அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தை சார்ந்தோர்களுக்கும் மற்ற முஸ்லிம் சகோதரர்களுக்கும் உள்ள கொள்கை வேறுபாடுகளில் முதன்மையானது "ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்களின் மரணம்" ஆகும். அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தை சார்ந்த சகோதரர்கள் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் தெளிவான, நேரடியாக கூறும் ஆதரங்களை எடுத்து வைத்து ஹஸ்ரத் ஈஸா (அலை) மரணம் அடைந்துவிட்டாராக்கள் என்று கூறி வருகிறார்கள். ஆனால் அஹ்மதி அல்லாஹ் மற்ற முஸ்லிம் சகோதரர்கள் தெளிவான, நேரடியாக கூறும் எந்த ஒரு ஆதாரமும் இல்லாது உவமையாக கூறப்பட்டுள்ள விஷயத்தை எடுத்து வைத்துக் கொண்டு ஈஸா மரணம் அடையவில்லை அவர் உயிரோடு வானத்தில் இருக்கிறார்கள் என்று குதர்க்கமான வாதத்தை எடுத்து வைத்து வருகின்றனர்.
குர்ஆனில் ஈஸா உயர்த்தபட்டார் எனும் வாசகமும், ஹதீஸில் ஹஸ்ரத் ஈஸா (அலை) இறங்குவார்கள்" என்ற வாசகமும் இவர்களின் இந்த தவறான கொள்கைக்கு காரணமாக இருக்கிறது. குர்ஆனிலும் ஹதீஸிலும் ஈஸா (அலை) அவர்கள் சம்பந்தமாக விஷயங்கள் தெளிவாக கூறப்பட்டிருந்த போதிலும் இவர்கள் நேரடியாக கூறாத ஒரு சில வாசகங்களை கொண்டு ஒரு யூகத்தில் இவ்வாறான கொள்கையை இவர்கள் வைத்து வருகின்றனர். அதாவது இந்த வசனத்தில் இப்படி இருக்கிறது ஆகையால் அப்படித்தானே இருக்க வேண்டும் என்று கூறுவது போல். இன்னும் தெளிவாக சொல்லப்போனால், ஈஸா (அலை) அவர்கள் உயர்த்தப்பட்டார்கள் என்று வருகிறது...எங்கு உயர்த்தப்பட்டார்கள் என்பது குர்ஆனில் இல்லை..ஆனால் இவர்கள், எங்கு உயர்த்தப்பட்டார்கள் என்பதை இவர்களே முடிவு செய்து கொண்டு வானத்திற்குதான் உயர்த்தப்பட்டார்கள் என்று குர்ஆனிலும் ஹதீஸிலும் இல்லாத கொள்கையை கொண்டுள்ளனர். இதே போன்றுதான் ஹதீஸில் ஈஸா அலை இறங்குவார்கள் என்று வந்துள்ளது..ஆனால் எங்கிருந்து இறங்குவார்கள் என்பதையும் இவர்களாகவே யூதர்களை போன்று யூகம் கொண்டு வானத்திலிருந்துதான் இறங்குவார் என்று வாதம் புரிந்து வருகின்றனர். ஆனால் எந்த ஹதீஸிலும் ஈஸா (அலை) வானத்திலிருந்து இறங்குவார் என்று எங்குமே வரவில்லை.
ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்கள் இந்த உம்மத்தில் இறங்குவார்கள் என்று ரசூல் (ஸல்) அவர்கள் சொன்னது உண்மைதான். இதனால் அவர்கள் வானத்திலிருந்துதான் இறங்குவார்கள் என்று கொள்கை கொள்வது தவறே. இன்னும் தெளிவாக ஹஸ்ரத் ரசூல் (ஸல்) அவர்கள் பனு இஸ்ரவேலர்களுக்கு வந்த ஈஸா வேறு (அவர் இந்த உம்மத்தில் வர மாட்டார்) இந்த உம்மத்தில் வரக்கூடிய ஈஸா வேறு என்பதை அங்க அடையாளத்துடன் தெளிவு படுத்தி வரக்கூடிய அந்த ஈஸா வானத்திலிருந்து இறங்க மாட்டார், மாறாக உங்களில் இருந்தே தோன்றுவார் அதாவது பிறப்பார் என்பதை நாசூக்காக இந்த உம்மத்துக்கு கூறி சென்றுள்ளார்கள்.
பனூ இஸ்ரவேலர்களுக்கு வந்த ஈஸாவின் அங்க அடையாளத்தை பற்றி ஹஸ்ரத் ரசூல் (ஸல்) அவர்கள் கூறும்போது இவ்வாறு கூறுகின்றார்கள்:
"(மிஅராஜ் இரவில்) நான் ஈசா(அலை), மூஸா(அலை), இப்ராஹீம்(அலை) ஆகியோரைப் பார்த்தேன். ஈசா(அலை) அவர்கள் சிவப்பு நிறமுடையவர்களாகவும் சுருள் முடியுடையவர்களாகவும் அகன்ற மார்புடையவர்களாகவும் இருந்தார்கள். மூஸா(அலை) அவர்களோ மாநிறமுடையவர்களாகவும், உயரமானவர்களாகவும், படிந்த, நெருங்லான முடியுடையவர்களாகவும் சூடானிய இனத்தவர்களில் ஒருவரைப் போன்று (நீண்டு மெலிந்தவர்களாகவு)ம் இருந்தார்கள். என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்." (புகாரி, ஹதீஸ் நம்பர் 3438)
இந்த உம்மத்தில் வரக்கூடிய ஈஸாவின் அங்க அடையாளத்தை பற்றி கூறும்போது இவ்வாறு கூறுகின்றார்கள்:
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்
இல்லை; அல்லாஹ்வின் மீதாணையாக! ஈசா(அலை) அவர்களைக் குறித்து 'அவர்கள் சிவப்பு நிறமுடையவர்கள்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறவில்லை. மாறாக (இப்படித்தான்) கூறினார்கள்: நான் தூங்கிக் கொண்டிருக்கையில் (கனவில்) கஅபாவை வலம் வந்து கொண்டிருந்தேன். அப்போது மாநிறமுடைய தலைமுடி படிந்து தொங்கிய வண்ணமிருந்த ஒருவர் தம் தலையிலிருந்து நீர் சொட்டிக் கொண்டிருக்க... அல்லது வழிந்து கொண்டிருக்க... அங்கே இருந்தார். நான், 'இவர் யார்?' என்று கேட்டேன். 'மர்யமின் குமாரர்" என்று பதிலளித்தார்கள். நான் (தொடர்ந்து முன்னேறிச்) சென்றேன். அங்கு சிவப்பான, தடிமனமான, சுருட்டைத் தலை முடியுள்ள, வலக் கண் குருடான மனிதன் ஒருவன் இருந்தான். அவனுடைய கண் (ஒரே குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சையைப் போன்றிருந்தது. நான், 'யார் இது?' என்று கேட்டேன், 'தஜ்ஜால்" என்று பதிலளித்தார்கள் (தோற்றத்தில்) மக்களிலேயே அவனுக்கு அதிக ஒப்பானவர் 'இப்னு கத்தன்' தான்." (புகாரி ,ஹதீஸ் நம்பர் 3440)
(மூல ஹதீஸ் கீழே)

இந்த இரு ஹதீஸ்களையும் எம்பெருமானர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இந்த உம்மத்தில் யூத குணத்தை கொண்ட மக்கள் எலியாவை வானத்திலிருந்து இறங்குவார் என எதிர்பார்ப்பதை போன்று எனது உம்மத்தும் வரக்கூடிய ஈஸாவை வானத்திலிருந்து இறங்குவார் என்று நினைத்துவிடுவார்களோ என்ற எண்ணம் தோன்றி இருக்குமோ என்னவோ, இந்த ஹதீஸை நமக்கு கூறி சென்றுள்ளார்கள். இதன் மூலம் யூதர்கள் நினைப்பதை போன்று நீங்களும் நினைத்துவிடாதீர்கள் இறங்குவார் என்றால் உங்களில் இருந்தே தோன்றுவார் என்பதாகும் என்று விளக்கி கூறி சென்றுள்ளார்கள்.
முஸ்லிம் சகோதரர்களே! இந்த இரண்டு ஹதீசையும் நடுநிலையோடு சிந்தித்து பாருங்கள். முதல் ஹதீஸில் பனூ இஸ்ரவேலர்களுக்கு வந்த ஈஸாவின் அங்க அடையாளத்தைப் பற்றி கூறும்போது, "சிவப்பு நிறமுடையவர்களாகவும் சுருள் முடியுடையவர்களாகவும் அகன்ற மார்புடையவர்களாகவும் இருந்தார்கள்" என்று கூறுகிறார்கள். பனூ இஸ்ரவேலர்களுக்கு வந்த அந்த ஈஸாதான் இந்த உம்மத்தில் வருகை தருவார்கள் என்று சொன்னால் ஹஸ்ரத் ரசூல் (ஸல்) அதற்கு அடுத்ததாக வரக்கூடிய ஹதீஸில் ஏன் அதற்கு நேர் எதிரான அங்க அடையாளத்தை மாற்றி சொல்ல வேண்டும்...? மக்களை குழப்புவதர்க்காகவா...?(நஊதுபில்லாஹ்) இல்லை. ஆனால் இதற்கு பகரமாக ரசூல் (ஸல்) அவர்கள் இந்த உம்மத்தில் வரக்கூடிய ஈஸாவின் அங்க அடையாளத்தை பற்றி கூறும்போது, "அப்போது மாநிறமுடைய தலைமுடி படிந்து தொங்கிய வண்ணமிருந்த" என்று கூறுகின்றார்கள்.
ஆக பனூ இஸ்ரவேலர்களுக்கு வந்த ஈஸா நபிக்கு:
1- சிவப்பு நிறம், 2- சுருள் முடி
இந்த உம்மத்தில் வரக்கூடிய ஈஸா நபிக்கு:
1- மாநிறம், 2- படிந்த முடி
ஆக வந்த ஈஸா வேற, இந்த உம்மத்தில் வரக்கூடிய ஈஸா வேறு என்பதை தெளிவாக, அப்பட்டமாக கூறியுள்ளார்கள்.
இதை விளங்காமல் இஸ்ரவேலருக்கு அனுப்பப்பட அந்த ஈசாதான் வருவார் என்று சொன்னால், ரசூல் (ஸல்) அவர்கள் ஏன் இரு வேறு அடையாளம் கூற வேண்டும். அவர்கள் மிக்ராஜின் பொது தவறாக பார்த்துவிட்டார்களா...? இல்லை கனவில் கண்டதை சரியாக மக்களுக்கு கூறவில்லையா...? (நஊதுபில்லாஹ்) இறுதியில் இந்த ஆலிம்கள் இந்த ஹதீஸை மக்களுக்கு எவ்வாறு விளக்கி கூறப்போகிறார்கள்....?
இதில் இன்னொரு விஷேஷம் என்னவென்றால், இந்த உம்மத்தில் தோன்ற விருக்கும் ஈஸாவின் நிறத்தை ரசூல் (ஸல்) அவர்கள் "சிகப்பு நிறம் என்று கூறவில்லை" (ஆனால் 3438 ஹதீஸில் ஈஸா சிகப்பு நிறம் உடையோராக இருந்தார் என்பதை ரசூல் (ஸல்) அவர்கள் சொன்னதாக சொல்கிறார்கள்) என்று கூறி இந்த உம்மத்தில் தோன்ற கூடிய ஈஸா முழுக்க முழுக்க வேறொருவரே என்பதை இன்னும் உறுதியாக அறிவிப்பாளர் எடுத்து சொல்கிறார். புகாரி 3440 ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.
ஹஸ்ரத் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் எந்த அடையாளத்தை இந்த உம்மத்தில் தோன்றவிருக்கும் ஈஸாவுக்கு கூறினார்களோ அதே அடையாளத்தை கொண்டவர்கள்தான் ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் ஆவார்கள். ஆக இந்த உம்மத்தில் வருகை தரவிருந்த ஈஸா வந்துவிட்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்...
இங்கு ஒரு கேள்வி எழலாம். அதாவது இந்த உம்மத்தில் அந்த ஈஸா தோன்ற மாட்டார் என்றால் இந்த உம்மத்தில் தோன்ற கூடிய ஒரு நபரை ஏன் ரசூல் (ஸல்) அவர்கள் ஈஸா என்று அழைக்க வேண்டும். வருபவரின் உண்மையான் பெயரைக் கொண்டு முன்னறிவித்திருக்கலாமே...இதிலிருந்தே தெரியவில்லையா வரக்கூடிய ஈஸா ஒரே ஈஸாதான். அவர் பனூ இஸ்ரவேலருக்கு வந்தவரே. என்ற ஒரு சந்தேகமும், கேள்வியும் எழலாம்.
இதற்கான பதில்:
ஹஸ்ரத் ரசூல் (ஸல்) அவர்கள் ஒரு விஷயத்தை கூறுகின்றார்கள் என்றால் அதில் பல்வேறு அர்த்தங்கள், நுட்பங்கள் அடங்கி இருக்கும். அதில் ஒன்றுதான் ஈஸா வின் இரண்டாம் வருகை ஆகும். ஹஸ்ரத் ரசூல் (ஸல்) அவர்கள் இந்த உம்மத்தில் வரக்கூடிய ஒருவரை ஈஸா என்று அழைப்பதின் காரணம், மூஸா (அலை) அவர்களுக்கு வழங்கிய வேதத்தை யூதர்கள் கைவைத்து தாந்தோணி தனமான, சுய நலத்தை கருத்தில் கொண்டு அவர்கள் தங்களது சுய நலத்திற்கேற்ப மக்களுக்கு விளக்கத்தை கொடுத்து வந்து மக்களை வழி கேட்டின் பக்கம் அழைத்து சென்றனர். அந்த சமயம் அல்லாஹ் அவர்களை நேர்வழியின் பக்கம் கொண்டு வருவதற்க்காக மூஸா (அலை) அவர்களுக்கு பிறகு சுமார் 1300 வருடங்களுக்கு பிறகு தன் புறமிருந்து ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்களை அனுப்பினான். ஆனால் அந்த யூத குணம் கொண்ட மக்களில் சிலர் அவர்களை ஏற்றனர். சிலர் அவர்களை கொல்ல முயன்றனர். இறு
தியில் தோல்வியே சந்தித்தனர்.
ஹஸ்ரத் மூஸா (அலை) அவர்கள் எவ்வாறு எனுப்பப்பட்டார்களோ அவ்வாறே ஹஸ்ரத் முஹம்மது நபி (ஸல்) அவர்களும் அனுப்பப்பட்டுள்ளார்கள் என்பதை அல்லாஹ் குர்ஆனில் கூறி காட்டுகிறான்:
"நிச்சயமாக ஃபிர்அவ்னிடம் தூதரை நாம் அனுப்பியது போல், உங்களிடமும், உங்கள் மீது சாட்சி சொல்பவராகிய தூதரை நாம் அனுப்பி வைத்தோம்." (73:16)
இந்த வசனத்தின் அடிப்படையில் அல்லாஹ் ஹஸ்ரத் முஹம்மது நபி (ஸல்) அவர்களை வேதம் வழங்கி அனுப்பினான். ஆனால் சில காலங்கள் பிறகு எவ்வாறு மூஸா (அலை) அவர்களுக்கு பிறகு யூதர்கள் வழி தவறி சென்று விட்டார்களோ அவ்வாறு யூத குணத்தை கொண்ட மக்கள் இந்த உம்மத்திலும் தோன்றுவார்கள், அவர்கள் முழுக்க முழுக்க யூதர்களை போன்று அதாவது யூத குணத்தை கொண்டவர்களாக இருப்பர், வழி தவறி சென்றுவிடுவார்கள் என்று முஹம்மது நபி (ஸல்) அவர்கள் முன்னறிவித்துள்ளார்கள்.
"3456. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார் ”உங்களுக்கு முன்னிருந்த (யூதர்கள் மற்று கிறிஸ்த)வர்களின் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்கள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள்“ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள், “இறைத்தூதர் அவர்களே! (நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்?“ என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள், “வேறெவரை?“ என்று பதிலளித்தார்கள்."
(ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 60. நபிமார்களின் செய்திகள்)
இவ்வாறு யூத குணத்தை கொண்ட மக்களுக்கு ஒரு ஈஸாவாக அல்லாஹ் எவ்வாறு அன்னாருக்கு (ஸல்) முன்பு யூதர்களுக்கு ஈஸா (அலை) அவர்களை அனுப்பினானோ அவ்வாறு இந்த உம்மத்தில் அனுப்பினான். எவ்வாறு மூஸா அலை அவர்களுக்கு பிறகு சுமார் 1300 வருடங்களுக்கு பிறகு அந்த ஈஸா அந்த யூதர்களுக்கு வந்தார்களோ அவ்வாறே ஹஸ்ரத் முஹம்மத் நபி (ஸல்) அவர்களுக்கு சுமார் 1300 வருடங்களுக்கு பிறகு ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்களை யூத குணம் கொண்ட மக்களுக்கு ஈஸா குணம் கொண்டவர்களாக அனுப்பினான். ஈஸாவின் பணியை செய்தார். இன்றும் அவர்களை பின்பற்றி வருகின்றவர்கள் செய்து வருகின்றனர். ஃபல்ஹம்துலில்லாஹ் அலா தாலிக்...
ஆகவே தனது உம்மத்திலும் யூதர்கள் தோன்றுவார்கள் என்று கூறிய ரசூல் (ஸல்) அவர்கள் அந்த யூத மக்களுக்கும் ஒரு ஈஸா தோன்றுவார் என்ற கருத்தில் சொன்ன விஷயம்தான் ஹதீஸ்களில் இடம்பெற்றுள்ளன.
கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None