காதியான் 124 வது ஆண்டு மாநாடு


அல்லாஹ்வின் அருளால் மீண்டும் ஒரு முறை காதியானில் ஆன்மீக ஆண்டு மாநாடு இனிதே நடந்து முடிந்தது. இந்த மாநாடு 124 வது ஆண்டு மாநாடு ஆகும். இம்மாநாட்டைப் பற்றி ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்:

"இம்மாநாட்டை சாதாரண ஒரு மாநாடாக கருதிவிடாதீர்கள்......இந்த மாநாட்டின் அடிக்கல்லை இறைவன் தனது கையாலே நிலைநாட்டினான்" (மஜ்மூஆ இஷ்திகாராத் பாகம் 1 பக்கம் 341)
"இந்த மாநாட்டில் ஈமான் மற்றும் ஞானத்திற்கு அபிவிருத்தி கிடைப்பதற்கு அவசியமான உண்மைகள் மற்றும் ஞானம் நிறைந்த கருத்துக்களையும் கூறுவதற்கான ஈடுபாடு உருவாகின்றன." (ரூஹானி கஸாயீன் பாகம் 4 பக்கம் 352)


இம்மாநாட்டில் சுமார் 40 நாடுகளிலிருந்து விருந்தாளிகள் ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் வாழ்ந்து சென்ற புனித இடத்தை காணும் வகையிலும் அவர்கள் துவக்கி வைத்த ஆன்மீக மாநாட்டில் கலந்து கொண்டு ஆன்மீக தாக்கத்தை தனித்து கொள்ளும் வகையில் வருகை தந்தனர். இவ்வருடம் பாகிஸ்தானிலிருந்து சுமார் 5000 நபர்கள் வருகை தந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு இம்மாநாட்டில் சுமார் 19000 நபர்கள் கலந்து கொண்டனர். இமாநாட்டின் இறுதி அமர்வில் இலண்டனிலிருந்தும் சுமார் 5000 பேர் MTA வாயிலாக கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் உலகத்தின் கிழக்கிலிருந்தும், மேற்கிலிருந்தும், தெற்கிலிருந்தும், வடக்கிலிருந்தும் காலத்தின் இமாமை ஏற்ற மக்களும், அவர்களை ஏற்காத மக்களும் இவர்கள் கூறும் விஷயம்தான் என்ன என்பதை ஆராயும் வகையிலும் வருகை தந்தனர். ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் இதை குறித்து முன்னறிவிப்பை அறிவித்துள்ளான்;

அல்லாஹ் கூறினான்; "மக்கள் கூட்டம் கூட்டமாக உம்மிடம் வருவார்கள்"
மேலும் கூறினான்: "உமது இடத்தை விரிவாக்கிக் கொள்"

மேலே கூறப்பட்ட இரு முன்னறிவிப்பில் கூறப்பட்டுள்ள கருத்து வரக்கூடிய காலங்களில் உம்மிடம் அதாவது உமது இடத்தை நோக்கி மக்கள் அலை கடலென திரண்டு வருவார்கள். அவர்களின் வருகையின் காரணமாக இடத்தின் பற்றாக்குறை ஏற்படக்கூடும் ஆகவே நீ உமது இடத்தை விரிவாக்கிக் கொள் என்று அல்லாஹ் ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களுக்கு இம்மாநாட்டில் கலந்து கொள்ளும் மக்களை குறித்து முன்னறிவித்துள்ளான்.

இந்த மாநாடு 1891 ஆம் ஆண்டு முதல் முதலில் ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களால் துவக்கப்பட்டது. 1891 ஆம் ஆண்டு நடந்த இம்மாநாட்டில் சுமார் 75 நபர்களே கலந்து கொண்டனர். தற்போது இம்மாநாட்டில் ஆயிரம் கணக்கில் மக்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். அன்றிலிருந்து இன்று வரை இம்மாநாடு டிசம்பர் மாதத்தில் மூன்று நாட்கள் நடந்து வருகின்றன. உலகில் பல்வேறு இடங்களில் நடந்து வருகின்றன. பல்வேறு கஷ்டங்களை பொறுத்துக் கொண்டு இம்மாநாட்டில் மக்கள் ஆர்வத்தோடு கலந்து கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்கான முக்கியத்துவத்தை ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள்:

"ஆகவே அருட்கள் நிறைந்த இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்கு ஆற்றல் பெற்றவர்கள் அவசியம் வருகை தாருங்கள்."
"அல்லாஹ் தஆலா மற்றும் அவனது தூதரின் வழியில் சந்திக்கும் சின்னஞ்சிறு கஷ்டங்களை பற்றி கவலைக் கொள்ள வேண்டாம். அல்லாஹ் தஆலா நல்லுள்ளம் படைத்த மக்களின் ஒவ்வொரு அடிக்கும் பிரதிபலனாக நன்மைகளை வழங்குகிறான். அவனது வழியில் எவ்வித உழைப்பும் வீணாகுவதில்லை." (மஜ்மூஆ இஷ்திகாராத் பாகம் 1 பக்கம் 341)

காலத்தின் இமாமின் இக்கூற்றிற்கிணங்க மக்கள் தமக்கு ஏற்படும் கஷ்டங்களை ஒரு பொருட்டாக கருதாமல் அல்லாஹ்வின் அருட்களை நாடிய வண்ணம் இந்த ஆன்மீக மாநாட்டில் கலந்து கொள்ள வருகை தருகின்றனர்.  டிசம்பர் மாதம் வட மாநிலங்களில் குளிர் நிலவுகின்ற  காலம் ஆகும். இந்த காலத்தை மக்கள் அறிந்திருந்தும் தனக்கு ஏற்படும் கஷ்டங்களை ஒரு பொருட்டாக கருதாமல் தென் இந்திய மாநிலங்களிலிருந்தும் குளிரை அனுபவிக்காத பல்லாயிரம் மக்கள் இந்த மாநாட்டில் ஆர்வத்தோடு கலந்து கொண்டு தனது ஆன்மீக தாகத்தை தீர்த்துக் கொள்ள வருகை தருகின்றனர்.

இருந்த போதிலும் இம்மாநாட்டில் கலந்து கொள்ள வருகை தரும் ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களின் விருந்தாளிகளுக்கு பசியை போக்கும் வகையிலும், குளிரிலிருந்து பாதுகாப்பு பெரும் வகையிலும் முடிந்த வண்ணம் ஜமாஅத் நிர்வாகிகள் வசதிகள் அமைத்து கொடுக்கின்றனர். ஒரு நாளில் இரு வேலை உண்ண உணவும், ஒவ்வொருவருக்கும் படுக்க பெட்டும், போர்த்திக் கொள்ள பஞ்சு நிறைந்த போர்வையும் வழங்க படுகின்றன. இதை தொடர்ந்து இந்த மாபெரும் மாநாட்டில் கலந்து கொள்ளும் மக்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாத வகையில் நிர்வாகிகள் செய்த பணிகள் குறிப்பிடத்தக்கது.
டிசம்பர் மாதம் அன்று சுமார் மூன்று நாட்கள் (26,27,28) நடந்த இந்த மாநாட்டில் பல்வேறு மார்க்க அறிஞர்கள் தத்தமது சொற்பொழிவை நிகழ்த்தினார்கள். இம்மாநாட்டில் கீழ்கண்ட வரிசையில் சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது;

1) இறை இருப்பு (நிறைவேறும் துஆவின் பார்வையில்)
2) ஹஸ்ரத் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு; எதிரிகளுடன் நடந்து கொள்ளும் முறை அன்னாரின் (ஸல்) வாழ்க்கை நடைமுறையிலிருந்து (குறிப்பாக அண்ணாரை அவமதிக்கும் எதிரிகளுடன் நடந்து கொள்ளும் முறை)
3) ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களின் உண்மைத்துவம் (அன்னாரின் முன்னறிவிப்பின் அடிப்படையில்)
4) நபித் தோழர்கள் வாழ்க்கை வரலாறு (ஹஸ்ரத் முஸ்அப் பின் உமைர் (ரலி) மற்றும் ஹஸ்ரத் மவ்லான குலாம் ரஸூல் ராஜேக்கி (ரலி))
5) பொருள் தியாகத்தின் முக்கியத்துவம் (குறிப்பாக வஸிய்யத் அமைப்பின் அடிப்படையில்)
6) ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாறு (குர்ஆனுடன் அன்னார் கொண்டிருந்த நேசம் என்ற அடிப்படையில்)
7) தற்போதைய காலகட்டத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்காக ஹஸ்ரத் ஐந்தாவது கலீஃபத்துல் மஸீஹ் அவர்கள் மேற்கொண்ட குறிப்பிடத்தக்க முயற்சிகள்
8)மார்க்க பணியை இறைவனின் ஓர் அருளாக கருதுங்கள் ! ஜமாஅத் சகோதரர்கள் மற்றும் உறுப்பினர்களின் பொறுப்புகள் (ஹஸ்ரத் ஐந்தாவது கலீஃபத்துல் மஸீஹ் அவர்களின் கூற்றிலிருந்து)
9) தேசத்தின் நேசம் மற்றும் நேர்மை (இஸ்லாம் கூறும் போதனை) (பஞ்சாபி மொழியில் உரை)
10) காலத்தின் கலீஃபாவிற்கு கீழ்படிதல் மற்றும் நேசம் கொள்வது ஓர் அஹ்மதிக்கு கடமை ஆகும்
11) தப்லீக் மைதானத்தில் வாழ்க்கையை அற்பணித்தவர்களின் தியாகங்கள் மற்றும் அவர்கள் கொண்டிருந்த இறை தொடர்பு
12) கத்மே நபுவ்வத் சம்பந்தமாக உருவாக்கியுள்ள தப்பெண்ணத்தை அகற்றுதல்

இம்மாநாட்டின் இறுதி நாளாகிய 28 ஆம் தேதி அன்று இறுதி அமர்வின் இறுதி உரையாக ஹஸ்ரத் ஐந்தாவது கலீஃபத்துல் மஸீஹ் (அய்யதஹுல்லாகுத் தஆலா....) அவர்களின் உரையாக இருந்தது. அன்னாரின் உரையை நேரடியாக MTA (முஸ்லிம் டெலிவிஷன் அஹ்மதிய்யா) வாயிலாக முழு உலகமும் கண்டு பயன் பெற்றது. அன்னார் உரையை தொடர்ந்து இறுதியாக துஆ செய்தார்கள். முழு உலகமும் ஒரே நேரத்தில் MTA வாயிலாக ஒன்றிணைந்து துஆவில் கலந்து நற்பலன் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு துஆவுடன் 124 வது காதியான் ஆண்டு மாநாடு இனிதே நிறைவடைந்தது. வல்ஹம்துலில்லாஹி அலா தாலிக்

கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.