ஓரிறைக் கொள்கையில் ஒன்று படுவோம் வாரீர் !!!
இது வரை உலகில் தோன்றிய எல்லா உண்மையான மதங்களும் மார்கங்களும் வணக்கத்திற்குரிய இறைவன் ஒருவன் என்றே கூறுகிறது. எல்லா மதங்களும் ஒன்று பட்டு போதிக்கும் இந்த ஏகத்துவ போதனை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததும் நம்பக தன்மை உடையதும் ஆகும். அந்த இறைவனுக்கு இணையாக கல்லையோ, மண்ணையோ, சூரியனையோ, சந்திரனையோ, மரங்களையோ, விலங்குகளையோ, மனிதனையோ, உயருள்ள-உயிரற்ற, எந்த ஒன்றையுமோ சேர்த்து வணங்குவது பழமை வாய்ந்த ஓர் இறை கொள்கைக்கு புறம்பானதாகும். இக்கருத்தை இந்து மத வேத நூற்கள் இவ்வாறு வலியுறுத்துகின்றன.
"ஏய் அர்ஜுனா! எல்லாப் படைப்பினங்களையும் தனது சுய சக்தியால் இயங்க வைக்கின்ற இறைவன் சகல மக்களின் உள்ளங்களில் குடி கொண்டிருக்கிறான். நீ உனது உடலாலும், மனதாலும், அறிவாலும் அந்த ஓர் இறைவனிடம் மட்டும் சரணடைய வேண்டும். அவனுடைய அன்பு இருந்தால் தான் நிரந்தரமான சந்தியும் சமாதானமும் கிடைக்கும்."
(பகவத் கீதை அதிகாரம் 18 : வசனம் 61 ,62 )
"தேவர்களை வணங்குபவர்கள் தேவர்களிடதிலும், முன்னோர்களை வணங்குபவர்கள் முன்னோர்களிடத்திலும், பூதங்களை வணங்குபவர்கள் பூதங்களிடத்திலும் போவார்கள் . ஏக இறைவனை வணங்குபவர்களோ என்னிடம் வருவார்கள்." என்றும் பகவத் கீதை ஓர் இறைக் கொள்கையை வலியுறுத்துகிறது.
இன்னோரிடத்தில்,
"இந்த உலகங்களையும் உயிர்களையும் படைத்துப் பரப்பியுள்ள அந்த ஈஸ்வரனை (அதாவது ஏக இறைவனை) கலப்பற்ற செயலால் வணங்கும் மனிதனே மேன்மையடைவான்"
(பகவத் கீதை அத்தியாயம் 18 : சுலோகம் 46 ) என்றும் கூறுகிறது.
இவ்வாறு வேத நூற்களில் ஓர் இறைவனை மட்டுமே வணங்க வேண்டும் என்ற போதனை பல இடங்களில் காணப்படுகிறது.
இஸ்லாமிய மார்க்கத்திலும் இறைவனை பற்றிய சிந்தனை, ஓர் இறைவனை மட்டுமே வணங்க வேண்டும் அவனுக்கு யாரையும் இணையாக்கக் கூடாது என்றே போதிக்கிறது.இதுவே மனிதனின் இயல்புக்கும் இயற்க்கை சட்டத்திற்கும் ஏற்றதும் ஆகும்.
"நீர் கூறுவீராக அல்லாஹ் ஒருவனே ஆவான். அல்லாஹ் தேவைகள் அற்றவன் ஆவான். அவன் யாரையும் பெறவில்லை, அவன் யாராலும் பெறப்படவும் இல்லை.அவனைப் போன்ற குணங்கள் உடையவர் வேறு யாரும் இல்லை.( அதிகாரம் 112 ) என்று திருக்குர்ஆன் கூறுகிறது.
சமூக அமைதிக்கும் சமத்துவ போதனைகளுக்கும் புகழ்வாய்ந்த திருக்குர்ஆன் "வேதத்துடையவர்களே! எங்களுக்கும் உங்களுக்கும் இடையில் ஒன்றுபட்ட ஒரு கருத்தின்பால் வாருங்கள் அதாவது நாம் அல்லாஹ்வை அன்றி வேறு எவரையும் வணங்க மாட்டோம். அவனுக்கு வேறு எதனையும் இணை வைக்க மாட்டோம். அல்லாஹ்வை விட்டுவிட்டு நம்முள் சிலர் வேறு சிலரை கடவுள்களாக ஆக்கிக் கொள்ள மாட்டோம். என்று நீர் கூறுவீராக" (திருக் குர் ஆன் 3 : 65 )என்று கூறி மத இன மொழி நிற பாகுபாடி எதுவுமின்றி அனைவருக்கும் பொருத்தமான ஓரிறை வழி பாட்டின் பால் திறந்த மனதோடு அழைத்து கூறுகிறது.
"மக்களே! உங்களையும் உங்கள் முன்னோரையும் படைத்து உங்கள் இறைவனை மட்டும் வணங்குங்கள்" (திருக் குர் ஆன் 2 :22 )
இதுவரை உலகில் தோன்றிய எல்லா இறை தூதர்களும் அவதார புருஷர்களும் ரிஷி முனிகளும் இறைவன் ஒருவன் என்ற அடிப்படை போதனைகலையே வழங்கினார்கள். இந்தியாவில் தோன்றிய இறை நல்லடியார்களான ஸ்ரீ கிருஷ்ணர் ஸ்ரீ ராமர் புத்த மகான் ஆகிய சான்றோர்கள் இறைவன் புறமிருந்து தோன்றிய தீர்க்க தரிசிகளும் இறைத்தூதர்களுமே ஆவர். இந்த தூய மகான்கள் யாவரும் வணக்கித்திர்க்குரிய இறைவன் ஒருவன் என்றே போதித்தும் வணங்கியும் வந்தார்கள். அவனுக்கு இணையாக யாதொன்றையும் வணங்கக் கூடாது என்றார்கள். ஆனால் காலம் செல்ல செல்ல துரதிர்ஷ்ட வசமாக மக்கள் இந்த போதனையை கொடுத்த மனிதர்களையே வணங்க ஆரம்பித்து விட்டனர்.
இஸ்லாத்திற்கு முன் தோன்றிய அனைத்து மார்க்கங்களும் அவதார புருஷர்களும் வேத நூற்களும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கும் அவை தோன்றிய சமுதாயத்திற்கும் மட்டுமே ஓர் இறை கொள்கையையும் வாழ்கை நெறி முறைகளையும் போதித்தனர். ஆனால் இஸ்லாமிய மார்க்கமும் இஸ்லாம் கொடுத்த முழுமையான வேத நூலாகிய திருக் குர் ஆனும் என்றென்றும் எல்லா சமுதாய மக்களும் ஏற்றுக் கொள்ளும் வகையில் போதனைகளை பின்பற்றத் தக்க முறையில் வழங்குகிறது.
இந்து மத வேத நூற்களுள் ஒன்றான ரிக்வேதம் இவ்வாறு கூறுகிறது:
"உண்மையாளரும் அறிவாளியும் பலசாளியுமான மாமஹே (அதாவது முஹம்மத்) எனக்கு அருள் புரிவார். அவர் முழுமையானவர். முழு உலகிற்கும் அருட்கொடையானவர்.” (ஆதாரம் ரிக் வேதம் மந்திரம் 5 , சூக்தம் 28 )
முஹம்மத் என்ற ஒருவர் தோன்றுவார் என்றும் அவர் பூமியில் நிகழ்த்தும் ஆன்மீக புரட்ச்சிகளைப் பற்றியும் வேத நூற்களில் பல்வேறு முன்னறிவிப்புகள் உள்ளன. உதாரணமாக
"ஓர் அந்நிய நாட்டில் ஓர் ஆன்மீக சீர்திருத்தவாதி தமது சீடர்களுடன் வருவார். அவர் பெர்யர் மஹாமத். அவர் பாலைவனத்தை சார்ந்தவராக இருப்பார். (ஆதாரம் பவிஷ்ய புராணம் பாகம் 3 ,சுலோகம் 3 , சூத்திரம் 5 - 8 )
மேலும் அதே பவிஷ்ய புராணத்தின் பிறிதொரு இடத்தில் முஹம்மத் நபியை பின் பற்றுகின்ற சமூகத்தைப் பற்றி கீழ்வருமாறு விவரிக்கப்படுகிறது.
"அவர்கள் 'சுன்னத்' செய்வார்கள் தலையில் குடிமை இருக்காது, தாடி வைத்திருப்பார்கள், சப்தம் போட்டு அழைப்பார்கள், முசலை (முஸ்லிம் ) என்று அழைக்கப்படுவார்கள். (ஆதாரம் பவிஷ்ய புராணம் பாகம் 3 , சூத்திரம் 3 , சுலோகம் 25 )
இந்த முன்னறிவிப்புகள் எல்லாமே முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் தோன்றியதும் சொல்லுக்குசொல் நிறைவேறி விட்டன. இஸ்லாத்தின் தோற்றத்தை பற்றி முன்னதாகவே தீர்க்கத்தரிசனம் சொன்ன வேதங்கள் உலகத்தின் இறுதி காலத்தில் அதாவது கலியுகத்தில் ஒரு கல்கி அவதரிப்பார் என்றும் முன்னறிவிக்கிறது. பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் (அலை) "சம்பவாமி யுகே யுகே" என்று கூடியுள்ளார். அதாவது ஒவ்வொரு யுகத்திலும் நான் அவதரிப்பேன் என்று கூறியுள்ளார். இதையே இந்துக்கள் கலியுகத்தில் "கல்கி" தோன்றுவார் என்று நம்புகிறார்கள்.
நாம் வாழ்ந்து வரும் இந்த கால கட்டம் கலியுகம் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. எனவே வேதங்களில் கூறப்பட்டுள்ள முன்னறிவிப்பிற்கும் இந்துக்களின் நம்பிக்கைக்குமேற்ப இந்த கலியுகத்தின் கல்கியாக ஹழ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்கள் தோன்றியுள்ளார்கள். அவர்கள் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள காதியான் எனும் ஊரில் தோன்றினார்கள்.
மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்கள் 1904 ஆம் ஆண்டு சியால்கோட் எனும் ஊரில் ஆற்றிய உரையின் பொது இக்காலத்தில் தோன்றுவதாக வேதங்கள் முன்னறிவித்த கல்கி ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரமாக தாம் தோன்றியுள்ளதாக மக்களுக்கு அறிவித்தார்கள்.
"உலகில் நிறைந்து காணப்படும் எல்லா பாவச்செயல்களையும் அகற்றுவதற்காக இறைவனால் தோற்றுவிக்கப்பட்ட நான், .... இந்து மதத்தின் அவதாரங்கள் எல்லாரையும் விட பெரிய அவதாரமாக விளங்கிய கிருஷ்ணரின் பண்புகளை கொண்டவனாகவும் இருக்கிறேன். அதாவது ஆன்மீக நிலையில் நான் அவராகவே இருக்கிறேன்.
இது எனது சொந்த கருத்தோ அனுமானமோ அல்ல, எனினும் இவ்வுலகங்களுக்கெல்லாம் இறைவனாக இருப்பவனே இதனை எனக்கு அறிவித்தான் . அவன் ஒரு முறை அல்ல பல முறை என்னிடம் நீர் இந்துக்களுக்கு கிருஷ்ணராக........இருக்கின்றீர் என்று கூறினான்" (லெக்ச்சர் சியால்கோட் பக்கம் 20 )
எல்லா வேதங்களாலும் இந்த மகானை அதாவது ஹழ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்களை நாம் ஏற்றுக் கொண்டால் மட்டுமே ஒரே இறைவனின் உண்மைகளையும் மதங்களின் உண்மைகளையும் நம்மால் தெரிந்து கொள்ள முடியும். உண்மை இறைவனை அடைந்து மனித வாழ்வில் பிறவி பலனை அடைய முடியும்.
எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவருக்கும் உண்மையை உணர்ந்துக் கொள்ள நல்வாய்ப்பினை நல்குவானாக. ஆமீன்
அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்
சிவகாசி, விருதுநகர் மாவட்டம்

கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None