சொர்க்கத்தில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு
மது வழங்கப்படுமா!?, தோட்டங்கள், ஆறுகள், தண்ணீர், பால், தேன் கிடைக்கும்
என்பதன் உண்மை நிலை என்ன!?
ஹஸ்ரத் இரண்டாவது கலீஃபதுல் மஸீஹ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:
இந்த விஷயங்களை சொர்க்கத்தின் மதுவில்
இருக்கும் சிறப்புகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இரண்டிலும் இருள் மற்றும் வெளிச்சத்தை
போன்ற வித்தியாசம் தெரிகிறது. உலக மதுவை அசுத்தமானது என கூறப்பட்டுள்ளது என்றால் சொர்க்கத்தின்
மதுவை தூய்மையானதும் தூய்மையாக்கக் கூடியதும் ஆகும் எனக் கூறப்பட்டுள்ளது. உலகின் மதுவை
பகைமை மற்றும் வெறுப்பை தோற்றுவிக்கக் கூடியது என கூறப்பட்டுள்ளது என்றால் மறுமையின்
மதுவின் விளைவு, வீண் பேச்சுக்கள்
மற்றும் ஏச்சுப் பேச்சுக்களில் இருந்து காக்கக்கூடியதாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
உலகின் மதுவை ஷைத்தானின் செயல் என கூறப்பட்டுள்ளது என்றால் மறுமை மதுவைக் குறித்து, அது மிகுதி மற்றும்
உயர்வை தோற்றுவிக்க காரணமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. உலகத்தின் மது போதை மற்றும்
கிறக்கத்தை தோற்றுவிக்கக் கூடியதாக இருக்கிறது என்றால் மறுமையின் மதுவை குறித்து, அதனால் போதை தோன்றாது, கிறக்கமும் தோன்றாது
என கூறப்பட்டுள்ளது. உலக மதுவை குறித்து,
அதிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள் எனக் கூறப்பட்டுள்ளது என்றால், மறுமை மதுவைக் குறித்து, ஒருவர் ஒரு பொருளுக்கு
ஆசைப்பட வேண்டும் என்றால் அது இந்த மதுவை பெறுவதற்காக ஆசைப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த வேறுபாடுகளிலிருந்து, மது என பெயர் வைக்கப்பட்டுள்ள
சொர்க்கத்தின் அந்த பொருள் உலக மதுவை விட்டும் வேறானது என்பது மட்டுமல்ல, அது பௌதீக பொருளும்
கிடையாது என்பது பகல் வெளிச்சம் போல் நிரூபணமாகி விடுகிறது. ஏனென்றால் பௌதிக பொருள்
எவ்வளவு உயர்வானதாக இருந்தாலும் சரி,
அதனால் உள்ளத்தை தூய்மையாக முடியாது,
அதனால் மிகுதி மற்றும் உயர்வை தோற்றுவிக்க முடியாது. மிகுதி மற்றும் உயர்வை ஒரு
ஆன்மீக பொருளினால் மட்டுமே தோற்றுவிக்க முடியும்.
சுருக்கம் என்னவென்றால், சொர்க்கத்தின் அருட்கொடைகளின்
பெயர் உலக பொருட்களை போன்று வைக்கப்பட்டிருந்தாலும் அவற்றின் பொருள், சில ஆன்மீக அருட்கொடைகள்
என்பதாகும்; ஏதோ பௌதீக
பொருள்களோ அல்லது உலகில் காணப்படும் அதே பொருள்களோ கிடையாது.
சஹாபாக்களின் கூற்றுக்களில் இருந்தும் இக்கருத்து உறுதிபடுத்தப்பட்டுள்ளது. ஹஸ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:
"சொர்க்கத்தில்
உள்ளவற்றில் பெயர் மட்டுமே இவ்வுலகில் அறியப்பட்டுள்ளது. அவற்றின் தன்மைகள் அறியப்படவில்லை."
(இப்னு ஜரீர் பாகம் 1)
எனவே மறுமை வாழ்க்கையில் தோட்டங்கள், ஆறுகள், தண்ணீர், பால், மது, தேன் கிடைக்கும்
என்பதன் பொருள், அவை எப்படிப்பட்ட
சில பொருள்களாக இருக்குமென்றால்,
உலகப் பொருள்கள் பௌதீக உடலின் மீது ஏற்படுத்தும் தாக்கத்தைப் போல் குறிப்பிட்ட
வகையான ஆன்மிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக அவை இருக்கும். மது போன்றவற்றில் காணப்படும்
அனைத்து தன்மைகளையும் கொண்டிருக்கும் என்பது பொருள் கிடையாது. மாறாக சில குறிப்பிட்ட
தன்மைகள் பொருளாகும். மேலும் இந்தப் பெயரை பயன்படுத்துவதன் காரணமாக தடுமாற்றம் ஏற்பட
வாய்ப்புள்ளது என்பதால் திருக்குர்ஆன் மறுமையின் மது மற்றும் உலக மதுவுக்கு இடையேயான
வேறுபாட்டை விரிவாக எடுத்துக் கூறி விட்டது.
அந்த மதுவும் அறிவின் மீது திரையை போடக்கூடியதாக
பௌதீக போதையின் தன்மையை தோற்றுவிக்க கூடியதாக இருக்குமா என்பதே மது என்ற அந்தப் பெயரால்
ஏற்பட வாய்ப்புள்ள தடுமாற்றமாகும். எனவே அதற்கான பதிலை இவ்வாறு வழங்கியுள்ளான், அதில் உலக மதுவுக்கு
ஒப்பான விஷயங்கள் காணப்படாது மாறாக அதன் ஒப்புமை வேறு வடிவில் இருக்கும். அந்த ஒற்புமை
என்னவென்றால், எவ்வாறு
மது மனித மூளையில் தாக்கத்தை ஏற்படுத்தி முழுவதுமாக
ஆட்கொண்டு விடுகிறதோ அதேபோல் அந்த மதுவும் ஆட்கொண்டு விடும். அதனை குடிப்பதால் உள்ளம்
முழுமையாக இறையன்பில் திளைத்து மதி மயங்கிவிடும் நிலைக்கு சென்று விடுவார்கள்.
சொர்க்கத்தின் அருட்கொடைகள் முற்றிலும்
வேறு வகையானதாகும், ஆன்மீகமானதாகும்
என்றால் அவற்றிற்கு உலகியல் பெயர்கள் ஏன் வைக்கப்பட்டுள்ளன என்ற கேள்வி இப்போது எஞ்சியுள்ளது.
இதற்கான பதில் என்னவென்றால்,
மார்க்கம் அனைத்து வகையான மக்களுக்கும் உரியதாக இருக்கிறது. எதிரிகளுக்குரியதாகவும், கீழ்நிலை மக்களுக்குரியதாகவும், உயர்நிலை மக்களுக்குரியதாகவும்
இருக்கிறது. இது போன்ற விஷயங்களை புரிந்து கொள்வதில் கடினமாக மக்களுக்காக இதுபோன்ற
சொற்களில் கூற வேண்டியது அவசியமாகிறது. அவற்றில் எதிரி களுக்கான பதிலும் வந்துவிடவேண்டும், கீழ்நிலையைக் கொண்ட
மக்களுக்கும் திருப்தி ஏற்படவேண்டும்,
உயர்நிலையைக் கொண்ட மக்களும் அதிலிருந்து பயன்பெற வேண்டும் என்ற ஞானத்தை கருத்தில்
கொண்டவாறு திருக்குர்ஆன் மறுமை அருட்கொடைகளுக்கு இது போன்ற பெயர்களை பயன்படுத்தியுள்ளது.
இது அனைத்து வகையான மக்களுக்கும் அவர்களின் அறிவு மற்றும் நிலைக்கேற்ப திருப்தியளிக்கக்
கூடியதாக இருக்கும்.
நிராகரிப்பாளர்கள் கூறிவந்தனர், பாருங்கள்! முஹம்மது
ரஸூலுல்லாஹ் (ஸல்) நம்மிடமிருந்து அனைத்து வகையான அருட்கொடைகளையும் தரித்துக் கொள்ள
விரும்புகிறார்கள், அவர்களின்
ஜமாஅத்தும் அனைத்து அருட்கொடைகளை விட்டும் விலகியதாக இருக்கின்றது என்றனர். அல்லாஹ்
மறுமை அருட்கொடைகளை அவர்களின் புரிதலுக்கு அருகே கொண்டுவருவதற்காக, எவற்றை அவர்கள்
அருட்கொடைகள் ஆக புரிந்து வைத்திருந்தனரோ அந்தப் பொருட்களின் பெயரை கூறி, நம்பிக்கை கொண்டவர்களுக்கு
இவையனைத்தும் கிடைக்கும் எனக் கூறியுள்ளான்.
இது, ஒரு செல்வந்தர்,
ஒரு அறிஞரிடம், என்னிடம்
செல்வம் உள்ளது எனக் கூறுகிறார். அந்த அறிஞர் தன்னிடமுள்ள நூலகத்தைச் சுட்டிக் காட்டியவாறு
என்னிடமும் உன்னை விட அதிகமான கருவூலங்கள் உள்ளன எனக் கூறுவதை போன்றதாகும். இந்த பதிலின்
பொருள், அந்த நூல்களில்
பணம் நிறைந்துள்ளது என்பது ஒருபோதும் கிடையாது. மாறாக இதனை நீர் கருவூலமாக கூறுகின்றீரோ
அதைவிட அதிக பயன் தரக்கூடிய பொருள் என்னிடம் உள்ளது என்பதாகும்.
எனவே திருக்குர்ஆன், நம்பிக்கை கொண்டவர்களுக்கு
சொர்க்கங்கள் கிடைக்கும்,
அவற்றில் நிழல் தரக்கூடிய மரங்கள்,
ஆறுகள், கெட்டு
விடாத பால், கெட்டு
விடாத தண்ணீர், மெழுகு
மற்றும் கலப்பற்ற தூய தேன்,
போதை தராத; உள்ளத்தை
தூய்மையாகக்கும் மது இருக்கும் என கூறியுள்ளதில் அவர்களின் ஆட்சேபனைக்கு இவ்விதத்தில்
பதில் வழங்கப்பட்டுள்ளது. அதாவது எந்த பொருள்களை நீங்கள் அருட்கொடையாக நினைக்கிறீர்களோ
அது உண்மையில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு கிடைக்கக்கூடிய அருட்கொடைகளை விட்டும் அற்பமானவையாகும்.
எந்த ஆறுகளை நீங்கள் அருட்கொடையாக நினைக்கிறீர்களோ அவற்றின் தண்ணீர் கெட்டு விடுகிறது.
நம்பிக்கை கொண்டவர்களுக்கு தண்ணீர் கெட்டுவிடாத ஆறுகள் கிடைக்கும். எந்த தோட்டங்களை
நீங்கள் அருட்கொடையாக நினைக்கின்றீர்களோ அது அசல் அருட்கொடைகள் கிடையாது, நம்பிக்கை கொண்டவர்களுக்கு
கிடைக்கும் ஒரு போதும் வீணாகி விடாத தோட்டங்களே அசல் அருட்கொடையாகும். எந்த மதுவை நீங்கள்
அருட்கொடையாக நினைக்கிறீர்களோ அதன் தேவை நம்பிக்கை கொண்டவர்களுக்கு கிடையாது. அந்த
மது, அசுத்தமானதும்
அறிவை மழுங்கச் செய்யும் பொருளுமாகும். நம்பிக்கை கொண்டவர்களுக்கு அறிவை கூர்மையாக்கும்
தூய்மையை அதிகரிக்கச்செய்யும் மதுவை இறைவன் வழங்குவான். எந்தத் தேனைக் குறித்து உங்களுக்கு
பெருமையுள்ளதோ அதில் மெழுகு கலந்துள்ளது. இறைவன் நம்பிக்கை கொண்டவர்களுக்கு எல்லாவித
கலப்பை விட்டும் தூய்மையான தேனை வழங்குவான். எந்த துணைகளைக் குறித்து உங்களுக்கு பெருமையுள்ளதோ
அதுவும் அருட்கொடை கிடையாது. ஏனென்றால் அவர்கள் அசுத்தமானவர்களாவர். நம்பிக்கை கொண்டவர்களுக்கு
அல்லாஹ் தூய்மையாக விளங்கும் துணைகளை வழங்குவான். எந்த கனிகளைக் குறித்து நீங்கள் பெருமை
கொள்கின்றீர்களோ அவை தீர்ந்து விடக்கூடியவையாகும். நம்பிக்கை கொண்டவர்களுக்கு ஒருபோதும்
தீர்ந்து விடாத, எந்நேரமும்
விருப்பத்திற்கேற்ப கிடைக்கக்கூடிய கனிகள் கிடைக்கும்.
இந்த கருத்து எவ்வளவு தெளிவானவை என்றால், காழ்ப்புணர்ச்சியை விட்டு விலகி, சிந்திக்கும் ஒவ்வொருவராலும் இதன் பொருளைப் புரிந்துகொள்ள முடியும்; இதன் நுட்பமான குறிப்பை
அடையமுடியும். ஆனால் காழ்ப்புணர்ச்சி கொண்டிருப்வருக்கும் அல்லது மூடநம்பிக்கையில்
இருப்பவருக்கும் எந்த மருத்துவமும் கிடையாது.
(தஃப்ஸீரே
கபீர் பாகம்-1, 2: 26 வசனத்தின்
விளக்கத்தின் கீழ்)
மொழியாக்கம்: முஅல்லிம் முஸ்ஸம்மில் அஹ்மது-தூத்துக்குடி
உலகிலுள்ள பொருட்களுக்கும் மறுவுலக பொருட்களுக்கும் உள்ள வேறுபாடு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.ஜஸாக்கல்லாஹ்
பதிலளிநீக்கு