பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிரஹீம்
இறுதி நபித்துவம்….?
ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின்னர் எந்த நபியும் தோன்ற மாட்டார் எனக் கூறுபவர்கள்,
திருக்குர் ஆனிலிருந்தும், ஹதீஸ்களிலிருந்தும் ஒரு உண்மை நபிக்கான இலக்கணத்தை எடுத்துக் காட்டி அது ஹழ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்களுக்குப் பொருந்தவில்லை என்றோ, அல்லது திருக்குர் ஆனிலிருந்தும், ஹதீஸ்களிலிருந்தும் ஒரு பொய் நபிக்கான இலக்கணத்தை எடுத்துக்காட்டி அது ஹழ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்களுக்குப் பொருந்துகிறது என்றோ நிரூபித்துக் காட்ட முடியுமா ?
‘ லா நபிய்ய பஃதி ‘ என்ற ஹதீஸிற்கு ஹழ்ரத் நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு எந்த நபியுமில்லை என்று தான் பொருள் எனக் கூறுபவர்கள், இந்த ஹதீஸின் விளக்கவுரை இடம் பெற்றுள்ள நூள்களில் இந்த ஹதீஸிற்கு இனி ஷரீஅத்துடைய எந்த நபியுமில்லை யென்பதுவே பொருள் என கூறப்பட்டுள்ளதை மூடி மறைப்பது ஏன் ?
(ஆதாரம்:- அல்யவாகீத் வல் ஜவாஹிர் பாகம்-2 பக்-43. மவ்லூஆத் கபீர்-பக்.59.தக்மிலது மஜ்மயில் பிஹார் பக்.85. இக்திரஸ்ஸாஅ பக்.162. புதூஹாதுல் மகிய்யா பாகம்-2.பக்.64)
ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்கள் இன்று வரை மரணிக்காமல் வானத்தில் இருக்கிறார், மீண்டும் வானத்திலிருந்து இறங்குவார் என்று முஸ்லிம்கள் நம்பிக் கொண்டிருப்பது இனி ஒரு நபி தோன்ற வேண்டியதன் அவசியத்தை உணர்த்த்வில்லையா ? வரவிருக்கும் ஈஸா (அலை) அவர்கள் நபியாக வரமாட்டார் என நீங்கள் கூறுவதாயின், முஸ்லிம் என்ற ஹதீஸ் நூலில் ஹழ்ரத் நபிகல் நாயகம் (ஸல்) அவர்கள் வரவிருக்கும் ஈஸாவை, அவர்கள் அல்லாஹ்வின் நபி என நான்கு முறை அழைத்துள்ளார்களே அதற்கு தங்களின் பதில் என்ன ?
(ஆதாரம்:- முஸ்லிம் பாகம்-4. பக்.881-882)
திருக்குர்ஆன் ஹழ்ரத் ஈஸா (அலை) அவர்களை நபி எனக் குறிப்பிட்டிருக்க, ஹழ்ரத் நபி (ஸல்) அவர்கள் வரவிருக்கும் ஈஸாவை நபியுல்லாஹ் எனக் கூறியிருக்க, ஒரு நபியின் நபித்துவத்தை மறுப்பது குஃபிர் ஆகாதா ?
நபித்துவத்தைப் பற்றியும், நபிமார்களைப் பற்றியும் திருக்குர்ஆனில் மீண்டும் மீண்டும் கூறப்பட்டுள்ளது. இனி எந்த நபியும் தோன்றமாட்டார் என்றால், இந்தக் கருத்து சாதாரண முஸ்லிம்களும் புரியும் விதத்தில் திருக்குர்ஆனில் எந்த எந்த வசனங்களில் கூறப்பட்டுள்ளது என்பதையாவது காட்டுங்களேன் ?
காத்தமுன்னபிய்யீன் என்பதற்கு இறுதி நபி எனக் பொருள் கொள்பவர்கள், ‘’காத்தம்” (நபிமார்கள்) போன்ற ஒரு பன்மை பெயர்ச்சொல் சேர்ந்து, அதற்கு “ காலத்தால் இறுதி” என்ற பொறுள் கொடுக்கப்பட்டிருப்பதற்கான ஒரேயொரு எடுத்துக்காட்டை ஹதீஸ்களிலிருந்தோ, அரபி நூல்களிலிருந்தோ, அரபி பத்திரிகைகளில் இருந்தோ காட்ட முடியுமா ? ஒரு போதும் முடியாது.
“காத்தம்” என்ற சொல்லுடன் ஒரு பன்மை பெயர்ச் சொல் செரும் போது அதற்கு சிறப்பு என்பதே பொருள் என்பதற்கான பல உதாரணங்களை ஹதீஸ்களிலிருந்தும், அரபி நூல்களிலிருந்தும்,பத்திரிகைக்ளிலிருந்தும் நாங்கள் காட்டுகிறோம். இதோ சில உதாரணங்கள்;
நபிமொழிகளிலிருந்து……
1. ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஸ்ரத் அலி (ரலி) அவர்களைப் பார்த்து, அலியே ! நீர் காத்தமல் அவ்லியா (இறை நேசர்களில் சிறந்தவர்) ஆவீர். நான் காத்தமுல் அன்பியா (நபிமார்களில் சிறந்தவர் ) ஆவேன் என்று கூறினார்கள்.
(ஆதாரம்:- ஸஹ்பின் ஸஹீது தைலம் தஃப்ஸீருஸ் ஸாபி -அல்அஹ்ஸாப்)
இந்த நபிமொழியில் வந்துள்ள : ”காத்தமுல் அன்பியா” என்பதற்கு நபிமார்களுள் இறுதியானவர் என பொருள் கொண்டால், ஹஸ்ரத் அலி(ரலி) அவர்களை இறுதியான வலியுல்லாஹ் என்றும், அவர்களுக்குப் பின்னர் எந்த வலியும் (இறைநேசரும்) தோன்றவில்லை எனவும் தவறாக நம்ப வேண்டியது வரும்.
2. ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஸ்ரத் அப்பாஸ் (ரலி) அவர்களை காத்தமுல் முஹாஜிரீன் (ஹிஜ்ரத் செய்தவர்களில் சிறந்தவர்) என குறிப்பிட்டுள்ளார்கள். (ஆதாரம்;- கன்ஸுல் உம்மால், பாகம் 13, பக்கம் 519)
அரபி மொழி நூல்கள் / பத்திரிகைகளிலிருந்து…..
1. காத்தமுஷ் ஷீஅரா : புகழ்பெற்ற அரபி கவிஞராகத் திகழ்ந்த அபுதமாம் (கி.பி. 788-845) என்பவரைப் குறித்து காத்தமுஷ் ஷுஅரா – கவிஞர்களுள் சிறந்தவர் என் கூறப்பட்டுள்ளது. (நூல் : வாஃபியத்துல் அயான், பாகம் 1, பக்கம் 123. கெய்றோ, எகிப்து )
2. காத்தமல் அவ்லியா : இமாம் ஷாஃபி (ரஹ்) அவர்களை காத்தமல் அவ்லியா – இறை நேசர்களுள் சிறந்தவர் என சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது.
(நூல் ; அல் துஹ்ஃபதுஸ் ஸீன்னியா, பக்கம் 45)
3. காத்தமல் அயிம்மா : எகிப்தைச் சேர்ந்த இமாம் அப்தா (1845 -1905) காத்தமுல் அயிம்மா – தலைவர்களுள் சிறந்தவர் என அழைக்கப்பட்டுள்ளார்.
(நூல் : தஃப்ஸீர் அல் ஃபத்திஹா, பக்கம் 45)
4. காத்தமத்துல் முஜாஹிதீன் : அஸ்செய்யத் அஹ்மத் ஸ்னூஸி என்பவர் காத்தமத்துல் முஜாஹிதீன் – போராளிகளுள் சிறந்தவர் என அழைக்கப்படுகிறார்.
(பத்திரிகை : அல் ஜாமியத்துல் இஸ்லாமிய்யா, பாலஸ்தீன், நாள் ; 27, முஹ்ர்ரம், ஹிஜ்ரி 1352)
5. காத்தமத்துல் முஹக்கிகீன் : அஹ்மத் பின் இத்ரீஸ் என்பவரை குறித்து காத்தமத்துல் முஹக்கிகீன் – ஆராய்ச்சியாளிகளுள் சிறந்தவர் என கூறப்பட்டுள்ளது. (நூல் : அல் அகாதுன் நஃபீஸ்)
6. காத்தமுல் முஹத்திஸீன் : டில்லியைச் சேர்ந்த இறைநேசர் ஹஸ்ரத் ஷாஹ் வலியுல்லாஹ் அவர்கள் காத்தமுல் முஹத்திஸீன் – ஹதீஸ் கலையில் சிறந்தவர் என அழைக்கப்படுகிறார்கள். (நூல் : இஜாலா நாஃபியா பாகம்1)
7. காத்தமத்துல் ஹீஃப்பாஸ் : அல் ஷைகு ஷம்சுத்தீன் அவர்களை காத்தமத்துல் ஹீஃப்பாஸ் – திருக்குர்ஆனை மனனம் செய்தவர்களுள் சிறந்தவர் என் கூறப்பட்டுள்ளது. (நூல் : அல் தஜ்ரீதுல் ஸரீஹ் நுகத்திமா, பாகம் 4)
8. காத்தமத்துல் ஃபுக்கஹா : அல் ஷைகு நஜீத் என்பவரை காத்தமத்துல் ஃபுக்கஹா - சட்ட வல்லுனர்களுள் சிறந்தவர் என் கூறப்பட்டுள்ளது.
(பத்திரிகை : ஸிராத்தல் முஸ்தகீம், யாஃபா, நால் :27, ரஜப், ஹிஜ்ரி 1354)
9. காத்தமல் முஃபஸ்ஸிரீன் : அல் ஷைகு ரஸீத் ராஜா என்பவரை காத்தமல் முஃபஸ்ஸிரீன் – திருக்குர்ஆன் விரிவுரையாளர்களுள் சிறந்தவர் என அழைத்துள்ளார்.
(பத்திரிகை : அல் ஜாமியத்துல் இஸ்லாமிய்யா, பாலஸ்தீன், நாள் : 9, ஜமாஅத்தில் தானி, ஹிஜ்ரி 1354)
10. காத்தமுல் ஹீக்காம் : சிறந்த ஆட்சியாளரை காத்தமல் ஹீக்காம் – மன்னர்களுள் சிறந்தவர் என கூறப்பட்டுள்ளது, (நூல் :ஹீஜ்ஜதுல் இஸ்லாம், பக்கம் 35)
11. காத்தமுல் அபுஸியா : ஹஸ்ரத் அலி (ரலி) அவர்களைக் குறித்து காத்தமுல் அவுஸியா – ஆலோசனை கொடுப்பவர்களில் சிறந்தவர் என கூறப்பட்டுள்ள்து. (நூல் : மினாருல்ஹீதா, பக்கம் 106)
மேற்கண்ட சான்றுகள் இடம்பெற்றுள்ள நூற்களும், பத்திரிகைகளும் அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தால் வெளியிடப்பட்டவை அல்ல. மேற்கண்ட சான்றுகள் அனைத்தும் காத்தம் என்ற சொல்லுடன் ஒரு பன்மை பெயர்ச்சொல் சேரும் போது, அதற்கு சிறப்பு என்ற பொருளே தவிர காலத்தால் இறுதி என்ற பொறுள் இல்லை என்பதை ஆணித்தரமாக அறிவிக்கின்றன.
ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸ்ல்) அவர்கள் ஷரீஅத் கொண்டு வந்த நபிமார்களில் இறுதி நபி ஆவார்கள். அவர்கள் கொண்டு வந்த ஷரீஅத்தாகிய திருக்குர்ஆன் இறுதி நாள் வரைக்குமான ஷரீஅத்தாகும். அவர்களை முழுக்க முழுக்க பின்பற்றுபவர்களுக்கு அல்லாஹ் திருக்குர்ஆனில் (4 :
70) வாக்களித்துள்ள நான்கு ஆன்மீகப் பதவிகளுள் நபி பதவியும் ஒன்றாகும். இந்த வகையில் உம்மத்தி நபி தோன்றுவதற்கு திருக்குர்ஆனில் சான்றுகள் உள்ளன.
நேர்வழியினைப் பின்பற்றுபவர்களின் மீது சாந்தி உண்டாவதாக (20:48)

கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None