ஹுஸூர் அவர்களுடன் இந்த வாரம் (26 ஜூன் 2026)

 


This week with Huzoor (26 ஜூன் 2026) என்ற நிகழ்ச்சியில் ஹுஸூர் அன்வர் (அய்யதஹுல்லாஹ்..) அவர்கள் கனடாவின் வௌத்ரே மற்றும் அமெரிக்கா ஆகிய இடங்களிலிருந்து வந்த அன்ஸார் மற்றும் ஆமிலா உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அளித்த பதில்களின் சாராம்சம்:

அமெரிக்காவிலிருந்து வருகை தந்திருந்த அன்சார்மார்களுடன் 'முலாகாத்' நிகழ்ச்சிக்கான அறிமுகம்.

கேள்வி: 

மார்க்க பற்றுள்ள பெற்றோர்களின் பிள்ளைகள் மதத்திலிருந்து விலகிச் செல்லும்போது, அதற்கான காரணத்தை பெற்றோர்கள் எப்படி கண்டறியலாம்?

பதில்:

சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்கு இஸ்லாம் மற்றும் அஹ்மதிய்யத்தின் அடிப்படைகளை அன்புடன் போதிக்க வேண்டும். நாம் ஏன் அஹ்மதி முஸ்லிம்கள், நம் வாழ்வின் நோக்கம் என்ன என்பதை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.

பிள்ளைகளின் தவறை மட்டும் பார்க்காமல், பெற்றோர்களாகிய நாமும் நம்முடைய வளர்ப்பில் ஏதேனும் குறைபாடுகள் இருந்ததா என்று சுய ஆய்வு செய்ய வேண்டும். எந்தவொரு பிள்ளையும் ஒரே நாளில் மதத்திலிருந்து விலகுவதில்லை.

பெற்றோர்கள் தங்கள் நடைமுறை வாழ்க்கையில் மத விழுமியங்களைப் பின்பற்றி காட்ட வேண்டும். பெற்றோர்கள் காட்டும் முன்மாதிரியே குழந்தைகளின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இன்றைய சமூகத்தில் சமூக ஊடகங்களின் தாக்கம் அதிகம். எனவே, குழந்தைகளுடன் நல்லுறவைப் பேணி, அவர்களின் கேள்விகளுக்குப் பொறுமையுடனும் அன்பாகவும் பதிலளிக்க வேண்டும். கட்டாயப்படுத்துவதை விட, அன்பால் மட்டுமே அவர்களை மீண்டும் ஈர்க்க முடியும்.

கேள்வி:

வயது முதிர முதிர, கிலாபத்தின் மகத்துவத்தைப் பற்றி நாம் அதிகம் அறிந்து கொள்வதால், லீபாவுக்கு கடிதம் எழுதத் தயக்கம் ஏற்படுகிறது. இந்தத் தயக்கத்தை எப்படிப் போக்கலாம்?

பதில்:

கிலாஃபத்துடனான தொடர்பில் ஏற்படும் இத்தகைய தயக்கம் ஒரு சாக்குப்போக்கே தவிர வேறில்லை. உண்மையிலேயே கிலாபத்துடனான தொடர்பை விரும்புகிறவர்கள், எந்தச் சூழலிலும் தடையின்றி கடிதம் எழுதுவார்கள்.

நற்காரியங்களைச் செய்வதிலிருந்து மனிதனைத் தடுப்பதற்காக, ஷைத்தான் சில நேரங்களில் 'இபாதத்' அல்லது 'மரியாதை' என்ற போர்வையில் குழப்பத்தை ஏற்படுத்துவான். இது போன்ற எண்ணங்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.

கிலாபத்துடனான உறவு என்பது புனிதமானது மற்றும் ஆழமானது. எனவே, மற்றவர்களின் கருத்துகளுக்குப் பயப்படாமல் அல்லது அதிகப்படியான தயக்கம் கொள்ளாமல், உங்கள் மனதின் குரலுக்குச் செவிசாய்த்து தாராளமாகத் தொடர்புகொள்ளுங்கள்

கேள்வி:

பெரியவர்கள் வழங்கும் அறிவுரைகள் பெரும்பாலும் விமர்சனங்களாகவே இளைஞர்களால் பார்க்கப்படுகின்றன; எனவே, இளைஞர்களுக்கு உகந்த நேர்மறையான சூழலை நாம் எவ்வாறு பேணலாம்?

பதில்: இளைஞர்களிடம் பழகும்போது அவர்களின் உளவியலைப் புரிந்துகொண்டு, அறிவுரை என்ற பெயரில் அவர்களைக் கடிந்துகொள்ளாமல் அன்பாகவும் மென்மையாகவும் அணுக வேண்டும். நற்செயல்களைப் புரியவைக்க கட்டாயப்படுத்துவதைத் தவிர்த்து, பெற்றோர்களும் பெரியவர்களும் தங்கள் சொந்த வாழ்க்கையில் முன்மாதிரியாகத் திகழ்ந்து, அவர்களைச் சுயமாகச் சிந்திக்கவும் கேள்விகள் கேட்கவும் ஊக்குவிப்பதன் மூலமே ஆரோக்கியமான மற்றும் நேர்மறையான சூழலை உருவாக்க முடியும்.

கேள்வி:

கிலாஃபத்தின் மீதான அன்பை ஒரு சடங்காக மாற்றாமல், அதை குழந்தைகளின் இதயங்களில் ஆழமாக விதைப்பது எப்படி?

பதில்: 

கிலாஃபத்தின் மீதான அன்பை குழந்தைகளிடம் வளர்ப்பதற்கு, முதலில் பெற்றோர்கள் குழந்தைகளின் இதயத்தில் அல்லாஹ் மற்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீதான உண்மையான அன்பையும், இஸ்லாத்தின் மீதான பற்றையும் சிறுவயதிலிருந்தே ஆழமாக விதைக்க வேண்டும். ஏனெனில், ஒருவர் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நேசிக்கத் தொடங்கினால், குர்ஆனின் வழிகாட்டுதலின்படி கிலாஃபத்தின் மீதான அன்பு தானாகவே அவர்களின் மனதில் வேரூன்றிவிடும். எனவே கிலாஃபத்தை ஒரு வழக்கமான செயலாகப் பார்க்காமல், இறைவனுடனான பிணைப்பின் ஒரு அங்கமாக அதைப் பார்க்க குழந்தைகளுக்குக் கற்பிக்க வேண்டும்.

இத்துடன் அமெரிக்காவிலிருந்து வருகை தந்திருந்த அன்சார்மார்களின் முலாக்கத் முடிவடைகிறது மற்றும் ஹுஸூர் (அய்யதஹுல்லாஹ்) வருகை தந்திருந்த குழுவுடன் புகைப்படம் எடுத்து கொண்டு, அவர்களுக்கு பேனாக்களை பரிசாக வழங்கினார்கள்.


கனடாவிலிருந்து ஜமாஅத் அஹ்மதிய்யா வௌத்ரேயில் இருந்து செயற்குழு  உறுப்பினர்களுடன் முலாக்கத் அறிமுகம்.

ஹுஸூர் (அய்யதஹுல்லாஹ்) அவர்கள் செயற்குழு உறுப்பினர்களுக்கு வழிகாட்டுதலை வழங்குகினார்கள்.

கேள்வி: 

கியூபெக்கில் மத அடையாளங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளைக் கருத்தில் கொண்டு, குழந்தைகளின் மத எதிர்காலத்திற்காகவும் சுதந்திரத்திற்காகவும் குடும்பங்கள் அங்கேயே தங்க வேண்டுமா அல்லது வேறு இடத்திற்குச் செல்ல வேண்டுமா?

பதில்:

மத அடையாளங்கள் மீதான தடை போன்ற சட்டக் கட்டுப்பாடுகள் உள்ள இடங்களில் வசிக்கும் போது, அங்குள்ள சட்டங்களை மதிப்பதோடு, மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும். பள்ளி அல்லது பணி இடங்களில் இத்தகைய கட்டுப்பாடுகள் இருந்தால், அந்த சூழலுக்கு ஏற்ப புரிதலுடன் நடந்துகொள்ளவும், அதேசமயம் பள்ளி நேரத்திற்கு வெளியே அல்லது தனிப்பட்ட இடங்களில் தனது மத அடையாளங்களை எவ்விதத் தயக்கமும் இன்றி வெளிப்படுத்தவும் கற்றுக்கொடுக்க வேண்டும். சுதந்திரமான சூழல் இருக்கும் இடத்திற்குச் செல்வது ஒரு வாய்ப்புதான் என்றாலும், இருக்கும் இடத்திலேயே மதக் கட்டுப்பாடுகளைப் புரிந்துகொண்டு, தாழ்வு மனப்பான்மை இன்றி நம்பிக்கையுடன் வாழக் குழந்தைகளுக்குப் பயிற்றுவிப்பதே முதன்மையான கடமையாகும்.

கேள்வி:

நான் தொடர்ந்து இஸ்திஃபார் செய்து மற்றவர்களை மன்னிக்க முயற்சிக்கிறேன், ஆனால் கடந்த கால அநீதிகளால் ஏற்பட்ட காயங்கள் இன்னும் மனதில் வலிக்கின்றன. நான் முழுமையாக மன்னித்து மன அமைதியைப் பெறுவது எப்படி?

பதில்: 

நீங்கள் செய்கின்ற இஸ்திஃபார் மற்றும் மன்னிப்பு உண்மையானதாக இருக்குமேயானால், உங்கள் இதயத்தில் உள்ள கசப்புகளை முழுமையாகக் களைந்துவிட வேண்டும். மற்றவர்கள் செய்யும் அநீதியைப் பற்றி கவலைப்படாமல், உங்கள் எதிர்பார்ப்புகளை இறைவனின் மீது மட்டும் வைத்தால், இத்தகைய மன அழுத்தங்கள் நீங்கிவிடும். இறைவனின் திருப்திக்காக மற்றவர்களை மன்னிப்பதன் மூலம் நீங்கள் இறைவனின் அருளையும் பரிசையும் பெற முடியும்.  தினமும் உங்கள் தொழுகையில், மற்றவர்கள் மீது உங்களுக்குள்ள கோபத்தையும் வஞ்சத்தையும் நீக்கி, என் இதயத்தைத் தூய்மையாக்குவாயாக என்று இறைவனிடம் மனமுருகிப் பிரார்த்தனை செய்யுங்கள்; நீங்கள் மன்னித்துவிட்டு மீண்டும் அதே பழைய கசப்பான உணர்வுகளை வளர்த்துக்கொள்ளாமல், இறைவனின் தீர்ப்பை நம்பி அமைதியுடன் இருப்பதுதான் உண்மையான மன அமைதிக்கான வழி.

கேள்வி: 

மத அடையாளம் ஊக்குவிக்கப்படாத ஒரு சூழலில் வளரும் குழந்தைகளுக்கு, தங்கள் நம்பிக்கையில் உறுதியாகவும் தன்னம்பிக்கையுடனும் இருக்க அஹ்மதி பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்?

பதில்:

மத அடையாளத்தை வெளிப்படுத்தத் தயங்கும் சூழலில் வளரும் குழந்தைகளுக்கு, பெற்றோர்கள் தங்களின் சொந்த வாழ்க்கையைச் சிறந்த முன்மாதிரியாக மாற்றிக்கொள்ள வேண்டும். பெற்றோர்கள் தங்கள் இஸ்லாமிய அடையாளத்தை எவ்விதத் தயக்கமும் இன்றி வெளிப்படையாகக் கடைப்பிடிப்பதைப் பார்த்து வளரும் குழந்தைகள், தானாகவே அதே தன்னம்பிக்கையைப் பெறுவார்கள்; மேலும், தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி, இஸ்லாம், குர்ஆன் மற்றும் கிலாஃபத் குறித்து குழந்தைகளுடன் அன்பான கலந்துரையாடல்களை மேற்கொள்வது, அவர்களின் மனதில் உள்ள தயக்கத்தைப் போக்கி, அவர்களுக்குத் தெளிவான புரிதலையும், தங்கள் அடையாளத்தின் மீதான பெருமிதத்தையும் உருவாக்கும்.

கேள்வி: 

ஹஸூர் அறிவுறுத்திய பிரார்த்தனைகளை ஓத முயற்சிக்கும்போது, நோய் அல்லது மன அழுத்த காலங்களில் இறைவணக்கத்தில் கவனம் செலுத்துவது கடினமாக உள்ளது; இத்தகைய சூழலில் என்ன வழிகாட்டுதல் உள்ளது?

பதில்: 

இறைவணக்கத்தில் முழு கவனத்துடன் இருக்க முடியாவிட்டாலும், அத்தகைய நேரங்களிலும் பிரார்த்தனைகளைத் தொடர்ந்து ஓதி வாருங்கள். நோய்வாய்ப்பட்டிருக்கும்போது தஸ்பீஹ் மற்றும் துஆக்களை ஓதுவது மன அமைதியைத் தருவதோடு நோயிலிருந்து விடுபடவும் உதவும். ஹஸரத் மஸீஹ் மவூத் (அலை) அவர்கள் நோய் காலங்களில் இறைவனின் துஆக்களைக் கொண்டு எவ்வாறு நிவாரணம் பெற்றார்கள் என்பதைச் சுட்டிக்காட்டி, இக்கட்டான சூழலிலும் இறைவனுடன் தொடர்பில் இருப்பது ஆன்மிக மற்றும் உடல் ரீதியான ஆரோக்கியத்திற்கு மிகச் சிறந்தது என்று ஹஸூர் கூறினார்கள்.

கேள்வி: 

இணையத்தில் ஹஸ்ரத் மஸீஹ் மவூத் (அலை) அவர்களைப் பற்றி அவதூறான கருத்துகளைக் காணும்போது, மனதை எவ்வாறு அமைதிப்படுத்திக்கொள்வது மற்றும் அதற்கு எவ்வாறு சிறந்த முறையில் பதிலளிக்க வேண்டும்?

பதில்:

இதுபோன்ற அவதூறுகளைக் காணும்போது மனம் வருந்துவது இயல்பானது என்றாலும், வெறும் வருத்தத்தோடு மட்டும் நின்றுவிடாமல், அந்த அவதூறுகளுக்கான முறையான பதில்களைத் தெரிந்துகொள்வதன் மூலம் உங்கள் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். அந்த அவதூறுகள் பதிவிடப்பட்ட அதே தளத்திலேயே, கண்ணியமான மற்றும் மென்மையான மொழியில் அதற்கான தர்க்கரீதியான பதில்களைப் பதிவிட வேண்டும். கோபத்தையோ தவறான சொற்களையோ பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். மேலும், இதுபோன்ற தருணங்களில் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்துகளை அதிகமாக ஓதுவது மனதிற்கு அமைதியைத் தருவதோடு, அது ஒரு நற்செயலாகவும் அமையும்.

கேள்வி: 

இன்றைய காலக்கட்டத்தில் பள்ளிகளில் குழந்தைகள் சந்திக்கும் கிண்டல் மற்றும் வன்முறை (Bullying) சிக்கல்களை எதிர்கொள்ள, பெற்றோர்களாகிய நாம் அவர்களுக்கு எவ்வாறு வழிகாட்ட வேண்டும்?

பதில்:

பள்ளியில் குழந்தைகள் கிண்டல் அல்லது வன்முறைக்கு ஆளாகும்போது, பெற்றோர்கள் அவர்களுடன் நட்புணர்வுடன் பேசி, அன்றைய நாள் எப்படி இருந்தது என்பதைத் தினமும் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். குழந்தைகள் தங்கள் மனக்குறைகளை வெளிப்படுத்த வாய்ப்பளிப்பதன் மூலம் அவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கலாம். அத்தகைய சூழல்களில் அவர்கள் எவ்வாறு பதிலளிக்க வேண்டும் அல்லது புறக்கணிக்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொடுத்து, அவர்களுக்குத் தகுந்த தன்னம்பிக்கையை ஊட்டி, அவர்கள் எதிர்காலத்தில் ஒரு சிறந்த தலைவராக உருவெடுக்கத் தேவையான மனவலிமையை வளர்க்க வேண்டும். தீவிரமான சிக்கலாக இருந்தால் பள்ளி ஆசிரியர்களிடம் முறையிட்டுத் தீர்வு காண வேண்டும்.

கேள்வி: 

பள்ளிகளில் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்கள் கற்பிக்கப்படும் சூழலில், குழந்தைகளை அஹ்மதி அல்லாத பிற தனியார் முஸ்லிம் பள்ளிகளில் சேர்ப்பது அனுமதிக்கப்படுமா?

பதில்:

இஸ்லாத்திற்கு எதிரான உள்ளடக்கங்கள் இல்லாத சூழலைத் தரும் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்ப்பது அனுமதிக்கப்பட்டதே. எனினும், அத்தகைய பள்ளிகளில் சேரும்போது அங்கிருக்கும் கொள்கைகளை அப்படியே பின்பற்றாமல், ஜமாஅத்தின் அடிப்படை நம்பிக்கைகளுக்கு முரணான விஷயங்களைத் தவிர்க்குமாறு குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். முக்கியமாக, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் தினமும் நேரம் ஒதுக்கி, அவர்கள் பள்ளியில் கற்கும் விஷயங்களைப் பற்றிப் பேசி, அவர்களுக்குச் சரியான இஸ்லாமிய புரிதலை வழங்க வேண்டும். இதுவே குழந்தைகளைச் சரியான பாதையில் வளர்க்க உதவும்.

கேள்வி: 

மேற்கத்திய நாடுகளில், செலவுகளுக்குப் பிறகு நிதி உதவி (சந்தா) செய்ய கையில் பணம் இல்லை என்று பலர் கருதுகிறார்கள்; இவர்களுக்கு நிதி தியாகத்தின் முக்கியத்துவம் மற்றும் அதன் அருட்களை பற்றி எவ்வாறு விளக்க வேண்டும்?

பதில்: 

நிதி தியாகம் என்பது வசதி இருக்கும்போது செய்யும் ஒன்றல்ல, மாறாகத் தன் தேவைகளைக் குறைத்துக்கொண்டு அல்லாஹ்வுக்காகச் செய்யும் தியாகமே உண்மையான அர்ப்பணிப்பு. முறையான பட்ஜெட் போட்டுச் செலவுகளைத் திட்டமிட்டு, அதிலிருந்து ஒரு பகுதியை அல்லாஹ்வுக்காக ஒதுக்குபவர்களுக்கு, அவன் தனது வாக்குறுதியின்படி பன்மடங்கு பரக்கத்தையும் (அருட்களையும்) செல்வத்தையும் வழங்குகிறான் என்பதற்குத் தன்னிடம் வரும் பல சான்றுகளை ஹுஸூர் அன்வர் (அய்யதஹுல்லாஹ்..) அவர்கள் சுட்டிக்காட்டுகினார்கள்; எனவே, நிதி உதவி செய்பவர்கள் எதிர்கொள்ளும் சோதனைகள் மற்றும் அவர்களுக்குக் கிடைக்கும் இறைவனின் அருட்கொடைகள் குறித்த நிகழ்வுகளை எடுத்துக்கூறி, அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து நிதி தியாகம் செய்வதன் மூலம் ஆன்மிக மற்றும் பொருளாதார முன்னேற்றம் பெற முடியும் என்பதை அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும்.

கேள்வி:

எனது அன்றாட வாழ்க்கையில் சமநிலையைப் பேணிக்கொண்டே, ஆன்மிகத்தையும் இறைவனுடனான எனது உறவையும் எவ்வாறு பலப்படுத்திக்கொள்வது?

பதில்:

பௌதீகக் கடமைகளைச் செய்வதிலும், இறை வழிபாட்டிலும் ஒரு சிறந்த சமநிலையைக் கொண்டுவர வேண்டும். நாம் செய்யும் வேலைகளுக்கு மத்தியில் இறைவனை எப்போதும் நினைவில் வைத்திருப்பது (கையில் வேலை, இதயத்தில் இறைவன்) ஆன்மிக வளர்ச்சியைத் தரும் என்றும், ஐவேளைத் தொழுகைகளைத் தவறாமல் கடைப்பிடித்தல், இரவு நேரங்களில் உபரித் தொழுகைகள் (நஃபில்) தொழுதல் மற்றும் அன்றாடப் பணிகளைச் செய்யும்போது இறைவனைத் நினைத்துக் கொண்டிருத்தல் (திக்ரு செய்தல்) ஆகியவை உங்கள் ஆன்மிகத் தொடர்பை பலப்படுத்தும் என்றும், இதுவே பௌதீ மற்றும் ஆன்மிக வாழ்வைச் செம்மையாகக் கொண்டு செல்வதற்கான வழியாகும்.

கனடாவிலிருந்து வௌத்ரேயில் இருந்து வருகை தந்த செயற்குழு உறுப்பினர்களுடனான முலாக்கத் (சந்திப்பு) நிறைவடைந்தது, மேலும் ஹுஸூர் (அய்யதஹுல்லாஹ்..) தூதுக்குழுவினருக்கு புகைப்படம் எடுக்க அனுமதி வழங்கி, பேனாக்களை பரிசாக வழங்கினார்கள்.

ஹுசூர் அவர்கள் IAAAE குழுவினருக்கு புகைப்படம் எடுக்க அனுமதி வழங்குகினார்கள்.

வழங்குபவர்களின் (Presenters) நிறைவுரை.

26 ஜூன் 2026 அன்று வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களின் தாராள குணம் என்ற தலைப்பில் ஆற்றிய ஜுமுஆ உரையின் தொகுப்பு வழங்கப்பட்டது.


Source: https://www.youtube.com/watch?v=9tcH1EoHILo


கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.