இறைநேசத்தை ஏற்படுத்துவதில் அஹ்மதி தாய்மார்களின் பங்கு

அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரிகலஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரஸூலுஹு அம்மா பஃது ஃபஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்.பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
 
قل اِن کنتم تحبّون اللہَ فاتّبعونی یحببکم اللہ ۔ویغفرلکم ذ نوبکم ۔وااللہ غفور رّحیم ۔    
 (ஆலி இம்ரான் : 32)
கண்ணியத்திற்குரிய கூட்டத்தின் தலைவி மற்றும் வருகை தந்திருப்பவர்களே !
    அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு .

ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை) அவர்கள் தனது உருதுக் கவிதையில் கூறுகின்றார்கள். 
அவன் கிடைக்காத வாழ்க்கை வாழ என்ன ஆசை உள்ளது, அவனை விட்டு தனித்த வாழ்க்கை வாழ்வது என்பது சாபத்திற்குரியதாகும்.
கண்ணியத்திற்குரிய 

சகோதரிகளே!                                                     இன்று இந்த அருளுக்குரிய சந்தர்ப்பத்தில் நான் உங்கள் முன்பு இறைநேசத்தை  ஏற்படுத்துவதில் அஹ்மதி தாய்மார்களின் பங்கு என்ற தலைப்பில் பேசவுள்ளேன்.

நான் ஆரம்பத்தில் திருக்குர்ஆனின் எந்த வசனங்களை ஓதினேனோ, அதில் அல்லாஹ் தஆலா நமக்கு, நீங்கள் அல்லாஹ் தஆலாவுடன் உயர்தரமான அன்பை ஏற்படுத்தினீர்கள் என்றால் அல்லாஹ்வும் உங்களுடன் அவ்வாறே அன்பு கொள்வான். மாறாக அதனைவிட அதிக  அன்பு செலுத்துவான் உங்களது பாவங்களை மன்னிப்பான் எனக் கூறுகின்றான்.


ஒரு ஹதீஸில் வருகிறது, ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
ثلاث من  کن فیہ وجد حلاوۃ الایمان ۔ان یکون اللہ و رسولہ احبّ الیہ ممّا سواھما و ان یحبّ المرۃ لا یحبہ الا اللہ ۔وان یکرہ ان یعود فی الکفر کما یکرہ ان یقذف فی النار                  

அதாவது, எவரிடம் இந்த மூன்று விஷயங்கள் இருக்குமோ அவர் ஈமானின் சுவையை பெற்றுவிடுவார். அதில் முதலாவதாக அல்லாஹ்வும் அவனது ரஸூலும் ஏனைய அனைத்து பொருள்களையும் விட அவருக்கு பிரியமானதாக  இருக்கவேண்டும். இரண்டாவது, எவரிடம் அன்பு செலுத்தினாலும் இறைவனுக்காக மட்டுமே அன்பு செலுத்த வேண்டும். மூன்றாவது நிராகரிப்பின் பக்கம் திரும்புவதை, அவர் நெருப்பில் எரியப்படுவதை தீயதாக கருதுவதனைப் போன்று கருதவேண்டும்.

சகோதரிகளே !
இது அல்லாஹ் நம்மீது செய்துள்ள மாபெரும் அருளும்,கருணையும் ஆகும். அல்லாஹ் தஆலா நம்மை இஸ்லாம் மார்க்கத்தில் பிறக்க செய்திருக்கின்றான். மேலும் காலத்தின் இமாம் ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை) அவர்களை ஏற்றுக்கொள்ளும் (நல்வாய்ப்பினையும்). அதன் மூலம் கிலாஃபத்தின் அருளுக்குரிய அமைப்பின் நிழலின் கீழ் தனது வாழ்வை கழிப்பதற்கான நல்வாய்ப்பினையும் வழங்கியிருக்கிறான். ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை) அவர்களின் மீது நம்பிக்கை கொண்டிருப்பது மற்றும் அன்னாரின் மீது ஈமான் கொண்டதன் விளைவாக, அல்லாஹ்வின் தரப்பிலிருந்து தொடங்கப்பட்ட கிலாஃபத் அமைப்பின் ஒரு அங்கமாக இருப்பது, நம்மீது பல்வேறு மாபெரும் பொறுப்புகளை சுமத்துகின்றது. அந்த முக்கியமான பொறுப்புகளில் அஹ்மதி தாய்மார்களின் மீதுள்ள பொறுப்பு, நாம் நமது சந்ததிகளின் தர்பிய்யத்தை ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை) அவர்களின் போதனைகளுக்கேற்ப எந்தளவு வழங்க வேண்டுமென்றால், நமது சந்ததிகளிடத்தில் இறைவன் மற்றும் அவனது ரஸூலுடைய அன்பு நிறைந்து விடவேண்டும்.

சகோதரிகளே !
சந்தேகமின்றி ஆண்களின் மீதுள்ள பொறுப்பு, பெண்களின் மீதுள்ள பொறுப்பை விட பலவகையில் கடினமானதாகும். ஆனால் நான் தற்போது கூறியது போன்று குழந்தைகளின் தர்பிய்யத் தொடர்பான விஷயம் எந்தளவு நுட்பமானதும், முக்கியத்துவம் வாய்ந்ததும் என்றால், அதனது தாக்கம் எந்தளவு ஆழமானதும்  விசாலமானதும் என்றால், எந்த பெண் அல்லது எந்த தாய் அந்த பொறுப்பை வெற்றிகரமாக செய்துமுடிப்பாளோ அவள் நிச்சயமாக சமுதாயத்திற்கு மிகப்பெரிய கண்ணியத்தை பெற்றுதரக் கூடியவளும், மிகப்பெரிய பெருமைக்கு காரணமானவளும் ஆவாள். இந்த வகையில் கண்ணியமிகு மனிதர்கள்  நம்பிக்கையின் பூக்களை தனது தாய்மார்களின்,சகோதரிமார்களின் பாதங்களில் தூவலாம்.

இன்று உலகில் எல்லாப் பகுதிகளிலும் நிம்மதியின்மையும், அமைதியின்மையும் பரவிக் கிடப்பதனை நாம் பார்கின்றோம்.மேலும் பெண்களுக்கு சுதந்திரம் என்ற பெயரில் எந்தளவு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது என்றால் அவர்களை நல்லொழுக்கத்தின் எல்லையை விட்டு வெளியேற்றியுள்ளது. இது அஹ்மதி பெண்களாகிய நம் மீது அல்லாஹ் தஆலா செய்த மாபெரும் கருணையாகும். அவன் நம்மை இக்காலத்தின் இமாமை ஏற்கும் நல்வாய்ப்பை வழங்கியிருக்கிறான். நம்மில் பெரும்பாலர் அஹ்மதி தாய்,தந்தையர்களின் வீட்டில் பிறந்திருக்கின்றோம். அல்லாஹ் தஆலா நம்மை ஒரு  மிகப்பெரிய சோதனையிலிருந்து காப்பாற்றியிருக்கிறான். ஆக மனிதன் சிந்தித்து பார்த்தால் அவனது உடலின் ஒவ்வொரு அணுக்களும் அல்லாஹ் தஆலாவுடைய இந்த அருளுக்கு நன்றிசெலுத்த ஆரம்பித்துவிடும். ஆக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய முழுமையான மார்க்கத்தில் இணைந்தவாறு, ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை) அவர்களின் ஜமாஅத்தில் இணைவதற்கான நற்பாக்கியம் கிடைத்திருக்கின்றது என்றால் இது நம்மீது மிகப்பெரிய பொறுப்பை சுமத்துகின்றது. அது நாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பை நிறைவேற்றக் கூடியவர்களாகவும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கூற்றுகளின் படி செயல்படக் கூடியவர்களாகவும் ஆகவேண்டும் என்பதாகும்.

ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு சந்தர்ப்பத்தின் போது உங்கள் சுவர்க்கம் உங்களது தாயின் காலடியின் கீழ் உள்ளது எனக் கூறினார்கள்.

இது எவ்வளவு அழகான சொற்றொடராக இருக்கின்றது. பெண்களை குறித்த எவ்வளவு மகத்தான, அழகின் வெளிப்பாடக இருக்கின்றது. யாரை குறித்து இந்த வார்தைகள் கூறப்படுகின்றதோ சந்தேகமின்றி அவருக்கு வானின் உயர்வுகள் வழங்கப்படுகின்றது. எந்தவோர் ஆண் தொடர்பாகவும் அல்லது எந்தவோர் ஆண் சமுதாயம் தொடர்பாகவும் அவர்களது காலின் அடியில் அவர்களது பிள்ளைகளின் சுவர்க்கம் இருக்கிறது அல்லது சமுதாயத்தின் சுவர்க்கம் இருக்கிறது எனக் கூறவில்லை. மாறாக பெண்களை மட்டும் நோக்கியவாறு உலகில் எந்தவொரு மார்க்கத்திலும், கலாச்சாரத்திலும் உதாரணம் காண முடியாத இப்படிப்பட்ட சான்றிதழை வழங்கியிருக்கிறார்கள்.

சகோதரிகளே !
 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெண்களின் உரிமையில் கூறிய இந்த சிறிய சொற்றொடர் தனக்குள் நேர்மறையான மற்றும் எதிர்மறையான ஆழமான கருத்துகளை உள்ளடக்கியுள்ளது. இந்த சொற்றொடர் ஒரு நற்செய்தி மட்டுமல்ல மாறாக எச்சரிக்கையையும் கொண்டுள்ளது. சமுதாயத்தின் எதிர்காலத்தை உருவாக்குவது நமது அஹ்மதி தாய்மார்களின் வசம்தான் உள்ளது. எந்த சுவர்க்கத்தைப் பற்றி கூறப்பட்டதோ அது வெறும் மறுமையில் கிடைக்கும் சுவர்க்கம் மட்டும் அல்ல. மாறாக இந்த உலகின் சுவர்க்கமும் ஆகும். மேலும் எந்த சமுதாயத்திற்கு இந்த உலகின் ஆன்மீக சுவர்க்கம் கிடைக்கவில்லையோ, ஆன்மீகத்தின் உயர்வான,மேலான அந்தஸ்துகள் கிடைக்கவில்லையோ அந்த சமுதாயம் மறுமையில் கிடைக்கும் சுவர்க்கத்தை குறித்து வீணான கற்பனையில் இருக்ககூடாது. அது வெறும் பைத்தியக்காரனின் கனவே ஆகும். ஆக இந்த வகையில் முஸ்லிம் பெண்கள் மீது  சில பொறுப்புகள் உள்ளன. அவை இந்த உலகத்துடனும் தொடர்பு கொண்டவையாக இருக்கின்றன . மறுமையுடனும் தொடர்பு கொண்டவையாக இருக்கின்றன. முதலில் வீட்டின் அரசியாக இருக்கக்கூடிய ஒவ்வொரு மனைவியும் தனது வீட்டில் சுவர்க்கமாக இருக்கிறாளா ? எனப் பார்க்க வேண்டும். அவளைப் பார்த்து ஒவ்வொரு பெண்ணும் சுயமாக தனது ஆன்மாவை பரிசோதிக்க முடியும். மேலும் இந்த விஷயத்தையும் அதாவது ஹஸ்ரத் முஹம்மது முஸ்தஃபா (ஸல்) அவர்கள் கூறிய அளவுகோளுக் கேற்ப நான் பெண்ணாக இருக்கின்றேனா ? இல்லையா ? என்பதையும் பரிசோதிக்க முடியும். இதனைக் குறித்து எனது தலைவர் ஹஸ்ரத் முஹம்மது முஸ்தஃபா (ஸல்) அவர்கள் எந்தளவு அன்பாகவும், எந்தளவு பெருமையாகவும், எந்தளவு நம்பிக்கையுடனும் கூறியிருக்கிறார்கள். என்னை நோக்கி கூறுகிறார்கள், என்னைப்பற்றி கூறுகிறார்கள்,  முஸ்லிம் பெண்களே ! எனது நம்பிக்கையின் பாத்திரமாக இருக்கும் உங்கள் மீது உங்களின் கால்களுக்கு கீழ் சுவர்க்கம் உள்ளது என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது எனக் கூறுகிறார்கள்.

ஆக, சுவர்க்கத்திற்கான நற்செய்தி என்பது ஒவ்வொரு தாய்மார்களின் காலடியின் கீழ் சுவர்க்கம் இருக்கிறது என்பதல்ல. அதன் அர்த்தம் முஸ்லிம் பெண்ணே ! உனது காலின் அடியிலிருந்து சுவர்க்கம் திறக்க வேண்டும், உனது பாதங்கள் படும் இடமெல்லாம் அருளுக்குரிய பாதங்கள் படக்கூடியதாக இருக்க வேண்டும். மேலும் உனது சந்ததிகள் மற்றும் உன்னிடம் இருந்து தர்பிய்யத் பெறக்கூடியவர்கள் சுவர்க்கத்தை போன்ற ஒரு சுற்றுப்புறத்தை உருவாக்க வேண்டும் என இறைவன் நம்பிக்கை வைத்துள்ளான் என்பதாகும். ஆக இந்த கருத்தின் அடிபடையில் அஹ்மதி தாய்மார்களாகிய நாம் அதிகமாக சிந்திக்க வேண்டிய அவசியம் உள்ளது.

சகோதரிகளே !
இது அஹ்மதி தாய்மார்களின் மீது இருக்கின்ற மாபெரும் பொறுப்பு ஆகும். இந்த முக்கியமான பொறுப்பின் காரணமாக அவர்களுடைய இருப்பு மிகமுக்கியத்துவம் வாய்ததாகும். அஹ்மதி தாய்மார்கள் தான் அஹ்மதிய்யத்தின் வெற்றிக்கான       எதிர்கால படையை உருவாக்க வேண்டியுள்ளது. நம்மீதுள்ள பொறுப்புகள் என்ன வென்றால். அதாவது இன்று நாம் நமது சந்ததிகளின் தர்பிய்யத்தை எந்தவகையில் வழங்கவேண்டும் என்றால் அவர்களுக்கு இறைவனுடன் தொடர்பு ஏற்பட்டுவிட வேண்டும்.மேலும் ரஸூலுல்லாஹ் (ஸல்)அவர்களின் அன்பு அவர்களின் உள்ளத்தில் உறுதிபெற்று விடவேண்டும். அதற்கு முதலில் நாம் நமது தொடர்பை இறைவனுடன் ஏற்படுத்துவது அவசியமாகும். அப்போதுதான் இந்த தொடர்பு நமது சந்ததிகளிலும் ஏற்படும். நாம் நமது சந்ததிகளிடத்தில் இறைநேசத்தின் நெருப்பை உருவாக்குவதற்கு (முதலில்)தனக்குள் இறைநேசத்தின் தீப்பொறியை உருவாக்க வேண்டும். இந்த இறைநேசத்தின் நெருப்பு சய்யிதுனா ஹுஸூர் அன்வர் அய்யதஹுல்லாஹூ தஆலா பினஸ்ரிஹில் அஸீஸ் அவர்கள் நம்மிடம் எதிபார்க்கும் அளவுக்கு நாம் நமது தர்பிய்யத்தை ஏற்படுத்தி கொள்ளாதவரை உருவாகாது.

சகோதரிகளே !
இஸ்லாத்தின் முதல் காலகட்டத்தில் முஸ்லிம் பெண்கள் இறைநேசத்தின் எப்படிப்பட்ட தரத்தை நிலைநாட்டினார்கள் என்றால் அதற்கான உதாரணம் மறுமைவரை கிடைக்கப் பெறாது. தப்காத் இப்னு சஃதுவில் எழுதப்பட்டுள்ளது. அதாவது ஹஸ்ரத் உம்மே ஷரீக் அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஈமான் கொண்டபோது அவர்களது உறவினர்கள் அவர்களை வெயிலில் நிற்க செய்தார்கள், வெயிலில் வெந்துகொண்டிருக்கும் அந்த நிலைமையில் ரொட்டியுடன் சூடான தேனை சாப்பிட கொடுத்தார்கள், குடிப்பதற்கு தண்ணீர் கூட தரவில்லை. இந்த கஷ்டத்தில் மூன்று நாட்கள் கழிந்த பிறகு அந்த அநீதியாளர்கள் “நீ எந்த மார்க்கத்தில் இருக்கின்றாயோ அதனை இப்போது விட்டுவிடு” எனக் கூறினார்கள். அவர்கள் எந்தளவு மயக்கமுற்று இருந்தார்கள் என்றால் அந்த வார்த்தைகளுக்கான அர்த்தம் அவர்களுக்கு புரியவில்லை. அப்போது அந்த மக்கள் வானத்தை நோக்கி தனது விரலை உயர்த்தியபோது அவர்கள் ஏகத்துவத்தை விட்டுவிடுவதுதான் அவர்களது நோக்கம் என  புரிந்து கொண்டார்கள். அப்போது அவர்கள் “இறைவன் மீது ஆணையாக நான் தற்போது வரை அந்த கொள்கையில் தான் நிலைபெற்று இருக்கின்றேன்” எனக் கூறினார்கள்.
           (தப்காத் இப்னு சஃது தஸ்கிரா ஹாஸ்ரத் உம்மே ஷரீக் (ரலி)) 

இந்த சம்பவத்திலிருந்து இஸ்லாத்தின் முதல் காலகட்டத்தில் வாழ்ந்த பெண்மணிகள் இறைநேசத்தில் எந்தளவு உயர்தரத்தில் நிலைபெற்று இருந்தார்கள் என்பது தெரிய வருகிறது. ஹஸ்ரத் ஃபாத்திமா (ரலி) அவர்களைப் பற்றி ஒரு (சம்பவம்)வருகிறது. ஒருமுறை அவர்கள் நோயுற்று இருந்தார்கள். ஆனால் இபாதத் செய்வதனை விடவில்லை. இரவு முழுவதும் இபாதத்தில் மூழ்கியிருந்தார்கள், காலையில் ஹஸ்ரத் அலி (ரலி) அவர்கள் சுப்ஹு தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு சென்றபோது அவர்கள் (வீட்டில்)தொழநின்றார்கள். தொழுகையை முடித்துவிட்டு மாவு அரைக்க ஆரம்பித்தார்கள். ஹஸ்ரத் அலி (ரலி) அவர்கள் திரும்பிவந்து அவர்கள் மாவு அரைப்பதனைப் பார்த்து கூறினார்கள் “இறைவனுடைய ரஸூலின் மகளே ! இந்தளவு கஷ்டப்பட வேண்டாம், சிறிது ஓய்வு எடுத்து கொள்ளுங்கள் இதனால் அதிகளவு நோயுற்றுவிடக் கூடாது” எனக் கூறினார்கள். அதற்கு ஃபாத்திமா (ரலி) அவர்கள் இறைவணக்கம் மற்றும் உங்களுக்கு கீழ்படிவதுதான் எனது நோயிற்கான சிகிட்சை ஆகும் எனக் கூறினார்கள். ஒருவேளை இதில் ஏதாவது மரணத்திற்கு காரணமாக அமையும் என்றால் அதனைவிட நற்பேறு வேறெதுவாக இருக்கும் என்றார்கள்.

சகோதரிகளே !
இதுதான் இறைநேசத்தில் உயர்விலும் உயர்வான அந்தஸ்த்தில் நிலைபெற்றிருந்த முதல் காலகட்டத்தின் முஸ்லிம் பெண்மணிகள். மேலும் இதன் விளைவாக அவர்கள் எப்படிபட்ட உதாரணமற்ற சந்ததிகளை பெற்றார்கள் என்றால் அவர்கள் உலகில் இஸ்லாத்தின் மகிமையை எதிரொலிக்க செய்தார்கள்.

சகோதரிகளே !
இறைநேசத்தின் இந்த உயர்தரம் இஸ்லாத்தின் முதல் காலகட்டத்தில் மட்டும் நமக்கு தென்படுவதில்லை. மாறாக இஸ்லாத்தின் இரண்டாவது காலகட்டத்தில் ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை) அவர்களின் ஜமாஅத்திலும் இப்படிப்பட்ட காட்சி நமக்கு காணக்கிடைக்கிறது.
ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை) அவர்களின் மகள் ஸாஹிப்ஸாதி ஹஸ்ரத் நவாப் முபாரக்கா பேகம் ஸாஹிபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை) அவர்களின் மரணத்தின் போது ஹஸ்ரத் சய்யிதா நுஸ்ரத் ஜஹான் ஸாஹிபா அம்மா ஜான் (ரலி )அவர்கள், ஹுஸூர் அவர்களுடைய உடலின் அருகில் அமர்ந்தவாறு மிகவும் வேதனையுடனும்,உணர்வுபூர்வமாகவும் கூறினார்கள்.

எனது பிள்ளைகளே ! உங்களது தந்தை உங்களுக்காக எதுவும் விட்டு செல்லவில்லை எனக் கருதாதீர்கள். அவர்கள் உங்களுக்காக துஆவின் மிகப்பெரிய பொக்கிஷத்தை வானத்தில் விட்டுச்சென்றுள்ளார்கள். அது அவ்வப்போது உங்களுக்கு எப்போதும் கிடைத்து கொண்டிருக்கும்.
இதுதான் இறைநேசத்தின் தரம் ஆகும். மிகவும் துக்கமான நிலையிலும் இறைவிருப்பத்தை கண்முன் வைத்தவாறு தனது பிள்ளைகளுக்கு வருங்காலத்தில் எப்போதும் இறைவிருப்பத்தின் படி செயல்படவேண்டும் என்று மிகச்சிறந்த வகையில் அறிவுறை கூறியிருக்கிறார்கள்.
ஆக இன்று இந்த விஷயத்திற்கு தான் அவசியம் இருக்கிறது .அதாவது நாம் அனைவரும் இறைநேசத்தின் தரத்தில் எந்த இடத்தில் நிற்கின்றோம் என ஆராய வேண்டும்.

சகோதரிகளே !
ஆண்களின் பணி இன்றைய காலத்தை சீர்திருத்தம் செய்வதாக இருக்கும் வேளையில், பெண்களாகிய நாம் எதிர்கால சீர்திருத்ததிற்காக உறுதியான அடித்தளத்தை ஏற்படுத்த வேண்டும். ஒருவேளை நாம் நமது சந்ததிகளுக்கு சரியான முறையில் தர்பிய்யத்  வழங்கவில்லை என்றால்,எப்போதும் உலகத்தைவிட மார்க்கத்திற்கு முன்னுரிமை வழங்கக் கூடிய பிரதிநிதிகளை ஏற்படுத்தவில்லை என்றால் பிறகு எந்த வகையிலும் ஆண்களால் மார்க்கத்தின் வலுவான கட்டிடத்தை கட்டமுடியாது. ஆக எப்போதுவரை வருங்கால சந்ததிகளுக்கு சரியான தர்பிய்யத் வழங்கப்படாதோ அப்போதுவரை சமுதாயம் முன்னேற்றம் அடையாது.

ஹஸ்ரத் முஸ்லிஹ் மவ்வூது (ரலி) அவர்கள் ஒரு சொற்பொழிவில் அஹ்மதி தாய்மார்களை நோக்கியவாறு கூறுகிறார்கள்.
தாபிஈன்களின் சந்ததிகள் சரியான முறையில் கண்காணிக்கப்பட்டு இருந்தால் யஸீத் எவ்வாறு உருவாகியிருப்பான். பெண்கள் எங்களது வேளை முடிந்து விட்டது எனக்  கூறியதனால் தான் யஸீத் தோன்றினான். அவர்கள் தர்பிய்யத் வழங்கியபோது சஹாபாக்கள் போன்ற நல்ல மனிதர்கள் பிறந்தார்கள். அவர்கள் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களுக்கு எண்ணற்ற நன்மையை அளித்திருக்கிறார்கள். ஆனால் பெண்கள்  தனது கவனத்தை திருப்பியதும் இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் எண்ணற்ற இழப்பை ஏற்படுத்தியவர்கள் பிறந்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் தோன்றியபோது அன்னாரது பரிசுத்தப் படுத்தும் ஆற்றலினால் அல்லாஹ் தஆலா  அபூபக்ர் (ரலி) ,உமர் (ரலி), உஸ்மான் (ரலி), அலி(ரலி), தல்ஹா(ரலி), ஸுபைர்(ரலி) மற்றும் இலட்சக்கணக்கான நல்ல மனிதர்களை தோற்றுவித்தான். ஆனால் இரண்டாவது அபூபக்ரை தோற்றுவிப்பது பெண்களது பணியாக இருந்தது. ஏனென்றால் ஹஸ்ரத் முஹம்மது ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் கடைசி மனிதர் ஆவார்கள், மேலும் அவர்கள் ஒரு நாள் மரணிக்க வேண்டியிருந்தது. ஆக முதல் அபூபக்ர் (ரலி) அவர்களை ஹஸ்ரத் முஹம்மது ரஸூலுல்லாஹ் (ஸல்)அவர்கள் உருவாக்கினார்கள். ஆனால் இரண்டாவது அபூபக்ர் (ரலி) அவர்களை ஒரு பெண்தான் உருவாக்கியிருக்க முடியும். முதல் உமர் (ரலி) அவர்களை ஹஸ்ரத் முஹம்மது ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் உருவாக்கினார்கள். ஆனால் இரண்டாவது உமர் (ரலி) அவர்களை ஒரு பெண்தான் உருவாக்கியிருக்க முடியும். முதல் உஸ்மான் (ரலி) அவர்களை ஹஸ்ரத் முஹம்மது ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் உருவாக்கினார்கள். ஆனால் இரண்டாவது உஸ்மான் (ரலி) அவர்களை ஒரு பெண்தான் உருவாக்கியிருக்க முடியும். முதல் அலி (ரலி) அவர்களை ஹஸ்ரத் முஹம்மது ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் உருவாக்கினார்கள். ஆனால் இரண்டாவது அலி (ரலி) அவர்களை ஒரு பெண்தான் உருவாக்கியிருக்க முடியும். அவர்கள் அவ்வாறு உருவாக்காத தன் விளைவாக அழிவு ஏற்பட்டது. (அன்வாருல் உலூம். பாகம் 22. சொற்பொழிவு: 17 செப்டம்பர்,1950.கராச்சி)

ஹஸ்ரத் முஸ்லிஹ் மவ்வூது (ரலி) அவர்கள் மேலும் கூறுகின்றார்கள் :-
பெண்கள் நினைத்தால் உலகத்தை நிரந்தரமாக மார்க்கமாக ஆக்கமுடியும். இந்த பணி எந்தளவு பெரியது என்றால் நெப்போலியனின் வெற்றி, தைய்மூர் வுடைய வெற்றி, எலிசபத் ராணியின் வெற்றி மற்றும் (ஏனைய)அரசர்களின் வெற்றி போன்றவை இதற்கு முன்பு ஒன்றுமற்றவையாகும். திருக்குர்ஆன் நீங்கள் எப்போதும் மார்க்கத்தை நிலைபெறச் செய்யுங்கள் எனக் கூறுகிறது. பெண்கள் எப்போதும் மார்க்கத்தை நிலைபெறச் செய்ய கடினமாக உழைக்காத வரை இது எவ்வாறு முடியும்.

ஒரு பெண், நான் எனது வருங்கால சந்ததியை முன்னவர்களைவிட அதிக மார்க்கப் பற்றுள்ளவனாக ஆக்கவேண்டும் என முடிவெடுத்து விட்டால் பிறகு ஷைத்தான் எவ்வாறு அவனை பிடிப்பான். ஆண்கள் ஷைத்தானுடன் போட்டியிட்டு இருக்கிறார்கள் ஆனால் எப்போதும் தோல்வியே அடைந்திருக்கிறார்கள். அதிகபட்சமாக ஒரு சந்ததியை மட்டும் உலகத்தை விட்டுவிட்டு மார்க்கத்தில் நிலைபெறச் செய்வதில் வெற்றி பெற்றுயிருக்கிறார்கள். பெண்களால்  மட்டும் தான் எப்போதும் போட்டியிட முடியும். நாங்கள் வருங்கால சந்ததிகளை மார்க்க தொண்டனாக ஆக்க வேண்டுமென  பெண்கள் முடிவெடுத்து விட்டால் பிறகு ஷைத்தான் யாரை வழிக்கெடுப்பான். (அவ்வாறு இருந்தால்) வருங்கால சந்ததிகளின் மீது ஷைத்தானின் தாக்கம் இருக்காது மாறாக தாயின் தாக்கம் தான் இருக்கும். ஆனால் தாய் தனது தவறினால் அவனை விட்டுவிட்டால் பிறகு அவன் ஷைத்தானுக்கு இரையாகி விடுவான். ஆகையால் தனது பொறுப்பை உணருங்கள். அனைத்தையும் விட மிகப்பெரிய விஷயம் தனது அன்பர்களையும்,உறவினர்களையும் எப்படிப்பட்ட பாதையில் வழி நடத்த வேண்டுமென்றால் அவர்கள் அந்த வழியில் சென்று  முன்னவர்களைவிட அதிகளவு மார்க்கப்பற்று உள்ளவராக ஆக வேண்டும். முன்னவர்களை விட அதிகமாக தியாகங்கள் செய்பவராக ஆக வேண்டும். நீங்கள் இவ்வாறு செய்தால் அடுத்த சந்ததிகளின் பெண்கள் அடுத்த சந்ததிகளை பாதுகாப்பார்கள். இவ்வாறு மறுமை வரை இறைவன் மற்றும் அவனது ரஸூலுடைய ஆட்சி நிலைபெற முடியும் . ஆக எந்த வேளையை 1300 ஆண்டுகளில் இமாம் அபூ ஹனீஃபா அவர்களால் செய்ய முடியவில்லையோ, இமாம் ஷாஃபிஈ அவர்களால் செய்ய முடியவில்லையோ , சய்யது அப்துல் காதிர் ஜைலானி அவர்களால் செய்ய முடியவில்லையோ, ஹஸ்ரத் முஅய்னுத்தீன் ஸாஹிப் சிஷ்த்தி அவர்களால் செய்ய முடியவில்லையோ , ஷஹாபுத்தீன் ஸாஹிப் அவர்களால் செய்ய முடியவில்லையோ,ஒரு பெண்ணால்  அதை செய்யமுடியும்.  பெண்ணின் கையில்தான் குழந்தை இருக்கும். குழந்தை பேச கற்கிறதென்றால் அது தனது தாயின் மடியில் தான், உணர்வுகளை கற்கிறதென்றால் அது தனது தாயின் மூலமாக தான், சிந்திக்கும் திறன் அவனிடம் உருவாகிறதென்றால் அது தாயின் காரணத்தினால் தான். ஆக அவன் அனைத்து விஷயங்களையும் பெண்ணிடமிருந்து தான் கற்கிறான். ஆகையால் நான் எனது எதிர்க்கால சந்ததிகளை சீர்திருத்துவேன் என பெண்கள் உறுதிபூண்டால் எந்த பணி சான்றோர்களால் முடியவில்லையோ அதனை என்றென்றும் செய்ய முடியும். மேலும் இறைவனது ஆட்சி இந்த உலகிலும் விண்ணில் இருப்பது போன்று நிலைபெறும். (அன்வாருல் உலூம் பாகம் 22, சொற்பொழிவு, 17 செப்டம்பர்,1950. இடம் : அஹ்மதிய்யா ஹால்).

சகோதரிகளே !
  வருங்கால சமுதாயத்தின் நியதியை பற்றி முடிவெடுப்பது அஹ்மதி பெண்களாகிய நமது பணியாகும். இந்த முடிவை அவர்கள் இன்றே எடுக்க வேண்டும், இல்லையென்றால் எதிகாலம் கண்டிப்பாக இருளாக இருக்கும். இன்று நாம் நமது நெஞ்சத்தை இறையன்பினால் ஒளிமயமாக்க வேண்டும். இல்லையென்றால் சய்யிதுனா ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை) அவர்கள் நம்மிடம் எதிர்பார்த்த  இறைநேசத்திற்கான அந்த ஒளி நமது சந்ததிகளிடம் உருவாகாது. ஆக அனைத்து பிரச்சனைக்கும் ஒரே தீர்வுதான் உள்ளது. அந்த தீர்வு நாம் இறையன்பில் மூழ்கிவிட வேண்டும். அதன் விளைவாக பிறக்கக்கூடிய சந்ததிகள் இறைநேசம் கொண்ட சந்ததிகளாக ஆக வேண்டும்.

சய்யிதுனா ஹஸ்ரத் நான்காவது கலீஃபத்துல் மஸீஹ் ரஹ்மஹுல்லாஹூ தஆலா அவர்கள் கூறுகின்றார்கள்:-
இன்று அஹ்மதி பெண்களுக்கு அனைத்தையும் விட (இறை)அன்பின் பயணத்தை மேற்கொள்வது மிக அவசியமாக உள்ளது. அஹ்மதி (பெண்)பிள்ளைகளுக்கும் அவசியமாகும் .ஏனென்றால் அவர்கள் நாளை தாயாக ஆக வேண்டியுள்ளது. இதனால் அஹ்மதி ஆண்களுக்கு இதன் அவசியம் இல்லை என்பதல்ல ஆண்களுக்கும் இது அவசியமாகும். ஆனால் அவர்கள் தாய்மார்களிடமிருந்து பயன் பெறுவார்கள்,  ஏனென்றால் ஆண்களுக்கான சுவர்கங்கள் தாயின் காலடியின் கீழ் வைக்கப்பட்டுள்ளது. சுவர்க்கத்திற்கான சிறந்த போற்றுதல் இறைவனது அன்பு ஆகும். (நான்காவது கலீஃபத்துல் மஸீஹ் (ரஹ்மஹுல்லாஹூ தஆலா) அவர்கள் 1991,ஜூலை 27 அன்று இங்கிலாந்தின் ஆண்டுமாநாட்டில் பெண்கள் மத்தியில்ஆற்றிய உரை).

ஹுஸூர் அவர்கள் இந்த கருத்தை விளக்கியவாறு மேலும் கூறுகிறார்கள்:-
உலகின் அனைத்து பிரச்சனைகளுக்கான தீர்வு இறையன்பு ஆகும். இதுதான் உள்ளங்களை ஒன்றிணைக்கும் அந்த அன்பு ஆகும். இதனை தவிர மற்ற அனைத்து மருந்துகளும் அர்த்தமற்றதும், பொய்யும்,வீ ணாவையும், வெறும் வாயாளவிலான பேச்சுகளே ஆகும். ஆக இந்த பயணத்தை ஆரம்பியுங்கள்.இந்த வேளை உங்களிடம் ஒப்படைக்கப் பட்டதாகும் . நீங்கள் இறையன்பில் மூழ்க வேண்டும் என ஒருநாள் முடிவு எடுங்கள். அது அப்படி ,இப்படி இருந்தாலும் சரி. நீங்கள் தனது இறைவனுடன் நேசம் கொள்ளவேண்டும். அவனது அழகை தேடவேண்டும். நீங்கள் அன்பினைப் பற்றி பேசும்போது ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை) அவர்களின் இந்த கவிதை உங்களுக்கு ஓர் எச்சரிக்கையாக இருக்கும்.

பார்க்காமல் எவ்வாறு நிலவின் மீது உள்ளம் வர முடியும். கற்பனை சிலைக்கு ஒருவர் எவ்வாறு இதயத்தை கொடுக்க முடியும். 

ஹுஸூர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் :-
நான் உங்களுக்கு இந்த இரகசியத்தை புரிய வைக்கிறேன். அதாவது இறைவனிடம் அன்பை இவ்வாறு கேளுங்கள். இறைவா ! எங்களுக்கு உனது அழகை காட்டுவாயாக, உனது அழகின் தோற்றத்தை காட்டுவாயாக, எங்களை தன்னிலை அற்றவர்களாக ஆக்கிவிடு. நாங்கள் உன்னை பார்த்து பைத்தியமாகி விடவேண்டும். எங்களுக்கு உலகத்தைப் பற்றியும் அதில் இருப்பவை பற்றியும் எந்த கவலையும் இருக்கக் கூடாது. நாங்கள் உன்னை விரும்பவேண்டும். உனக்கு எதிரில் வேறு எவரையும் விரும்பக் கூடாது. இந்த துஆவின் மூலம் அல்லாஹ் தஆலா உங்களுக்குள் ஒரு தூய மாற்றத்தை ஏற்படுத்த ஆரம்பித்து விடுவான். மேலும் எப்போதுவரை உங்களிடத்தில் தூய மாற்றம் ஏற்படாதோ அப்போதுவரை வெளி உலகில் தூய மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. ஏற்படுத்த முடியாது. ஏற்படுத்த முடியாது. இது ஓர் உறுதியான போதனையாகும். இதனை உலகில் எந்த சக்தியாலும் மாற்ற முடியாது. உங்களிடத்தில் பிரகாசங்களை உருவாக்குங்கள். தன்னிடம் வுள்ள இருள்களை பிரகாசமாக மாற்றுங்கள். அதனை வெளியில் தெரியக்கூடிய அளவு அதனை தோற்றத்தினால் நிரப்புங்கள். உங்களது உள்ளத்தின் ஒளி தானாகவே வெளியில் பிரகாசிக்க வேண்டும். இந்த வகையில் திருக்குர்ஆன் இதனை இவ்வாறு கூறுகின்றது.
                    نورھم یسعٰی بین ایدیھم۔
 (அத்தஹரீம் :9)  

அவர்களது ஒளி அவர்களை மட்டும் உள்ளடக்கியதாக இருக்காது.  یسعٰی بین ایدیھم அது அவர்களுக்கு முன்பாக ஓடும் .உலகத்தையும் ஒளிமயமாக்கிக் கொண்டே செல்லும். தாய்மார்களுக்கு இதன் அவசியம் ஏனென்றால் தாய்மார்களின் அரவணைப்பில் தான் குழந்தை இருக்கிறது. நீங்கள் சிறுவயதில் அவர்களது உள்ளத்தில் இறைநேசத்தை உருவாக முடியுமென்றால், உங்களது பிள்ளைகளின் மீது நீங்கள் செய்யும் மாபெரும் கருணை இதுவாகும். இறைநேசத்தை உருவாக்குவதற்கு (முதலில்) நீங்கள் இறைவனுடன் பேச வேண்டும். இறைவனுடன் பேசும்போது உங்களது உள்ளத்தில் தாக்கம் ஏற்படவில்லை என்றால், உங்களது கண்களிலிருந்து கண்ணீர் வரவில்லை என்றால், உங்களது உள்ளம் உருக்கவில்லை என்றால், பிறகு எனது பிள்ளைகள் இதன் மூலம் தாக்கத்திற்கு ஆளாகிவிடுவார்கள் என நம்புவது பொய் கதை ஆகும். இதில் எவ்விதமான உண்மையும் இல்லை.

எப்படிப்பட்ட தாய்மார்களின் பிள்ளைகள் இறைவனை நேசிக்கும் என்றால் இறைவனைப் பற்றி பேசும்போது உள்ளம் உருகி கண்ணீர் சிந்தக் கூடிய தாய்மார்களின் பிள்ளைகள் தான் இறைவனை நேசிக்கும். அவர்களது முகங்களின் தோற்றம் மாறிவிடுகின்றது. பிள்ளைகள் என் தாய்க்கு என்ன ஆயிற்று எந்த விஷயத்தைப் பற்றிய கவலை ,எந்த வேதனை அவளை  பிடித்துக் கொண்டிருக்கிறது என வியப்புடன் பார்கின்றார்கள். இப்படிப் பட்ட தாக்கம் தான் பிள்ளைகளுக்குள் ஒரு தூய மற்றும் மாபெரும் மாற்றத்தை எற்படுத்தக் கூடியவையாக  இருக்கின்றது. இதுதான் புரட்சிக்கான ஆன்மாவும் ,புரட்சிக்கான உயிரும் ஆகும். இன்று நீங்கள் தாய்மார்களாக ஆகிவிட்டீர்கள் என்றால் அல்லாஹ் உங்களுக்கு இன்றும் இந்த ஆற்றலை தந்திருக்கின்றான் அதாவது தனது சுற்றுவட்டாரத்தில், தனது சுற்றுபுறத்தில் இறை நேசத்தை நிரப்ப முயற்சி செய்யுங்கள், நீங்கள் இன்னும் தாயாக ஆகவில்லை என்றால் இன்று அந்த தூய மாற்றங்களை ஏற்படுத்துங்கள். இதன் மூலம் நீங்கள் தாயாக ஆக்குவதற்கு முன்பே இறைவனுடன் அன்பு செலுத்தக் கூடியவராக ஆகிவிடவேண்டும். உங்களது மடியில் வளரக்கூடிய, உங்களுடன் விளையாடக்கூடிய, உங்களிடமிருந்து பால் அருந்தி இளைஞனாகக் கூடிய, அல்லது உங்களது கைகளினால் பால் அருந்தி இளைஞனாகக் கூடிய அந்த சிறுபெண் குழந்தைகள் மற்றும் ஆண் குழந்தைகளுக்கு இன்றைய காலத்திலேயே, ஆரம்ப காலத்திலேயே இறையன்பின் தாலாட்டை வழங்குகள். அவர்களிடம் இறைநேசம் பற்றி பேசுங்கள். பிறகு வரக்கூடிய அனைத்து எல்லைகளும் எளிமையாக்கி விடும். (நான்காவது கலீஃபத்துல் மஸீஹ் (ரஹ்மஹுல்லாஹூ தஆலா) அவர்கள் 1991,ஜூலை 27 அன்று இங்கிலாந்தின் ஆண்டு மாநாட்டில் பெண்கள் மத்தியில்ஆற்றிய உரை).                
சகோதரிகளே !
இன்று அஹ்மதி தாய்மார்களாகிய நமது கடமை என்னவென்றால் நாம் நமது பிள்ளைகளுக்கு சிறுவயதிலிருந்தே அவர்கள் எப்போதும் உண்மையில் நிலைபெற்று  இருக்கும் வகையில் தர்பிய்யத்தை வழங்கவேண்டும். அவர்கள் பொய் பேசக் கூடாது. ஏனென்றால் குழந்தை பொய் பேசுகிறது என்றால் அது நமக்கும் அவப்பெயரை பெற்றுத் தருகிறது. இறைவனுக்கும் கோபமூட்டுகிறது. இன்று நமது கடமை என்னவென்றால் நாம் நமது பிள்ளைகளுக்கு உங்களது உயிர் ஜமாஅத்திற் குரியதாகும் என போதனை வழங்கவேண்டும். ஏனென்றால் உயிர் தியாகம் செய்யும் பொது பிள்ளைகளுக்கு ஏற்படும் முதல் உணர்வு தனக்குப் பிறகு தன்னுடைய தாய்க்கு என்னவாகும். தனது மனைவிக்கு என்னவாகும், தனது பிள்ளைகளுக்கு என்னவாகும்   என்பதாகும். இன்று அஹ்மதி தாய்மார்களாகிய நம்மீதுள்ள கடமை நாம் நமது பிள்ளைகளிடத்தில், நமது உயிர்களை இஸ்லாம் மார்க்கத்திற்காக தியாகம் செய்வதற்காக எந்நேரமும் தயாராக வைத்திருக்க வேண்டும் என்ற ஆன்மாவை ஏற்படுத்த வேண்டும். நாம் நமது பிள்ளைகளுக்கு அதாவது நீ வெற்றி பெற்றுவரும் போதுதான் அல்லது அங்கேயே மரணிக்கும் போதுதான் நாங்கள் மகிழ்ச்சியடைவோம் என போதனை வழங்கவேண்டும். இந்த வகையில் அவர்கள் மீதுள்ள சுமை குறையும்.
இறைவன் மற்றும் அவனது ரஸூல் மீதுள்ள அன்பின் உயர்தரமான உணர்வு இன்று அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்திலும் இருக்கின்றது. 28, மே.2010 ஆம் ஆண்டு லாஹூரில் ஜமாஅத் பள்ளிவாசலின் மீது தாக்குதல் நடத்தி அப்பாவி அஹ்மதிகள் ஷஹீதாக்கப் பட்டார்கள். அந்த ஷஹீதுகளில் ஒரு ஷஹீதின் மனைவி அடுத்த ஜுமுஆவில் தனது பிள்ளைகளிடத்தில், கடந்த வாரம் உங்களது தந்தை எந்த இடத்தில் நின்று தொழுதாரோ அதே இடத்தில் நின்று தொழ வேண்டும் எனக் கூறி ஜூமுஆ  தொழுகைக்கு பிள்ளைகளை அதே பள்ளிவாசலுக்கு அனுப்பி வைத்தார்.

சகோதரிகளே !
அல்லாஹ், அவனது ரஸூல் மற்றும் அவனது மார்க்கத்தின் மீது கொண்ட இந்த அன்பின் உணர்வை இன்று வேறு ஏதாவது சமுதாயத்தில் காண முடியுமா ? ஒருபோதும் முடியாது. ஆக நாம் நமது பிள்ளைகளிடத்தில் இந்த ஆன்மாவைத் தான் உருவாக்க வேண்டிய தேவையிருக்கின்றது. இந்த ஆன்மா நமது சந்ததிகளிடத்தில் இறைநேசத்தின் நெருப்பு உருவாகியிருக்கும் போதுதான் ஏற்படும். இந்த ஆன்மா நமது சந்ததிகளிடத்தில் உலக நேசத்தைவிட இறைநேசம் மேலோங்கி இருக்கும் போதுதான் ஏற்படும்.

சகோதரிகளே !
இப்போது இந்த இறைநேசத்தை உருவாக்குவது எப்படி? என்ற கேள்வி எழுகிறது. அதற்கான முதல் பதில் இதுவாகும். அதாவது  இறைநேசத்தை உருவாக்குவதற்கான மிகப் பெரிய வழி தனது பிள்ளைகளிடத்தில் தொழக் கூடிய பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். மேலும் அஹ்மதி தாய்மார்களாகிய நமது கடமை நாம் நமது பிள்ளைகளுக்கு சிறுவயதிலிருந்தே தொழுகையின் மீது நேசத்தை உருவாக்க வேண்டும். ஏனென்றால் தொழுகையின் மீதுள்ள நேசம் தான் படிப்படியாக இறைநேசத்தை உருவாக்கும்.

சய்யிதுனா ஹுஸூர் அன்வர் அய்யதஹுல்லாஹூ தஆலா பினஸ்ரிஹில் அஸீஸ் அவர்கள் கூறுகிறார்கள் :- அல்லாஹ் தஆலா ஐவேளை தொழுகையை  கடமையாக்கி இருக்கிறான். அதனை முறையாக பேண வேண்டும். பிறகு பிள்ளைகளையும் அவர்கள் தொழுகிறார்களா ? இல்லையா ? என கண்காணிக்க வேண்டும். தாய்,தந்தையர் தொழக் கூடியவர்களாக இருந்தால் பிள்ளைகளும் சுயம் அதற்கு பழக்கமாகி விடுவார்கள் ............வீட்டில் ஏழு வயது பிள்ளைகளுக்கு தொழும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள். பத்து வயது பிள்ளைகள் இருந்தால் அவர்களை தொழுவதற்கு கட்டாயப் படுத்துங்கள். பிள்ளைகள் தொழும் பழக்கத்திற்கு ஆளாகி விட்டால் பிறகு அவர்களுக்கு பல்வேறு தீமைகளிலிருந்து தவிர்ந்து இருப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும்.......பிள்ளைகளின் தாய், தந்தையர் இறைவணக்கம் செய்யக் கூடியவராக இருந்தால். பிள்ளைகளின் தாய், தந்தையர் தொழக் கூடியவராக இருந்தால். பிறகு பிள்ளைகளால் தீய செயல்கள், தீய பேச்சுகள் அல்லது வீணான, தேவையில்லாத விஷயங்கள் போன்றவற்றை கற்கவே முடியாது. ஆகையால்  தாய்மார்களின் பொறுப்பு என்னவென்றால் அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு இதற்கான பயிற்சி அளிக்க வேண்டும். ஏனென்றால் அல்லாஹ் தஆலா நம்மிடம் இறைவணக்கம் செய்யக் கூடியவர்கள் தீமையில் ஈடுபடமாட்டார்கள் எனக் கூறியுள்ளான். அல்லாஹ் கூறுகின்றான் .இன்னஸ் ஸலாத்த தன்ஹா அனில் ஃபஹ்ஷாஇ வல் முன்கர்.     (அல் அன்கபூத் :46)அதாவது நிச்சயமாக தொழுகையானது தீய மற்றும் வெறுக்கத்தக்க விஷயங்களிலிருந்து தடுக்கிறது.

சய்யிதுனா ஹுஸூர் அன்வர் அய்யதஹுல்லாஹூ  தஆலா பினஸ்ரிஹில் அஸீஸ் அவர்கள் கூறுகிறார்கள் :-
ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை) அவர்களிடம் தன்னை உலக அசுத்தங்களிலிருந்து பாதுகாத்து கொள்ள வேண்டும், தனது முடிவு நல்லதாக அமைய வேண்டும் என்பதற்காக பைஅத் செய்த அஹ்மதி பெண், முடிவு நல்லதாக அமைய தனது பாதங்களை முன்னே எடுத்து வைக்க வேண்டும், தனது சுற்றுபுரத்தில் தனது பாதங்களை ஊதி, ஊதி வைக்க வேண்டும். நீங்களும் ,உங்களது சந்ததிகளும் ஈமானில் முன்னேற வேண்டும். அதற்காக இறைவனின் பக்கம் அதிகளவு இழுத்துச் செல்கின்ற வழியை மேற்கொள்ள வேண்டும். மேலும் ஸாக்கிராத் ஆக முயற்சி செய்யுங்கள், ஆபிதாத் ஆக முயற்சி செய்யுங்கள். தன்னை இறைவனது கட்டளைகளுக்கேற்ப அமைத்து கொள்ள முயற்சி செய்யுங்கள். தனது இறைவணக்கங்களை முறையாகப் பேணுங்கள். தனது இறைவணக்கங்கள் உயர்தரம் வரை எடுத்துசெல்லக் கூடியதாக இருக்கவேண்டும். அது தனது உயர் தரத்தை நிலைநாட்டக் கூடியதாக இருக்கவேண்டும். தனது தொழுகையை அழகிய முறையில் நிறைவேற்றக்  கூடியவர்களாக ஆகுங்கள். தனது இரவுகளை இறைவணக்கங்களால் அழகு படுத்துங்கள். தனது சந்ததிகளையும் அல்லாஹ் மற்றும் அவனது ரஸுல் (ஸல்) அவர்களுடைய கட்டளைகளுக்கேற்ப செயல்படக் கூடியவர்களாக ஆக்குவதற்கு முயற்சி செய்யுங்கள். இதன்மூலம் காலத்தின் இமாம் அவர்களின் பைஅத்தில் இணைவதற்கான நோக்கத்தை அடையக் கூடியவர்களாக ஆக வேண்டும்.( 4 செப்டம்பர் 2004 ஆம் ஆண்டு ,சுவிஸர் லேண்ட் ஆண்டு மாநாட்டில் ஹுஸூர் அன்வர் அய்யதஹுல்லாஹூ  தஆலா பினஸ்ரிஹில் அஸீஸ் அவர்கள் பெண்கள் மத்தியில் ஆற்றிய சொற்பொழிவு )

மற்றொரு சந்தர்ப்பத்தின் போது, சய்யிதுனா ஹுஸூர் அன்வர் அய்யதஹுல்லாஹூ  தஆலா பினஸ்ரிஹில் அஸீஸ் அவர்கள் அஹ்மதி தாய்மார்களாகிய நம்மை நோக்கியவாறு கூறிகிறார்கள். அல்லாஹ்வுடைய கட்டளைக்கேற்ப இக்காலத்தின் இமாமிடம் நீங்கள் செய்த அந்த உடன்படிக்கையின் காரணமாக புதிய சந்ததிகளின் தர்பிய்யதிற்காக தனக்குள் தூய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். தனக்குள் ஆன்மீக புரட்சியை உருவாக்கவேண்டும். தனக்கென்று ஒரு குறிக்கோளை ஏற்படுத்த வேண்டும்.ஒரு நோக்கத்தை ஏற்படுத்த வேண்டும். உண்மையான அஹ்மதி முஸ்லிமுடைய நோக்கம் நன்மைகளில் முன்னேறுவதாகத் தான் இருக்கும். நீங்கள் அந்த நன்மைகளில் முன்னேறுவதற்கு அல்லாஹ் தஆலாவுடைய கட்டளைகளின் படி செயல்பட வேண்டும். அவன் கூரிய போதனைகளுக்கேற்ப தனது வாழ்க்கையை அமைத்து கொள்ளவேண்டும். அல்லாஹ் நம்பிக்கை கொண்ட பெண்களின் சிறப்பம்சமாக கூறியவற்றை தனக்குள் ஏற்ப்படுத்திக் கொள்ளவேண்டும். இந்த உலகின் பளபளப்பிலிருந்து, சுற்றுபுறத்தின் தீமைகளிலிருந்தும் தன்னை பாதுகாக்க வேண்டும். தன்னை மற்றும் பாதுகாக்க கூடாது மாறாக அஹ்மதிய்யா ஜமாஅத்தின் அமானத்துக்களை அதாவது உங்களது மடியில் வளரக்கூடிய அந்த பிள்ளைகளும்.அந்த சந்ததிகளையும் பாதுகாக்க வேண்டும். ( 3 ஜூலை 2004 ஆம் ஆண்டு கனடா நாட்டின்  ஆண்டு மாநாட்டில் ஹுஸூர் அன்வர் அய்யதஹுல்லாஹூ  தஆலா பினஸ்ரிஹில் அஸீஸ் அவர்கள் பெண்கள் மத்தியில் ஆற்றிய சொற்பொழிவு ).

சகோதரிகளே !
ஒரு ஹதீஸில் வருகிறது. ஹஸ்ரத் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். எந்த பெண் ஐவேளை தொழுகையை பேணக் கூடியவளாக இருப்பாளோ,  ரமளானில் நோன்பு நோற்க கூடியவளாக இருப்பாளோ, தனது பரிசுத்த தன்மையை பாதுகாக்க கூடியவளாக இருப்பாளோ மேலும் தனது கணவனுக்கு கீழ்ப்படக் கூடியவளாக இருப்பாளோ, அவளிடம் நீ சுவர்க்கத்தின் எந்த வாயில் வழியாக நுழைய விரும்புகின்றாயோ அதன் வழியாக செல் எனக் கூறப்படும்.(முஸ்னத் அஹ்மது பின் ஹன்பல்).
ஆக இவர்கள் தான் அந்த சுவர்க்கத்தின் பெண்மணிகள், இவர்கள் தான் அந்த சுவர்க்கத்தின் தாய்மார்கள். இவர்களை குறித்து தான் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிள்ளைகளை நோக்கி உங்களது தாய்மார்களின் காலடியின் கீழ் சுவர்க்கம் இருக்கிறது எனக் கூறினார்கள். இதிலிருந்து தாய்மார்களாகிய நாம் நமது பிள்ளைகளை சுவர்க்கத்தின் வாரிசுகளாக ஆக்குவதற்கு முதலில் சுயம் சுவர்க்கவாதியாக ஆகவேண்டும். தனது பிள்ளைகளிடம் இறைநேசத்தின் நெருப்பை மூட்டுவதற்கு முதலில் இந்த நெருப்பை தனது உள்ளத்தில் மூட்டவேண்டும். அப்போதுதான் நாம் வெற்றியடைய முடியும். அப்போதுதான் அந்த மாபெரும் நோக்கத்தை அதாவது எதற்காக அல்லாஹ் தஆலா இக்காலத்தில் ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை) அவர்கள் மூலமாக உலகத்திற்கு உயிருள்ள இறைவனை காண்பிக்க வேண்டும் என்ற நோக்கத்தை கொண்ட இந்த ஜமாஅத்தை உருவாக்கினானோ அந்த நோக்கம் நிறைவடைய செய்ய முடியும்.

சகோதரிகளே !
நமது பிள்ளைகளிடத்தில் இறைநேசம் உருவாகுவதற்கு நாம் நமது தரத்தை ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை) அவர்கள் மற்றும் அன்னாரது கலீஃபாக்கள் நிலைபெற விரும்பிய அந்த தரத்தில் நிலைபெறச் செய்யவேண்டும். நலல சந்ததிகளை உருவாக்க கூடிய, சந்ததிகளுக்கு நல்ல தர்பிய்யத் கொடுப்பதற்கான திறமை மார்க்கப் பற்றுள்ள தாயிடம் இருப்பதனைப் போன்று மார்க்கப் பற்றில்லாத தாயிடம் இருப்பதில்லை.
மார்க்கப்பற்றுள்ள தாய்மார்களின் கண்காணிப்பில் வளரக் கூடிய குழந்தைகள் இரவு, பகலாக தனது தாயின் நல்ல அமல்களின் (தொழுகை, நோன்பு, திருக்குர்ஆன் ஓதுவது, தான தருமங்கள் போன்ற ) காட்சியையே பார்க்கின்றனர். ஆனால் மார்க்கப் பற்று இல்லாத தாயின் பிள்ளைகள் இதிலிருந்து தடுக்கப் பட்டவர்களாக இருக்கின்றனர். தாயின் நல்ல அமல்கள் தனது பிள்ளைகளுக்கு உள்ளத்தை ஈர்க்க கூடிய, ஓர் அழகான முன்மாதிரி ஆகும். மேலும் தாயின் கூற்றுக்கள் அவளது பிள்ளைகளின் காதுகளில் தேனாக, நச்சுமுறிவு துளியாக இறங்கி கொண்டே செல்லும். அது அவர்களது சதை, எலும்புகளை கடந்து அவர்களது இரத்தத்தின் ஒரு பகுதியாக மாறி அவர்களுக்கு ஒரு வகையில் ஒரு புதிய பிறப்பை ஏற்படுத்துகிறது. ஆக அஹ்மதிய்யத்தின் சூழலில் வாழக்கூடிய சகோதரிகளே, தாய்மார்களே. வருங்காலத்தில் தாயாக ஆகப்போகும் சிறுமிகளே ! நாம் நமது சந்ததிகளை அழிவின் பள்ளத்திலிருந்து காப்பாற்றி ஆன்மீக முன்னேற்றத்தின் கண்ணியமான பாதையில் நிலைபெறச் செய்ய வேண்டுமென்றால் நாம் நமது மடிகளை நன்மையின் தொட்டிலாக ஆக்குவதனை தவிர வேறெந்த பெரிய மருந்தும் நம்மிடம் இல்லை.

இந்த இறைநேசத்தை உருவாக்குவதற்காக தான் நமது தலைவர் ஹஸ்ரத் முஹம்மது முஸ்தஃபா (ஸல்) அவர்கள் நமக்கு, குழந்தை பிறந்தவுடன் அதன் காதுகளில் பாங்கு ஒலியை எட்டவைக்க வேண்டும் என கட்டளை இட்டுயிருக்கிறார்கள். இதன் மூலம் குழந்தை உலகத்திற்கு வந்தவுடன் இறைவனைப் பற்றிய அறிவை அதனது உள்ளத்தில் ஏற்ப்படுத்த வேண்டும். இந்த கட்டளையில் குழந்தைகளின்  தர்பிய்யத்திற்கான காலம் அது பிறந்தவுடனே துவங்கி விடுகிறது என்ற கருத்தும் உள்ளடங்கியுள்ளது.

ஆக நாம் பிள்ளைகளின் தர்பிய்யத்தை ஆரம்பிக்கும் போது முதலாவதாக அவர்களது உள்ளத்தில் இந்த விஷயத்தை அதாவது என்னைப் படைத்த என்னுடைய இறைவன் ஒருவன் இருக்கின்றான். அவன் எனது அரசனாகவும், எஜமானனாகவும் இருக்கின்றான். மேலும் எனக்கு அவனுடன் ஒரு தனிப்பட்ட தொடர்பை ஏற்படுத்த வேண்டும் என்பதனை  உறுதிபெறசெய்ய வேண்டும். அஹமதி தாய்மார்களாகிய நமது கடமை என்னவென்றால், நாம் நமது பிள்ளைகளிடத்தில் இறைவன் உலகத்தை செயல்பட வைப்பதற்காக மலக்குமார்களை நியமித்து இருக்கின்றான். அவர்கள் வெளிப்படையாக கண்களுக்கு தென்பட்டு மக்களை நன்மைகள் செய்ய வலியுறுத்தவும், தீமையிலிருந்து தடுக்கவும் மாட்டார்கள் என்பதனை உறுதிப்படுத்த வேண்டும். அஹ்மதி தாய்மார்களாகிய நமது கடமை என்னவென்றால் நாம் நமது பிள்ளைகளுக்கு, இறைவன் உலகத்தை சீர்திருத்துவதற்காக ஆரம்பத்திலிருந்தே பல்வேறு சமுதாயங்களின் பக்கம் நபிமார்களை அனுப்பியிருக்கிறான். பிறகு அனைத்துலக மக்களின் சீர்திருத்தத்திற்காக நபிமார்களின் தலைவர் ஹஸ்ரத் முஹம்மது முஸ்தஃபா (ஸல்) அவர்களை அனுபினான், பிறகு அன்னாரை பின்பற்றியவாறு இக்காலத்தில் ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை) அவர்களை அனுப்பியிருக்கிறான் என எடுத்துக் கூறவேண்டும். அஹ்மதி தாய்மார்களாகிய நமது கடமை என்னவென்றால் நாம் நமது பிள்ளைகளின் உள்ளத்தில் நாம் அனைவரும் ஒரு நாள் இறைவனிடத்தில் செல்லவேண்டியுள்ளது, அவன் நமது அமல்களை கணக்கெடுப்பான் என்பதனை உறுதிபெற செய்யவேண்டும். இந்த விஷயங்கள் நமது பிள்ளைகளிடத்தில் சிறுவயதிலேயே உறுதிபெற்று விட்டால் அதன் பிறகு வரக்கூடிய காலகட்டத்தில் அவர்களது இயல்பில் எவ்வளவு அபாயகரமான புயல் வந்தாலும் அவர்களை அந்த கொள்கையிலிருந்து அசைக்க முடியாது. மிருதுவான தண்ணீர் கடினமான பாறையின் மீது விழும்போது அழியாத தனது அடையாளத்தை விட்டுசெல்லும் போது. அஹ்மதி தாய்மார்கள் இரவு பகலாக கூறும் அறிவுறை நமது பிளைகளிடத்தில் அழியாத ஈமானை ஏன் ஏற்படுத்த முடியாது ? முடியும், கண்டிப்பாக முடியும்.
சகோதரிகளே !

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனது ஒரு ஹதீஸில் ஸஹாபாக்களை நோக்கியவாறு கூறுகிறார்கள்.:- நான் உங்களுக்கு மிகப்பெரிய பாவங்களைப் பற்றி தெரிவிக்கட்டுமா எனக் கேட்டார்கள். அன்னார் இதனை மூன்று முறை கூறினார்கள். அதற்கு ஸஹாபாக்கள் கட்டாயம் தெரிவியுங்கள் என்றார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் ..கேளுங்கள் ! மிகப்பெரிய பாவம் இறைவனுக்கு இணைவப்பது ஆகும். அதற்கு அடுத்த மிகப்பெரிய பாவம் பெற்றோருக்கு சேவை செய்வதில் கவனக் குறைவாக இருப்பது. அதன் பின்னர் அன்னார் தலையணையை விட்டுவிட்டு எழுந்து அமர்ந்தார்கள். உணர்ச்சி பொங்க பொய் பேசுவது மிகப் பெரிய பாவமாகும் எனக் கூறினார்கள். பெருமானார் (ஸல்) அவர்கள் இந்த வார்த்தையை மூன்று முறை கூறினார்கள். நாங்கள் அன்னாரது கஷ்டத்தை பார்த்து உள்ளத்தில் அன்னார் அமைதியாகி விடவேண்டும், கஷ்டப்பட வேண்டாம் எனக் கருதினோம்.

இந்த நுட்பமான ஹதீஸ், அஹ்மதி தாய்மார்களுக்கு தனது பிள்ளைகளின் தர்பிய்யத்தில் மற்றும் அவர்களிடத்தில் இறைநேசத்தை உருவாக்குவதில், மாபெரும் தாக்கத்தை கொண்ட மூன்று அடிப்படை விஷயங்களை உள்ளடக்கியதாக இருக்கின்றது. முதல் விஷயம் இணைவைப்பதிலிருந்து தவிர்ந்திருப்பது. இதுதான் இறைநேசத்தை உருவாக்குவதில் மிகப் பெரிய தடையாக இருக்க கூடியாதாகும். தாய்மார்களாகிய நமது கடமை என்னவென்றால், இறைவனது ஏகத்துவத்தில் நாம் நிலைபெற்று இருக்க கூடிய அந்த உயர்வான தரத்தில் நமது பிள்ளைகளையும் நிலைபெறச் செய்ய வேண்டும். அவர்களது பார்வையில் உலகத்தில் இறைவனைத் தவிர வேறெந்த பொருளும் நேசத்திற்குரியதாக இருக்க கூடாது. இரண்டாவது விஷயம் பெற்றோருக்கு கட்டுப்படுதல். அதாவது பெற்றோருக்கு கட்டுபடாமை தடுக்கப் பட்டுள்ளதாகும். இதுவும் தாய்மார்களாகிய நம்மீதுள்ள பொறுப்பு ஆகும். நாம் சிறுவயதில் சரியான முறையில் திருக்குர்ஆனின் கட்டளைகளுக்கு ஏற்ப நமது பிள்ளைகளுக்கு தர்பிய்யத் வழங்கியிருந்தோம் என்றால், நமது வயிற்றில் இருந்து பிறந்த நமது பிள்ளைகள் நமக்கு கட்டுபடாமல் ஒருபோதும் இருக்கமாட்டார்கள். இந்த ஹதீஸில் கூறப்பட்ட மூன்றாவது விஷயம் பொய் பேசுவது ஆகும். இந்த பொய் எவ்வளவு பெரிய சாபம் என்றால், இதனைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  ஹதீஸில் கூறுகிறார்கள். அலா வ கவ்லஸ் ஸூர், அலா வ கவ்லஸ் ஸூர், அதாவது காது கொடுத்துக் கேளுங்கள், காதுகொடுத்துக் கேளுங்கள், காதுகொடுத்துக் கேளுங்கள் இஸ்லாத்தில் இணைவைப்பது மற்றும் பெற்றோருக்கு கட்டுப்படாமைக்கு அடுத்த  மிகப் பெரிய பாவம் பொய் பேசுவதாகும்.

ஆக பொய் என்ற நோய்க்கு தடுப்பாக இருப்பது, அஹ்மதி தாய்மார்களாகிய நமது கடமை ஆகும். இது எப்போது நடைபெறும் என்றால், ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை) அவர்கள் பெண்களிடத்தில் வைத்திருந்த எதிபார்ப்புகளுக்கு ஏற்ப உண்மை மற்றும் நன்மையின் அந்த உயர்வான தரத்தில் தன்னை தானே நிலைபெற  செய்யும்போது தான் ஏற்படும்.

சய்யிதுனா ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை) அவர்கள் அஹ்மதி பெண்களாகிய நம்மை நோக்கி கூறுகிறார்கள் :-
இறையச்சத்தை மேற்க்கொள்ளுங்கள், உலகம் மற்றும் அதனுடைய அழகில் அதிகம் உள்ளத்தை செலுத்தாதீர்கள். சமுதாயப் பெருமை கொள்ளாதீர்கள். எந்த பெண்ணையும் ஏளனம் செய்யாதீர்கள். கணவர்மார்களின் தகுதிக்கு அப்பாற்ப் பட்டதனைக் கேட்காதீர்கள். தூய்மையான,பரிசுத்தமான நிலையில் கபரில் அடங்கப்பட முயற்சி செய்யுங்கள். இறைவன் கடமையாக்கிய தொழுகை, ஸக்காத்து போன்றவற்றில் சோம்பேறித்தனம் காட்டாதீர்கள். தனது கணவனுக்கு உள்ளத்தளவில் கட்டுப்படுங்கள். அவர்களது கண்ணியத்தின் பெரும்பகுதி உங்களது கையில் உள்ளது. ஆகையால் நீங்கள் இறைவனிடத்தில் ஸாலிஹாத்தாகவும் , கானிதாத்தாகவும் கருதப்படும் வைகையில் உங்களது பொறுப்புகளை நீங்கள் மிகச் சிறப்பாக செய்யுங்கள். வீண்விரையம் செய்யாதீர்கள். அதாவது தேவையில்லாமல் செலவு செய்யாதீர்கள். மேலும் கணவணுடைய செல்வங்களை தேவையின்றி செலவு செய்யாதீர்கள். ஏமாற்றாதீர்கள். திருடாதீர்கள். புறம் பேசாதீர்கள். ஒரு பெண் மற்ற பெண்ணின் மீது அல்லது ஆணின் மீது அவதூறு கூறவேண்டாம். (கிஷ்தீ நூஹ் பக்கம் 81).

மேற்க்கூறப் பட்ட விஷயங்களை தன்னிடத்தில் உருவாக்குவது பிறகு அந்த நற்ப்பண்புகளை தனது பிள்ளைகளிடத்தில் ஏற்படுத்துவது அஹ்மதி தாய்மார்களாகிய நமது கடமை ஆகும். நமது கைகளில் சமுதாயத்தின் இளைஞர்கள் வளர்க்கிறார்கள். இன்றைய குழந்தைகள் நாளைய இளைஞர்கள், இன்றைய இளைஞர்கள் நாளைய தந்தையர்கள். இன்று கீழ்படிபவர்கள் நாளைய கீழ்படிய செய்பவர்கள், இன்றைக்கு கட்டுப்படுபவர்கள் நாளைய ஆட்சியாளர்கள் ஆவார்கள். மிகவிரைவில் அவர்களது கையில் ஜமாஅத்தின் கடிவாளம் செல்ல இருக்கிறது. ஆக நமது கடமை என்னவென்றால் நாம் நமது பொறுப்புகளை எந்தளவு சிறப்பாக செய்யவேண்டும் என்றால், நாம் நமது பிள்ளைகளை எப்படிப்பட்ட அச்சில் வார்க்க வேண்டுமென்றால் அவர்களது காலம் வரும்போது அவர்கள் வானத்தின் வழிகாட்டலுடன் பிரகாசமான நட்சத்திரமாகி ஒளிரவேண்டும்.

சகோதரிகளே !
நமது பிள்ளைகளிடத்தில் இறைநேசத்தின் தரத்தை உருவாக்குவதற்கு நாம் வெளிப்படையான தர்ப்பிய்யத் வழங்குவதுடன் மற்றொரு ஆயுதத்தையும் கையாள வேண்டும். அந்த ஆயுதம் துஆ என்ற ஆயுதமாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனது சமுதாயத்தை நோக்கி கூறுகிறார்கள். இறையருளால் மூன்று துஆக்கள் கட்டாயம் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. முதலாவது, அநீதியிழைக்கப் பட்டவருடைய துஆ. தன் மீது இழைக்கப்படும் அநீதியின் கொடுமையினை தாங்க முடியாமல் இறைவனை அழைப்பவருடைய துஆ. இரண்டாவது, பயணியுடைய துஆ. பயணத்தின் கஷ்டம் மற்றும் வேதனையில் இறைவனிடம் கேட்கும் துஆ. மூன்றாவது , தாய்,தந்தையரின் துஆ. அவர்கள் தனது பிள்ளைகளின் நலனுக்காக துடிதுடித்து செய்யும் துஆ. உண்மை என்னவென்றால் நல்ல தாயுடைய துஆ பிள்ளைகளின் உரிமையில் அமுதம் போன்றதாகும். ஒரு நல்ல மார்க்கப் பற்றுள்ள தாய் தனது பிள்ளைகளுக்காக துஆ செய்யும் போது  அது ஏற்றுக்கொள்ளப் படாது என்பது ஒருபோதும் நடக்காது.

ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை) அவர்களுடைய கவிதையின் இந்த வரி அதாவது , சோதிப்பவரே இந்த மருந்தையும் சோதித்து பாருங்கள் என்பதற்கேற்ப  இந்த மருந்தையும் சோதித்துப் பார்க்க வேண்டும்.
ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை) அவர்கள் மேலும் கூறுகின்றார்கள்.
“நமது என்றும் உயிருடன் இருக்கின்ற, என்றென்றும் நிலைத்திருக்கின்ற, நமது இறைவன், நம்முடன் மனிதர்களைப் போன்று பேசுகின்றான். நாம் ஏதாவது ஒரு விஷயத்தை கேட்டோம் என்றால் அல்லது துஆ செய்தோம் என்றால் அவன் தனது வல்லமை நிறைந்த வார்த்தைகளில் அதற்கு பதில் அளிக்கின்றான். இந்த தொடர் ஆயிரம் முறை தொடர்ந்தாலும் அவன் பதில் அளிப்பதிலிருந்து முகம் திருப்புவதில்லை.” 
( நஸீமே தஃவத்.பக்கம் 82 ) .

ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை) அவர்கள் கூறுகிறார்கள் :-
நமது சுவர்க்கம் நமது இறைவன் ஆவான். நமது பேரின்பங்கள் நமது இறைவனிடத்தே உள்ளன. ஏனெனில் நாம் அவனைக் கண்டிருக்கிறோம். அழகணைத்தும் அவனிடத்திலேயே கண்டோம். இந்த செல்வம், உயிரை கொடுத்தேனும் பெறத்தக்கது. இம்மாணிக்கம் ஒருவன் தன்னை முற்றிலும் இழந்தாகிலும் பெறத்தக்கது., இழப்பிற்குரியோரே ! இந்த நீரூற்றின் பக்கம் விரைந்து வாருங்கள். இது உங்கள் தாகத்தைத் தணிக்கும். இது உங்களை காக்கும் ஊற்றாகும். நான் என்ன செய்வேன் ? இந்த நற்செய்தியை உள்ளங்களில் எவ்வாறு உறைய செய்வேன் ? இது தான் உங்கள் இறைவன் என்று மக்கள் கேட்கும் பொருட்டுத் தெருக்களில் எந்த முரசு அறைவேன் ? மக்கள் கேட்கும் பொருட்டு அவர்களின் காதுகள் திறக்க என்ன மருத்துவம் செய்வேன்?
                                                       ( கிஷ்தீ நூஹ் )

ஆக, அல்லாஹ்வின் சன்னிதியில் சஜ்தாவில் விழுந்தவாறு இவ்வாறு துஆ செய்ய வேண்டும். எங்களது  படைப்பாளனே ! எங்களது எஜமானனே ! எங்களது வானின் தலைவனே ! எங்களது எளிமையான வாழ்வின் இறைவனே ! நீ அஹ்மதி தாய்மார்களாகிய எங்களது உள்ளத்தில் இந்த உணர்வை ஏற்படுத்துவாயாக, அதாவது  நாங்கள் எங்களது பிள்ளைகளை உனது புனித அமானிதமாக கருதியவாறு அவர்களது தஃலீம் மற்றும் தர்பிய்யத்தை எந்த உறுதியான அடித்தளத்தில் நிலைபெறச் செய்ய வேண்டும் என்றால், அது அவர்களிடத்தில் இறைநேசத்தை உருவாக்குவதற்கும், அவர்களிடத்தில் இஸ்லாம் மற்றும் அஹ்மதிய்யத்திற்காக தனது உயிரையும் தியாகம் செய்யக்கூடிய ஆன்மாவை உருவாக்குவதற்கும் காரணமாக அமைய வேண்டும். மேலும் எங்களது சந்ததிகளுக்கும் நல்ல,ஸாலிஹான பிள்ளைகளைப் போன்று எங்களது இந்த தர்பிய்யத்தின் தாக்கத்தை ஏற்கும் நல்வாய்ப்பினை வழங்குவாயாக. வல்லமை படைத்த எனது இறைவா ! வானம், பூமி ஆகியவற்றின் அரசனே ! இறைநேசத்தை யாசிக்கும் இவள். உனது சன்னிதியில் தாழ்மையான வேண்டுதலுடன் நிற்கின்றாள்.
நான் உன்னிடமே கேட்கிறேன், நீயே எனது இறைவனாவாய்.
எல்லாவற்றையும் பார்த்துவிட்டோம், ஆனால் உண்ணைப் போன்று எதுவும் கிடைக்கவில்லை .

நீ மட்டும் தான் இருக்கின்றாய், நீ மட்டும் எஞ்சியிருப்பதனால் மற்ற அனைத்தும் அழிந்துவிடக் கூடியவை ஆகும்.
எவர் உனது பானத்தை அருந்தினாரோ ! அவர் மட்டுமே உயிருடன் இருக்கின்றார்.
உண்ணை எவ்வாறு அடைவது என்ற பேச்சு தான் எல்லா இடத்திலும் நடைபெறுகிறது.
இறைவா ! உனது அன்பு என்னை மெய்மறக்க செய்து விட்டது.
என்னை உனது உள்ளத்தில் எடுத்துக் கொள். இதுவே எனது சிறிய விண்ணப்பம் ஆகும். ஆமீன். யா அர்ஹமுர் ராஹிமீன்.   
  
(2015 ஆம் ஆண்டு காதியான் மாநாட்டில் வாதிக்கப்பட்ட பெண்களுக்கான உரை உருது மொழியில் இருந்தது தமிழில் மொழியாக்கம் செய்தது மவ்லவி N- ஜியாவுல் ஹக் )
                                                          
                       .                                                  
              

கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.