(ஹஸ்ரத் நான்காவது கலீஃபதுல் மசீஹ் மிர்ஸா தாஹிர் அஹ்மத் (ரஹ்) அவர்களின் குத்பா பேருரை)
இன்றய ஜுமுஆ சொற்பொழிவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட திருக் குர்ஆனின் அத்தியாயம் இப்ராஹீம் ஒன்று முதல் நான்கு வரையுள்ள இந்த இறை வசனங்களில் ஹஸ்ரத் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் சிறப்புக்குரிய ஒரு பண்பை இறைவன் கூறியுள்ளான். அவர்கள் மக்களை பல்வேறு இருள்களிலிருந்து ஒளியின் பால் கொண்டு வந்தார்கள். இதே பணியினை அவர்களுடைய சீடர்களும் மேற்கொண்டு அவர்களுக்கு உதவிட முன்வருவார்கள். இதனால் நான்கு புறமும் ஒளி மயமாக ஆகின்றது.
இது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறி உள்ளார்கள்: "அஸ்ஹாபி கண்ணஜூமி, பி அய்யிஹிமிக்ததைதும் இஹ்ததைதும்" என் தோழர்கள் நட்சத்திரங்களை போன்றவர்கள். நீங்கள் அவர்களுள் யாரை பின்பற்றினாலும் உங்களுக்கு நேர்வழி கிடைத்து விடும்.
மாபெரும் இப்பணியினை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இறைவன் ஒப்படைத்துள்ளான். அவன் வானங்களையும் பூமியையும் படைத்து பரிபாலிப்பவன் ஆவான். அவனை விட்டு விட்டு மனிதனுக்கு வேறெங்கும் அடைக்கலம் கிடைக்காது. இறைவனின் கட்டளையை நிராகரிப்பவர்களுக்கு மிகவும் கடுமையான தண்டனை கிடைக்கும். துர்பாக்கியத்திற்கு ஆளான சிலர் மறுமை வாழ்வை விட இவ்வுலக வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுப்பர். இது மட்டுமல்லாமல், அவர்கள் நேரான பாதையிலிருந்து மக்களை தடை செய்து கொண்டிருப்பர். இறைவனுடைய நேரான பாதையை கோணலாக்கவும் விரும்புவர். இதனால் அம்மக்கள் இறைவனுடைய நேரான பாதையை விட்டுவிட்டு தவறான பாதையில் செல்ல விரும்புவார். இத்தகையவர்கள் தவறான வழியில் மிகவும் தூரமாக சென்று விட்டார்கள். அதாவது இவர்கள் நஜாத் எனும் ஈடேற்றம் கிடைக்காதவர்கள் ஆவார்கள். இவர்கள் நேர்வழியின் பால் திரும்பி வரமுடியாத முறையில் விலகி சென்று விடுவார்கள்.
இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சீடராக தோன்றும் ஹஸ்ரத் இமாம் மஹ்தி (அலை) அவர்களிடமும் ஒப்படைக்கப்பட்ட ஒரு மாபெரும் பணியாகும். இதனால்தான் அவர்களுக்கு ஹகமன் அதலன் (நியாயமான தீர்ப்பு வழங்குபவர்) எனக் கூறப்பட்டுள்ளது. அதாவது அல்லாஹ்வால் அமைக்கப்பட்ட நேரான பாதைக்குப் பதிலாக மக்கள் கோணலான வழிகளையும் பின்பற்றி இஸ்லாமிய மார்க்கத்தை சின்னாபின்னமாக்கி பல்வேறு வேற்றுமைகளை கொண்டிருக்கும்போது, அவர்களை அந்த இருள்களிலிருந்து வெளியேற்றி ஒளியின் பக்கம் கொண்டு வருவதற்கு ஹஸ்ரத் இமாம் மஹ்தி (அலை) தோன்றுவார்கள்.
சமுதாயத்தில் வேற்றுமைகள் அதிகமாகி விட்டன. இதனால் அவ்வேற்றுமைகளுக்கு நியாயமான தீர்ப்பு வழங்குபவர் சீர்குலைந்து கிடந்த இஸ்லாமியக் கொள்கைகளை சீர்படுத்த வேண்டியதாயிற்று.
இது குறித்து ஹஸ்ரத் இரண்டாவது கலீஃபதுல் மசீஹ் (ரலி) அவர்கள் இவ்வாறு விளக்கியுள்ளார்கள்: "ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மசீஹ் (அலை) அவர்களின் வாயிலிருந்து வந்த வசனங்கள் என் காதுகளில் ஒலிக்கின்றன. அதாவது கொள்கைகளைப் பொறுத்த வரையில் எங்களுக்கும் மற்றவர்களுக்குமிடையில் உள்ள வேற்றுமை ஈசாவின் மரணம் மற்றும் சில பிரச்சனைகளில் மட்டும்தான் என்று கூறுவது சரியல்ல. இறைவன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், திருக் குர்ஆன், தொழுகை, நோன்பு, ஹஜ், சகாத்து முதலிய ஒவ்வொன்றிலும் எங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் வேற்றுமை உண்டு.
இவ்வாக்கியங்களின் முன்பின் தொடர்புகளை நீக்கிவிட்டு பாக்கிஸ்தான் அரசாங்கம் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் மிகவும் பெருமையுடன் அத்தொடரை அரை குறையாக கூறியுள்ளது. இதன் மூலம் அஹ்மதிகள் தங்களுடைய இஸ்லாம் வேறு என்றும் ஏனைய முஸ்லிம்களின் இஸ்லாம் வேறு என்றும் ஒப்புக் கொண்டுள்ளனர் என்று அந்த வெள்ளையறிக்கை கூறுகின்றது.
"காதியானிகளுக்கும் ஏனைய முஸ்லிம்களுக்குமிடையிலுள்ள கொள்கை வேறுபாடு மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்களுடைய நபித்துவ வாதம் மட்டுமல்ல, மாறாக அவர்களுடைய இஸ்லாம், அவர்களுடைய குர்ஆன் அவர்களுடைய நோன்பு, உண்மையில் அவர்களுடைய ஒவ்வொரு காரியமும் ஏனைய முஸ்லிம்களின் ஏனைய காரியத்திற்கும் மாறுபட்டதாகும். மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்களின் மகன் மிர்ஸா பஷீருத்தீன் மஹ்மூத் அஹ்மத் அவர்கள் அல்ஃபசல் என்னும் இதழில் 30-07-1931 இல் முஸ்லிம்களுடன் உள்ள வேறுபாடுகள் என்ற தலைப்பில் வெளியான ஒரு கட்டுரையில் மேற்கண்டவாறு எழுதியுள்ளார்கள். என்று கூறி நான் ஏற்கனவே எடுத்து கூறிய வாக்கியங்களை அந்த வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
இது குறித்து நான் முதலாவதாக கூறுவது என்னவென்றால், ஹஸ்ரத் கலீஃபதுல் மசீஹ் அவர்கள் மேற்சொன்ன வாக்கியத்தை எடுத்துரைத்தவர் உண்மையிலேயே வேண்டுமென்றே பொய் கூறியுள்ளார் என்பதே ஆகும்.
ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மசீஹ் (அலை) அவர்கள் தங்களுடைய கொள்கைகளை மிகவும் விளக்கமாக எடுத்துரைத்திருப்பது அரசாங்கத்தில் உள்ளவர்களுக்கும், ஆலிம்களுக்கும், சிறுவர்களுக்கும், பெரியவர்களுக்கும், நன்றாக தெரியும். அஹ்மதிகளின் வாழ்க்கையும் அவர்களின் நடைமுறைகளும் திறந்த புத்தகம் போல் எல்லோருக்கும் முன்னால் இருக்கின்றன. அஹ்மதிகளின் குர்ஆன் வேறு, அல்லாஹ் வேறு , இஸ்லாம் வேறு, தொழுகை வேறு, நோன்பு வேறு என்று கூறுவது முற்றிலும் பொய் என்ற உண்மை எல்லோருக்கும் நன்றாக தெரியும்.
அஹ்மதிகளின் கலிமா வேறு என்று மட்டும்தான் இதுவரை அவர்கள் கூறி கொண்டேயிருந்தார்கள். ஆனால் அவர்கள் தாமாக எடுத்த நடவடிக்கைகள் காரணமாக, அஹ்மதிகளுடைய கலிமா தங்களுடைய கலிமாவேதான்; அஹ்மதிகளுடைய கலிமா வேறு என்று கடந்த 90 வருட காலமாக தாங்கள் கூறிக் கொண்டிருந்தது பொய்தான். உண்மையில் அஹ்மதிகளின் கலிமா "லாயிலாஹா இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்பதே ஆகும். ஆனால் எங்களுடைய இந்த கலிமாவை அஹ்மதிகள் கூறி கொண்டிருக்க நாங்கள் அவர்களை அனுமதிக்க மாட்டோம் என்று கூறியதன் மூலம் அஹ்மதிகளின் உண்மையை உலகிறக்கு அவர்களே அறிவித்து விட்டனர். இவ்வாறு அவர்கள் கூறிக் கொண்டிருக்கும் பொய்கள் தானாகவே அம்பலமாகிக் கொண்டிருக்கின்றன. எனவே இந்த வெள்ளை அறிக்கையில் மேற்சொன்ன வாக்கியத்தை எடுத்து கூறியவர் எவராக இருந்தாலும் அவர் தஜ்ஜாலியத்தில் திறமை மிக்கவரும் வேண்டுமென்றே பொய்யுரைத்தவரும் ஆவார். மக்களை ஏமாற்றுவதற்காக இந்த பொய்யைத் தனது அறிக்கையில் இணைத்து கொண்ட அரசாங்கமே இதற்கு பொறுப்பாகும்.
பொது வழக்கில் இத்தகு வாக்கியங்களை பயன்படுத்துவது யாவரும் அறிந்த உண்மையாகும். உதாரணமாக, ஒருவர் மற்றொருவரிடம் நான் வேறு நீ வேறு நான் ஒரு மாதிரியான மனிதன் நீ ஒரு விதமான மனிதன் என்றெல்லாம் கூறுவது உண்டு. இவ்வாறு கூறுவதனால் அந்த மனிதன் உண்மையிலேயே மனிதனல்ல; கழுதை, நாய், பூனை யாகும் என்று ஒப்புக் கொண்டதாக பொருள் படாது. எனினும் உண்மையான மனிதத் தன்மை உன்னிடம் இல்லை என்பதை எடுத்துக் காட்டுவதுதான் அதன் பொருள். இதே கருத்தைத்தான் ஹஸ்ரத் இரண்டாவது கலீஃபதுல் மசீஹ் (ரலி) அவர்கள் தங்களுடைய ஜமாத்திற்கு தெரிவிப்பதற்காக அவ்வாறு கூறினார்கள். சிறு சிறு பிரச்சனைகளுக்காக தீர்ப்பு வழங்குவதற்காக மட்டும் ஹஸ்ரத் இமாம் மஹ்தி (அலை) தோன்றவில்லை எனினும் இறைவன், திருக் குர்ஆன், மலக்குகள், நபிமார்கள், சுவர்க்கம், நரகம், மறுமை முதலியவை பற்றி முஸ்லிம்களின் தவறான நம்பிக்கைகள், அஹ்மதிய்யா ஜமாஅத்தின் நம்பிக்கைகளுக்கு மாறுபட்டனவாக இருக்கின்றன. ஹஸ்ரத் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கொண்டு வந்த உண்மையான இஸ்லாம்தான் தங்களுடையதென்றும் அவர்கள் காட்டிய இறைவன் தான் தங்களுடைய இறைவன் என்றும், அவர்களுக்கு இறங்கிய குர்ஆன் தான் தங்களுடையதென்றும் மலக்குகள், நபிமார்கள், சுவர்க்கம், நரகம், முதலியவை பற்றிய நம்பிக்கை திருக் குர்ஆனின் அடிப்படையிலும் ஹதீஸ்களின் அடிப்படையிலும் அமைந்ததாகும் என்றும் அஹ்மதிகள் வாதிக்கின்றனர்.
உண்மையான இறை பக்தியும் இறையச்சமும் கொண்ட ஒருவர் உண்மையை தெரிந்து கொள்ள விரும்பினால் இறைவனை பற்றியும், ஏனைய கொள்கைகளைப் பற்றியும் ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மசீஹ் (அலை) அவர்கள் என்ன கூறினார்கள் என்பதை பார்க்க வேண்டும். அதே சமயத்தில் அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தின் கடும் விரோதிகள் என்ன கூறியுள்ளார்கள் என்பதையும் பார்க்க வேண்டும். ஆனால் அந்த வெள்ளை அறிக்கையில் அவ்வாறு அலசி ஆராயப்படவில்லை.

இறைவனுடைய வல்லமைகளும் குண இயல்புகளும் உயிருள்ளவர்களிடத்தில் மட்டுமல்லாமல், மரணித்தவர்களிடத்திலும் காணப்படுகின்றன என்பது பரேல்வி பிரிவை சார்ந்தவர்களின் கொள்கையாகும், அவர்களின் கொள்கைப்படி, மரணித்தவர்களின் கபருகளிலும் இறைவனுடைய வல்லமைகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இந்த விஷயத்தில் அந்த ஆவிகள் இறைவனுக்கு இணைகளாக இருக்கின்றன. இந்த கொள்கைப்படி இன்று பாக்கிஸ்தானில் பல்லாயிரக்கணக்கான கபுருகள் (கல்லறைகள்) இருக்கின்றன. அவற்றில் பல்வேறு கொடிகள் பறந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு கபருக்கும் ஒவ்வொரு சிறப்பு உள்ளது என்றும் கூறப்படுகின்றது. சில கபருகள் குழந்தை தரக்கூடியது என்றும் சில கபருகள் நோயை குணப்படுத்தக் கூடியதென்றும் இவ்வாறு அந்த கபருகள் பல்வேறு வகையான சிறப்புகளை கொண்டிருக்கின்றனவென்றும் கூறப்படுகின்றது. இவ்வாறு இறைவனிடம் மட்டும் கேட்க வேண்டிய நாட்டங்கள் கபருகளாகிய இந்த கல்லறைகளிடம் கேட்கப்படுகின்றன. இதற்கு ஷரியத் போர்வையும் போரத்தப்படுகின்றது.
"இகாமுஷ் ஷரியத்" பாகம் 2 பக்கம் 155 இல் பரேல்வி வகுப்பைச் சார்ந்த மௌலவி அஹ்மத் ரிசாக் கான் என்பவர் பின்வருமாறு எழுதியுள்ளார், "வலிமார்களின் கபருகளைப் பற்றி நிராசை அடைவது குஃப்ராகும்" "மவாயிதே நயிமா" எனும் நூலில் (10:107) "مَا لَا یَنْفَعُکَ وَلَا یَضُرُّکَ" என்ற திருக் குர்ஆனின் வசனத்தின்படி உங்களுக்கு நன்மையையோ தீங்கையையோ தர முடியாதவர்களிடம் (அதாவது இறைவனைத் தவிர வேறு எவரிடமும்) நீங்கள் எதுவும் கேட்கக் கூடாது என்ற கருத்திற்கேற்ப, உங்களுக்கு நன்மையையோ, தீங்கையையோ தர முடியாத சிலைகளிடம் நீங்கள் எதையும் கேட்கக்கூடாது. ஆனால் நபிமார்களிடமும், வலிமார்களிடமும் அவர்கள் மரணமடைந்த பின்னரும் கூட நீங்கள் உங்களை நாட்டங்களை கேட்டுக் கொள்ளலாம் என்று எழுதப்பட்டுள்ளது.
இறைவனின் தன்மையை குறித்து பரேல்விகளுக்கும், தேவ்பந்திகளுக்கும் இடையே பல்வேறு விவாதங்கள் நீண்ட காலமாக நடைபெற்று வருகின்றன. அதாவது அல்லாஹ் பாவம் செய்வானா? பாவம் செய்வதற்குரிய சக்தி அவனுக்கு இருக்கிறதா? இல்லையா? என்பதே அவ்விரு சாராரும் எடுத்து கொண்ட விவாதம். இறைவனுக்கு பொய் கூறுவதற்குரிய சக்தியும், இயல்பும் இல்லை என்று நாங்கள் ஒப்புக் கொள்வதில்லை. ஏனென்றால் அவனுக்கு அந்த சக்தி இல்லையாயீன் மனிதனுக்கு இறைவனை விடவும் அதிகமான சக்தியும் இயல்பும் இருப்பதாக நாம் ஒப்புக் கொள்ள வேண்டியது வந்துவிடும் என்று ஒரு சாரார் வாதிடுக்கின்றனர்.
பொய் கூறுதல் மட்டுமல்ல, வெறுக்கத்தக்க இதர செயல்களும் இறைவனுடைய வல்லமைக்கு உட்பட்டவை ஆகும் என்ற வாதமும் அவர்களுக்கிடையில் நடைபெற்று வருகின்றது. உதாரணமாக திருடுதல், மது அருந்துதல், அநீதியிழைத்தல், அறியாமை முதலிய இயல்புகளும் இறைவனிடம் உள்ளன என்று "தத்கிறதுல் கலீல்" என்ற நூலின் பக்கம் 86 இல் ஆஷிக் அலி மீரட்டு என்பவர் எழுதியுள்ளார்.
விசித்திரமான இவ்விரு கருத்துக்களும் இறைவனுடைய மேலான தன்மைகளுக்கு அப்பாற்பட்டதும், நேர்மாற்றமானதும் ஆகும். ஒரு கூட்டத்தார், இறைவனை ஒரு சாதாரண மனிதனுடன் ஒப்பிட்டுக் கூறுகின்றனர். மற்றொரு கூட்டத்தாரோ, ஒரு மனிதனை இறைவனோடு ஒப்பிட்டுக் கூறுகின்றனர். ஆனால் நிச்சயமாக ஹஸ்ரத் ரசூல் (ஸல்) அவர்களுக்கு காட்சியளித்த இறைவன் இப்படிப்பட்டவனல்ல.
இறைவனைப் பற்றிய இவர்களின் கருத்து எல்லாக் குறைபாடுகளிருந்தும் தூய்மையானவனும் எல்லா சிறப்புப் பண்புகளையும் ஒருங்கே பெற்றவனும் பிரபஞ்சங்களையெல்லாம் படைத்து அவற்றை சரியாக கவனித்து வருபவனாகிய அந்த இறைவனைப் பற்றியது அல்ல. திருக் குர்ஆனில் விளக்கப்பட இறைவனுக்கும் இவர்களின் விவாதங்களில் காணப்படும் இறைவனுக்கும் பாரதூரமான வேற்றுமையுள்ளது! ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த இறைவனையே அஹ்மதி முஸ்லிம்கள் நம்புகின்றனர்.
எனவே நீங்கள் கூறிக் கொண்டிருக்கும் இறைவன்தான் அல்லாஹ் என்றால், இறைவனின் மீது ஆணையாக எங்களுடைய இறைவன் வேறுதான்; உங்களுடைய இறைவன் வேறொருவன்தான். இறைவனைப் பற்றி இவர்கள் கூறிக்கொண்டிருக்கும் கட்டுக்கதைகளைக் கேட்டு உண்மையான ஒரு மூமினுடைய உள்ள மும்புத்தியும், சிந்தனையும் தடுமாற்றம் அடைந்து கொண்டிருக்கிறது.
ஹஸ்ரத் செய்யது அப்துல் காதர் ஜெய்லானி (ரஹ்) அவர்களைப் பற்றி "குல்தஸ்தயே கராமாத்" எனும் நூலில் ஒரு நீண்ட கதை குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பக்கம் 22 இல் ஒரு கிழவியின் கதை வருகிறது, "அந்த கிழவியுடைய வாலிபப்பருவத்திலுள்ள மகன் ஒருவன் தோணியில் பயணம் செய்த போது, அத்தோணி நதியில் மூழ்கியதால் அவன் மரணமடைந்து விட்டான். இதனால் அக்கிழவி 12 வாருங்களாக அந்த நதிக்கரையில் உட்கார்ந்து தனது மகனை நினைத்து அழுதுக் கொண்டே இருந்தாள். ஒரு நாள் ஹஸ்ரத் அப்துல் காதல் ஜெய்லானி (ரஹ்) அந்த பக்கமாக சென்று கொண்டிருந்த போது, அக்கிழவியிடம், நீ எதற்காக அழுது கொண்டிருக்கிறாய் என்று விசாரித்தார்கள். இதற்கு அவள் தனது அழுகைக்கான காரணத்தை கூறியதும், நீ அதற்காக கவலைப் பட வேண்டாம் எனக் கூறி அந்த நதியின் பக்கம் ஒரு பார்வையிட்டார்கள். இதனால் 12 வருடங்களுக்கு முன் மூழ்கிக் கிடந்த அத்தோணி, அதிலுள்ள எல்லா மக்களுடனும் மீண்டும் தண்ணீருக்கு வெளியில் வந்து நின்றது. அத்தோணியிலுள்ள மக்கள் எல்லாரும் சிரித்துக் கொண்டும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து கொண்டுமிருந்தனர்.
இறைவனைப் பற்றிய இவர்களின் நம்பிக்கை இதுதான். அதாவது இறைவனுக்கு மட்டும் உள்ள வல்லமை மனிதர்களுக்கும் தரப்படுகின்றது.
அடுத்து மலக்குகளைப் பற்றியும் மிகவும் தவறான கொள்கைகளைப் தான் இவர்கள் கொண்டுள்ளனர். இவர்கள் உலக மக்களுக்கு முன்னாள் எத்தகைய இஸ்லாத்தைதான் போதிக்கின்றார்களோ என்று அஹ்மதிகளாகிய நாங்கள் அஞ்சுகிறோம்.
மௌலானா அஹ்மத் ஹுஸைன் முஹத்திஸ் திஹ்லவி என்பவர் "அஹ்சனுத்தஃபாசீர் " பாகம் 1 பக்கம் 106-108 இல் மலக்குகளைப் பற்றிக் கீழ்க்கண்டவாறு வரைந்திருக்கின்றார்.
"மலக்குகள் மிகவும் அதிகமான இறை வணக்கம் செய்து கொண்டிருந்த இரண்டு மலக்குகளான ஹாரூத்தையும், மாரூத்தையும் சோதனை செய்வதற்காக இறைவன் தேர்ந்தெடுத்தான். (அதாவது அவ்விருவரும் சாதாரண மலக்குகள் அல்ல; மிகச் சிறந்த மலக்குகள்; இறைவன் அதிகமாக வணங்கிக் கொண்டிருந்தவர்கள்) பின்னர் மனிதனுடைய எல்லாவிதமான இச்சைகளையும் அந்த இரண்டு மலக்குகளுக்கும் கொடுத்து கூஃபாவிலுள்ள பாபுல் என்னுமிடத்திற்கு அவர்களை அனுப்பினான். அவர்கள் அங்கு சென்று சுஹ்ரா என்னும் ஒரு பாரசீக பெண்ணுடன் காதல் கொண்டார்கள். அவளுடைய பேச்சைக் கேட்டு, அவர்கள் இருவரும் மது அருந்தினார்கள். அவர்கள் மது அருந்தியதின் காரணமாக விபச்சாரமும் ஷிர்க்கும் இதனை தொடர்ந்து கொலையும் செய்தார்கள். இந்த பாவச்செயல்களின் காரணமாக அன்றிலிருந்து இறுதி நாள் வரை அவர்களின் மீது இறை தண்டனைகள் தொடர்ந்து இறங்கிக் கொண்டேயிருக்கின்றன.
அடுத்து ஷியாக்கள், மலக்குகளைப் பற்றி என்ன கருத்து கொண்டிருக்கின்றார்கள் என்பதைப் பாருங்கள்! "ஹஸ்ரத் இமாம் ஹுஸைனுக்கு கிடைத்து கொண்டிருந்த துன்பங்களையும் கண்டு மலக்குகள் இறைவனிடம் சென்று மிகவும் பணிவுடன் ஹஸ்ரத் இமாம் ஹுஸைனை காப்பாற்றி உதவி புரிந்திட அனுமதி கோரினார்கள். இறுதியில் இறைவன் அனுமதி கொடுத்தான். ஆனால் மலக்குகள் வானத்திலிருந்து பூமிக்கு இறங்கியதும் இமாம் ஹுஸைன் ஷஹிதாக்கப்பட்டு விட்டார்கள். அதாவது இறைவன் அனுமதி கொடுப்பதில் சிறிது கால தாமதம் ஏற்பட்டுவிட்டது. அல்லது மலக்குகள் அங்கு செல்வதில் சிறிது கால தாமதம் ஏற்பட்டுவிட்டது. (ஜிலாவுல் உயூன் அத்தியாயம் 5, பக்கம் 498,540)
இவ்வாறு இவர்கள் இறைவனைப் பற்றியும் மலக்குகளைப் பற்றியும் நகைப்பிற்குரிய கருத்துக்கள் கொண்டிருக்கின்றனர். ஆனால் அதே சமயத்தில் "ஹகமன் அதலன்" ஆகத்தோன்றிய ஹஸ்ரத் இமாம் மஹ்தி (அலை) அவர்களுக்கெதிராக மிகவும் கீழ்தரமாக பேசிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் இறைவனைப் பற்றியும் மலக்குகளைப் பற்றியும் ஹஸ்ரத் இமாம் மஹ்தி (அலை) அவர்கள் என்ன கருத்துக் கொண்டிருந்தார்கள் என்பதை இவர்கள் படித்திருந்தால், அவ்வாறு கீழ்தரமாக பேசியிருக்க மாட்டார்கள். அவர்களின் மீது இவர்களுக்கு எந்த ஆட்சேபனையும் எழாது.
மேலும் மலக்குகளைப் பற்றி இவர்கள் பின்வருமாறு எழுதி வைத்துள்ளார்கள். "ஒரு மலக்கு ஹஸ்ரத் அலியிடம் வந்து, அஸ்ஸலாமு அலைக்கும் யா வசிய்ய ரசூலுல்லாஹி வ கலீஃபதஹூ; நான் கிளர் நபியை சந்திக்க நாடுகிறேன் தயவு செய்து எனக்கு அனுமதி தாருங்கள் என்று கேட்டார். அதற்கு ஹஸ்ரத் அலி அனுமதி வழங்குகிறார்கள் அப்பொழுது ஹஸ்ரத் சல்மான் ஃபார்ஸி அங்கு நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் ஹஸ்ரத் அலியிடம் மலக்குகள் கூட தங்களுடைய அனுமதி இல்லாமல் எவரையும் சந்திக்க முடியாத என்று கேட்டார்கள். அதற்கு அலியவர்கள், வானங்களை எந்தத் தூனுமில்லாமல் நிலை நாட்டிய இறைவன் மீது ஆணையாக, எந்த மலக்கும் என்னுடைய அனுமதியில்லாமல் எந்த நொடியிலும் ஓர் அங்குலம் கூட நகரவே முடியாது என்று பதிலளித்தார்கள்! என்னுடைய நிலை போன்றே எனது பிள்ளைகளான ஹஸன், ஹுஸைன் ஆகிய இருவரின் நிலையுமாகும் என்றும் கூறினார்கள். (அல்ஹக்குமா அலி துர்ரே நஜாப்)
இறைவன் திருக் குர்ஆனில், எனது அனுமதியில்லாமல் மலக்குகளால் எதையும் செய்ய முடியாது. அவர்களுக்கு நான் கட்டளையிடுவதைத்தான் அவர்கள் செய்வார்கள் என்று கூறுகின்றான். ஆனால் இங்கு இறைவனின் வசனத்திற்கெதிரான போதனைச் செய்யப்படுகின்றது.
அஹ்மதி முஸ்லிம்களின் குர்ஆன் வேறு மற்ற முஸ்லிம்களின் குர்ஆன் வேறு என்று இவர்கள் கூறும் ஆட்சேபனைக்கு பதில் தருவதற்கு முன் ஓர் உண்மையை உங்களிடம் கூறுகிறேன்.
ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மசீஹ் (அலை) அவர்கள் திருக் குர்ஆன் மீது கொண்டிருந்த நேசம் எத்தகையது என்றால் வேறெவரும் போற்றிராத அளவு அதனை புகழ்ந்து பேசியுள்ளார்கள். உதாரணமாக அவர்கள் அதை குறித்து ஒரு கவிதையில் பின்வருமாறு புகழ்ந்து பாராட்டியுள்ளார்கள்.
"இறைவா! உனது குர்ஆனை எப்போதும் முத்தமிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்பதும் அதனை எப்போதும் வலம் வந்து கொண்டு இருக்க வேண்டும் என்பதும் என்னுள்ளத்தின் குறையாத ஆசையாக இருந்து கொண்டிருக்கிறது. ஏனென்றால் இதுவே எனத் கஅபாவாக இருக்கிறது."
இத்தகைய பாராட்டுகள் உண்மையான ஒரு நேசருடைய வாயிலிருந்தே தவிர வேறெவருடைய வாயிலிருந்தும் ஒரு போதும் வெளி வராது. ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மசீஹ் (அலை) அவர்கள் திருக் குர்ஆனுக்கு செய்த தொண்டுகளுக்கும், அதன் மீது கொடுக்கப்பட்ட ஆட்சேபனைகளுக்கும் அவர்கள் அளித்த பதில்களுக்கும் நிகரானவற்றை வேறெங்குமே காண முடியாது.
ஆலிம்கள் அறியாமையின் காரணமாக திருக் குர்ஆனில் எத்தனையோ வசனங்கள் ரத்து ஆகப்பட்டவையாக (منسوخ) ஆக இருக்கின்றன என்றும் கூறினார்கள். இவ்வாறு திருக் குர்ஆனுக்கு எதிராக மாபெரும் தாக்குதலை இந்த ஆலிம்கள்தான் செய்திருக்கின்றார்கள். ஆனால் ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மசீஹ் (அலை) அவர்களோ திரு குர்ஆனில் எந்த வசனமும் எந்த புள்ளியும் ரத்து செய்யப்படாமல் பாதுகாக்கப்பட்டிருக்கிறது என்று நிரூபித்து காட்டினார்கள்.
இத்தகு திருக் குர்ஆனைக் குறித்து மற்ற முஸ்லிம்களின் பெரியோர்கள் என்ன கூறி உள்ளார்கள் என்பதற்கான சில உதாரணங்களை இப்போது உங்களுக்கு எடுத்து காட்டுகிறேன்.
தஃப்சீரே ஸாஃபி என்பது ஷியாக்களிடத்தில் நம்பத்தகுந்த திருக் குர்ஆன் விரிவுரை நூலாகும். இந்நூலின் பக்கம் 22, பக்கம் 411 மற்றும், தஃப்சீர் லவாமுத் தன்ஸீல் பக்கம் 4 இல் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது:
"உண்மையான குர்ஆன் காணாமல் போய்விட்டது. தற்போதைய குர்ஆனில் 10 பக்கங்கள் மறைந்து விட்டன. சில வசனங்களில் மாறுதல் இருக்கிறது."
ஷியாக்களுடைய நூர்தன் என்ற நூலில் 37 ஆம் பக்கத்தில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது:
"திருக் குர்ஆன் ஹஸ்ரத் அலிக்குதான் இறக்கப்பட்டது. ஆனால் தவறுதலாக ஹஸ்ரத் முஹம்மது நபியிடம் போய் சேர்ந்து விட்டது. இதன் விளக்கம் ஷியாக்களின் பல்வேறு நூல்களில் காணப்படுகிறது. அதாவது ஜிப்ரீல் (அலை) அவர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுவிட்டது. ஜிப்ரீல் அங்கு சென்ற போது ஹஸ்ரத் அலியுடன் ஹஸ்ரத் முஹம்மது நபி (ஸல்) அவர்களும் உட்காந்திருந்தார்கள். அப்போது ஜிப்ரீல் (அலை) அவர்கள் ஹஸ்ரத் அலிக்கு வஹியை அறிவிப்பதற்கு பதிலாக ஹஸ்ரத் முஹம்மது நபிக்கு அறிவித்து விட்டார்கள்."
திருக் குர்ஆனின் விரிவுரைகளின் மூலம் அதன் மீது செய்யபட்ட அநீதுகளும், தாக்குதல்களும் எடுத்து கூற முடியாத அளவிற்கு மிகவும் அதிகமாக இருக்கின்றன. உரிய நேரத்தில் ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மசீஹ் (அலை) அவர்கள் தோன்றாமல் இருந்திருந்தால், திருக் குர்ஆன் ஹஸ்ரத் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மீது இறக்கப்பட்டது என்ற உண்மை மக்களுடைய உள்ளங்களிலிருந்து மறைந்து இருக்கும்.
"லா ரைப ஃபீஹி" இதில் எந்தவிதமான ஐய்யத்திற்கும் இடமில்லாத முழுமையான வேத நூல் என்று இறைவனே சிறப்பித்து கூறி இருக்கும்போது திருக் குர்ஆனைப் பற்றி பல்வேறு சந்தேகத்திற்கிடமான செய்திகளை இட்டுக் காட்டி விரிவுரை என்ற பெயரால் பரப்பி இருப்பதை பார்க்கும்போது நம்முடைய உள்ளதிற்கு நடுக்கம் ஏற்படுகிறது.
தம்மை பற்றி பெரிய ஆராய்ச்சியாளர் என்று கூறிக் கொண்டிருக்கும் ஓர் ஆலிம், ஃபதாவா நயீமியா" எனும் நூலில் "எல்லா கோலங்களும் விண்ணில் சுற்றிக் கொண்டிருக்கின்றன" என்ற திருக் குர்ஆன் வசனதுக்கு விளக்கம் தரும்போது, பின்வருமாறு எழுதியுள்ளார்:
"பூமி ஒரு போதும் சுற்றி கொண்டிருப்பதில்லை ஏனென்றால் அது சுற்றி கொண்டிருக்குமாயீன், மனிதன் தங்கியிருக்கும் இடத்தின் முகப்பு (மேற்பகுதி) மாற்றமடைந்து கொண்டே இருக்க வேண்டும். உதாரணமாக, காலையில் எனது வீட்டின் முகப்பு மேற்கு திசையை நோக்கி இருந்தால், மாலையில் கிழக்கு திசையை நோக்கி இருக்க வேண்டும், மதியம் வேறு திசையை நோக்கி இருக்க வேண்டும். ஆனால் ஒரு போதும் அவ்வாறு இருப்பதாக நாம் காண்பதில்லை என்று கூறி தற்போதைய விஞ்ஞானிகளின் கருத்தை முறியடித்திருக்கின்றான். இந்த பூமி ஒரே இடத்திலேயே நிலைத்து நிற்கின்றது என்பதற்கு இன்னும் எத்தனையோ சான்றுகள் இருக்கின்றன. என்னுடைய ஆராய்ச்சிக்கு ஏற்ப காந்தத்தைத் தவிர வேறெதிலும் ஈர்ப்பு சக்தி இல்லை. மற்றொரு ஆயத்திற்கு விளக்கம் தரும்போது, கற்களும் மற்ற கனமான பொருட்களும் மேலிருந்து கீழ் நோக்கி விழுவதற்கு காரணம், பூமியின் ஈர்ப்பு சக்தி அல்ல! மாறாக இறைவனை பயந்துதான் அவ்வாறு விழுகின்றன" (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்) ஆராய்ச்சியாளரான இந்த ஆலிமிடம்தான் நியூட்டனும், ஐன்ஸ்டீனும் இப்போது பிச்சை வாங்க வேண்டிய நிலைக்கு ஆளாகி இருக்கின்றார்கள் போலும்.
இவ்வாறு நீங்கள் விளக்கம் அளித்திருக்கும் இந்த குர்ஆனைத்தான் உலகின் முன் வைத்து அதனை ஏற்றுக் கொள்ளுமாறு நீங்கள் கூறப்போகின்றீர்களா?
பிரசித்து பெற்ற திருக் குர்ஆன் விரிவுரையாளர் அல்லாமா உலூசி என்பவர் தமது திருக் குர்ஆன் விரிவுரையில், காஃப் எனும் அத்தியாதிற்கு விளக்கம் எழுதும்போது, பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்;
"இந்த பூமிக்கப்பால், இறைவன் ஒரு சமுத்திரத்தை உண்டாக்கி இருக்கின்றான். அந்த சமுத்திரம் இந்த பூமியை முற்றுகை இட்டு இருக்கின்றது. அதற்கும் அப்பால் ஒரு மலை இருக்கின்றது. அதுதான் காஃப் மலை என்று வழங்கப்படுகின்றது. இந்த வானம் அதன் மீதுதான் நிலை நாட்டப்பட்டிருக்கின்றது. அந்த மலைக்குப் பின்னால் இந்த பூமியை போன்ற வேறொரு பூமி இருக்கிறது. இரண்டாவது வானம் அதன் மீதுதான் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறுதான் ஏழு பூமிகளும், ஏழு கடல்களும், ஏழு மலைகளும், ஏழு வானங்களும் இருக்கின்றன." (தஃப்சீர் ரூஹுல் மஆனி, ஜுஸூ 26, பக்கம் 176)
அபுல் ஆலா மவ்தூதி என்பவர் திருக் குர்ஆனுக்கு செய்திருந்த விரிவுரையிலிருந்து ஒரு எடுத்துக்காட்டை ஏற்கனவே கூறியிருந்தேன். அவர் தமது தஃப்ஹீமுல் குர்ஆன் எனும் திருக் குர்ஆன் விளக்கவுரையில் அத்தியாயம் சாஃப்ஃபாத், அத்தியாம் துக்கான் ஆகியவற்றில் வந்திருக்கும் "ஹூருல் ஐன்" களைப் பற்றி பின்வருமாறு விளக்கியுள்ளார்:
"இந்த வசனங்களில் கூறப்பட்டிருக்கும் கூடாரங்கள் என்பது, அரசர்கள் அந்தப்புரங்களில் அமைக்கும் அரண்மனைகளைப் போன்றவைகளாகும். அந்த கூடாரங்களில் அழகிகள் இருப்பார்கள். இந்த அழகிகள் முஸ்லிம்கள் அல்லாதவர்களுடைய பருவமடையாத குமாரிகள் ஆவார்கள். இவர்கள் சுவனபதிக்குள் போக முடியாது. இதனால் சுவனப்பதிக்கு வெளியிலுள்ள தோட்டங்களில் அமைக்கப்பட்ட கூடாரங்களில் இருப்பார்கள். சுவனப்பதியில் பிரவேசித்த நல்லடியார்கள் தங்கள் மனைவிமார்களுடன் இருப்பார்கள். ஆயினும் மற்ற பெண்களையும் சந்தித்து உடலுறவு கொள்ள அவர்கள் ஆசைப் படுவார்கள். அப்போது சுவனப்பதிக்கு வெளியிலுள்ள கூடாரங்களுள் அடைக்கப்பட்டிருக்கும் முஸ்லிம்களல்லாத அழகிகளுடன் இணைந்து உறவாட இறைவன் அவர்களுக்கு அனுமதி அளிப்பான். இரவு வேளைகளில் அம்மங்கையர்களுடன் சேர்ந்து இருந்துவிட்டு பின்னர் திரும்பிவிடுவார்கள்." (தஃப்ஹீமுல் குர்ஆன், பாகம் 5, பக்கம் 271).
ஹணஃபி மத்ஹபை சேர்ந்த நூல் "ரத்துல் முக்தார் அலா துர்ரி முக்தாரிஷ் ஷாமி" என்பதன் பாகம் 1, பக்கம் 154 இல் பின்வருமாறு எழுதப்ப்ட்டுள்ளது:
"எவருக்காவது மூக்கிலிருந்து இரத்தம் வந்தால் ஃபாத்திஹா அத்தியாத்தை இரத்தத்தால் எழுதி அவருடைய நெற்றியுலும், மூக்கிலும் தடவ வேண்டும். இதனால் குணம் கிடைத்துவிடும். இதே போன்று (இறைவன் நம்மை பாதுகாப்பானாக) ஃபாத்திஹா அத்தியாத்தை மூத்திரத்திலும் எழுதலாம்."
பாருங்கள், இதுதான் இவர்களுடைய மார்க்கத் போதனை! இறைவன் ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மசீஹ் (அலை) அவர்களை தோற்றுவித்து நம்மையெல்லாம் மிக கேவலமான போதனைகளிலிருந்து காப்பாற்றியுள்ளான். இதற்க்காக நாம் அவனுக்கு மிகவும் அதிகமாக நன்றி செலுத்த வேண்டும்.
இப்போது நபிமார்களைப் பற்றி இவர்களுடைய கருத்து என்னவென்பதை பார்ப்போம்.
நபிமார்களைப் பற்றி அஹ்மதிய்யா ஜமாஅத்தின் நம்பிக்கையையும், கொள்கையையும் குறித்து ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மசீஹ் (அலை) அவர்கள் தங்களுடைய நூல்களில் மிகத் தெளிவாக எழுதியுள்ளார்கள். அவற்றின் சாராம்ஸத்தை ஹஸ்ரத் இரண்டாவது கலீஃபதுல் மசீஹ் (ரலி) அவர்கள், "தஅவதுல் அமீர்" எனும் நூலின் 144 ஆம் பக்கத்தில் எழுதியுள்ளார்கள். அதனை இப்போது படித்து காட்டுகிறேன்.
"இறைவனுடைய எல்லா நபிமார்களும் அனைத்து பாவங்களிலிருந்தும், தவறுகளிலிருந்தும் காப்பாற்ற பட்டவர்கள் ஆவர். உண்மையிலேயே அவர்கள் உயிருள்ள முன்மாதிரிகள் ஆவர். அவர்கள் இறைவனின் பண்புகளைப் பிரதிபலித்து காட்டகூடியவர்கள் ஆவர். அவர்கள் தங்களுடைய தூய்மையான வாழ்க்கையின் மூலம் இறைவனுடைய தூயத்தன்மையை எடுத்து காட்டுபவர்கள் ஆவர்.
ஹஸ்ரத் ஆதம் (அலை) ஷரியத்திற்கு மாற்றம் செய்ததில்லை. ஹஸ்ரத் நூஹ் (அலை) அவர்கள் பாவம் செய்யவில்லை. ஹஸ்ரத் இப்ராஹீம் (அலை) அவர்கள் ஒரு போதும் பொய்யுரைத்ததில்லை. ஹஸ்ரத் யாகூப் (அலை) அவர்கள் ஒரு போதும் எவரையும் ஏமாற்றியதில்லை. ஹஸ்ரத் யூசுஃப் (அலை) அவர்கள் ஒரு போதும் தீய நடத்தையில் நாட்டம் கொண்டதில்லை. ஹஸ்ரத் மூஸா (அலை) அவர்கள் அவசியமில்லாமல் எவரையும் கொலை செய்யவில்லை. ஹஸ்ரத் தாவூத் (அலை) அவர்கள் எவருடைய மனைவியையும் பரித்ததில்லை. ஹஸ்ரத் சுலைமான் (அலை) அவர்கள் ஒரு போதும் எந்த முஷ்ரிக் பெண்ணையும் காதலித்ததும் இல்லை. தங்களுடைய கடைமைகளை மறந்ததும் இல்லை. ஹஸ்ரத் முஹம்மது ரசூலுல்லாஹி (ஸல்) அவர்களும் சிறிய பெரிய எந்த பாவமும், எந்த குற்றமும், எந்த தவறும் செய்ததில்லை. அவர்கள் எல்லா வகையான குற்றம் குறைகளிலிருந்தும் தூய்மையாக்கப்பட்டவர்கள் ஆவர்கள். எவர் நபிகள் நாயகத்தை (ஸல்) பற்றி குறை கூறுகின்றாரோ அவர் உண்மையிலேயே தமது குறைகளைத்தான் எடுத்துரைக்கின்றார்."
இதுவே நபிமார்களைப் பற்றி அஹ்மதிய்யா ஜமாஅத்தின் கொள்கையும், நம்பிக்கையும் ஆகும். ஆனால் அந்த நபிமார்களைப் பற்றி பிற முஸ்லிம்களின் நம்பிக்கையும் கொள்கையும் என்னவென்று பாருங்கள்.
"தஃப்சீர் ஜலாலைன் மஆலிமுத் தன்ஸீலில்" ஹஸ்ரத் ஆதம் (அலை) அவர்கள் ஷிர்க்கு செய்ததாக எழுதப்பட்டுள்ளது. அடுத்து அதில், ஹஸ்ரத் இத்ரீஸ் (அலை) அவர்கள் பொய்யுரைத்து சுவர்க்கத்தில் நுழைந்து விட்டார்கள் பின்னர் அங்கிருந்து வெளியே வர மறுத்துவிட்டார்கள் என்று எழுதப்பட்டுள்ளது. அதாவது சுவர்க்கத்தில் நுழைவதற்கு இதுவும் ஒரு வழியாம்; பொய் கூறி சுவர்க்கத்தில் நுழையும் இந்த புதிய வழி இந்த முஃபஸ்சீருக்கு (குர்ஆன் விரிவுரையாளர்களுக்கு) மட்டும்தான் தெரிந்திருக்கிறது போலும்.
தஃப்சீர் கஷ்ஷாஃபில் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது:
ஹஸ்ரத் லூத் நபி (அலை) அவர்கள் தங்களுடைய நாட்டிலுள்ள முக்கியஸ்தாளர்களின் மன இச்சைகளை பூர்த்தி செய்து கொள்வதற்க்காக தங்களுடைய வாலிப பெண்களை அவர்களுக்கு கொடுக்க முன்வந்தார்கள்! (இறைவன் நம்மை பாதுகாப்பானாக) தூய்மையான வாழ்க்கையை மக்களுக்குக் கற்று கொடுப்பதற்காகவும் அவர்களுக்கு சிறந்த முன்மாதிரிகளாக இருப்பதற்காகவும் இறைவனால் தோற்றுவிக்கப்பட்ட நபிமார்களுள் ஒருவராகிய ஹஸ்ரத் லூத் நபி (அலை) அவர்கள் தங்களுடைய பெண்மக்களையே அந்தச் சமுதாய மக்களின் விருப்பத்திற்கு அர்ப்பணம் செய்தார்களாம். வெறிப் பிடித்தவர்களாகிய அந்த மக்களும் கூட்டம் கூட்டமாக லூத் நபியுடைய வீட்டிற்கு வந்தார்களாம். வெறிப் பிடித்த அந்த மக்கள் முன் தங்களுடைய இரண்டு குமரிப் பெண்களை சமர்பித்தார்களாம். இதுதான் இவர்களுடைய திருக் குர்ஆன் விளக்கவுரை, அறியாமைக்கும் ஓர் எல்லை இருக்க வேண்டும்!!
ஹஸ்ரத் தாவூத் (அலை) அவர்களைப் பற்றி தஃப்சீர் ஜலாலைன், தஃப்சீர் காஸின், தஃப்சீர் ஜாமியுல் பயான் முதலிய திருக் குர்ஆன் விரிவுரை நூற்களில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது:
"ஹஸ்ரத் தாவூத் நபி (அலை) அவர்கள் மிஹ்ராபில் (வணங்குமிடத்தில்) நின்று கொண்டு இறைவனை வணங்கி கொண்டிருந்தார்கள். அப்போது தங்கப் புறா ஒன்று அங்கு பறந்து வந்தது. தாவூது நபி (அலை) அவர்கள் அதனை பிடிக்க முயன்றார். அது மேல் மாடிக்கு பறந்து சென்றது. இவர்களும் அங்கு சென்று பார்த்தபோது தொலைவில் ஒரு பெண் குளித்துக் கொண்டிருப்பதை கண்டார்கள். உடனே அப்பெண்ணின் கணவனை யுத்திதிற்கு அனுப்பி மரணம் அடைய செய்தார்கள். பின்னர் அவளை மணந்து கொண்டார்கள். இதற்கு முன் அவர்களுக்கு 99 மனைவிமார்கள் இருந்தார்கள். அதாவது ஹஸ்ரத் தாவூது நபி (அலை) அவர்கள் இறைவனை வணங்கி கொண்டிருந்த போது ஒரு தங்க புறாவை கண்டதும் இறைவனையும், அவனுக்கு செய்து கொண்டிருந்த வணக்கத்தையும் மறந்துவிட்டார்கள். அவர்கள் மாபெரும் அரசராகவும் பெரும் செல்வந்தராகவும் இருந்துங் கூட ஓர் அற்பமான தங்கத்திற்காக இறைவனையும், வணக்கத்தையும் மறந்து விடுகிறார்கள். இது மட்டுமல்லாமல் மேல் மாடியில் நின்று ஒரு பெண் குளிப்பதை கண்டதும் அந்த தங்க புறாவையும் மறந்து விட்டு அவளை அடையத் துடிக்கின்றார்கள்! (நஊதுபில்லாஹி மின்ஹா) இவ்வாறான உளறல்களிலிருந்து இறைவன் நம்மை பாதுகாப்பானாக.
இன்று உலகிலுள்ள மிகவும் கீழ்த்தரமான ஓர் அரசரைப் பற்றி இவ்வாறு கூறப்பட்டால் அவர் வெட்கத்தாலும் மானத்தாலும் தன்னை மாய்த்துக் கொள்ள ஆயத்தமாகிவிடுவார். இவ்வாறு கூறப்படுவது உண்மையாக இருந்தால் அந்த நாட்டிலுள்ள மக்களே பெரும் புரட்சியை ஏற்படுத்தியிருப்பார்கள். இது சாதாரண குற்றமில்லை. அதாவது ஓர் அரசர் தமது தளபதியின் மனைவியைக் கண்டு காதல் கொண்டு அந்தத் தளபதியை கொலை செய்து அவளைத் திருமணம் செய்து கொள்வது பெரும் அநீதியாகும் ஆனால் ஒரு நாத்திகன் கூட இத்தீய செயலை செய்ய மாட்டான்.
திருக் குர்ஆனின் விரிவுரையாளர்களாகிய இவர்களுக்கு கடுகளாவாவது இறையச்சமிருந்தால் நபிமார்கள் மீது இத்தகு இழிவான கட்டுக்கதைகளைப் புனைந்திருக்கமாட்டார்கள்.
எந்த நபியின் ஒரு சிறந்த பண்பை பற்றி இறைவன் திருக் குர்ஆனில் குறிப்பிட்டுள்ளானோ அந்த நபியின் அச்சிரப்பிற்கெதிராக இந்த விரிவுரையாளர்கள் பொய் கதைகளை புணைந்து கூறி இருக்கின்றனர். இவர்கள் நபிமார்களைப் பற்றி கூறி இருக்கும் குற்றச்சாற்றுகளுக்கு எதிராகவே திருக் குர்ஆன் சாட்சி பகர்ந்து கொண்டிருக்கிறது.
ஹஸ்ரத் யூசுஃப் நபி (அலை) அவர்களின் வரலாற்றைப் பற்றி "அஹ்சனுல் கசஸ்" அதாவது அவர்க்லைன் வரலாறு மிகச் சிறந்தது என்று இறைவன் திரு குர்ஆனில் கூறுகின்றான். அவர்களின் தூய்மையை பற்றியும் கற்பைப் பற்றியும் புகழ்ந்து கூறியுள்ளான்.
ஆனால் திருக் குர்ஆன் விரிவுரையாளர்களோ ஹஸ்ரத் யூசுஃப் நபி (அலை) அவர்களை (நஊதுபில்லாஹ்) கட்டுங்கடங்காத இச்சைக்கு அடிமைப்பட்டவராகவும், அவர்களைத் தீய நடத்தையில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்திட நினைத்த சுலைகாவை ஹஸ்ரத் சுலைக்கா என்று கூறி கற்பிற்குரியவளாகவும் சித்தரித்து காட்டியுள்ளனர். இறைவன் எவர்களை தூய்மை மிக்கவர் எனக் கூறி பாராட்டியுள்ளானோ அவர்களை கேட்டவராகவும், எவளை தீய நடத்தையுள்ளவளாக கூறியுள்ளானோ அவளை தூய்மையானவளாகவும் கற்பிற்குரியவளாகவும் இந்த முல்லாக்கள் வரைந்து வைத்துள்ளனர்.!
இதுதான் உங்களுடைய குர்ஆன் இவர்களே உங்களுடைய நபிமார்களும் என்றால் நிச்சயமாக எங்களுடைய குர்ஆன் வேறுதான் எங்களுடைய நபிமார்களும் வேறுதான் திருக் குர்ஆனைப் பற்றியும் உங்களுடைய கருத்துக்களுக்கும் எங்களுடைய கருத்துக்களுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் எந்தவிதமான ஒத்துமையும் கிடையாது.
ஹஸ்ரத் யூசுஃப் நபி (அலை) அவர்களைப் பற்றி தஃப்சீர் ரூஹுல் மஆனியில் 20 க்கும் மேற்பட்ட ரிவாயத்துகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றின் சாராம்சம் இவ்வாறாகும்:
"ஹஸ்ரத் யூசுஃப் நபி (அலை) அவர்கள் சுலைக்கா என்ற பெண்ணுடன் விபச்சாரம் செய்வதற்கு பூரணமாக உறுதி கொண்டுவிட்டார்கள். அதற்கு பிறகு நடந்தவற்றை அந்த நூலில் நீங்கள் படிக்கும்போது, உங்களால் வியப்படையாமல் இருக்க முடியாது. மிகவும் பயங்கரமான முறையிலும், வெறுக்கத்தக்க முறையிலும் படம் பிடித்து காட்டியுள்ளார்கள். அந்த கேட்ட செயல் நடப்பதற்கு முன் ஜிப்ரீல் எனும் மலக்கு அங்கு தோன்றினார். இதற்கும் அவர்கள் அடங்கவில்லை. அவர்களின் தந்தை ஹஸ்ரத் யாகூப் (அலை) அவர்கள் அங்கு வந்து நின்றார்கள். அப்போதும் அத்தீய செயலிலிருந்து அவர்கள் விலகிக் கொள்ளவில்லை. அதாவது அந்த கேட்ட செயலிலிருந்து அவர்களைத் தவிர்த்து கொள்ள செய்வதற்க்காக இறைவன் ஹஸ்ரத் யாகூப் நபி (அலை) அவர்களை அனுப்பினான். கொஞ்சமாவது அச்சம் படட்டுமே, வெட்கம் படட்டுமே என்று நினைத்து ஆனால் அவர்கள் இதற்கும் அடங்கவில்லை இதன் பின்னரும் இறைவன் ஒரு திட்டம் தீட்டினான்" அந்த திட்டத்தை பற்றி விளக்குவது மிகவும் வெட்கம் கேட்ட செயலாகும். ஒரு சாதாரண மனிதர் அந்த விளக்கத்தை படித்து பார்த்தால் வெட்கப்பட்டு தலை குனிந்து விடுவார். இவ்வாறிருக்க அதை என்னால் படித்து காட்ட முடியாது. இவ்வாறு இவர்கள் நபிமார்கள் மீது மாபெரும் துரோகம் செய்துள்ளனர்.
ஆனால் ஹகமன் அதலன் ஆகத் தோன்றிய ஹஸ்ரத் இமாம் மஹ்தி (அலை) அவர்கள் இத்தகு துரோக செயல்களிலிருந்தும் குற்றச்சாட்டுகளிலிருந்தும் அந்த நபிமார்களை தூய்மை படுத்தி காட்டினார்கள். இப்போது அவர்கள் அஹ்மதிகளுடைய குர்ஆன் வேறு, நபிமார்கள் வேறு என்று அஹ்மதிகளின் மீது குற்றம் சாட்டுகின்றனர். ஆம் எங்களுடைய குர்ஆன் வேறு, உங்களுடைய குர்ஆன் வேறு என்று உரத்த குரலில் கூறுகின்றோம். எங்களிடம் உள்ள குர்ஆன் எல்லா நபிமார்களையும் தூய்மை படுத்தும் குர்ஆனாக உள்ளது. ஆனால் உங்களிடம் இருக்கும் குர்ஆனோ நபிமார்களுக்கெதிராக மிகவும் பயங்கரமாகவும் மிகவும் இழிவான மிகவும் தரங்கெட்ட குற்றங்களைச் சாட்டும் குர்ஆனாக உள்ளது.
சுலைக்காவைப்பற்றிய பதாவா நயிமியா என்னும் நூலில் 358 ஆம் பக்கம் முதல் 361 ஆம் பக்கம் வரை பின்வருமாறு கூறப்படுகின்றது.
"நீதி நியாயத்தில் அடிப்படையில் பார்க்கும்போது, ஹஸ்ரத் சுலைக்காவின் தூய்மையும் கற்பும் இன்று நம்முடைய சமூக வாழ்வில் காண முடியாது என்றுதான் கூற வேண்டும். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ரஜிவூன்)
இறைவனின் நல்லடியாரான இந்த பெண்மணி தமது வாழ்நாள் முழுவதும் பொறுமையுடன் இருந்தால் தமது கற்பிற்கு எந்த களங்கத்தையும் ஏற்படுத்தவில்லை மாபெரும் சீமாட்டியாகவும், மிகச்சிறந்த பெண்மணியாகவும் இருந்துங்கூட தமது கணவரான ஓர் அலியுடன் வாழ்நாள் முழுவதும் கற்போடு வாழ்ந்து வந்தாள். (அதாவது எகிப்திலுள்ள இவளுடைய கணவர். இவர் ஆண்மையும் பெண்ணிமையும் இல்லாதவராக இருந்தாராம். இவளுடைய இத்தகு புனிதமான வாழ்வை இறைவனுடைய அருள் என்றல்லாமல் வேறு என்னதான் கூற முடியும்?
சுலைக்காவைப் பற்றி திருக் குர்ஆன் என்ன கூறுகின்றது என்பதையும் நீங்கள் படியுங்கள். இவர்களுடைய குர்ஆனின் இந்த விளக்கத்தையும் படித்து பாருங்கள். இவ்வாறிருக்கும்போது நம்முடைய குர்ஆனும் இவர்களுடைய குர்ஆனும் ஒன்றுதான் என்று நம்மால் எவ்வாறு கூற முடியும்? இறைவன் மீது ஆணையாக அவ்வாறு கூறவே முடியாது.
ஏதாவது ஒரு நபியையாவது இவர்கள் விட்டு வைத்திருக்கிறார்களா?
ஹஸ்ரத் சுலைமான் நபி (அலை) அவர்களைப் பற்றி "மதாலிகுத் தன்ஸீல்" என்னும் நூலின் பாகம் 2 . அத்தியாயம் நமல் இல் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது:
"ஹஸ்ரத் சுலைமான் நபி (அலை) அவர்கள் ஸபா நாட்டு அரசியைத் திருமணம் செய்துக் கொள்வதை ஜின்கள் விரும்பவில்லை. காரணம் அந்த அரசி ஒரு ஜின்னாக இருந்தாள். எனவே சுலைமான் அவளைத் திருமணம் செய்து அவ்விருவருக்கும் குழந்தை பிறந்தால் அக்குழந்தை ஜின்னையும் இன்ஸையும் சேர்ந்ததாக இருக்கும். ஆகவே அவளின் மீது வெறுப்பை உண்டாக்குவாதற்க்காக அந்த ஜின்கள் சுலைமானிடம் வந்து ஸபா அரசியுடைய முழங்காலில் அதிகமான ரோமங்கள் இருக்கின்றன. அவளுடைய கால்கள் கழுதையின் கால்களைப் போன்றவையாகும் என்று கூறினார்கள். சுலைமான் அவர்களின் இந்த சந்தேகத்தை அகற்றிக் கொள்வதற்க்காக ஒரு கண்ணாடி மாளிகையை உண்டாக்கினார்கள். இதன் மூலம் ஒரு தந்திரத்தை கையாண்டு அவ்வரசியின் கால்களைக் கண்டார்கள். அந்த கால்கள் மிகவும் அழகற்றவையாக இருந்தது. (நஊதுபில்லாஹி மின்ஹா)
ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மசீஹ் (அலை) அவர்கள் இதைப் பற்றி இவ்வாறு விளக்கியுள்ளார்கள்:
"ஹஸ்ரத் சுலைமான் நபி (அலை) அவர்கள் ஸபா நாட்டு அரசி பல்கீசிடம் நீங்கள் ஏன் ஏமாற்றத்திற்கு ஆளாகியுருக்கின்றீர்கள்? இது ஒரு கண்ணாடி மாளிகைதான். நிலத்தில் கண்ணாடி பதிக்கப் பட்டிருக்கிறது. வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் தண்ணீர் இந்த கண்ணாடிக்கு கீழேதான் ஓடிக் கொண்டிருக்கிறதே தவிர, இது தண்ணீர் அல்ல என்று கூறினார்கள். இதைக் கேட்ட பல்கீசுக்கு உண்மை புரிந்துவிட்டது. தாம் ஏற்றுக் கொண்டிருக்கும் மார்க்க கொள்கைகள் தவறானவை என்று புரிந்து கொண்டு தமது அறியாமையை உணர்ந்து கொண்டார்கள். அதாவது அவள் சூரியனை வணங்கிக் கொண்டிருந்தாள்.
மேலும் ஹஸ்ரத் சுலைமான் நபி (அலை) அவர்களைப் பற்றி இன்னொரு தஃப்சீரில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:
"அவர்கள் ஒரு பெண்ணிடம் மாதவிடாவின் போது உடலுறவு கொண்டார்கள். இக்குற்றத்திற்குத் தண்டனையாக அவர்களுடைய அரியாசனத்தில் ஆஸிப் என்ற ஒரு ஷெய்த்தான் உட்கார்ந்து கொண்டான்" (தஃப்சீர் ரூஹுல் மஆனி, அத்தியாயம் ஸர்த்)
திருக் குர்ஆனின் இந்த விருவுரையாளர்கள் பொதுவாக யூதர்களுடைய தஃப்சீர்களிலிருந்தும் இஸ்லாத்தின் விரோதிகளால் உருவாக்கப்பட்டு கட்டு கதைகளிலிருந்தும் இறைத் தூதர்களான நபிமார்களைப் பற்றி பல்வேறு பொய்க் கதைகளைத் தங்களுடைய தஃப்சீர்களில் எடுத்துரைத்திருக்கிறார்கள்.
இந்த விரிவுரையாளர்கள் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கூட விட்டு வைக்கவில்லை. இவர்க்ல தஃப்சீர் ஜலாலைன், தஃப்சீர் ஃபத்ஹுல் பயான் முதலிய நூல்களில் இவ்வாறு வரைந்துள்ளார்கள்:
"குறைஷிகள் ஒரு சபையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அத்தியாயம் நஜ்மி லிருந்து ஒரு வசனத்தை ஓதினார்கள். அப்போது அவர்களுடைய நாவில் ஷெய்த்தான் வஹியை இறக்கினான்."
சிறிது சிந்தனை செய்து பாருங்கள், ஹஸ்ரத் ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்களின் நாவில் ஷெய்த்தான் வஹியை இறக்கினானாம். இதனை எந்த அஹ்மதி முஸ்லிமாலும் ஏற்றுக் கொள்ள முடியுமா? அவர்களை ஷெய்த்தான் அணுகினான் என்பதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியுமா? அந்த ஷெய்த்தான் இறக்கிய வஹி என்னவென்றால் "தில்கல் கராணிகுல் குரா லஇன்ன ஷஃபா அத்துஹுன்ன லாது உஸ்ஸா" என்பதாகும்.
இந்த பொய்யான ரிவாயத்தை வைத்துக் கொண்டு, இஸ்லாத்தின் விரோதிகள் நபிகள் நாயகத்தின் மீது மாபெரும் ஆட்சேபனைகளை கிளப்பினார்கள்.
தஃப்சீர் ரூஹுல் மஆனி, தஃப்சீர் காசின், ஜலகலைன் முதலிய தஃப்சீர்களில் ஹஸ்ரத் ஜைனபுடன் சேர்த்து ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை பற்றி இவ்வாறு கூறப்பட்டுள்ளது:
"ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தங்களுடைய ஏதோறு காரியத்திற்காக ஹஸ்ரத் சைது பின் ஹாரிஸ் (ரலி) வீட்டிற்கு சென்றார்கள். அப்போது காற்றடித்ததால் வீட்டு வாசலிலுள்ள திரை சற்று அகன்று விட்டது. இதனால் அவர்களுடைய பார்வை ஹஸ்ரத் ஜைனபின் மீது விழுந்தது. அப்போது அவர்கள் அவளுடைய அழகில் மயங்கி விட்டார்கள்." (நஊதுபில்லாஹ்)
விரிவுரையாளர்கள் இந்த சம்பவத்தை நீட்டி இழுத்து எழுதியுள்ளார்கள். இந்த நீண்ட கட்டுக் கதையை படித்து பார்க்கும் போது, எம்பெருமானிடம் அன்பும் நேசமும் கொண்ட ஒவ்வொருவருடைய இரத்தமும் கொதிக்க தொடங்கி விடுகிறது. எல்லாரையும் விட மிகவும் தூய்மையானவர்களாகிய எம்பெருமானர் (ஸல்) அவர்களைப் பற்றி கூட இவ்வாறு பழித்து கூறியுள்ளார்கள். இந்த கட்டுக் கதையை எழுதும் போது இவர்களுடைய உள்ளங்கள் ஏன் வேடித்து போகவில்லை?
ஹஸ்ரத் அலி (ரலி) அவர்களைப் பற்றி "ஜிலாவுல் உயூன் மஜ்லிஸூ அஸ் கிலாபதுஷ் ஷைனகன்" என்னும் நூலின் பக்கம் 17 இல் இவ்வாறு எழுதப்பட்டிருக்கிறது:
"மிஃராஜ் (வீண்பயண) இரவில் ஹஸ்ரத் அலி (ரலி) அவர்கள் இல்லாது போயிருந்தால் முஹம்மது நபிக்கு எந்த விதமான மதிப்பும் கிடைத்திருக்காது."
ஆனால் மிஃராஜின் போது ஹஸ்ரத் முஹம்மது நபியுடன் (ஸல்) ஹஸ்ரத் அலி (ரலி) அவர்கள் இருந்ததில்லை. இது மட்டுமல்லாமல் மிஃராஜில் நபிகள் நாயகத்திற்கு கிடைத்த மிகவும் உயர்வான அந்தஸ்தை எவராலும் - மலக்குகளால் கூட பெற முடியவில்லை.
ஷியா ஆலிம்கள் மட்டுமல்ல, சுண்ணீ ஆலிம்களும் கூட இவ்வாறான கட்டுக் கதைகளைப் புனைத்துள்ளார்கள். இவ்வாறு இவர்கள் நான்கு புரங்களிலிருந்தும் இஸ்லாத்தை மிகவும் மோசமானம் முறையில் தாக்கியிருக்கின்றனர். இத்தகு விளக்கங்களை கொண்ட இஸ்லாத்தைதான் இவர்கள் உலகின் முன் வைக்க நாடுகின்றனரா.? ஆனால் அதே வேளையில் இவர்களை சீர் திருத்துவதற்க்காக "ஹகமன் அதலன்" ஆகத் தோன்றிய ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மசீஹ் (அலை) அவர்களுக்கெதிராக இவர்கள் தங்களுடைய நாவுகளை வெறுக்கத் தக்க வகையில் நீட்டிக் கொண்டிருக்கின்றனர்.
அஹ்மதிகளுடைய கலிமா வேறு என்று குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் இவர்களுடைய நிலை என்னவென்றால், ஷியாக்களும் சுன்னிக்களும் சேர்ந்து தங்களுடைய கலிமாவை மாற்றியிருக்கின்றார்கள். ஆனால் இதற்கெதிராக எந்த விதமான குரலும் எழுப்பபடவில்லை.
காஜா முயீனுத்தீன் சிஷ்த்தி பற்றி "ஹசனாதுல் ஆரிஃபீன்" என்னும் நூலில் பக்கம் 34 இல் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது:
"ஒருவர் ஹஸ்ரத் காஜாவிடம் வந்து உங்களுடைய முரீதாக நினைக்கிறேன் என்று கூறினார். இதற்கு அவர்கள் லா இலாஹா இல்லல்லாஹு சிஷ்தி ரசூலுல்லாஹி என்று கூறு என்றார்கள். அவ்வாறே அவர்கள் கலிமா கூறியதும் காஜா அவரை தமது முரீதாக ஏற்றுக் கொண்டார்கள்.
தமது காலத்தில் முஜத்திதும் ஒரு வலியுல்லாஹுமாக இருந்த ஹஸ்ரத் காஜா முயீனுத்தீன் சிஷ்தி அவர்கள் நிச்சயமாக அவ்வாறு கூறியிருக்க மாட்டார்கள்.
இவர்கள்தாம் நபிமார்களை கூட விட்டு வைக்கவில்லையே. அப்படியிருக்க முஜத்தீத்மார்களையும், பக்கீர்மார்களையும் வலிமார்களையும் எவ்வாறு விட்டு வைப்பார்கள்? இப்படிப்பட்ட ஆலிம்களுடன் ஒரு சமுதாயம் தொடர்பு வைத்திருக்க வேண்டியதிருந்தால் அந்த சமுதாயத்தின் நிலை பரிதாபத்திற்குரியதேயாகும். இத்தகைய ஆலிம்களிடமிருந்து சமுதாயத்தை விடுவித்து அச்சமுதாயத்தை சீர்திருத்துவதென்பது மிகவும் சிரமமான காரியமேயாகும். அந்த மாபெரும் பொறுப்பைதான் அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் ஏற்றிருக்கிறது. நம்மை எல்லா வகையான இருள்களிலிருந்தும் விளக்கி, நம்மை ஒளியின் பக்கம் கொண்டு வந்த ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மசீஹ் (அலை) அவர்களுடைய உபகாரம் மிகவும் மகத்துவம் கொண்டதாகும்.
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் வ அலா அப்திகல் மசீஹில் மஊத் வ பாரிக் வ சல்லிம்.
கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None