அல்லாஹ்வின் கயிற்றை பற்றி பிடியுங்கள்

நம்பிக்கை கொண்டோரே இறை அச்சத்தை அதன் எல்லா நிபந்தனைகளுடன் ஏற்றுக் கொள்க நீங்கள் முழுமையாக கட்டுப் பட்டு நடப்பவர்களாக இருக்கின்ற நிலையில் மட்டுமே உங்களுக்கு மரணம் வர வேண்டும்.
நீங்கள் யாவரும் ஒன்று பட்டு அல்லாஹ்வின் கயிற்றை உருதியாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். மேலும் நீங்கள் பிர்ந்து போய் விடாதீர்கள். உங்கள் மீது (செய்து) ள்ள அல்லாஹ்வின் அருளை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் (ஒருவருக்கொருவர்) எதிரிகளாக இருந்தீர்கள். பின்னர் அவன் உங்கள் உள்ளங்களில் நட்பை உண்டாக்கினான். எனவே நீங்கள் அவனுடைய அருளால் உடன் பிறப்பு போல் ஆகிவிட்டீர்கள்.
நீங்கள் ஒரு நெருப்பு கிடங்கின் ஓரத்தில் இருந்தீர்கள். பின்னர் அவன் உங்களை அதிலிருந்து காப்பாற்றினான். இவ்வாறே அல்லாஹ் உங்களுக்கு தன் வசனங்களை நீங்கள் நேர்வழியினை பெறும் பொருட்டு விளக்குகின்றான். “ (திருக் குர் ஆன் 3:103,164)
      இவ்விரு வசனங்களுல் முதல் வசனத்தில் இரண்டு கட்டளைகள் கூறப்பட்டுள்ளன. இவ்விரண்டு கட்டளைகளுல் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு கேள்வி எழுகின்றது.
அதாவது இறை அச்சத்தை அதன் எல்லா நிபந்தனைகளுடன் எவ்வாறு ஏற்றுக் கொள்வது என்பது முதல் கேள்வி.

      அடுத்து, நீங்கள் முழுமையாக கட்டு பட்டு நடப்பவர்களாக இருக்கின்ற நிலையில் மட்டுமே உங்களுக்கு மரணம் வர வேண்டும் என்று இறைவன் கூறுகின்றான். மரணம் அடைவது நம்முடைய அதிகாரத்திற்குட்பட்டதன்று. நமக்கு எந்த நேரத்தில் மரணம் வரும் என்று நாம் அறியாமல் இருக்கும்போது இந்த கட்டளைக்கு நம்மால் எவ்வாறு கட்டுப்பட்டு நடக்க முடியும் என்பது இரண்டாவது கேள்வி.
      இந்த வசனத்தில் இவ்வாறு கேள்விகளை எழுப்புகின்ற இந்த இரு கட்டளைகளுல் ஒன்று, மற்றொன்றிற்கு பதிலாக அமைந்துள்ளது.
      நீங்கள் இறையச்சத்தை மேற்கொள்ள வேண்டியவாறு அதனை மேற்கொண்டால், நீங்கள் எப்போதும் உங்கள் உள்ளத்தின் நிலைகளை கவனத்திற்கொண்டிருப்பீர்கள். இதனால் நீங்களே உங்களை எல்லா நேரத்திலும் கட்டுப்பட்டு நடக்கும் நிலையில் வைத்திருப்பீர்கள்.
      இங்கு நம்பிக்கைக் கொண்டவர்களுக்குக் கட்டளையிடப்பட்டிருந்தால், இதில் வந்துள்ளஇல்லா அன் தும் முஸ்லிமூன்என்பது, நீங்கள் முஸ்லிம்களாக இருக்கின்ற நிலையில் மட்டுமே உங்களுக்கு மரணம் வரவேண்டும். என்று பொருள்படாது.
                எனினும் இறைவன் கூறுவதாவது, நம்பிக்கைக் கொண்டவர்களே! நீங்கள் இறைவனுக்குக் கட்டுப்பட்டு நடப்பவர்களாக இருக்கின்ற நிலையிலேயே உங்களுக்கு மரணம் வரவேண்டும். இந்த நிலையைத் தவிர வேறெந்த நிலையிலும் உங்களுக்கு மரணம் வந்து விடக்கூடாது என்று நாம் உங்களுக்குக் கட்டளையிடுகின்றோம் என்று இறைவன் இங்குக் கூறுகிறான்.
எனவே, இறைவனிடமே நம்மை முழுமையாக ஒப்படைத்து அவனுக்கு முழுமையாக கட்டுபட்டு நடப்பதே முறப்படி இறையச்சத்தை மேற்கொள்வதாகும்.
எவ்வாறு இறையச்சத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற கேள்விக்குப் பதில் நீங்கள் உங்களுடைய வாழ்வின் ஒவ்வொரு வினாடியையும் கவனத்திற்கொண்டு இந்த கட்டளையை எத் தருணத்திலும் மீறாது இருக்க வேண்டும் என்பதாகும்.
அடுத்து நீங்கள் செய்கின்ற ஒவ்வொரு செயலையும் இறைவன் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்ற உண்மையை மனதிற்கொண்டு அவனுடைய விருப்பத்திற்கேற்றவாறு நீங்கள் செயல்படுவீர்களானால், முறைப்படி இறையச்சத்தை மேற்கொள்பவர்கள் ஆவீர்கள். இதற்கு மற்றொரு பெயர் இஸ்லாம்அதாவது கட்டுப்பட்டு நடப்பதாகும்.
எனவே இந்த சிறிய வசனம் இரு கேள்விகளை எழுப்புகிறது. அடுத்து இதே வசனம் அந்த இரு கேள்விகளுக்கும் பதிலையும் தருகிறது. இதனை அடுத்து வரும் வசனம் இதற்கு மேலும் விளக்கம் தருகின்றது.
நீங்கள் யாவரும் ஒன்றுபட்டு அல்லாஹ்வின் கயிற்றை உறுதியாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். “
நீங்கள் தனித்தனியாக இல்லாமல் எல்லாரும் ஒன்றுபட்டு கூட்டாக அல்லாஹ்வின் கயிற்றை உறுதியாகப் பற்றி பிடிப்பது உண்மையான இஸ்லாமாகும்.
இப்போழுதுஅல்லாஹ்வின் கயிறுஎன்றால் என்னவென்று பார்க்க வேண்டும். இது பற்றி திருக் குர்ஆனில்,
அவர்கள் எங்கே காணப்பட்ட போதிலும் அவர்களின் மீது இழிவு இறக்கப்பட்டுவிட்டது. அவர்கள் அல்லாஹ்வின் ஏதாவதொரு உடன்படிக்கையின் அல்லது மக்களின் ஏதாவதோர் உடன்படிக்கையின் பாதுகாப்பிற்குள் வந்தாலன்றி (அந்த இழிவிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியாது.) (3:113) என்று இறைவன் கூறுகின்றான்.
இந்த வசனத்தில்ஹப்லும் மினல்லாஹ்என்றும்ஹப்லும் மினன்னாஸ்என்று வந்துள்ளது. “ ஹப்ல் என்றால் உடன்படிக்கை என்று பொருள்படும் எனத் திருக் குர் ஆன் விரிவுரையாளர்கள் எல்லாரும் ஒன்றுபட்ட கருத்து கொண்டுள்ளார்கள். அதாவது அடியார்களை பாதுகாக்கும் இறைவனுடைய உடன்படிக்கையினால், சில சமயங்களில் சமுதாயங்கள் இழிவிலிருந்து காப்பாற்றப்படுகின்றன.
இவ்வாறே சமுதாயங்களுக்கிடையேயும் உடன்படிக்கைகள் உள்ளன. எதிரிகள் எங்களை தாக்கினால் நீங்கள் எங்களுடைய தற்காப்புக்கு வர வேண்டுன். என்று ஒரு சமுதாயம் மற்றொரு சமுதாயத்துடன் உடன்படிக்கை செய்து கொள்கிறது. இதன் மூலம் சில சமயங்களில் சிலர் சில வகைத் தீங்குகளிலிருந்து காப்பாற்றப்படுகின்றனர்.
எனவே ஹப்ல் என்பதன் அடிப்படை பொருள் உடன்படிக்கை என்பதாகும். திருக் குர் ஆனில் மற்றொரு இடத்தில் , “ நாம் அவனுக்கு (அவனது) உயிர் நாடியைவிட மிக அருகில் உள்ளோம்என்று இறைவன் கூறுகின்றான்.
இதில் வந்துள்ள (ஹப்லுல் வரீது) என்பது மனதையும், அறிவையும் முழு உடலுடன் தொடர்பை ஏற்படுத்தி இணைக்கும் ஒரு கயிறாகும். இந்த கயிறு அறுந்துவிட்டால் உடலுடனுள்ள மனதின் தொடர்பும் அறிவின் தொடர்பும் அறுந்து விடும். இதற்கு மற்றொரு பெயர் மரணம்.
எனவே ஹப்ல் எனும் சொல் இரு பொருள்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 1.உடன்படிக்கை 2.தொடர்பை ஏற்படுத்தக்கூடியது
எனவே நீங்கள் யாவரும் ஒன்றுபட்டு அல்லாஹ்வின் கயிற்றை உறுதியாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் என்பதன் கருத்து உங்கள் வாழ்விற்கு உத்தரவாதங்களாகிய இறைவனுடனுள்ள உங்கள் தொடர்புகளை உறுதியானவையாக வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய இந்த தொடர்புகள் அறுந்து விட்டால், அல்லது அவற்றிற்கு பங்கம் ஏற்பட்டு விட்டால் அதே அளவிற்கு நீங்கள் வாழ்வை இழந்தவர்களாகி விடுவீர்கள் என்பதாகும்.
ஹப்ல் என்ற சொல்லின் மற்றொரு பொருளும் இங்கு பொருத்தமாக அமைவது மட்டுமல்லாமல், முதல் பொருளுக்கு மேலும் விளக்கமாக அமைகிறது. உண்மையிலேயே திருக் குர் ஆன், நம்பிக்கை கொண்டவர்கள் எல்லாரையும் ஓர் உடன்படிக்கையின் அடிப்படையில் நபிமார்களுடனும், ஷரீஅத்களுடனும் இணைந்துள்ளது. மனிதன் தோன்றியதிலிருந்து இன்றுவரை தொடர்ந்து இறைவனுடைய இந்த உடன்படிக்கை சமுதாயங்களிடம் எடுக்கப் பட்டு வருகிறது.
எனவே ஷரீஅத்களுடைய நபியும் செயல்ரீதியாகஹப்லுல்லாஹ் “ – “ அல்லாஹ்வின் கயிறாக ஆகிவிடுகின்றாரகள். அவருடைய ஷரீஅத்தும் செயல்ரீதியில்ஹப்லுல்லாஹ் அல்லாஹ்வின் கயிறாக ஆகிவிடுகின்றது. ஏனென்றால், இறைவனால் செய்யப்பட்ட உடன்படிக்கையின் மூலம், நம்பிக்கை கொண்டவர்கள் அந்த நபியுடனும் அந்த ஷரீஅத்துடனும் இணைக்கப்பட்டவர்களாகி விடுகின்றனர். ஷரீஅத்திற்கு கட்டுப்பட்டு நடப்பதும், ஷரீஅத்துடைய நபிக்கு கட்டுப்பட்டு நடப்பதும் அவசியமாகி விடுகின்றது.
இப்போது இங்கு ஒரு கேள்வி எழுகிறது அதாவது ஹப்லுல்லாஹ்அல்லாஹ்வின் கயிறு என்பதற்கு இதுதான் பொருள் என்றால், ஏற்கனவே ஒரு ஷரீஅத்துடைய நபி வந்து ஷரீஅத்தை வழங்கி சென்று விட்டார். அல்லாஹ்வின் கயிறாகிய ஷரீஅத்துடைய அந்த நபியுடன் எனக்கு ஒரு தொடர்பு ஏற்பட்டுவிட்டது. ஆத்மீகமான பொருளில் நான் அவருடன் ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கை என்ற எனது பைஅத்தில் நான் பற்றுள்ளவனாகவும் இருக்கின்றேன். அதில் நிலைத்தும் நிற்கின்றேன். இவ்வாறே அந்த ஷரீஅத்துடனும் எனக்கு தொடர்பு உள்ளது. எனவே இப்போது எனக்கு வேறு எதுவும் அவசியமில்லை. அதாவது என்னுடைய இஸ்லாம் முழுமையாகி விட்டது. நான் ஷரீஅத்துடைய ஒரு நபியை ஏற்றுக் கொண்டுள்ளேன். அவருடைய ஷரீஅத்திற்கு கட்டுபடுதல் என்ற தொடர்பை ஏற்படுத்திக் கொண்டேன் என்று ஒவ்வொருவரும் கேட்கலாம்.
இவ்வாறான கேள்விக்குறிய பதிலை கீழ்காணும் இந்த வசனமே தருகின்றது. அதாவது,
நீங்கள் யாவரும் ஒன்றுபட்டு அல்லாஹ்வின் கயிற்றை உறுதியாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் என்பதன் கருத்து, நீங்கள் ஷரீஅத்துடனும், ஷரீஅத்துடைய நபியுடனும் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் என்பது மட்டுமல்ல. மாறாக, நீங்கள் ஒன்றுபட்டு தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் என்பதுவுமாகும்.
இதற்கு மாறாக வெளிப்பாடையாக பார்க்கும்போது தொடர்பு இருந்து, உங்களுக்குள் ஒற்றுமை இல்லாதிருந்தால், நீங்கள் அல்லாஹ்வின் கயிற்றிலிருந்து வெளியேறியவர்களாவீர்கள். எனவே, அல்லாஹ்வின் கயிற்றை உறுதியாக பற்றிப் பிடிப்பது மட்டும் போதாது. அவனுடைய கயிற்றை ஒன்றுபட்டுகூட்டாக பற்றி பிடிப்பது அவசியமாகும்.
நீங்கள் உங்களுக்கிடையில் ஒற்றுமையில்லாமல், பிர்ந்திருந்தால், ஷரீஅத்துடனும், ஷரீஅத்துடைய நபியுடனும் நீங்கள் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் தொடர்பு உங்களுக்கு எந்த பயனையும் அளிக்காதும்.
வெளிப்படையில் நீங்கள் ஷரீஅத்துடன், ஷரீஅத்துடைய நபியுடனும் தொடர்பு வைத்திருக்கலாம். ஆனால் உங்களுடைய செயல்களினாலும், உங்களுடைய சொற்களினாலும் சமுதாயத்தின் ஒற்றுமை குறைந்து, நீங்கள் ஒருவரிடமிருந்து மற்றொருவர் பிரிந்து சென்றால் அல்லாஹ்வின் கயிற்றுடனுள்ள உங்கள் தொடர்பு, சரியான பொருளில் உள்ளதாக கணிக்கப்படமாட்டாது. எனவே, நீங்கள் இறைவனிடத்தில் தண்டனைக்குறியவர்களாகவே இருப்பீர்கள்.
ஷரீஅத்துடைய ஒரு நபி மரணமடைந்த பிறகு, நிலைத்திருக்கும் அந்த ஷரீஅத்துடன் மட்டும் தொடர்பு கொண்டிருப்பது போதுமானதன்று. ஏனென்றால் ஒற்றுமைக்கு ஒரு தலைமை அவசியம். இதனை கிலாஃபத் எனும் அமைப்பே வழங்குகிறது. கிலாஃபத்துடன் தொடர்பு முறிந்துவிடுமானால் சமுதாயம் பிளவுபட்டுவிடும்.
ஒரு சமுதாயம் இரண்டாகவோ, மூன்றாகவோ, நான்காகவோ, ஐந்தாகவோ பிளவுபட்டு அவற்றுள் ஒன்று கூட கிலாஃபத்துடன் தொடர்பு இல்லாமலாகிவிடுமானால், திருக் குர் ஆனின் விளக்கத்திற்கேற்ப, அல்லாஹ்வுடைய கயிற்றுடன் அவர்களுக்குரிய தொடர்பு அறுந்துவிட்ட ஒன்றாகிவிடும்.
உண்மையிலேயேகிலாஃபத்தை தவிர உலகின் வேரெந்த அமைப்பாலும் ஒற்றுமையை ஏற்படுத்த முடியாது ! சமுதாயத்தில் எத்தனையோ பிரிவினர்களை நீங்கள் காண்கின்றீர்கள். ஆனால் கிலாஃபத்திற்குள் இருக்கும் ஒற்றுமையை வேறெந்த பிரிவினரிடமும் உங்களால் காண இயலாது !!
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு பின்னர் ஏற்பட்ட கிலாஃபத்தின் போது சமுதாயத்தில் ஒற்றுமை இருந்தது. ஆனால் அந்த கிலாஃபத்திற்கு பிறகு சமுதாயத்தில் பிளவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பல்வேறு பிளவுகளாக அந்த சமுதாயத்தினர் ஆகிவிட்டனர்.
எனவே ஷரீஅத்துடைய நபியுடனும் அந்த ஷரீஅத்துடனும் தொடர்பு கொண்டிருப்பதே உண்மையான இஸ்லாமாகும்.
அந்த நபுயுடன் செய்து கொண்ட உடன்படிக்கையின் கருத்து அவருக்கு அருளப்பட்ட ஷரீஅத்துடன் மட்டும் தொடர்பு கொண்டிருக்க வேண்டும் என்பதல்ல, எனினும் அந்த ஷரீஅத்திற்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். அவருக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்பதே அதன் கருத்தாகும்.
ஷரீஅத்தை கொண்டு வந்த ஒரு நபி மரணமடைந்த பிறகு அவருடைய ஜமாஅத் ஒரு கலீஃபாவின் கீழ் செயல்படாமலிருக்குமானால், அந்த ஜமாஅத் ஒரு போதும் ஒற்றுமை உள்ளதாக இருக்காது.
அவருடைய மரணத்திற்கு பிறகு ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில்ஹப்லுல்லாஹ் வாகிய அல்லாஹ்வின் கயிற்றை பற்றி பிடித்தாலே போதும் என்ற கருத்தை திருக் குர் ஆன் ஏற்றுக் கொள்ளவில்லை.
நீங்கள் எல்லோரும் ஒன்றுபட்டு அல்லாஹ்வின் கயிற்றி உறுதியாக பற்றி பிடித்துக் கொள்ளுங்கள் என்றே திருக் குர் ஆன் கூறுகின்றது எனவே, நபித்துவத்திற்கு பிறகு கிலாஃபத் கட்டாயம் இருக்க வேண்டும். கிலாஃபத்தில் ஒரு தடவை பிளவு ஏற்பட்டு விட்டால், பிறகு மீண்டும் நபித்துவத்தின் மூலம்தான் கிலாஃபத் ஏற்பட முடியும். இந்த நபித்துவம் புதியதாக இல்லாமல் முதல் ஷரீஅத்தை பின்பற்றிய நபித்துவமாகவும் இருக்கலாம்.
நீங்கள் நெருப்பு கிடங்கின் ஓரத்தில் இருந்தீர்கள். பின்னர் அவன் உங்களை அதிலிருந்து காப்பாற்றினான்” – என்று தொடரின் கருத்தாவது, பிரிவினையானது கட்டாயம் நெருப்பிற்கு கொண்டு சென்று விடுகின்றது. நெருப்பு என்றால், பொதுவாக நரக நெருப்பு என்று மக்கள் கருதுகின்றனர். ஆனால் திருக் குர் ஆனின் வழக்கில் நெருப்பு என்பது பயங்கரமான போர்களையும் குறிக்கும். இவ்வுலகில் போர்கள் நிகழ்வதை நாம் காண்கிறோம். இதற்கு அடிப்படைக் காரணம், பிரிவினையேயாகும். இந்தப் பிரிவினை கடினமாகிவிட்டால், போர் என்ற நெருப்பில் அவர்கள் குதித்து விடுகின்றனர்.
எனவே இறைவன் கூறுகின்றான்: நீங்கள் உண்மையிலேயே முஸ்லிம்களாகவும், அல்லாஹ்வுக்கு முற்றிலும் கட்டுபட்டு நடப்பவர்களாகவும் அல்லாஹ்வின் கயிற்றை உறுதியாகப் பற்றிப் பிடிப்பவர்களாகவும் இருந்தால், நீங்கள் உங்களுக்குள் போர் செய்வதென்பது சாத்தியமில்லாததாகிவிடும். போர் என்ற நெருப்பில் குதிப்பதும் சாத்தியமற்றதாகிவிடும். அல்லாஹ்வின் கயிற்றை நீங்கள் உறுதியாகப் பற்றிப் பிடித்தால், அவன் உங்களை நெருப்பு கிடங்கின் ஓரத்திலிருந்து வெகு தொலைவில் கொண்டு சென்று விடுவான். எவர் அல்லாஹ்வின் கயிற்றை உறுதியாகப் பற்றிப் பிடித்துக் கொண்டாரோ அவரை, உலகின் எந்த சக்தியாலும் நெருப்பில் தள்ள முடியாது.
இந்த வசனத்தின் அடிப்படையில் பார்த்தால் ஈரானுக்கும் ஈராக்கிற்கும் இடையில் எட்டு வருடங்களாக நடந்த போர் குறித்து அவர்கள் நெருப்புக் கிடங்கின் ஓரத்தில் இருந்தார்கள் என்று நம்மால் சொல்ல முடியாதா? அவர்கள் அல்லாஹ்வின் கயிற்றைப் பற்றிப் பிடித்திருந்தார்கள் என்று எவராவது சொல்ல முடியுமா? அவர்கள் எல்லாரும் சேர்ந்து ஒன்று பட்டு அதனைப் பிடித்திருந்தார் என்று சொல்ல முடியுமா?
திருக் குர் ஆன் மிக ஆழமான உண்மைகளை எடுத்துரைக்கின்றது. அவற்றை எவராலும் அலட்சியம் செய்ய இயலாது. திருக் குர் ஆனின் உண்மைகளை அலட்சியம் செய்பவர்களால் தீய விளைவுகளிலிருந்து ஒரு போதும் தப்பிக்க இயலாது.
(23-11-90 அன்று ஹஸ்ரத் நான்காவது கலீஃபதுல் மஸீஹ் ஆற்றிய ஜும் பேருரையின் சுருக்கம்)
முஸ்லிம்களாகிய நாம் முன்னர் ஒரே தலைமையின் கீழ் ஒன்றுபட்டிருந்தோம். வெற்றி கண்டோம். உலகத்தில் ஏகத்துவத்தை நிலைநாட்டினோம். ஆனால் இன்று ஒரு தலைமை இல்லாமல் துர்பாக்கியவசத்தால் பலப் பிரிவுகளாக பிர்ந்து வீழ்ச்சியடைந்துள்ளோம்.
நாம் எல்லாரும் ஒரே இறைவனை ஏற்றுக் கொண்டவர்கள். அந்த இறைவனால் உலகிற்கு அருளப்பட்ட வேதமாகிய திருக் குர் ஆனையும் காத்தமுன்னபிய்யீன் நபிகள் நாயகம் (ஸல்அவர்களையும் நாம் ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.
எனவே நாம் இறைவனும் ஒருவனே. நம் வேதமாகிய குர் ஆனும் ஒன்றே. நம்முடைய கலிமா لاالہ الا اللہ محمد رسول اللہ ஒன்றே. நம்முடைய கிப்லாவும் ஒன்றே. நம்முடைய மார்க்கமும் ஒன்றே.
இவற்றில் நமக்கிடையில் எந்த வேற்றுமையும் இல்லாமலிருக்கும் போது நாம் ஏன் பல பிரிவினர்களாக பிரிந்து சீரழிய வேண்டும்?
நாம் ஒன்றுபடுவதற்கு வழியே இல்லையா? ஏன் இல்லை? நிச்சயமாக இருக்கிறது. சுயநலம், கர்வம், மற்றும் தற்பெருமையை தூக்கி எறிந்து விட்டு ஒன்று பட்டாலே உண்டு வாழ்வு என்ற பழமொழியினையும் உணர்ந்தவாறு  நாமெல்லாரும் ஒன்றுபட்டாக வேண்டும் என்ற மனமிருந்தால், நிச்சயமாக நாம் ஒன்றுபட்டு விடலாம்.
நாம் எல்லாரும் ஒன்று பட வேண்டுமானால் திருக் குர் ஆனின் போதனைகளையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனிகளையும் முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும். அவர்களின் அழகிய முன்மாதிரிகளை பின்பற்றி நடக்க வேண்டும். நமக்கிடையில் இருக்கும் கருத்து வேறுபாடுகளைத் திருக் குர் ஆன் அடிப்படையிலும், நபிமொழிகளின் அடிப்படையிலும் தீர்த்துக் கொள்ள வேண்டும். நாங்கள் எங்கள் முன்னோர்களின் வழியில்தான் நடப்போம் என்று பிடிவாதம் செய்யாமல், அல்லாஹ்வும் அவனது தூதர் நபி (ஸல்) அவர்களும் காட்டிய வழியில் நடத்திச் செல்வதற்காக நம் எல்லாருக்கும் ஒரு தலைவர் இருக்க வேண்டும். அந்த தலைவருக்கு நாமெல்லாரும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.
இந்த அடிப்படையில் மட்டுமே நம்மால் ஒன்றுபட முடியும். இறைவன் அருளால் நாம் ஒன்று பட்டுவிட்டால், நாம் இவ்வுலகிலும், மறுமையிலும் மகத்தான வெற்றி பெறுவோம். மற்றவர்களுக்கும் நம்மால் நேர்வழி காட்ட முடியும். அவர்களும் நேர்வழி பெற்று வெற்றி பெறுவார்கள்.
நாமெல்லாரும் ஒரே தலைமையின் கீழ் ஒன்றுபட்டு ஈருலகிலும் மகத்தான வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை இறைவன் நமக்கு தந்தருள்வானாக. ஆமீன்.




கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.