மீண்டும் ஒருமுறை உலக நாடுகளின் இரட்டை வேடத்தை நாம் அனைவரும் கண்டுள்ளோம். காசா தரைமட்டமாக்கப்பட்டு, டாவோஸில் (Davos) "புதிய காசா" (New Gaza) பற்றிய திட்டங்கள் வெளியிடப்படும் நிலையில், ட்ரம்ப் கிரீன்லாந்தை (Greenland) தன் வசப்படுத்த முடிவு செய்தபோது பெரும் கூச்சல் எழுகிறது. காசாவைப் பொறுத்தவரை, மக்களையும் அவர்களது நிலத்தையும் தீர்மானிக்க ஒரு "அமைதி வாரியம்" அமைக்கப்படுகிறது. ஆனால் கிரீன்லாந்து என்று வரும்போது, அவர்களுக்கு மட்டுமே அதைத் தீர்மானிக்கும் உரிமை உள்ளதாம்.
இது ஒன்றும் புதியதல்ல. 2022-ன் தொடக்கத்தில், ரஷ்யா உக்ரைனைத் தாக்கியபோது, உக்ரைனில் பாதிக்கப்பட்டவர்கள் ஈராக், ஆப்கானிஸ்தான் அல்லது பிற நாடுகளின் பாதிக்கப்பட்டவர்களைப் போன்றவர்கள் அல்ல என்றும், அங்குள்ளவர்களின் உயிரிழப்புகள் அவ்வளவு முக்கியமில்லை என்றும் வெளிப்படையான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
அதனால்தான், மார்க் கார்னி (Mark Carney) நீதி என்பது விகிதாச்சாரப்படி வழங்கப்படவில்லை என்பதை ஒப்புக்கொண்டபோது உலகம் திகைத்துப் போனது. டாவோஸில் ஆற்றிய உரையில் அவர் வெளிப்படையாக இவ்வாறு கூறினார்:
"சர்வதேச விதிகளின் அடிப்படையிலான ஒழுங்குமுறை என்பது ஒரு வகையில் பொய்யானது என்பதை நாம் அறிவோம். வலிமையானவர்கள் தங்களுக்குத் தேவையான போது விதிகளில் இருந்து விலக்கு பெறுவார்கள். சர்வதேச சட்டங்கள் குற்றம் சாட்டப்பட்டவர் அல்லது பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தைப் பொறுத்தே மாறுபடும் என்பதும் நமக்குத் தெரியும்."
இனம் மற்றும் செல்வம் ஆகியவை சட்டம் எங்கே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிக்கின்றன என்ற இந்த உண்மையை உலகின் பிற பகுதிகளுக்குப் புரியவைக்கத் தேவையில்லை. ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் போர்களுக்காக டேனிஷ் வீரர்கள் உயிர் இழந்த நிலையில், ட்ரம்ப் தங்களை இந்த நிலைக்குத் தள்ளுவதை எண்ணி டென்மார்க் மக்கள் "துரோகம் இழைக்கப்பட்டதாக" உணர்வதில் ஆச்சரியமில்லை. ஒரு பத்திரிகையாளர் பேச்சுவழக்கில் கூறியது போல, இதன் அர்த்தம்: "உலகின் மறுபக்கத்தில் உள்ள அரேபியர்களையும் முஸ்லிம்களையும் கொல்ல நாங்கள் உங்களுக்கு உதவினோம். பிறகு ஏன் எங்களிடம் இப்படி நடந்துகொள்கிறீர்கள் எஜமானரே?" என்பதுதான்.
ட்ரம்ப்பிற்கு மக்ரோன் அனுப்பிய தனிப்பட்ட செய்தி இன்னும் அருவருப்பானது. கிரீன்லாந்து விவகாரத்தில் ட்ரம்ப் பிடிவாதமாக இருந்தபோது, பிரெஞ்சு அதிபர் அவருக்கு இப்படி குறுஞ்செய்தி அனுப்பினார்: "நண்பரே, சிரியா விஷயத்தில் நாங்கள் உங்களுடன் முழுமையாக ஒத்துப்போகிறோம். ஈரான் விஷயத்தில் நாம் பெரிய காரியங்களைச் செய்ய முடியும். ஆனால் கிரீன்லாந்தில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று எனக்குப் புரியவில்லை."
இதன் அர்த்தம் என்னவென்றால்: சிரியாவில் நீங்கள் செய்த அநீதிகளுக்கு நாங்கள் ஆதரவு அளிக்கிறோம், ஈரானிலும் அதையே செய்யலாம். ஆனால் அந்த விதிகளை இங்கே கொண்டு வர வேண்டாம்.
என்னை வியக்க வைப்பது என்னவென்றால், இறுதி நாட்களில் நிகழவிருக்கும் இந்தச் சூழல்களைப் பற்றி திருக்குர்ஆன் மிகத் துல்லியமாகப் பேசுகிறது. காலத்தின் போக்கைப் பற்றிப் பேசும் இறைவன் அடுத்த வசனத்தில் கூறுகிறான்:
إِنَّ الْإِنْسَانَ لَفِي خُسْرٍ
நிச்சயமாக, மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான்." (அல்-அஸ்ர், 103:3)
(அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தின் இரண்டாவது கலீஃபத்துல் மசீஹ்) ஹஸ்ரத் மிர்ஸா பஷீருத்தீன் மஹ்மூத் அஹ்மத் (ரலி) அவர்கள் இந்த வசனங்களுக்கு விரிவான விளக்கம் அளித்துள்ளார்கள். இங்கு "இன்சான்" (மனிதன்) என்பதற்கு அவர்கள் சில விளக்கங்களைத் தருகிறார்கள். அதில் ஒன்று மேற்கத்திய ஆளும் வர்க்கத்தைப் பற்றியது:
"வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களின் வருகைக்குப் பின், இக்காலகட்டத்திலும் தங்களை மட்டுமே 'மனிதர்கள்' என்று நினைக்கும் நாடுகள் உள்ளன. அவர்கள் 'மனிதாபிமானம்' (humanitarian) என்ற வார்த்தையைப் பயன்படுத்தும்போது, அதன் பொருள் ஐரோப்பிய மக்கள் ஐரோப்பியர்களிடம் கடுமையாக நடந்து கொள்ளக்கூடாது அல்லது அமெரிக்கர்கள் அமெரிக்கர்களிடம் கடுமையாக இருக்கக்கூடாது என்பதுதான். அதைத் தாண்டி அவர்களுக்கு வேறு எந்தப் பொருளும் இல்லை."
"அதேபோல், அவர்கள் சுதந்திரம் மற்றும் சமத்துவம் என்று முழங்கும்போது, மேற்கத்திய நாடுகளுக்கு மட்டுமே அந்தச் சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்று கருதுகிறார்கள். எனவே, ஒரு வர்க்கத்தினர் தங்களை மட்டுமே 'மனிதர்களாகக்' கருதி, உலகின் எஞ்சிய பகுதியை இழிவாகக் கருதும் ஒரு காலம் வரும் என்று இறைவன் கூறுகிறான்." (தஃப்சீர்-ஏ-கபீர், 2023, தொகுதி 14, பக். 227)
இத்தகைய மனிதர்கள் இறுதியில் நஷ்டத்தில் இருப்பார்கள் என்று திருக்குர்ஆன் எச்சரிக்கிறது. தங்களை மட்டுமே மனிதர்களாகக் கருதி மற்றவர்களை மனிதாபிமான வட்டத்திற்கு வெளியே வைப்பவர்கள், அழிவுப் பாதையை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறார்கள் என்று ஹஸ்ரத் மிர்ஸா பஷீருத்தீன் மஹ்மூத் அஹ்மத் (ரலி) அவர்கள் விளக்குகிறார்கள்.
வெனிசுலாவில் மதுரோவை ட்ரம்ப் துணிச்சலாக வீழ்த்தியபோது, பெரும்பாலான மேற்கத்திய நாடுகள் சர்வதேச சட்டத்திற்கு மாறான அந்தச் செயலை ஆதரித்தன. இது ஒன்றும் புதியதல்ல. மற்ற இடங்களில் பயன்படுத்தப்படும் அதே விதிகள் தங்களுக்குப் பயன்படுத்தப்படும்போது மட்டுமே ஐரோப்பா எதிர்ப்புத் தெரிவிக்கிறது.
இத்தகைய அநீதியான செயல்கள் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். இதைத்தான் ஹஸ்ரத் மிர்ஸா மஸ்ரூர் அஹ்மத் (அய்யதஹுல்லாஹ்) அவர்கள் 2012-ல் அமெரிக்க நாடாளுமன்றத்தில் (Capitol Hill) உரையாற்றியபோது எச்சரித்திருந்தார்கள். இன்று பலம் வாய்ந்த நாடுகளுக்கும் பலவீனமான நாடுகளுக்கும் இடையே ஒரு பிளவு இருப்பதை அவர்கள் சுட்டிக்காட்டிருந்தார்கள். இந்த பிளவு அமைதியின்மையை ஏற்படுத்தும், அது இறுதியில் பரவும். மற்ற இடங்களில் அவர்கள் செய்யும் கொடுமைகளும் அநீதிகளும் ஒருநாள் அவர்களது வாசலுக்கே வரும்.
உலகில் அமைதி நிலைபெற நீதி ஒரு அடிப்படைத் தூண் என்று திருக்குர்ஆன் போதிப்பதாக அவர்கள் அறிவுறுத்தியிருந்தார்கள் "வல்லரசு நாடுகளும் செல்வந்த நாடுகளும் தங்கள் உரிமைகளைப் பாதுகாக்கும் முயற்சியில் ஏழை மற்றும் பலவீனமான நாடுகளின் உரிமைகளைப் பறிக்கக் கூடாது, அந்த நாடுகளை அநீதியாக நடத்தக் கூடாது." (World Crisis and the Pathway to Peace, 2016, பக். 88)
அன்னார் சுருக்கமாகக் கூறினார்கள்:
"இஸ்லாம் அமைதிக்கான பல்வேறு வழிகளில் நம் கவனத்தைத் திருப்புகிறது. அது முழுமையான நீதியை வலியுறுத்துகிறது. உண்மையான சாட்சியம் அளிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது. மற்றவர்களின் செல்வத்தின் மீது பொறாமைப் பார்வை வீசக்கூடாது என்று கூறுகிறது. வளர்ந்த நாடுகள் தங்கள் சுயநலன்களைத் துறந்து, வளரும் நாடுகளுக்கு உண்மையான தன்னலமற்ற மனப்பான்மையுடன் உதவ வேண்டும். இவை பின்பற்றப்பட்டால் மட்டுமே உண்மையான அமைதி ஏற்படும்."
இறைவனை நோக்கித் திரும்பாமல் அமைதியை நிலைநாட்ட முடியாது என்பதை இன்றைய உலகம் உணரவில்லை. நாம் அழிவுப் பாதையில் செல்கிறோம் என்று தெரிந்தும், அந்த அறிவு எவ்வித நன்மையும் செய்யவில்லை.
ஆனால், மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான் என்று கூறிய திருக்குர்ஆன், அதற்கான தீர்வையும் அடுத்த வசனத்தில் வழங்குகிறது: "ஆயினும் நம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்து, உண்மையைக் கொண்டு ஒருவருக்கொருவர் அறிவுரை கூறி, பொறுமையுடன் செயலாற்றுமாறு ஒருவருக்கொருவர் அறிவுரை கூறி வருபவர்களைத் தவிர. (அவர்கள் என்றும் இழப்பிற்காளாக மாட்டார்கள்.)" (அல்-அஸ்ர், 103:4)
இதனால்தான், அழிவிலிருந்து நம்மையும் உலகையும் காப்பாற்ற ஒரே வழி: அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வது, சரியான நேரத்தில் நற்செயல்களைச் செய்வது, பேச்சு மற்றும் செயல்களில் நீதியாக நடப்பது என்று ஹஸ்ரத் ஐந்தாவது கலீஃபத்துல் மசீஹ் மிர்ஸா மஸ்ரூர் அஹ்மது (அய்யதஹுல்லாஹ்) அவர்கள் நமக்கு நினைவூட்டுகிறார்கள். அல்லாஹ் நமக்கும் உலகிற்கும் அதற்கு அருள் புரிவானாக. ஆமீன்!
- Jazib Mehmood, Ghana
Source: Opinion: Gaza vs. Greenland – How a single verse of the Holy Quran describes the world today

கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None