அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்:
"எந்தவொரு மார்க்கத்தின் தூய பெரியார்களைப் பற்றி எந்தவிதமான பொருத்தமற்ற எண்ணங்களை வெளிப்படுத்துவது எவ்விதத்திலும் சுதந்திரம் என்ற வட்டத்திற்குள் வருவதில்லை. நீங்கள் மக்களாட்சி , மார்க்க சுதந்திரம் என்பதற்கு முதன்மையாளர்களாகக் காட்டிக் கொண்டு மற்றவர்களின் உணர்வுகளுடன் விளையாடுவது மக்களாட்சியுமல்ல; மார்க்க சுதந்திரமும் அல்ல. ஒவ்வொன்றுக்கும் ஓர் எல்லை இருக்கிறது. சில நல்லொழுக்க நெறிமுறைகள் இருக்கின்றன. ஒவ்வொரு துறையிலும் நல்லொழுக்க நெறிமுறைகள் இருப்பதைப் போன்றே பத்திரிகைத் துறைக்கும் நல்லொழுக்க நெறிமுறை இருக்கின்றது. அவ்வாறே எந்தவொரு வகையான ஆட்சியாக இருந்தாலும் அதற்கும் சட்டங்களும், விதிமுறைகளும் இருக்கின்றன.
கருத்து சுதந்திரம் என்பதற்கு பிறருடைய உணர்வுகளுடன் விளையாடுவது; அதற்கு துன்பம் கொடுப்பது என்பது ஒரு போதும் பொருள் அன்று. மேற்கத்திய நாடுகள் பெருமை கொள்ளும் இதுதான் சுதந்திரம் என்றால் இது முன்னேற்றத்தின் பக்கம் இட்டுச் செல்லாது. மாறாக, இது வீழ்ச்சியின் பக்கம் இட்டுச் செல்லக் கூடிய சுதந்திரமாகும். (இஸ்லாம் அவ்ர் ஆஸாதியே ஸமீர் பக்கம் 22,23)

அல்லாஹ் உலகத்திலுள்ளவர்களுக்கு மார்க்க சுதந்திரம் என்பதன் உண்மையான கருத்தைப் புரிந்து அதற்கேற்ப அமைதியுடனும் சமாதானத்துடனும் வாழ்க்கை நடத்துகின்ற, மற்றவர்களுக்கு வாழ்வை வழங்குகின்ற நல்வாய்ப்பை வழங்குவானாக. ஆமீன்.
(இஸ்லாம் அவ்ர் ஆஸாதியே ஸமீர் என்ற நூலும் தமிழில் வெளிவந்துவிட்டது)
(2015 ஆம் ஆண்டு "இஸ்லாமும் கருத்து சுதந்திரமும்" என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட பிரசுரம்)

கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.