அல்லாஹ் தஆலா கலீஃபாவை எவ்வாறு தேர்ந்தெடுக்கின்றான்? பாகம்-2

 

அல்லாஹ் தஆலா கலீஃபாவை எவ்வாறு தேர்ந்தெடுக்கின்றான்? பாகம்-2

முதல் பாகத்தை படிக்க: அல்லாஹ் தஆலா கலீஃபாவை எவ்வாறு தேர்ந்தெடுக்கின்றான்? பாகம்-1

இரண்டாவது கேள்வி

இறைவன் தான் கலிஃபாவை தேர்ந்தெடுக்கிறான் என்றால் பிறகு நபிமார்களை போன்று நேரடியாக  ஏன்  தேர்ந்தெடுப்பதில்லை? நபிமார்களை எவரும் தேர்ந்தெடுப்பதும் இல்லை மேலும் இறைவன் நபிமார்களை தேர்ந்தெடுக்க மனிதனை காரணியாக ஆகுவதுமில்லை. ஆக இறைவன் கலிஃபாவை தேர்ந்தெடுப்பதில் ஏன் இவ்வாறு செய்வதில்லை?

ரஹ்மானிய்யத் மற்றும் ரஹீமிய்யத்

இந்தக் கேள்வியின் பதில் அறிவதற்க்கு இறைவனுடைய ரஹ்மான் மற்றும் ரஹீம் என்கின்ற பண்பை புரிந்து கொள்வது அவசியமாகின்றது.

அளவற்ற அருளாளன் என்கின்ற பண்பு அனைத்து படைப்பினங்களுடன் தொடர்பு கொண்டுள்ளது. இறைவன் இந்தப் பண்பின் மூலம் தன்னுடைய அருள்கள் மற்றும் பரக்கத்துகளை  மனிதனுடைய எந்த நற்செயலும் இன்றி   வெளிப்படுத்துகின்றான். அவன் நம்பிக்கையாளனாக இருந்தாலும் அல்லது நிராகரிப்பாளனாக  இருந்தாலும் சரி

இறைவனை வணங்குவராக இருந்தாலும் அல்லது அவனுடைய இருப்பை நிராகரிப்பவராக இருந்தாலும் சரியே. இறைவன் தன்னுடைய அருளினால் மட்டுமே தன்னுடைய அருட்கொடைகளிலிருந்து அவனை பங்குபெற செய்கின்றான்.

வாழ்க்கை, ஒளி, காற்று, போன்றவற்றை இறைவன் அனைவருக்காக ஏற்படுத்தியுள்ளான். இதில் நம்பிக்கையாளர் அல்லது நிராகரிப்பாளர் கட்டுப்படுபவர் அல்லது கட்டுப்படாதவர் அனைவருமே ஒன்றே.  மனிதன் காற்றை படைக்கவில்லை. மேலும் இந்த அருளுக்கு தகுதியான எந்த செயலையும் செய்யவில்லை. ஆனால் இறைவன் தன்னுடைய ரஹ்மானிய்யத் (அளவற்ற அருளாளன்) என்கின்ற பண்பினால் மனிதன் தோன்றுவதற்கு முன்னரே அவனுக்காக இந்த காற்றை படைத்துவிட்டான். எனவே இறைவன் தன்னுடைய ரஹ்மானிய்யத் (அளவற்ற அருளாளன்) என்கின்ற பண்பினால் மனித சமுதாயத்தின் மீது (மனிதனுடைய) எந்த தகுதியும் இன்றி தன்னுடைய அருளை  இறக்குகின்றான்.

ரஹீமிய்யத் (மேன்மேலும் கருணை காட்டுவான்) என்ற பண்பு அனைவருக்கும் பொதுவானதல்ல.  இந்த பண்பானது  மனிதனிடம் சில நற்செயல்களை நாடுகின்றது.  அதன் விளைவாக அல்லாஹ் தன்னுடைய அருட்கொடையை அவன்மீது பொழிய செய்கின்றான். இன்னும் ஏனைய பண்புகள் ரஹீமிய்யத் (மேன்மேலும் கருணை காட்டுவான்) என்கின்ற பண்புடன் இந்த பொருளில் பங்கு வகிக்கின்றன; அதாவது மனிதனுடைய ஏதாவது  ஒரு நற்செயலின் விளைவாக அவன் மீது  அந்த பண்பு வெளிப்படுகின்றது. உதாரணத்திற்கு இறைவனுடைய ரஸ்ஸாக் என்கின்ற பண்பு ரஹீமிய்யத் உடன் தொடர்பு கொண்டுள்ளது. இந்த பண்பானது மனிதன் ரிஸ்க்கை பெறுவதற்காக முயற்சி செய்ய வேண்டும் என்பதை நாடுகின்றது. பிறகு அவன்மீது ராஸிக் என்கின்ற பண்பு வெளிப்படும். இதைப்போன்று அல்-கஃபூர் (மன்னிக்ககூடியவன்) என்கின்ற பண்பு ரஹீமிய்யத் என்ற பண்பின் ஒரு பங்கு ஆகும்.  இந்த பண்பானது மனிதன் பாவத்தில் இருந்து தவிர்ந்து கொள்ள வேண்டும். மேலும் அதன் மீது வெட்க உணர்ச்சி கொள்ள வேண்டும்.  இறைவனிடம் பாவமன்னிப்பு கோரவேண்டும் என்பதை நாடுகின்றது. அதன்பிறகு அவன் மீது அல்-கஃபூர் என்கின்ற பண்பு வெளிப்படும். ஆம்! இறைவன் மறுமை நாளின் எஜமானன் ஆவான். மனிதன் பாவ மன்னிப்பு கோரவில்லை என்றாலும் சரியே அவன் யாரை விரும்புகிறானோ அவரை மன்னிக்கின்றான்.

ஆனால் இந்நிலையில் மன்னிக்கக் கூடியவன் என்ற பண்பு ரஹ்மானிய்யத்  (அளவற்ற அருளாளன்) என்ற பண்புடன் தொடர்புள்ளதாக இருக்குமே அல்லாமல் ரஹீமிய்யத் (மேன்மேலும் கருணை காட்டுபவன்) என்ற பண்புடன் இருக்காது. இறைவன் சில விஷயங்களை நம்பிக்கையாளர்களுக்காக வெளிப்படுத்துகின்றான். இந்த விஷயங்கள் ரஹீமிய்யத் என்ற பண்பின் மூலம் வெளிப்படுகின்றன. இந்தப் பண்பிலிருந்து பலன் பெற முதலில் மனிதன் நம்பிக்கையாளராக ஆகவேண்டும். நம்பிக்கையாளராக இல்லாதவர் மீது இது வெளிப்படாது. மேலும் மனிதன் நம்பிக்கையாளராக ஆகி சிறப்பான பண்பு வெளிப்பட தேவையாக இருக்கின்ற செயலை செய்யாவிடில் ரஹீமிய்யத் பண்பின் கீழ் அந்த பண்பானது அவர் மீது வெளிப்படாது.

எனவே இறைவன் ஒருவரை நபியாக ஆக்குகிறான் என்றால் ரஹ்மானிய்யத் என்ற பண்பின் மூலமாக ஆக்குகின்றான். இங்கு இறைவன் நபியை எப்போது அனுப்புகின்றான் என்ற கேள்வி எழுகின்றது? இறைவன்  நபியின் தேவை இருக்கும்போது நபியை அனுப்புகின்றான். மேலும் பூமியில் அநியாயம், அக்கிரமம் நிரம்பும்போது இந்த தேவை உருவாகின்றது. அப்பொழுது இறைவன் பூமியில் நியாயத்தை நிலைபெறச் செய்ய நபியை அனுப்புகின்றான். பூமியில் குழப்பம் மற்றும் வழிகேடல் பரவும்போது இறைவனுடைய அருள்களை பெற ஒருவர்கூட தகுதி உள்ளவராக இருப்பதில்லை. ஆனால் இறைவன் அவனுடைய கருணையால் மட்டுமே மனிதனுடைய எந்த தகுதியும் இன்றி ரஹ்மானிய்யத் பண்பை வெளிப்படுத்துகின்றான். மேலும் மனிதர்களின் நேர்வழிக்காக ஒருவரை நபியாக அனுப்புகின்றான். எனவே நபியை இறைவன் ரஹ்மானிய்யத் என்ற பண்பின் மூலம் நேரடியாக தேர்ந்தெடுக்கிறான்.

இதற்குப் பிறகு அந்த நபியானவர் தன்னுடைய வேலையை முழுமையாக முடித்து தன்னுடைய செய்தியை மக்களிடம் கொண்டு சேர்த்து நேர்வழியில் நிலைத்திருக்கும் ஒரு ஜமாஅத்தை உருவாக்குகிறார்.  அப்பொழுது இறைவன் நம்பிக்கையாளர்கள் மீது தன்னுடைய மேலும் ரஹீமிய்யத் (கருணை காட்டுபவன்) என்ற பண்பை வெளிப்படுத்தி அவர்களுக்காக ஒரு கலிஃபாவை தேர்ந்தெடுக்கின்றான்.

நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிகின்ற அந்த நம்பிக்கையாளர்களுக்கு இறைவனுடைய கிலாஃபத் நிலைபெற வேண்டுமென்றால் இந்த இரு நிபந்தனைகளை நிறைவேறுவது அவசியமாகும்.

இறைவன் கூறுகின்றான்:

وَعَدَ اللّٰہُ الَّذِیۡنَ اٰمَنُوۡا مِنۡکُمۡ وَ عَمِلُوا الصّٰلِحٰتِ لَیَسۡتَخۡلِفَنَّہُمۡ فِی الۡاَرۡضِ

உங்களில் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் ஆற்றுபவர்களை இறைவன் பூமியில் கலிஃபாவாக ஆக்குவான் என்று உறுதியான வாக்குறுதியை அளித்துள்ளான். (24:56)

அதாவது இந்த வாக்குறுதி பொதுவானதல்ல மாறாக முதலில் இரண்டு நிபந்தனைகள் நிறைவேறுவது அவசியமாகும். பிறகு இறைவன் தன்னுடைய வாக்குறுதியை நிறைவேற்றுவான் மேலும் கலிஃபாவை உருவாக்குவான். இவ்விரு நிபந்தனைகள் அல்லது  இதில் ஒன்று நிறைவேறவில்லை என்றாலும் 'கலீஃபாவாக ஆக்குவேன்' என்ற இறைவனின் வாக்குறுதி  நிறைவேறாது.

அவ்விரு நிபந்தனைகள் (1) நம்பிக்கைக் கொள்ளுதல் (2) நற்செயலாற்றுதல் என்பதாகும். வெறும் நம்பிக்கைக் கொள்ளுதல் போதுமானதாகாது அதேப்போன்று நற்செயலும் ஈமானை தவிர்த்து தரமற்றதாகும்.

நம்பிக்கைக் கொள்ளுதலின் பொருள் என்னவென்றால் இறைவன் மீது நம்பிக்கைக் கொள்ளுதல் வானவர்கள் மீது நம்பிக்கைக் கொள்ளுதல் அவனுடைய வேதங்கள் மீது நம்பிக்கைக் கொள்ளுதல் அனைத்து நபிமார்களின் மீது நம்பிக்கைக் கொள்ளுதல் மறுமை நாளின் மீது நம்பிக்கைக் கொள்ளுதல் நன்மை, தீமை விதியின் மீது நம்பிக்கை கொள்வதாகும்.

இறைவன் கலீஃபாவை தேர்ந்தெடுக்க அவசியமாக இருக்கின்ற "வ அமிலுஸ் ஸாலிஹாத்தி" (நற்செயல்கள் புரிபவர்கள்) என்பதன் பொருள் என்ன?

இந்த கேள்விக்கான பதில் கிலாஃபத்தை குறித்த வசனத்தில் வருகின்றது.

நற்செயல்கள் என்றால் என்ன?

இறைவன் சூரா அந் நூரில் கூறுகின்றான்.

اِنَّمَا کَانَ قَوۡلَ الۡمُؤۡمِنِیۡنَ اِذَا دُعُوۡۤا اِلَی اللّٰہِ وَ رَسُوۡلِہٖ لِیَحۡکُمَ بَیۡنَہُمۡ اَنۡ یَّقُوۡلُوۡا سَمِعۡنَا وَ اَطَعۡنَا ؕ وَ اُولٰٓئِکَ ہُمُ الۡمُفۡلِحُوۡنَ۔ وَ مَنۡ یُّطِعِ اللّٰہَ وَ رَسُوۡلَہٗ وَ یَخۡشَ اللّٰہَ وَ یَتَّقۡہِ فَاُولٰٓئِکَ ہُمُ الۡفَآئِزُوۡنَ۔ وَ اَقۡسَمُوۡا بِاللّٰہِ جَہۡدَ اَیۡمَانِہِمۡ لَئِنۡ اَمَرۡتَہُمۡ لَیَخۡرُجُنَّ ؕ قُلۡ لَّا تُقۡسِمُوۡا ۚ طَاعَۃٌ مَّعۡرُوۡفَۃٌ ؕ اِنَّ اللّٰہَ خَبِیۡرٌۢ بِمَا تَعۡمَلُوۡنَ۔ قُلۡ اَطِیۡعُوا اللّٰہَ وَ اَطِیۡعُوا الرَّسُوۡلَ ۚ فَاِنۡ تَوَلَّوۡا فَاِنَّمَا عَلَیۡہِ مَا حُمِّلَ وَ عَلَیۡکُمۡ مَّا حُمِّلۡتُمۡ ؕ وَ اِنۡ تُطِیۡعُوۡہُ تَہۡتَدُوۡا ؕ وَ مَا عَلَی الرَّسُوۡلِ اِلَّا الۡبَلٰغُ الۡمُبِیۡنُ۔ وَعَدَ اللّٰہُ الَّذِیۡنَ اٰمَنُوۡا مِنۡکُمۡ وَ عَمِلُوا الصّٰلِحٰتِ لَیَسۡتَخۡلِفَنَّہُمۡ فِی الۡاَرۡضِ کَمَا اسۡتَخۡلَفَ الَّذِیۡنَ مِنۡ قَبۡلِہِمۡ ۪ وَ لَیُمَکِّنَنَّ لَہُمۡ دِیۡنَہُمُ الَّذِی ارۡتَضٰی لَہُمۡ وَ لَیُبَدِّلَنَّہُمۡ مِّنۡۢ بَعۡدِ خَوۡفِہِمۡ اَمۡنًا ؕ یَعۡبُدُوۡنَنِیۡ لَا یُشۡرِکُوۡنَ بِیۡ شَیۡئًا ؕ وَ مَنۡ کَفَرَ بَعۡدَ ذٰلِکَ فَاُولٰٓئِکَ ہُمُ الۡفٰسِقُوۡنَ۔ وَ اَقِیۡمُوا الصَّلٰوۃَ وَ اٰتُوا الزَّکٰوۃَ وَ اَطِیۡعُوا الرَّسُوۡلَ لَعَلَّکُمۡ تُرۡحَمُوۡنَ۔

பொருள்: நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வின் பாலும், அவனது தூதரின் பாலும்அவர்களுக்கிடையில் தீர்ப்பு வழங்குவதற்காக அழைக்கப்பட்டால், நாங்கள் செவியேற்றோம், கட்டுப்பட்டோம் என்று கூறுவதே அவர்களின் பதிலாக இருந்து வருகிறது. இத்தகையவர்களே வெற்றி பெறுவோராவர்.

அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு நடந்து, அல்லாஹ்வுக்கு அஞ்சி (பாதுகாப்பிற்குரிய) கேடயமாக அவனை எடுத்துக் கொள்பவர்கள் வெற்றியடைபவர்களாவர்.

நீர் அவர்களுக்கு கட்டளையிட்டால், உடனே அவர்கள் (வீடுகளிலிருந்து) புறப்பட்டு விடுவதாக அல்லாஹ்வின் மீது உறுதிவாய்ந்த சத்தியங்கள் செய்கின்றனர். நீர் கூறுவீராக: சத்தியங்கள் செய்யாதீர்கள். பொதுவாகக் கட்டுப்பட்டு நடப்பதே போதுமானதாகும்.  நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கு தெரிந்து கொள்பவனாவான்.

அல்லாஹ்வுக்கும் கட்டுப்பட்டு நடங்கள். இத்தூதருக்கும் கட்டுப்பட்டு நடங்கள் என்று நீர் கூறுவீராக. எனவே நீங்கள் புறக்கணித்து விட்டால் அ(த் தூது) வரிடம் ஒப்படைக்கப்பட்டதற்கே அவர் பொறுப்பாளராவர். உங்களிடம் ஒப்படைக்கப்பட்டதற்கு நீங்கள் பொறுப்பாளர்களாவீர்கள். நீங்கள் அவருக்குக் கட்டுப்பட்டு நடந்தால் நீங்கள் நேர்வழியினைப் பெறுவீர்கள். மேலும் இத் தூதரின் பொறுப்பு தூதுச் செய்தியினைத் தெளிவாக எடுத்துரைப்பது மட்டுமேயாகும்.

அல்லாஹ் உங்களுள் நம்பிக்கை கொண்டு நற்செயலாற்றுபவர்களை, அவர்களின் முன்னோர்களை கலீஃபாவாக (தலைவராக) ஆக்கியது போன்று இப்பூமியில் கலீஃபாவாக ஆக்குவதாகவும், அவன் அவர்களுக்காக விரும்பிய அவர்களின் மார்க்கத்தை அவர்களுக்கு உறுதிப்படுத்துவதாகவும், அவன், அவர்களுக்கு அவர்களது அச்சத்திற்குப் பிறகு, அதற்குப் பதிலாக அமைதியினை வழங்குவதாகவும் அவர்களிடம் வாக்குறுதி அளித்துள்ளான். அவர்கள் என்னை வணங்குவார்கள். எதனையும் எனக்கு இணையாக்க மாட்டார்கள். இதன் பின்னரும் நிராகரிப்பவர்கள் கட்டுப்படாதவர்களாவார்கள்.

நீங்கள் தொழுகையை நிறைவேற்றுங்கள். மேலும் ஸக்காத்துக் கொடுங்கள். இத் தூதருக்குக் கட்டுப்பட்டு நடங்கள். அப்போது தான் உங்கள் மீது கருணை காட்டப்படும். (24:52-57)

சூரா அந்நூர் வசனம் 56-இல் கலிஃபா ஆக்குவதற்கான வாக்குறுதி உள்ளது. இதற்கு முன்பு மற்றும் அதற்குப் பின்புள்ள வசனங்களில் ஏழு முறை கட்டுப்படுதல் குறித்து வந்துள்ளது.

اَطَعْنَا۔یُطِعْ۔طَاعۃٌ۔اَطِیْعُوْا۔اَطِیْعُوْا۔تُطِیْعُوْہُ ۔ اَطِیْعُوْا۔

திருக்குர்ஆனில் இந்த இடத்தை தவிர மற்ற எந்த இடத்திலும் 6 வசனங்கள் தொடர்ந்து ஏழு முறை கட்டுப்படுதல் குறித்து வரவில்லை. மேலும்  இதற்கு காரணம் இவ்விடத்தில் கிலாஃபத் குறித்த கூற்று உள்ளது. இவ்விஷயத்திலிருந்து தெரியவருவதாவது; இறைவன்  கிலாஃபத்தே ராஷிதாவை  நிலைபெற செய்ய விரும்பினால் நீங்கள் நம்பிக்கை கொள்ளுதல் மற்றும் நற்செயல் ஆற்றுதல் என்ற நிபந்தனையை நிறைவேற்றுவது அவசியமாகும். மேலும் நற்செயல் என்பதற்கு கட்டுப்படுதல் என்றுதான் பொருள் என்று இறைவன் வலியுறுத்தி கூறிவிட்டான். இறைவனுக்கு கட்டுப்படுதல் அவனுடைய ரஸூலுக்கு கட்டுப்படுதல் அவன் தேர்ந்தெடுக்கின்ற அவனுடைய கலிஃபாவுக்கு கட்டுப்படுதல்.

இறைவனுக்கு கட்டுப்படுதல் மற்றும் ரஸூலுக்கு கட்டுப்படுதல் (ஆகியவை)

اَلَّذِیْنَ اٰمَنُوْا مِنْکُمْ

(உங்களில் நம்பிக்கை கொண்டவர்கள்) என்பதில் அடங்கிவிடுகிறது. நற்செயல் என்பதன் பொருள் இறைவன் தேர்ந்தெடுத்த கலிஃபாவுக்கு கட்டுப்படுதலாகும்.  இந்த கட்டுப்பாடுகளை தவிர்த்து நற்செயல்கள் புரிய இயலாது மேலும் நற்செயல் இல்லாவிட்டால் இறைவன் கிலாஃபத்தை நிலைபெறச் செய்ய மாட்டான்.

நாம் இஸ்லாத்தில் முதல் கிலாஃபத் தொடரில் இந்த முன்னுதாரணத்தை கண்டுள்ளோம். அதாவது கலிஃபாவுக்கு கட்டுப்படாமல் இருந்ததால் முஸ்லிம்கள் எவ்வாறு இறைவனுடைய கிலாஃபத்திலிருந்து இழப்புக்கு உள்ளானார்கள். அக்காலத்தில் மக்கள் நம்பிக்கையாளராக இருந்தார்கள். இறைவன் மீதும் அவனுடைய தூதர் மீதும் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். ஆனால் நற்செயல் இல்லை. அதன் விளைவாக மூன்றாவது மற்றும்  நான்காவது கலிஃபாக்களின் ஷஹாதத்திற்கு பிறகு இறைவன் அவர்களிடமிருந்து கிலாஃபத் அருட்கொடையை திருப்பி எடுத்துக் கொண்டான்.

இவ்வாறே  ராஷிதா கிலாஃபத் அதாவது நபிவழியை தொடர்ந்த கிலாஃபத் முற்றுகை பெற்றது.

எனவே  இறைவன் எவரை கலிஃபாவாக தேர்ந்தெடுக்கின்றானோ  நிச்சயமாக அது மாபெரும் அருட்கொடையாகும். மேலும் நம்பிக்கைக் கொண்டு நற்செயல் ஆற்றுகின்ற மக்களின் மீதே இந்த அருள்கொடை இறங்குகின்றது. நம்பிக்கையாளர்கள் இந்த தேவையை நிறைவேற்றவில்லை என்றால் பிறகு இறைவனும் இந்த அருட்கொடையை வழங்க மாட்டான். (தொடரும்)

நன்றி: அல்-ஃபஸ்ல் பத்திரிகை

மொழியாக்கம்: முரப்பி ஜாஹிர் ஹுஸைன்-ஈரோடு

 

1 கருத்து:

  1. கிலாஃபத் அல்லாஹ்வின் மாபெரும் அருட்கொடை!அது இன்று உலகில் நற்செயல் ஆற்றும் மக்களாகிய அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தில் இருப்பது அல்லாஹ்வின் மாபெரும் அருளாலும்! அல்ஹம்துலில்லாஹ்.

    பதிலளிநீக்கு

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.