ஹழ்ரத்  நபி (ஸல்) அவர்களின் வாழ்விலிருந்து ஒரு சில முன்மாதிரிகள்

அண்ணல் நபி பெருமானார் (ஸல்) அவர்கள் தோன்றிய காலத்தில் அரபு நாடு உலகின் ஏனைய நாடுகளோடு அவ்வளவாகத் தொடர்பு கொண்டிருக்கவில்லை. வரலாற்று நிகழ்ச்சிகலைப் பதிவு செய்து வைக்கும் பழக்கமும் அந்நாட்டில் வளர்ச்சி பெற்றிக்கவில்லை.
            என்றாலும் அண்ணல் நபி பெருமானார் (ஸல்) அவர்களை பற்றிய ஒவ்வொரு விஷயமும் பதிவு செய்து வைக்கப் பட்டுள்ளது. நபி பெருமானார் அவர்களின் நல்லியல்புகளும் நற்செயல்களும் ஒரு மனிதன் அவைப்பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள கூடிய அளவிலே, மிகத் தெளிவாகப் பதிவு செய்யப் பட்டிருக்கின்றன.
      நபி பெருமானாரின் வரலாறு அவர்களுடைய வாழ்வின் ஒவ்வொரு பகுதியும் மிக விளக்கமாக விபரிக்கப்பட்டிருக்கிறது. இறைவனின் வார்த்தைகளைப் பெற்ற நேரத்திலிருந்து அவர்களின் ஒவ்வொரு சொல்லும் அசைவும் மிக நுட்பமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது
ஹழ்ரத் நபி (ஸல்) அவர்கள் ஒரு மனித பிறவியாகவே இருந்தார்கள். ஒரு மனிதனுக்கு இருக்கக்கூடிய இயல்புகளைத் தவிர வேறு வகையான சக்தியோ வல்லமையோ தமக்கு இருப்பதாக நபி (ஸல்) அவர்கள் சொன்னதில்லை. இதன் காரணமாகவே அல்லாஹ் தஆலா அன்னாரை குறிப்பிட்டு " லகத் காண லகும் பி ரசூலுல்லாஹி உஸ்வதுன் ஹசனஹ் " ஹழ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முழு உலகத்திலுள்ள மக்களுக்கு ஓர் அழகிய முன் மாதிரியாக வழி காட்டியாக இருக்கின்றார்கள். என்று கூறியுள்ளான்.
 அவர்களின் குண ஒழுக்கங்கள் எவ்வாறு இருந்தன என்று ஒரு சஹாபி ஹசரத் ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டபோது "நபி (ஸல்) அவர்களின் குண ஒழுக்கங்கள் திருக் குர் ஆனாக இருந்தது என்ற கருத்து நிறைந்த சுருக்கமான விடையை அளித்தார்கள்.
            இதன் கருத்தாவது எத்தன்மையான குணத்தையும் ஒழுக்கத்தையும் கைக்கொள்ள வேண்டும் என்று திருக்குர்ஆனில் அல்லாஹ் கட்டளை இட்டிருக்கின்றானோ, அவைகளெல்லாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்கையில் பூரணமாய் அமைய பெற்றிருந்தன. மனித வாழ்கையை ஒழுங்குபடுத்தி மனிதனை மேலான நிலைக்கு கொன்று செல்வதற்காக, அல்லாஹ் திருக்குர்ஆனில் அருளியிருக்கும் சகல போதனைகளையும் நபி (ஸல்) அவர்கள் தங்கள் அன்றாட வாழ்கையில் செயல்படுத்தி காட்டியிருக்கின்றார்கள். அதனாலேயே போதனை என்ற முறையில் திருக்குர்ஆணும் , நடைமுறையில் பெருமானார் (ஸல்) அவர்களின் வாழ்கையும் முஸ்லிம்களுக்கு வழி காட்டியாய் அமைந்திருக்கின்றன.
ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் எக்காரியத்தையும் அல்லாஹ்வின் கட்டளைப்படியும் அவனது விருப்பத்தை நாடியுமே செய்வார்கள். அவர்கள் உட்க்காருவது, எழுந்திருப்பது, உண்பது, உடுத்துவது, உறங்குவது, விழித்திருப்பது,வணக்கம் செய்வது, இளைப்பாறுவது, சிநேகிப்பது, பகைப்பது, போர்புரிவது, சமாதானம் செய்வது ஆகிய அனைத்தையும் அல்லாஹ்வின் நாட்டபடியும் அவனது திருப்தியை நாடியுமே செய்து வந்தார்கள்.
நல்லொழுக்கமும் நற்குணமும் நபி (ஸல்) அவர்களிடம் நிறைவு பெற்றிருந்தன. மன தூய்மையும், தாழ்மையும், கண்ணியமும், நாணமும், முகமலர்ச்சியும், சுயநல மறுப்பும், நீதியும், வீரமும், சத்தியமும், இரக்கமும், பொறுமையும், உலகத்தோடு இருந்தும் உலகத்தில் பற்றில்லாத எளிய வாழ்கையும், அல்லாஹ்வின் மீது உறுதியான நம்பிக்கையும், அவன்மீது ஆழ்ந்த பக்தியும் ஆகிய குண நலன்கள் அனைத்தும் பெருமானார் (ஸல்) அவர்களிடம் ஒருங்கே நிறையப் பெற்றிருந்தன.
            உன்னத பதவியை பெருமானார் (ஸல்) அவர்கள் அடைந்திருந்தும் அவர்கள் தங்களை மற்றவர்களை விட மேலாகக் கருதியதே இல்லை. அவர்கள் நானும் ஒரு அடிமை, அடிமையை போல சாப்பிடுகிறேன். அடிமையை போல உட்காருகிறேன் என்று சொல்வார்கள். மக்காவிலிருக்கும்போது எத்தன்மையான ஆடம்பரமற்ற சாதாரண வாழ்கையை அவர்கள் வாழ்ந்து வந்தார்கள். அதே வாழ்கையைத்தான் அவர்கள் அரசுரிமை பெற்று சகல சவுகரியங்களையும் அடைய பெற்ற காலத்திலும் வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் இட்ட வேலையை சிரமேற்கொண்டு செய்வதற்கு எண்ணிறந்தவர்கள் காத்திருந்தும், எல்லா வேலையையும் அவர்களே செய்து வந்தார்கள்.
            எந்த வேலையையும் அவர்கள் கேவலமாக கருதியதில்லை. கடைகளுக்கு அவர்களே சென்று சாமான்களை வாங்கி வருவார்கள். ஒரு சமயம் பெருமானார் (ஸல்) அவர்கள் கடை வீதிக்கு சென்று ஆடைகள் வாங்கினார்கள். அச்சமயம் அங்கு அவர்களுடனிருந்த அபூ ஹுரைரா (ரலி)  அவர்கள் அதை வீட்டிற்கு கொண்டு போவதாக எடுக்க முயன்ற போது, பெருமானார் (ஸல்) அவர்கள் அவர்களை தடுத்து "இந்த வேலையை இதன் சொந்தகாரர் செய்யவேண்டும். நீர் என்னைவிட தாழ்ந்தவர் என்று நான் எவ்வாறு கருத முடியும்? என்று சொல்லித் தாங்களே அதை வீட்டிற்கு எடுத்து வந்தார்கள்.
 வீட்டு வேலைகளுக்காகவும் மற்றவர்களுக்கு தொந்தரவு கொடுப்பதில்லை. வீட்டிலுள்ள ஆட்டின் பாலை அவர்களே கறந்து கொள்வார்கள். ஒட்டகத்தை கட்டி அதற்கு புல் முதலியன போட்டு, அவர்களே கவனித்து கொள்வார்கள். ஒரு சமயம் அனஸ் (ரலி) அவர்கள் பெருமானார் (ஸல்)  அவர்களிடம் சென்ற போது , அவர்கள் ஒட்டகத்திற்கு என்னை தேய்த்து கொண்டிருப்பதை கண்டார்கள். அவர்கள் வீட்டைப் பெருக்குவதையும் கேவலமாக கருதாமல் அவர்களே பெருக்கிக்கொள்வார்கள்.
            வீட்டு வேலைகளிலும் பெண்களுக்கு உதவி செய்வார்கள். கிழிந்த ஆடைகளை அவர்களே தைத்துக் கொள்வார்கள். காலனியை அவர்களே செப்பனிட்டுக் கொள்வார்கள். மற்றவர்கள் வேளை செய்து கொண்டிருக்கும்போது பெருமானார் (ஸல்) அவர்கள் சும்மா இருக்க பிரிய பட மாட்டார்கள். ஒரு தடவை நபி (ஸல்) அவர்களும் சஹாபாக்களும் பிரயாணம் சென்றார்கள். வழி மத்தியில் தங்கி சமையல் செய்வதற்கான ஏற்ப்பாடு செய்யப்பட்டது. சஹாபாக்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலையை செய்வதை ஏற்றுக் கொண்டார்கள். அப்போது பெருமானார் (ஸல்)  அவர்கள் " நான் விறகு சேகரித்து வருகிறேன்" என்று சொல்ல சஹாபாக்கள் , யா ரசூலுல்லாஹ் (ஸல்) இவ்வேலைகளை அடியார்களாகிய  நாங்கள் செய்து கொள்வோம். என்று சொன்னார்கள். அப்போது ரசூலுல்லாஹ் (ஸல்)  அவர்கள் உங்கள் எல்லோரிலும் என்னை மேலானவனாகக் கருத எனக்கு பிரியமில்லை. தன்னுடன் இருக்கிற பிரயாணிகளில் தன்னை மேலானவனாக ஆக்கிக்கொள்கிற அடியானை அல்லாஹ் பிரியப்பட மாட்டான். என்று கூறிவிட்டு அவர்களே சென்று விறகு கொண்டு வந்தார்கள்.
            நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நபியாக இருந்தும் அரசர்களுக்கெல்லாம் மேலான அரசராயிருந்தும் , ஒரு தொழிலையும் அவர்கள் கேவலமாக கருதியதில்லை. மனிதனுடைய மேன்மையும், தாழ்மையும் தொழிலினால் உண்டாவதில்லை என்றும் அவனுடைய சத்தியத்தினாலும் , ஒழுக்கத்தினாலுமே உண்டாவதென்றும் அவர்கள் நடைமுறையில் காட்டினார்கள்.
            ஹழ்ரத் நபி (ஸல்) அவர்கள் எப்போதும் வேளை செய்வதை கேவலமாக கருதியதில்லை. அதே சமையத்தில் பிறருக்காகவும் வேளை செய்து வந்தார்கள்.
 ஒரு சமயம் கப்பாப் இப்னு அறத்த (ரலி) எனும் சஹாபியானவர் , யுத்தத்திற்காக மதீனாவை விட்டு அயல் நாடு சென்றிருந்தார். அவரின் மனைவியும் , பிள்ளையும் ஓர் ஆட்டின் பாலைக் கொண்டே வாழ்வினை ஓட்டவேண்டியதிருந்தது. ஆனால் பால் கரப்பதற்கோ வீட்டில் ஒருவரும் இல்லை.அதனால் அவ்வம்மையார் அந்த ஆட்டைத் தமது பிள்ளையுடன் காலையிலும் , மாலையிலும் பெருமானார் (ஸல்)  அவர்களிடம் அனுப்பி வந்தார். யுத்தத்திற்குச் சென்ற சஹாபி திரும்பி வரும் வரையில் காலையிலும், மாலையிலும் பெருமானார் (ஸல்) அவர்களே பால் கறந்து கொடுத்து வந்தார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வரலாறு எண்ணிலடங்கா சம்பவங்களால் நிரம்பி இருக்கிறது. அண்ணல் மாநபியின் பழக்க வழக்கங்கள் மிக இனியவையாக இருந்தது. யாருக்கும் இறங்கும் உள்ளமும் பிறரின் துயர் கண்டு துடிதுடிக்கும் மனமும் அவர்களுக்கு இருந்தது. நபி பெருமானாரின் வாழ்வினை நாம் ஆழ்ந்து ஆராய்ந்தோம் என்றால் இவ்வுயரிய பண்புகள் அவர்களின் உதிரத்திலே ஊறியவையோ என்று நாம் வியப்படைவோம்.
அன்னை கதிஜா நாயகி (ரலி) அவர்கள் நபி பெருமானாரின் நல் இயல்புகளை பற்றிக் கூறியிருப்பதை பரவலாக யாவரும் அறிவர். அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் ஒரு முறை நபி பெருமானார் வீட்டிலிருக்கும்போது என்ன செய்து கொண்டிருப்பார்கள் என்று கேட்கப்பட்ட போது அவர்கள், நபி (ஸல்) அவர்கள் வீட்டு வேளைகளில் தமக்கு உதவுவார்கள் என்றும் , தம்முடைய கிழிந்த ஆடைகளை தாமே தைத்துக் கொள்வார்கள் என்றும் தம்முடைய காலனியை தாமே செப்பனிட்டுக் கொள்வார்கள் என்றும் கூறியுள்ளார்கள்.
இது மட்டுமல்ல எம்பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எப்போதும் யாருடனும் அன்போடும் நேசத்துடனும் நடந்துக் கொள்ளும் நல்இயல்பை பெற்றவர்கள் அன்னாயகி அறிவித்துள்ளார்கள்.
அன்னார் மனைவிமார்களுடனும், குழந்தைகளுடனும், பகைவர்களுடனும், ஏழைகளுடனும், அடிமைகளுடனும் ஆகிய அனைவர்களுடனும் நேசம் பாசம் காட்டி  அன்பான முறையில் பழகி வந்தார்கள்.
பெருமானார் (ஸல்) அவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் யூதர்கள் பலவித இடையூறு செய்து வந்தும் அவர்களையும் அன்பாக நடத்தி வந்தார்கள். யூதர்களில் யாராவது வியாதிப் பட்டால் பெருமானார் (ஸல்) அவர்களே நேரில் போய் பார்த்து வருவார்கள்
            ஒரு சமயம் அவர்கள் ஓரிடத்தில் உட்காந்திருக்கும் போது அவ்வழியாக ஒரு யூதனுடைய சடலத்தை கொண்டு போவதை கண்டு பெருமானார் (ஸல்) அவர்கள் எழுந்து நின்றார்கள். அப்போது பக்கத்தில் இருந்தவர்கள் அன்னாரிடம் இது யூதனுடைய சடலம் என்று சொல்ல அவர்கள் அது ஒரு ரூஹை ஆத்மாவை உடையதல்லவா? என்று சொன்னார்கள். நஜ்ரான் மகாணத்திலுள்ள கிறிஸ்துவர்கள் வந்த போது , அவர்கள் பிற மதத்தை சார்ந்தவர்களாக இருந்தும் அவர்களை பள்ளிவாயிலில் தங்க வைத்ததோடு நில்லாமல் அவர்கள் வணக்கத்தையும் அங்கு நடத்துவதற்கு இடம் கொடுத்தார்கள். அவர்களுக்குப் போதுமான உபசாரமும் செய்தார்கள்.
            அல்லாஹ் அல்லாஹ் ஹழ்ரத் எம்பெருமானார் நபி (ஸல்) அவர்கள் தமது எதிரிகளை அன்போடு உபசரித்தது மட்டுமல்லாமல் அவர்களுக்கு தங்களது வழிபாட்டை நடத்துவதற்க்காக பள்ளிவாயிளிலும் இடம் கொடுத்து மனித குலத்திற்கு அன்பின் அழகிய  முன்மாதிரியை காட்டி தந்திருக்க, இன்றைய ஆளிம்களோ அந்தோ பரிதாபம் அவர்கள் தமது சமுதாய மக்களையே வெறுப்புடன் கண்டது மட்டுமல்லாமல் அல்லாஹ்வின் ஆலயத்திற்குள் நுழைவதிலிருந்து தடுக்கின்றார்கள். யா அல்லாஹ் நீ இவ்வாறான மக்களுக்கு நேர்வழியை காட்டுவாயாக. ஆமீன்.
            ஹழ்ரத் நபி (ஸல்) பகைவர்களுடன் மட்டுமல்ல ஏழைகளுடனும் மிக அன்பான முறையில் நேச பாசத்துடன் பழகி வந்தார்கள்.
            ஒரு சமயம் ஒரு ஏழையானவர் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அவரின் முகமோ மக்களின் பார்வையில் அருவருப்பாக இருந்தது. அந்த சமயத்தில் ஹழ்ரத் நபி (ஸல்) அவர்கள் பின்புறமாக வந்து அவரின் கண்களை பொத்திக் கொண்டு யார் என்று வினவவே, அந்த நபர் என்னுடன் இவ்வாறு பழகுவது ஹழ்ரத் நபி (ஸல்) அவர்களை தவிர வேறு யாரகத்தான்  இருக்க முடியும் என்று நினைத்துக் கொண்டு  அன்னாரின் கையினை தடவிக் நபி பெருமானர்தான் என்று அறிந்து கொண்டு அவரும் அன்னாரை கட்டி தழுவினார்கள்.
 சுப்ஹானல்லாஹ்....கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் ஏழை மக்களிடம் இந்த அளவுக்கு பழகினார்களா! என்பதை நாம் படிக்கும்போதோ, கேட்கும்போதோ நமக்கு மெய்சிலிர்த்து விடுகிறது. இவ்வாறு எம்பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பலதரப்பட்ட மக்களிடம் எந்தவொரு பாகுமாடுமின்றி பாசத்தோடு தமது அன்பை பரிமாறி வந்திருக்கிறார்கள். ஏன் உயிர்பிராணிகள் அனைத்தின் மீதும் அன்னாருக்கு பூரணமான அன்பு இருந்து வந்தது.
ஒரு சமயம் சஹாபி ஒருவர் பறவைக் குஞ்சு ஒன்றை தம்முடைய ஆடையில் மறைத்து வைத்துக் கொண்டு அவர்களின் சமூகத்தில் வர உடனே அதை அறிந்த நபி பெருமானார் (ஸல்) அவர்கள் அதை கொன்டு போய் முன்னிருந்த இடத்தில் விட்டு வரும்படி கட்டளையிட்டார்கள். ஒரு நாள் அவர்கள் தெரு வழியாக போய்கொண்டிருக்கும்போது பசியினால் வயிறு ஒட்டியிருந்த ஒரு ஒட்டகத்தை கண்டு, கருணை காட்டியவாறு " இந்த வாயில்லாப் பிராணிகள் விஷயத்தில் அல்லாஹ்வுக்கு பயப்படுங்கள். என்று கூறினார்கள். ஆக ரஹ்மத்துல் லில் ஆலமீன் (ஸல்) அவர்களின் அன்பு உயிர் பிராணிகள் அனைத்தின் மீதும் பரவியிருந்தது. சுருங்கக் கூறின் " நாம் உம்மை சர்வ உலகங்களுக்கும் கருணையாக அனுப்பி இருக்கிரோமேயன்றி வேறல்ல" என்று பெருமானார் (ஸல்) அவர்களை நோக்கி அல்லாஹ் கூறியிருப்பதற்கு இலக்காகவே அவர்களின் வாழ்கையும் இருந்தது.
நபி பெருமானார் (ஸல்) அவர்கள் மிகுந்த அன்பும் இரக்கமும் உள்ளவர்களாயிருந்தும் நீதி வழங்குவதில் சிறிதும் பாரபக்ஷம் காட்டாதிருந்தார்கள்.
பெருமானார் (ஸல்) அவர்களின் குமாரத்தியான பாத்திமா (ரலி) அவர்களின் மீது விசேஷ அன்பு வைத்திருந்தார்கள். பாத்திமா (ரலி) அவர்கள் வீட்டில் அம்மி அரைத்து வந்திருந்ததாலும்  , தண்ணீர் சுமந்து வந்திருந்ததாலும் அவர்கள் கையிலும், சரீரத்திலும் தளும்புகள் உண்டாயிருந்தன. பாத்திமா (ரலி) அதிக வேலையினால் கஷ்டப்பட்டு கொண்டிருந்தார்கள். அச்சமயம் ஒரு யுத்தத்திலிருந்து அடிமைகள் கொண்டு வரப்பட்டதாக கேள்விப்பட்டு பெருமானார் (ஸல்) அவர்களிடம் சென்று வீட்டு வேலைக்காக ஒரு பெண் அடிமை கொடுக்க வேண்டுமென்று கேட்டார்கள். பாத்திமா (ரலி) அவர்களின் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தும் உண்மையில் அவர்கள் மிகுந்த கஷ்டப்படுகிறார்கள் என்று தெரிந்தும், பெருமானார் (ஸல்) அவர்கள் பாத்திமா (ரலி) அவர்களுக்கு என்ன விடை கூறினார்கள் என்று கேட்டால், பத்ர் யுத்தத்தில் உயிர் துறந்தவர்களின் அனாதைக் குழந்தைகளுக்கு அடிமைகளைக் கொடுக்க வேண்டியதிருக்கிறது என்று சொல்லிவிட்டார்கள்.
நபி பெருமானார் (ஸல் அவர்கள்  எளிய  வாழ்க்கையே  வாழ்ந்திருந்தார்கள்.  தனக்காக   ஒன்றும் வைத்திருந்ததில்லை.  ஒரு சமயம் பெருமானார் (ஸல்) அவர்களிடம் நான்கு ஒட்டகங்களின் சுமையில் தானியங்கள் வந்தன. அவர்களின் ஊழியத்திலிருந்து பிலால் (ரலி) அவர்கள் அத்தானியங்களை கடை வீதியில் கொண்டு போய் விற்றார்கள்.விற்று முதல் நாணயத்தில் ஒரு பாகத்தை ஒரு யூதனுடைய கடனுக்காகக் கொடுத்து விட்டு பெருமானார் (ஸல்) அவர்களிடம் நடந்த விபரத்தை கூறினார்கள்.
            அப்பணத்தில் மிச்சமுண்டா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க, ஹழ்ரத் பிலால் (ரலி) அவர்கள் , கொஞ்சம் மிச்சம் இருக்கிறது என்று சொன்னார்கள். அப்போது எம்பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "கொஞ்சாமாவது மீதியிருக்கும் வரை நான் வீட்டிற்கு போக முடியாது' என்று கூறவே, ஹழ்ரத் பிலால் (ரலி) அவர்கள் நான் என்ன செய்வேன்? யாசகம் வாங்குவதற்கு யாரும் இல்லையே!. என்று சொன்னார்கள். அன்றிரவு முழுவதும் நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலிலேயே இருந்து கொண்டார்கள். மறுநாள் பிலால் (ரலி) அவர்கள் வந்து யா ரசூலுல்லாஹ்! அல்லாஹ் உங்களுக்கு இலேசாக்கி விட்டான். அதாவது மீதியிருந்த பொருளைப் பங்கிட்டு விட்டேன் என்று சொல்ல கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி விட்டு வீட்டிற்கு சென்றார்கள். ஆக எம்பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனெக்கென ஒன்றும் வைப்பதில்லை. அதுமட்டுமள்ள ஏதாவது  ஒரு பொருள் அன்னாருக்கு அன்பளிப்பாக கிடைத்தால் கூட அதனை உடனே பிறருக்கு தானம் செய்து விடுவார்கள்..
            சகோதர! சகோதரிகளே! இது மட்டுமல்ல, பரந்த மனதை கொண்டிருந்த ஹழ்ரத்  நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் எவரேனும் எதையாவது ஒன்று கேட்டாலும் அன்னார் (ஸல்) கேட்பவர்களுக்கு இல்லையென்று சொல்லாமல் இருப்பதை உடனே கொடுத்து விடுவார்கள்.
            ஒரு சமயம் பெருமானார் (ஸல்) அவர்களுக்கு மேலாடை இல்லாமல் இருப்பதை அறிந்து ஒரு பெண்ணானவள் ஒரு மேலாடையை கொண்டு வந்து கொடுக்க அவர்கள் அதை அணிந்து கொண்டார்கள். சிறிது நேரத்திற்கு பிறகு ஒரு சஹாபி அவர்களிடம் வந்து இந்த மேலாடை நன்றாய் இருக்கிறதே, என்று சொல்லவும் அவர்கள் உடனே அதை எடுத்து அந்த சஹாபிக்கு கொடுத்து விட்டார்கள். அந்த சஹாபி தனக்கு அந்த ஆடை வேண்டுமென்று கேட்கவில்லை, நன்றாய் இருக்கிறது என்றுதான் சொன்னார்கள் உடனே அவருக்கு அதில் பிரியமிருக்கிறது என்று தெரிந்து அவருக்கு கொடுத்து விட்டார்கள்.
            அவர் அந்த மேலாடையை வாங்கிக் கொன்டு வெளியில் வந்ததும் ஜனங்கள் அவரிடம் ,"ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்களுக்கு மேலாடை அவசியம் தேவை இருக்கிறது என்பதும் அதையும் யாராவது கேட்டால் அவர்கள் மறுப்பதில்லை என்பதும் உமக்கு தெரியுமே!" என்று சொல்லி கண்டித்தார்கள். அப்போது அவர் "ஆம்! நான் பரக்கத்திற்காக வாங்கியிருக்கிறேன். இந்த மேலாடையினாலேயே என்னைப் பொதிந்து அடக்கம் செய்ய வேண்டுமென்பதற்க்காகத்தான் வாங்கினேன்" என்று சொன்னார். அவர் நாட்டபடியே அவர் மரணமானப்பின் அந்த மேலாடையை கொண்டே அவரை மூடி அடக்கம் செய்யப்பட்டது.
            எம்பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) தங்களுடைய தேவையை விட பிறருடைய தேவையை பூர்த்தி செய்வதையே பிரதானமாக கருதினார்கள். அது அவர்களுடைய இயற்கை குனமாயிருந்தது.
பெருமானார் (ஸல்) அவர்களின்  வீட்டு  அடுப்பு பல  நாட்கள்  புகையாதிருந்தது.  அவர்களும், அவர்களின்  குடும்பத்தினரும்  பெரீச்சப்  பழங்களை  உண்டே  பல  நாட்களை களித்திருந்தனர்.
            ஒரு சமயம் பெருமானார் (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து பசியுடனிருப்பதாய் சொல்ல தங்கள் மனைவிகளில் ஒருவர் வீட்டிலிருந்து ஆகாரம் கொண்டுவரும்படி  ஒருவரை அனுப்பினார்கள். அங்கு தண்ணீரை தவிர வேறொன்றுமில்லை என்ற பதிலே வந்தது. அதன் பின் பற்ற மனைவிமார்களின் வீடுகளுக்கும் அவரை அனுப்ப அங்கிருந்தும் முன் விடையே வந்தது.
            ஆக இவ்வாறு பேரீச்ச பழமும் தண்ணீரும் மட்டுமே அநேக நாட்கள் அவர்களுடைய உணவாக இருந்து வந்தன. குளிர்ந்த தண்ணீர் அவர்களுக்கு மிக பிரியமானது. சில சமயங்களில் சுத்தமான பாலையும் அருந்துவார்கள். சில சமயங்களில் பாலுடன் தண்ணீரையும் கலந்து சாப்பிடுவார்கள். தண்ணீரைச் சிறுக சிறுகவே பருகுவார்கள். வயிறு நிறைந்திருப்பதை விட பட்டினியாய் இருப்பதே அவர்கள் மிகவும் பிரியப்படுவார்கள்.
            ஒரு சமயம் அனஸ் (ரலி) அவர்கள் எம்பெருமானார் காதமுன் நபிய்யீன் (ஸல்) அவர்களை பார்க்கும்போது இடுப்பில் வேட்டியை இறுகக் கட்டி கொண்டிருப்பதை கண்டு காரணத்தை கேட்க, காதமுன் நபிய்யீன் (ஸல்) அவர்கள் பக்கத்திலிருந்தவர்கள் 'பசியின் காரணமாக ' என்று சொன்னார்கள். காதமுன் நபிய்யீன் (ஸல்) அவர்கள் பட்டினியாய் இருப்பதை பற்றி யாரவது கேட்டால் " உலகத்தோடு எனெக்கென்ன சம்பந்தமிருக்கிறது? எனக்கு முன் வந்த நபிமார்களாகிய என் சகோதரர்கள் என்னை விட அதிக கஷ்டங்களை சகித்து அதிலேயே காலம் களித்திருக்கிரார்களே!" என்று சொல்லுவார்கள். பெருமானார் (ஸல்) அவர்கள் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக சாப்பிட்டிருக்க மாட்டார்கள். இரண்டு வேளை செர்ந்தாற்போலும் சாப்பிட்டிருப்பதில்லை.
எம்பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இவ்வாறான் சூழ்நிலை இருந்தும் கூட அன்னாரின் வீட்டிற்கு வரும் விருந்தாளிகளுக்கு விருந்தோம்பல் செய்வதில் எந்த குறையையும் வைப்பதில்லை. பெருமானார் (ஸல்) அவர்களிடம் விருந்தினர்கள் வந்தால் அவர்களுக்கு மிகுந்த உபசாரம் செய்வார்கள். அவர்களுடைய தாராளத் தன்மைக்கு முஸ்லிம்கள் மட்டும் பாத்திரவான்கள் என்பதில்லை முஸ்லிம் அல்லாதவர்கள் கூட அவர்களிடம் விருந்தினராய் வருவார்கள். வித்தியாசம் பாராட்டாது அவர்களுக்கும் உபசாரம் செய்வார்கள். ஓர் இரவு முஸ்லிமல்லாத ஒருவர் விருந்தாளியாய் வர அவர்கள் அவருக்கு ஒன்றன்பின் ஒன்றாய் ஏழு ஆட்டின் பாலைக் கரந்து கொடுக்க அவர் முழுவதையும் பருகி விட்டார். அன்றிரவு வீட்டிலுள்ள எல்லோரும் பாட்டினியாய் இருக்க நேரிட்டது. பெருமானார் (ஸல்) அவர்களின் சுயநல மறுப்பையும், அவர்களின் தாராள சிந்தையும், அம்மனிதர் கண்டு காலையில் தானே முஸ்லிமாகி விட்டார். 
சுவையான உணவுகளை நபி பெருமானார் எப்போதாகிலும் உண்டிருந்தாலும் வயிறு நிறைய உண்டதில்லை தங்களின் சொந்த வேலையை கூட குறைத்துக் கொண்டார்கள்.
மக்கா மாநகரில் வெற்றி கொண்ட நாளில் நிர்வாக பொறுப்புகளை நிறைவேற்றும் பணியில் ஈடுபட்டிருந்த வேளையில் நபி பெருமானார் (ஸல்) அவர்களுக்கு பசி ஏற்ப்பட்டது. தமது உறவினரான உம்முஹானி என்ற பெண்மணியின் வீட்டிற்கு நபி (ஸல்) அவர்கள் சென்றார்கள். அந்த பெண்மணியோ நபி (ஸல்) அவர்களின் வருகையால் பெருமகிழ்ச்சி கொண்டாலும் அம்மாநபியை உபசரிக்க காய்ந்து போன ரொட்டித் துண்டுகளை தவிர வேறொன்றும் தன்னிடம் இல்லாததை எண்ணி பெரிதும் வருந்தினார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்களோ அதுவே தமக்கு போதுமென்று  கூறி மிகுந்த திருப்தியோடு அவற்றை உண்டார்கள்
அல்லாஹ் அல்லாஹ் என்ன ஒரு எளிமையான வாழ்கை!! ஹழ்ரத் நபி (ஸல்) அவர்களால் சுவையான ருசியான உணவை உண்டிருக்க முடியாதா? இல்லை அவர்களால் வயிறார உணவு உன்றிருக்கவும்தான் முடியாதா? மக்களின் அதிபதி  என்ற நிலையில் நபி பெருமானார் நினைத்திருந்தால் தன் அதிகாரத்தை பயன்படுத்தி அறுசுவை உணவு உண்டிருக்கலாம் .ஆனால் எம்பெருமானார் நபிகள் நாயகம் , கதமுல் முர்சலீன், பகருல் அன்பியா ஹழ்ரத் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்கள்  அவ்வாறு செய்யவில்லை. மேலும் எளிமையான வாழ்கை வாழ்வதையே மிக அதிகமாக விருப்பபட்டார்கள்.
ஹழ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வணக்கமென்னும் இபாதத்தை பற்றி பார்ப்போமேயானால் அவர்களின் வாழ்க்கை முழுவதும் இபாதத்தாகவே இருந்தது. அன்னார் (ஸல்) அடிக்கடி குர் ஆண் ஓதிக் கொண்டே இருப்பார்கள். குர் ஆண் ஒதப் படுவதை கேட்டால் அழுவார்கள். உட்காரும்போதும், எழுந்திருக்கும்போதும் அல்லாஹ்வின் நாமத்தை உச்சரிப்பார்கள். தொழும்போது அவர்களின் மனம் தொழுகையிலேயே அல்லாஹ்வின் நினைவிலேயே உருகிவிடும். தாழ்மையுடனும் பூரண பக்தியுடனும் மன உர்க்கத்துடனுமே அவர்கள் தொழுவார்கள். ஜாமாத்தாக சேர்த்து தொழுகை நடத்தும்போது சுருக்கமான வசனங்களையே ஓதி தொழுகையை சீக்கிரம் முடித்து விடுவார்கள்.
ஜமாத்தாக சேர்ந்து தொழுகையை நடத்துபவர்கள் நீண்ட சூராக்களை ஓதி நெடுநேரம் தொழுவிப்பதை அவர்கள் கண்டித்து விளக்குவார்கள். ஒரு சமயம் ஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்கள் ஓரிடத்தில் சுப்ஹு தொழுகையில் இமாமத் செய்யும்பொழுது பெரிய சூராக்களை ஓதி தொழ வைத்தார்கள். இவ்விஷயத்தைப் பற்றி பெருமானார் (ஸல்) அவர்களிடம் ஒருவர் முறையிடவே அவர்களுக்கு கோபம் உண்டாயிற்று. அப்பொழுது அங்கிருந்தவர்களை நோக்கி ஜனங்களுக்கு வேருப்புண்டாகும்படி அநேகர் நடந்து கொள்கிறார்களே உங்களில் யாரவது இமாமத் செய்தால் தொழுகையை நடத்தினால் அதை சுருக்கமாக நடத்துங்கள், ஏனெனில் வயது முதிந்தவர்களும் , பலவீனர்களும் வேலையுள்ளவர்களுமாக பலதரப்பட்டவர்கள் தொழுவதற்கு வருவார்கள். என்று பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
 ஆனால் அவர்கள் தனித்து தொழும்போது நீண்ட சூராக்கள் ஓதி நெடுநேரம் தொழுவார்கள்இரவில் விழித்திருந்து நீண்ட நேரம் இறைவனை வழிபடும் பழக்கம் நபி (ஸல்)  அவர்களிடத்தில் இருந்தது. இதனால் அவர்களின் பாதங்கள் வீங்கி காணப்படுமாம்.
இத்தகைய தருணத்தில் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களை நொந்து கொண்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் "ஆயிஷாவே! இறைவன் தன்னுடைய அருளை என்மீது பொளிவதிலே மிகுந்த பெருந்தன்மை காட்டியுள்ளான். அதற்காக நான் அவனுடைய அடியார்களின் மிகுந்த நன்றியுள்ளவனாக இருக்க வேண்டாமா? என்று கூறி நம்மவர்களுக்கு நம்மீது அன்பு மழை பொலிகின்ற, அருளை பொழிகின்ற அந்த இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும் என்று கூறியது மட்டுமல்லாமல் அதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதையும் தமது நடைமுறை மூலமாக காட்டியுள்ளார்கள்.
உங்களில் சிறந்தவர் தமது குடும்பத்தவர்களோடு நன்றாக நடந்து கொள்பவறேயாகும்." என்று கூறிய நபி பெருமானார் (ஸல்) அதனை அற்புதமாக செயலிலும் காட்டியுள்ளார்கள்.
ஆரம்பகால முஸ்லிம்களில் சிலர் பொறுப்புகளை சரிவரச் செய்யாது எப்போதும் தொழுவதிலும் நோன்பிருப்பதிலும் காலத்தைக் களித்திருந்தனர். இதனை நபி (ஸல்) அவர்கள் பெரிதும் கண்டித்தவாறு இவ்வாறு கூறினார்கள் "உங்கள் அனைவரை பார்க்கிலும் இறைவனுக்கு நான் மிக மிக அஞ்சுகிறேன். நோன்பிருக்க வேண்டிய நேரத்தில் நோன்பிருக்கிறேன், உணவு உண்ண வேண்டிய நேரத்தில் உணவு உண்கிறேன். நான் தொழுகையை உரிய நேரத்தில் தொழுது எனது குடும்பத்தினருக்கு செய்ய வேண்டிய கடமைகளையும் நிறைவேற்றுகிறேன்" என்று நபி (ஸல்) அவர்கள் அத்தகையோர்களிடம் கூறி நீங்கள் ஒரு நற்செயல் செய்ய வேண்டுமென்றால் அதனை எவ்வாறு செய்ய வேண்டும், எப்போது செய்தால் அது நற்செயலாகும் என்பதை மிக அழகான முறையில் நமக்கு புரிய வைத்துள்ளார்கள்.
நபி பெருமானார் (ஸல்) அவர்கள் எப்போதும் சிரித்த முகத்துடனையே காணப்படுவார்கள். கடும் வேலைகளுக்கிடையேயும் நகைச் சுவை உணர்வு அவர்களிடம் காணப்பட்டிருந்தது. ஒரு முறை நபி பெருமானார் வீட்டில் இருந்தபோது அன்னை ஆயிஷா நாயகியை பார்க்க ஒரு மூதாட்டி வந்திருந்தார்கள். சந்தர்பத்தை பயன்படுத்தி அந்த மூதாட்டி தனது மறைவுக்கு பின் தன்னை சுவர்க்கத்திற்கு அனுப்ப இறைவனை வேண்டுமாறு நபி பெருமானாரிடம் வேண்டினார்கள். அதற்குப் நபி (ஸல்) அவர்கள் "சுவர்கத்தில் கிழவிகள் இருக்கமாட்டார்களே" என்று சிரித்து கொண்டே கூறினார்கள். இதை கேட்ட அந்த மூதாட்டி தன் விதியை நொந்து அழத்தொடங்கி விட்டார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் சுவர்கத்தில் வயது வித்தியாசம் கிடையாது" என்று கூறி அவர்களை தேற்றி அனுப்பி வைத்தார்கள்.
ஹழ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெண்களின் தகுதியையும் சமுதாயத்தில் உயர்த்தி வைத்துள்ளார்கள். அன்றைய காலத்தில் அரபுநாட்டில் பெண்களுக்கு ஏற்ப்பட்டிருந்த தாழ்மை நிலையினை மாற்றி அவர்களை உயர்த்தி அவர்களுக்குரிய அந்தஸ்த்தில் வைத்தார்கள். நபி (ஸல்) அவர்கள் " எவன் தன்னுடைய வீட்டார்களிடம் நல்லவானையிருப்பானோ அவனே உங்களில் மிக நல்லவன் " என்றும் "சன்மார்கத்திலுள்ள ஒரு பெண்ணே ஒரு மனிதனின் மேலான பொக்கிஷம் " என்றும்

"பெண்களுக்கு கொடுக்கப் பட்டிருக்கும் உரிமைகளை அவர்களுக்கு சரிவர நிறைவேற்றப்படுகின்றனவா என்பதைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்றும் போதனை செய்து வந்தார்கள்.
            கடைசி ஹஜ் யாத்திரையில் முஸ்லிம்கள் அனைவருக்கும் செய்த பிரசங்கத்தில் நபி (ஸல்) அவர்கள் ," உங்கள் மனைவிகள் மீது உங்களுக்கு உரிமைகள் இருப்பது போல அவர்களுக்கும் உங்கள் மீது உரிமைகள் உண்டு. உங்கள் மனைவிகளை அன்புடனும் சாந்தத்துடனும் நடத்துங்கள். அல்லாஹ்வுக்கு பயந்து நீங்கள் அவர்களின் உரிமைகளைக் கவனியுங்கள் " என்றும் போதனை செய்தார்கள். ஹழ்ரத் நபி (ஸல்) அவர்கள் போதனை செய்த படியே அவைகளை நடைமுறை வாழ்கையிலும் செய்து காட்டினார்கள்.
            அவர்கள் மனைவிகளின் மீது மிகுந்த அன்பும் இரக்கமும் உள்ளவர்களாயிருந்தார்கள். ஹழ்ரத் கதீஜா (ரலி) அவர்களுடன் நபி (ஸல்) அவர்கள் 25 வருஷ காலம் நடத்திய இல்லற வாழ்க்கையில் ஒரு தடவையாவது அவர்களுக்குள் மனவேற்றுமை உண்டாயிருந்ததில்லை. இருவரும் முழு அன்போடு வாழ்ந்து வந்தார்கள். கதீஜா (ரலி) அவர்களின் மரணத்திற்கு பின் அவர்களின் ஞாபகம் நபி (ஸல்) அவர்களுக்கு வந்தால்அதை மிகுந்த வருத்தத்துடனேயே நினைப்பார்கள் .
ஹழ்ரத் நபி (ஸல்) அவர்கள் எங்கு நமக்கு நன்மையினை போதித்து அதன் படி நடந்து காட்டினார்களோ அங்கு பல தீமைகளையும் தடுத்து அதனை எவ்வாறு ஒருவரிடம் காணப்படும் தீமையை தடுக்க வேண்டும் என்பதையும் நமக்கு கூறிச் சென்றுள்ளார்கள்.
            நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எவராவது தீமையை செய்ய கண்டால் நீங்கள் அதனை உங்கள் கையால் தடுக்க முடிந்தால் அவ்வாறு அதனை தடுத்து விடுங்கள். அவ்வாறு செய்ய முடியவில்லை என்றால். நாவினால் அதனை தடுங்கள். நாவினால் அதனை தடுக்க முடியவில்லைஎன்றால் உள்ளத்தால் அதனை வெறுத்து விடுங்கள் என்று கூறியுள்ளார்கள்.
 ஹழ்ரத் நான்காவது கலீபதுல் மஸிஹ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
 இது மிகவும் நுட்பமான மிகவும் தூய்மையான ஓர் அறிவுரையாகும். கோணலான அறிவை கொண்டவர்கள் இதற்கு தரும் விளக்கம் என்னவென்றால் இஸ்லாத்திற்கு மாற்றமான ஒரு செயல் செய்யப்படுவதை கண்டால் , அதே சமயத்தில் உங்களிடம் வலிமையிருந்தால் உங்களிடம் வாள் இருந்தால் அந்த வாளை கொண்டு அதனை தடுங்கள், உங்களிடம் கற்கள் இருந்தால் அந்த கற்களை கொண்டு அதனை தடுங்கள், எந்த வகையில் முடியுமோ அந்த வகையில் கட்டாயப்படுத்தி தொழுகையை நிறைவேற்ற வையுங்கள் .பலவந்தம் செய்து தீயவற்றை தடுங்கள். பலவந்த ஆட்ச்சியை கொண்டு வாருங்கள். இவ்வாறு செய்வதற்கான உரிமை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு தந்துள்ளார்கள் என்று இந்த ஆலிம்கள் கூறி வருகின்றனர். இந்த காலத்தில் இவ்வாறு பலவந்தம் செய்வது பல இடங்களில் பொதுவாக நடைமுறையில் இருந்து வருகிறது. குறிப்பாக இந்த அநீதி பாகிஸ்தான் மக்களுடைய இயல்பை கெடுத்துக் கொண்டிருக்கிறது. இதனை பார்க்கும்போது வருங்காலத்தில் என்ன நடக்குமோ என்று மிகவும் கவலையாக இருக்கிறது.
            ஒரு சில நாட்களுக்கு முன்பும் கூட இதே நிலைமைதான் இந்தோனேஷியாவிலும் நடந்துள்ளது என்பதை நம்மில் ஒவ்வொருவரும் அறிவோம்
ஆக, ஹழ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அன்றாட வாழ்வின் ஒவ்வொரு அங்கமும் நமக்கு அழகிய முன்மாதிரியாகவே இருக்கின்றது. இத்துனை முன்மாதிரிகளை நாம் வேறு எவரின் வாழ்விலும் பார்ப்பது மிக அரிது. ஹழ்ரத் நபி (ஸல்) அவர்கள் இவ்வனைத்தையும் எல்லாம் வல்ல இறைவனை அடைய வேண்டும், அவனின் நேசத்தை பெற வேண்டும் என்பதற்காகவே செய்தார்கள். செய்யவும் சொன்னார்கள்.
 அன்றும் இன்றும் என்றும் ஒரு மனிதருக்கு இரட்ச்சிப்பு கிடைக்க வேண்டுமானால் அவன் எம்பெருமானார் நபிகள் நாயகம், காதமுல் முர்சலீன் முஹம்மத் முஸ்தபா, அஹ்மத் முஜ்தபா (ஸல்) அவர்கள் காட்டி தந்த அந்த வழியின் படி நடந்தால்தான் இரட்ச்சிப்பை அடைய முடியுமே தவிர வேறு வழியே இல்லை.
 அல்லா திருமறையில் கூறுகின்றான் :
" இன் குன்தும் துஹிப்பூனல்லாஹா பத்தபியூனி யுஹ்பிப்குமுல்லாஹ்"
(மக்களே!) நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாயின் என்னை பின்பற்றுங்கள்.
என்று அல்லாஹ் கூறி நீங்கள் என் மீது அன்பு வைத்திருக்கிறீர்கள் என்று வாதம் செய்பவர்களாயின் நான் அனுப்பிய இந்த தூதரை பின்பற்றி அவர் காட்டிய முன்மாதிரியை கடைபிடித்து நடங்கள். அப்போதுதான் நீங்கள்  என்னை அடைய முடியும் என்று கூறுகின்றான்.
சுருக்கமாக கூறுவதென்றால் நபி பெருமானார் (ஸல்) அவர்களின் வாழ்வில் முழு மனித குலத்திற்கு தேவையான ஆயிரமாயிரம் தீர்வுகள், படிப்பினைகள் உள்ளன. ஆம், அண்ணல் மாநபி (ஸல்) அவர்கள் அனைத்துலக மக்களுக்கு ஓர் அழகிய  முன் மாதிரியாக இருக்கின்றார்கள்.
இறுதியில் நான் ஹழ்ரத் மஸிஹ் மஊத் (அலை) அவர்களின் ஓர் மேற்கோளை உங்கள் முன் வைத்து எனது உரையை  முடிக்கின்றேன்:
ஹழ்ரத் மஸிஹ் மஊத் (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்:
“மனிதனுக்கு அருளப்பற்ற அதாவது முழுமையான மனிதனுக்கு அருளப்பற்ற உயர் தகுதியுடைய அந்த ஒளிவானவர்களிலோ,  வின்மீன்களிலோ,  சந்திரனிலோசூரியனிலோ இருந்ததில்லைமேலும் பூமியிலுள்ள கடல்ஆறு இவைகளிலுமில்லைமேலும் மாணிக்கம்மரகதம்நீலமணிமுத்து ஆகையவற்றுள்ளும் இருந்ததில்லை.  அது மனிதனிடையே இருந்தது.  அதாவது முழுமையான மனிதர்களில் அதன் முழுமை,முடிவு,உயர்வு ,மேன்மை எல்லாம் ஒருங்கே கொண்டவர் நம் தலைவரும்,நம் அன்பிற்குரியவரும் தூதர்களின் தலைவரும்,உயிரினங்களில் உயர்ந்தவருமாகிய ஹழ்ரத் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களே ஆவர்.
     நாம் நேர்மையுடன் நோக்கும்போது நுபுவ்வத் தொடர்ச்சியில் (இறைத் தூதர் தொடரில்)மிக உயர் தகுதியுடைய,கண்ணியமிக்க நபியாகவும்,உயிருள்ள நபியாகவும் இறைவனின் பேரன்பிற்குரிய நபியாகவும் ஒருவரையே காண்கிறோம்.அவர் நபிமார்களின் தலைவரும் தீர்க்கதரிசிகளில் மிகப்பெருமைகுரியவரும் அனுப்பப்பட்ட அனைவரின் கிரீடமுமாகிய ஹழ்ரத் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களேயாவர்.
     அராபிய பாலைவனத்தில் ஓர் அற்ப்புதம் நிகழ்ந்ததே அதாவது லட்ச்சக்கணக்கான இறந்தவர்கள் சில நாட்களில் உயிர் பெற்றனர்.பல தலைமுறைகளாக கேட்டுப்போயிருந்தவர்கள் இறை பண்புகளை பெற்றனர்.குருடர்கள் கண்ணொளி பெற்றனர். ஊமைகளின் நாவில் இறைஞானம் பெருக்கெடுத்தது. எக்கண்ணும் கண்டிராத, எக்காதும் கேட்டிராத அத்தகு புரட்ச்சி உலகில் மலர்ந்தது. அது என்ன என்று உணர்தீர்களா?
அது இறைவனில் தன்னை மாய்த்துக்கொண்ட ஒருவர் இருள் நிறைந்த இரவுகளில் செய்திட்ட துஆக்களின் பலன்களே! அவை (அந்த துஆக்கள்) உலகில் ஒரு பேரொளியை எழுப்பின. மேலும் அந்த கல்லாத ,இயலாத அம்மனிதரால் செய்ய  முடியாதது என்று காணப்பட்ட அர்ப்புதங்களை செய்து காட்டின.
     அல்லாஹ்வே!அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினர்க்கும்,அவர்கள் இந்த (முஸ்லிம்) சமுதாயத்தின் பேரில் கொண்டிருந்த பரிவு, பற்று, கவலைக்கு ஏற்ப அருட்க்கொடையையும், சாந்தியையும் வழங்குவாயாக.மேலும் உன் கருணையின் ஒளிகளை என்றென்றும் அவர்கள் மீது இறக்குவாயாக.! ஆமீன்......

“யா ரப்பி சல்லி அலா நபியிக்க தாயிமன்
பி ஹாதிஹித் துன்யா  பஅசின் சானி”



கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.