மஸீஹின் இரண்டாம் வருகை என்பது ஹஸ்ரத் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை பின்பற்றக் கூடிய ஒரு உம்மத்தியின் வருகையை குறிக்கின்றது


 

எங்கள் மீது சுமத்தப்படும் இரண்டாவது ஆட்சேபனை என்னவென்றால் ஏற்றுக்கொள்ளப்பட்ட முஸ்லீம் நம்பிக்கைக்கு எதிராக நாங்கள் நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பின்பற்றக் கூடிய ஒருவர், நம்மிடையே வாக்களிக்கப்பட்ட மஸீஹாக தோன்றியிருக்கிறார் என்று ஏற்றுக் கொண்டுள்ளோம்  என்பதாகும். நம்மிடம் கூறப்படுவது என்னவென்றால் இந்த நம்பிக்கையை நாம் ஏற்றுக் கொண்டிருப்பது எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஹதீஸ்களுக்கு எதிரானதாகும். ஏனென்றால் ஹதீஸ்களின் அடிப்படையில் வரக்கூடிய மஸீஹ் என்பவர் மரியத்தின் மகன் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஆவார்கள் அன்னார் நேரம் வரும்பொழுது வானத்திலிருந்து இறங்கி வருவார்கள்.

இப்பொழுது, அஹ்மதிய்யா இயக்கத்தின் நிறுவனர் ஆகிய ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது காதியானி அலைஹிஸ்ஸலாம் அவர்களை நாங்கள் வாக்களிக்கப்பட்ட மஸீஹாகவும் மஹ்தியாகவும் ஏற்றுக் கொண்டுள்ளோம் என்பது நிச்சயமாக உண்மை தான். ஏன் ஏற்றுக்கொள்ளக்கூடாது? புனித குர்ஆனும் எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நபிமொழிகளும் மேலும் சாதாரண பகுத்தறிவும்; முதல் மஸீஹ் இயல்பான முறையில் இறந்து விட்டார் என்பதை அறிவிக்கின்றன. எனவே வாக்களிக்கப்பட்ட மஸீஹ் அவர்கள் எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை பின்பற்றக் கூடியவர்களிலிருந்து தோன்றுவார்கள் என்ற எங்களுடைய நம்பிக்கை திருக்குர்ஆனிற்கோ நபிமொழிகளுக்கோ எதிரானதாக இருக்க முடியாது.  திருக்குர்ஆன் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று அறிவிக்கின்றது நபிமொழிகளும் கூறுகின்றன. எனவே ஒருவேளை நபிமொழிகளில் மரியத்தின் மகன் என்ற பெயர் கொண்ட ஒரு தூதரின் வருகை பற்றிய வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது என்றால் அந்த வாக்களிக்கப்பட்டவர் நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சீடராகத்தான் இருக்க முடியுமே ஒழிய ஏற்கனவே இயல்பான முறையில் இறந்து போன நாசரேத்தைச் சேர்ந்த மஸீஹாக இருக்க முடியாது. இவ்வாறு சொல்லப்படுகிறது அதாவது குர்ஆனும் நபிமொழிகளும் மரியத்தின் மகன் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய மரணத்தைக் குறித்து அறிவித்தாலும் நாம் எதிர்பார்க்கின்ற அதே மரியத்தின் மகனாகிய மஸீஹ் அவர்களின் இரண்டாம் வருகையை தொடர்ந்து எதிர்பார்த்திருக்க வேண்டும் ஏனென்றால் இறைவன் எல்லாம் வல்லவன் அல்லவா? அவனால் இறந்துபோன மெஸாயாவை உயிர்ப்பித்து அவரை மீண்டும் பூமிக்கு அனுப்ப முடியாதா? நாம் இத்தகைய நம்பிக்கையும் இத்தகைய எண்ணத்தையும் கொண்டிரா விட்டால் நிச்சயமாக நாம் இறைவனின் வல்லமையை மறுக்கக் கூடியவர்கள் ஆகிவிடுவோம்.  

நம்முடைய நிலைப்பாடு வேறாகும். நாம் எல்லாம் நம் இறைவனின் வல்லமையை மறுப்பது கிடையாது. நாம் இறைவனை எல்லாம் வல்லவனாக நம்புகின்றோம் இறைவன் எல்லாம் வல்ல இறைவன் ஆக இருப்பதால் அவனுக்கு நாசரேத்தைச் சேர்ந்த மஸீஹை உயிர்ப்பித்து ஆக வேண்டும் என்ற தேவை இல்லை. அவன் நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பின்பற்றக் கூடியவர்களில் இருந்தே ஒரு போதகரை எழுப்பி அவரை வாக்களிக்கப்பட்ட மஸீஹாக நியமித்து உலகை சீர்திருத்த கூடிய பொறுப்பை அவர் மீது சுமத்தவும் முடியும். இந்த விஷயத்தில் சரியான முறையில் சிந்திக்கக்கூடிய ஒருவர் எப்படி இறைவனுக்கு வல்லமை இருந்தால் அவன் தன்னுடைய முதல் மஸீஹை மீண்டும் உயிர்ப்பித்து அனுப்பவேண்டும் என்று வலியுறுத்துகின்றார் என்று நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. எல்லா சாதாரண விதிகளுக்கும் எதிரானதாக இருக்கிறது இத்தகைய விஷயம். நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நாம் காண்பது என்னவென்றால் தன்னால் ஒரு புதிய அங்கியை வாங்க முடியும் என்ற நிலையில் இருக்கும் ஒரு நபர் தன்னுடைய பழைய அங்கியையே நீண்ட காலத்திற்கு உபயோகப்படுத்துவதை வெறுத்திடுவார் அவருக்கு ஒரு புது அங்கி தேவை என்றால் அவர் பழைய அங்கியை தூர எறிந்துவிட்டு புதிய ஒன்றை வாங்கிக் கொள்வார். புதிய ஒன்றை வாங்க முடியாத ஒருவர் தான் தன்னுடைய பழைய அங்கியை திருத்தம் செய்தோ, மாற்றியோ மீண்டும் உபயோகிக்க விரும்புவார். ஒரு ஏழையே தன்னுடைய பொருட்களின் மீது அளவிற்கு அதிகமான கவனம் எடுத்துக் கொள்வார். இறைவன் ஏழை கிடையாது. அவன் எல்லாம் வல்லவனாவான் அவன் தன்னுடைய அடியார்களுக்கு அவர்களை வழிநடத்த ஒருவருடைய தேவை இருப்பதை கண்டால் அவன் தன்னுடைய பழைய இறந்துபோன நபிக்கு மீண்டும் உயிர் கொடுக்க வேண்டிய தேவை அவனுக்கு கிடையாது. தன்னுடைய உயிர்வாழும் அடியார்களில் இருந்தே ஒருவரை எழுப்பி மற்றவர்களை சீர்திருத்தவும் அவர்களுக்கு தலைமை ஏற்கவும் செய்ய அவனால் முடியும். ஹஸ்ரத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் முதற்கொண்டு எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் வரை ஒரு முறை கூட தன்னுடைய அடியார்களை வழிநடத்தும் தேவைக்காக இறைவன் ஒரு இறந்து போன நபியை மீண்டும் உயிரூட்டியது இல்லை. அந்த ஒரு வழிமுறை உண்மையில் தேவையற்றதாகும். ஒரு குறிப்பிட்ட காலத்தில் வாழக்கூடிய ஒரு குறிப்பிட்ட மக்களை தூய்மைப்படுத்துவதும் அவர்களை சீர்திருத்துவதும் இறைவனுடைய வல்லமைக்கு அப்பாற்பட்டதாக இருந்தால் வேண்டுமானால் அந்த வழிமுறை தேவை உடையதாக இருக்கும். இறைவனுடைய ஆட்சி எல்லா காலங்களில் வாழக்கூடிய எல்லா மனிதர்கள் மீதும் நீடித்திருக்க கூடியதாக இல்லாமல் இருந்தால் வேண்டுமானால் இத்தகைய வழிமுறை தேவைப்படும்.

இறைவன் எல்லாம் வல்லவன் ஆவான் மேலும் அவனுடைய ஆட்சி எல்லா காலங்களில் வாழக்கூடிய எல்லா மனிதர்கள் மீதும் நீடித்து நிலைத்து இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட காலத்தில் வாழக்கூடிய ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் சீர்திருத்தத் திற்காக அவன் தன்னுடைய இறந்துபோன நபிமார்களில் இருந்து ஒருவரை உயிர்ப்பிக்க வேண்டும் என்று நினைப்பது அறிவற்ற சிந்தனையாகும்.

இறைவனுடைய வல்லமை எல்லை ற்றதாகும். அவனால் எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை போன்ற ஒரு நபியை அரபுகளுக்கு மத்தியிலிருந்து எழுப்ப முடிந்தது. இப்பொழுது நம்முடைய காலத்தில் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு ஒத்தவர் ஆகவோ அல்லது அவரை விட சிறந்தவராகவோ ஒருவரை முஸ்லிம்களிடையே இருந்து எழுப்புவது அவனுடைய வல்லமைக்கு அப்பாற்பட்ட ஒன்று அல்ல…

ஹஸ்ரத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் இரண்டாம் வருகை என்பது இந்த சமுதாயத்தில் இருந்து வரக்கூடிய ஒரு சீர்திருத்தவாதியின் தோற்றத்தையே குறிக்கிறது

உண்மை என்னவென்றால் நாங்கள் ஹஸ்ரத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய இரண்டாம் வருகையை மறுக்கின்றோம். ஏனென்றால் எங்களைப் பொறுத்தவரையில் இறைவன் வல்லமை மிக்கவன் ஆவான். அவனால் எந்த காலத்திலும் எந்த மக்களில் இருந்தும் எவரையும் வழிகாட்டி மற்றும் தீர்க்கதரிசி என்னும் நிலைக்கு உயர்த்த முடியும். இவ்வாறு இறைவனால் செய்ய முடியாது என்று நினைக்கக் கூடியவர்கள் தவறில் இருக்கிறார்கள். அதாவது நம்மிடையே இருந்து ஒருவரை எழுப்புவதற்கு பதிலாக அவன் இறந்து போன ஒரு நபியை மீண்டும் உயிராக்குவான் என்று நினைக்கக் கூடியவர்கள். அவர்கள் அல்லாஹ்வுடைய தகுதிக்கேற்ப அவனுடைய வல்லமையை மதிப்பிடுவதில்லை.

எனவே முதல் மஸீஹ் உடைய இரண்டாம் வருகை என்பது இறைவனுடைய வல்லமையையும் அவனுடைய ஞானத்தையும் கேவலப்படுத்துவது ஆகும். அது புனித நபிகள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஆத்மீக வல்லமையையும் அவமதிப்பதாகும். முதல் மஸீஹ் உடைய இரண்டாம் வருகை என்பது தவிர்க்க முடியாதது என்று கூறுவது ஒரு வினோதமான ஒரு கூற்றே ஆகும்.

முந்தைய  எல்லா காலங்களிலும் எப்பொழுதெல்லாம் ஒரு சமுதாயம் வழிதவறி போனதோ எப்பொழுதெல்லாம் அதற்கு இறைவனின் வழிகாட்டுதல் தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் இறைவன் இந்த நோக்கத்திற்காக அவர்களிலிருந்தே ஒருவரை எழுப்பி இருந்தான். காலங்காலமாக போற்றப்பட்டு வந்த இந்த இறைவனின் செயல் முறை நபி பெருமானாரின் சமுதாயம் வழிதவறிப் போன போதும் அவர்களுக்கு இறைவனின் வழிகாட்டுதல் தேவைப்பட்ட போது மட்டும் கைவிடப்பட்டு விட்டதா? நபி பெருமானாரின் சமுதாயம் தங்களில் இருந்தே ஒரு சீர்திருத்தவாதியை வழங்க தவறியதால் இந்த உம்மத் பழைய நபிமார்களில் ஒருவரினால் சீர்திருத்தப்படுமா? இதன் பொருள் என்னவென்றால் எப்பொழுதும் நபி பெருமானாரின் ஆத்மீக தகுதியை அற்பமான ஆட்சேபனைகளை செய்து கொண்டிருக்கும் யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்கள் பின்பற்ற வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது என்பதே.

நபி பெருமானாரின் மீளுருவாக்கம் செய்யக்கூடிய திறனை முஸ்லிம்கள்  சந்தேகிக்கிறார்கள் என்பது உண்மையிலேயே வினோதமானது ஆகும். தேவை ஏற்படும்பொழுது நபி பெருமானை பின்பற்றக் கூடிய ஒருவரால் அன்னாரை பின்பற்றக்கூடிய மற்ற உம்மத்தினரை வழிநடத்த முடியாது என்று நாம் நினைத்தால்; புனித நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஆத்மீக தாக்கத்தை குறைத்து மதிப்பிடக் கூடியவர்களை நாம் ஆதரிக்கின்றோம் என்பதாகிவிடும்.

பற்ற வைக்கப்பட்ட ஒரு ஒளி விளக்கினால் எத்தனையோ விளக்குகளை பற்ற வைக்க முடியும். அணைந்து போன இறந்துபோன ஒரு விளக்கினால் அது முடியாது. அதாவது நபி பெருமானாரின் சமுதாயத்திலிருந்து ஒருவரால் மற்றவர்களை சீர்திருத்தவே முடியாது என்று கூறும் அளவுக்கு அவர்களுடைய சமுதாயம் சீர்கெட்டு போய்விட்டால் நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய போதனை மற்றும் அவர்களுடைய  முன்மாதிரியின் ஆத்மீக அருளும், உருவாக்கும் திறனும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது என்று ஏற்றுக்கொள்ள வேண்டியது வரும். இந்த முடிவினை எந்த ஒரு உண்மை முஸ்லிமாலும் ஏற்றுக்கொள்ளவே முடியாது.

ஹஸ்ரத் மூஸா அலைஹிஸ்ஸலாம்  அவர்களுடைய சமுதாயத்தினர்  காலங்காலமாக புத்துயிர் ஊட்டப்பட்டு வந்தார்கள் என்பதும் அவர்களுக்கு புத்துயிர் ஊட்டக் கூடிய போதகர்கள் அவர்களிலிருந்தே எழுப்பப்பட்டு வந்தார்கள் என்பதும் ஒவ்வொரு உண்மை முஸ்லிமுக்கும் தெரியும். மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பின்பற்றிய ஒருவரே அவர்களைப் பின்பற்றிய  சமுதாயத்தினரை சீர்திருத்தி வந்தார்கள். ஹஸ்ரத் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய ஆன்மீக ஆட்சி இறைவன் நாடும் வரை நிலைத்திருந்தது. அந்த ஆன்மீக ஆட்சி முடியக்கூடிய காலம் வந்த பொழுது இறைவன் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய சமுதாயத்திடமிருந்து முகம் திருப்பி ஹஸ்ரத் இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய சந்ததியினர்  பக்கம் திரும்பி அவர்களிலிருந்து முழு மனித இனத்திற்கும் ஆன ஒரு தூதரை எழுப்பினான். இப்பொழுது ஹஸ்ரத் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய சமுதாயத்திலிருந்து நபி பெருமானாரின் சமுதாயத்தை சீர்திருத்தக் கூடிய ஒருவரை இறைவன் அனுப்பினால் அதன் பொருள் இறைவன் ஹஸ்ரத் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய ஆத்மீக ஆட்சியை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தது போல் ஹஸ்ரத் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஆத்மீக ஆட்சியை ஒரு முடிவுக்குக் கொண்டுவர முடிவு செய்துவிட்டான் என்று ஆகிவிடும். நவூதுபில்லாஹ். மேலும் அந்த இடத்தில் ஒரு புதிய ஆத்மீக ஆட்சியை ஏற்படுத்த முடிவு செய்துவிட்டான் என்றாகிவிடும். மேலும் அதன் பொருள் நவூதுபில்லாஹ் எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஆத்மீக வல்லமை இனிமேல் பயனளிக்காது. அந்த ஆத்மீக வல்லமையினால் அன்னாருடைய உம்மத்தினரின் சீர்திருத்தம் மற்றும் வழிகாட்டுதல் ஆகியவற்றிற்கு தேவைப்படும் ஒளியூட்டுதலை நபி பெருமானாரின் போதனை மற்றும் முன்மாதிரியிலிருந்து பெறக்கூடிய வகையில் ஒரே ஒரு உம்மத்தியை கூட ஊக்குவிக்க முடியவில்லை என்றும் ஆகிவிடும்.

அந்தோ பரிதாபம். மக்கள் தாங்கள் மனதில் உருவாக்கி வைத்திருக்கின்ற   தங்களுடைய சொந்த பெருமை மீது யாராவது சிறிதளவு தாக்குதல் தொடுத்தாலும் சகிப்பின்மையை காட்டுகின்றனர். தங்களை யாராவது குறை கூறினாலோ அல்லது தங்களுடைய ஒரு தவறை சுட்டிக் காட்டினாலோ அவர்களால் ஏற்றுக் கொள்ளவே முடிவதில்லை. இருப்பினும் நபி பெருமானாரை நேசிப்பதாக வாதித்து கொண்டிருக்கும் அதே வேளையில் அன்னார் மீது குறைகளையும் பலவீனங்களையும் சுமத்துவதற்கு இவர்கள் தயங்குவதில்லை. இதயத்தில் எதிரொலிக்காமல் வாயினால் மட்டும் உரக்க முழங்க கூடிய அந்த நேசத்தினால் என்ன பயன் இருக்க முடியும்? முஸ்லிம்கள் உண்மையிலேயே எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை நேசிக்கின்றார்கள் என்றால் நபி பெருமானார் உடைய உம்மத்தினரை சீர்திருத்துவதற்காக ஒரு இஸ்ரேலிய நபி இரண்டாவது முறையாக வருவார் என்பதனை அவர்களால் சகித்துக் கொள்ள முடியாது. தன்னுடைய வீட்டிலேயே தனக்குத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் பொழுது தன்னுடைய அண்டை வீட்டாரிடம் சென்று அதனை எவர் தான் கேட்பார்? தனக்குத்தானே உதவி செய்யும் நிலையில் இருக்கும் பொழுது பிறரிடம் அந்த உதவியை எவர்தான் கேட்பார்? நபி பெருமானாரின் உம்மத்திற்கு மிகவும் அவசியமான உதவி தேவைப்படும் நேரத்தில் நாசரேத்தின் மெஸாயாவின் இரண்டாம் வருகை இந்த உம்மத்தினருக்கு தேவைப்படும் என்று சிந்தித்துக் கொண்டும் போதித்துக் கொண்டும் இருக்கின்ற முல்லாக்கள் தங்களுடைய கண்ணியத்தை குறித்து எந்த அளவுக்கு தீவிரமான எண்ணம் கொண்டிருக்கிறார்கள் என்றால் மத விவாதங்களில் பிறரிடம் இருந்து உதவி பெறுவதை விட அவர்கள் அங்கே தோற்றுவிடுவதை விரும்புபவர்களாக இருக்கிறார்கள்.

இந்த முல்லாக்களுக்கு ஏதாவது ஒரு உதவி விவாதங்களில் வழங்கப்படும் பொழுது அவர்கள் நன்றி உணர்வை வெளிப்படுத்துவது இல்லை மாறாக அவர்கள் உள்ளம் புண்பட்டு இவ்வாறு கூறுகிறார்கள்; மற்றவர்கள் எங்களுக்கு உதவி செய்ய துணியும் அளவுக்கு நாங்கள் கல்வி ஞானத்தில் குறைந்துவிட்டோமா என்ன? என்று அவர்கள் கூறுகிறார்கள்.

ஆனால் நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் விஷயத்தில் அவர்கள் எவ்வளவு சாதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள்? அவர்கள் மிகவும் அவசரப்பட்டு நம்புவதும் போதிப்பதும் என்னவென்றால் நபி பெருமானாரின் உம்மத்திற்கு ஒரு சீர்திருத்தம் தேவைப்படும் பொழுது அந்த சீர்திருத்தம் நபி பெருமானாரின் உம்மத்திலிருந்து வராது மேலும் எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சொந்த ஆன்மீக தாக்கத்தினால் ஏற்படாது மாறாக முந்தைய  சமுதாயத்தில் உள்ள ஒரு நபியுடைய செல்வாக்கினால் ஏற்படும் என்று அவர்கள் கூறுகிறார்கள். அந்த நபி; நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் அவர்களுடைய போதனைகளுக்கும் எந்த வகையிலும் கடன் பட்டிருக்க மாட்டார். மனிதர்கள் முற்றிலும் மரணித்தவர்கள் ஆக மந்தமானவர்களாக ஆகி விட்டார்களா?

அவர்கள் சிந்திப்பதற்கும் உணர்வதற்குமான எல்லா திறனையும் இழந்து விட்டார்களா? அவர்கள் கண்ணியத்தையும் சுயமரியாதையும் தங்களுக்காக மட்டுமே மதிக்கிறார்களா? இறைவனையும் அவனுடைய தூதரையும்ம் அவர்கள் அவ்வாறு மதிப்பதில்லையா? கோபத்தையும் எரிச்சலையும் நம்முடைய தனிப்பட்ட எதிரிகளுக்கு எதிராக மட்டும் தான் காட்ட வேண்டுமா? இறைவனையும் அவனுடைய தூதரையும் தாக்கக்கூடியவர்களுக்கு எதிராக வெளிப்படுத்த கூடாதா?

ஒரு இஸ்ரேலிய நபியின் இரண்டாவது வருகையை ஏன் மறுக்கிறீர்கள் என்று எங்களிடம் கேட்கப்படுகின்றது. ஆனால் நாங்கள் என்ன செய்ய? எங்களால் எங்களுடைய இதயங்களை மாற்றிக் கொள்ள முடியாது. ஹஸ்ரத் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் மீதான எங்கள் நேசத்தை இயல்பான இயற்கையான வழிகளிலேயே அன்றி வேறு வகையில் எங்களால் காண்பிக்க முடியாது. ஹஸ்ரத் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கண்ணியம் எங்களுக்கு மிகவும் பிரியமான தாகும். தன்னுடைய உம்மத்தினரின் சீர்திருத்தத்திற்காக எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களுக்கு வேறு ஒருவரின் தேவை ஏற்படும் என்றும் அதனால் அவருக்கு அண்ணார் கடன் பட்டவர்கள் ஆகிவிடுவார்கள் என்பதனை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.

நியாயத்தீர்ப்பு நாளில் முதலில் பிறந்தவரில் இருந்து கடைசி மனிதர் வரை  மொத்த மனித இனமும் இறைவன் முன்னால் அணிவகுத்து நிற்கும் பொழுதும் மேலும் எல்லோருடைய செயல்களும்  சாதனைகளும் எடுத்துக் கூறப்படும் போது நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இஸ்ரவேலி மெசாயாவிற்கு  கடன்பட்டு அந்த கடனின் சுமை கொண்டு நிற்பார்கள் என்பதனையும் நபி பெருமானாரின் உம்மத்தினர் சீர்குலைந்து இருந்த காலத்தில் நபி பெருமானாரின் சொந்த ஆன்மீக முன்மாதிரி அன்னாருடைய சமுதாயத்தினருக்கு அவர்களுக்கு  ஆத்மீக வல்லமையை வழங்கிட தவறியது என்பதையும் இஸ்ரவேலின் மெசாயா நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது கொண்ட கருணையின் காரணமாக  அவர்களுடைய சமுதாயத்தினரை சீர்திருத்தி ஆன்மீக முடையில் இருந்து மீட்டெடுப்பதற்காக மீண்டும் பூமிக்கு திரும்ப முடிவெடுத்தார் என்பதையும் எடுத்துக் கூறக்கூடிய மலக்குகள் அனைத்து மனித இனத்தினரும் கேட்பதற்கும் அவர்கள் முன்னிலையிலும் அறிவிப்பார்கள் என்பதையும் எங்களால் ஒரு நிமிடம் கூட ஏற்றுக்கொள்ள முடியாது.

எங்களால் அத்தகைய எண்ணத்தை எண்ணி பார்க்க முடியவில்லை நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது அவர்களை இழிவு படுத்தக்கூடிய ஒரு விஷயத்தை சுமத்துவதை விட நாங்கள் எங்களுடைய நாவுகளை கிழித்துக் கொள்வோம். இத்தகைய விஷயத்தை நபி பெருமானார் குறித்து எழுதுவதற்கு ஒத்துக் கொள்வதை விட நாங்கள் எங்கள் கைகளை இழந்து விடுவோம்.   நபி பெருமானார் அவர்கள் இறைவனுடைய நேசத்திற்குரியவர்கள் ஆவார்கள். அன்னாருடைய ஆத்மீக வல்லமை ஒருபொழுதும் முடிவடையாது அன்னார் நபிமார்களின் முத்திரையாக இருக்கிறார்கள். அன்னாருடைய ஆத்மீக அருளும் கொடைகளும் ஒருபொழுதும் முடிவடைந்து விடாது. வேறு ஒருவருக்கு கடன்பட்டு இருக்க வேண்டிய எந்தத் தேவையும் அன்னாருக்கு இல்லை. மற்ற நபிமார்களே அன்னாருக்கு கடன் பட்டிருக்கிறார்கள். ஒரு நபியை மறுக்கக்கூடிய மக்களின் முன்னால் அன்னாருடைய உண்மையை நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உரக்க எடுத்துக்கூறாத எந்த நபியும் இல்லை. தன்னுடைய போதனைகளைக் கொண்டு தாங்கள் இதற்கு முன் கேள்வியே படாத நபிமார்களை லட்சக்கணக்கான மக்களை ஏற்றுக்கொள்ள செய்தது எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே.

இப்பொழுது (1926இல்) இந்தியாவில் 8 கோடி முஸ்லிம்கள் இருக்கிறார்கள். அவர்களில் சிலர் வெளியில் இருந்து வந்தவர்கள். மற்றவர்கள் இதே மண்ணை சேர்ந்தவர்கள் அவர்கள் எந்த நபியையும் பற்றி கேள்விப்பட்டது இல்லை. ஆனால் அவர்கள் நபி பெருமானார் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஏற்றுக் கொண்ட பிறகு அவர்கள் இப்ராஹிமையும் மூஸாவையும் ஈஸாவையும் மற்றும் அனைவரையும் (அவர்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தி உண்டாவதாக) ஏற்றுக்கொண்டார்கள். அவர்கள் மட்டும் முஸ்லிம்கள் ஆகிவிடாது இருந்தால் அவர்கள் இன்னமும் இந்த நபிமார்களை ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார்கள். மேலும் அவர்களுக்கு எதிராக கூட இருந்திருப்பார்கள். அவர்கள் தொடர்ந்து அவர்களை இட்டுக்கட்ட கூடியவர்கள் ஆக நினைத்து கொண்டிருப்பார்கள். அதாவது இன்றும் கூட இந்தியாவில் உள்ள ஹிந்துக்கள் நினைத்துக் கொண்டிருப்பது போல. இதுவே ஆப்கானிஸ்தானிலும் சைனாவிலும் ஈரானிலும் நடக்கும் உண்மை நிலையாகும்.  இந்த நாடுகளில் உள்ள மக்கள் மூஸாவையும் ஈஸாவையும் அறிந்திருக்கவில்லை. அதனால் அவர்களை அவர்கள் நபிமார்கள் ஆக ஏற்றுக் கொள்ளவும் இல்லை. நபி பெருமானாரின் தூது செய்தியும் போதனையும் இந்த நாடுகளுக்கு பரவியது மேலும் இந்த நாட்டில் உள்ள மக்கள் நபி பெருமானாரையும் அன்னார் போதித்ததையும் ஏற்றுக் கொண்டார்கள். அவர்கள் பிற நபிமார்களையும் ஏற்றுக் கொண்டு அவர்களை உண்மையான நபிமார்கள் ஆக கண்ணியப்படுதுகிறார்கள். எனவே நபி பெருமானார் தனக்கு முன் தோன்றிய அனைத்து நபிமார்களையும் தனக்கு கடன் பட்டவர்கள் ஆகிவிட்டார்கள். அவர்களுடைய உண்மை யாரும் அறிந்திராத ஒன்றாக இருந்தது நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அதனை வெளிப்படுத்தி விட்டார்கள். எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் எவருக்கும் கடன் பட்டவர்கள் கிடையாது.

இறுதிப்பகுதி

ஈஸா மஸீஹின் இரண்டாம் வருகை என்பது நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஒரு உம்மத்தியின் தோற்றத்தையே குறிக்கிறது

நபி பெருமானாரின் போதனைகளின் கருணையும் அருட்கொடைகளுக்கு என்றென்றும் தொடரக் கூடியதாக இருக்க வேண்டும். அன்னாருடைய சமுதாயத்தின் சீர்திருத்தத்திற்கும் புத்துயிர் ஊட்டுதலுக்கும் அன்னாருக்கு வேறொரு நபியின் உதவி தேவை இல்லை. எப்பொழுதெல்லாம் அத்தகைய தேவை எழுகிறதோ அப்போதெல்லாம் இறைவன் அவர்களைப் பின்பற்றக் கூடியவர்களிலிருந்து ஒருவரை எழுப்பி மற்றவருக்கு தலைமை ஏற்கவும் வழிகாட்டவும் செய்வான். அப்படி வரக்கூடிய ஒரு சீடர் எல்லாவற்றையும் எம்பெருமானார் இடமிருந்து பெற்று அன்னாருக்கு கடன் பட்டிருப்பார். அவர் அனைத்தையும் நபி பெருமானாரிடம் இருந்தே கற்றிருப்பார். அவரால் இந்த சமுதாயத்தின் சீர்திருத்தத்திற்க்கும் மறு புணரமைத்தலுக்கும் எதையெல்லாம் செய்ய இயலுமோ அவை அனைத்தும் நபி பெருமானாரையே சேரும். தனது ஆசிரியருக்கு கடன்பட்டு இருப்பவர் உண்மையிலேயே தனது ஆசிரியரின் ஆசிரியருக்கே கடன்பட்டு இருக்கிறார். ஒரு ஆசிரியரிடமிருந்து அவருடைய மாணாக்கரை பிரிக்க முடியாதது போல் ஒரு தலைவரிடம் இருந்தும் அவருடைய தொண்டரை பிரிக்க முடியாது. மற்ற சீடர்களை வழிநடத்தக்கூடிய ஒரு சீடர் உண்மையில் நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கே கடன்பட்டு இருப்பார்.

சுருக்கமாக சொல்வது என்றால் நபி பெருமானாரின் சமுதாயத்தினை சீர்திருத்தும் நோக்கத்துடன் ஒரு முந்தைய நபி வருவார் என்பது நபி பெருமானாருக்கு ஒரு அவமதிப்பு ஆகும். அது அன்னாரின் உயர்வினை காயப்படுத்துவது ஆகும். அது திருக்குர்ஆனின் கீழ்க்காணும் போதனைக்கும் முரண்படுவதாகி விடும்.

எந்த ஒரு சமுதாயத்தினரும் தங்களுடைய அக நிலையை மாற்றிக் கொள்ளாதவரை அல்லாஹ்வும் அவர்களுடைய நிலைகளை மாற்றுவது இல்லை (13:12)

திருக்குர்ஆனின் இந்த போதனையின் அடிப்படையில் ஒன்று நவூதுபில்லாஹ்  நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் இறைவனுடைய வாக்குறுதிக்கு தகுதியற்றவர்களாக ஆகியிருக்க வேண்டும். அல்லது இறைவனே தன்னுடைய வாக்குறுதியை மீறி இருக்க வேண்டும். மற்ற எல்லோரிடமும் இறைவனுடைய செயல் முறை எப்படி இருந்தது என்றால் அவர்களுக்கு வழங்கப்பட்ட கொடைகளை அவன் திரும்ப பெற்றது இல்லை. ஆனால் நபிகள் நாயகம் அவர்களை பொறுத்தவரை அவனுடைய செயல்முறை வேறாகிவிட்டது. இத்தகைய எண்ணத்தை கொண்டிருப்பது நிராகரிப்பதற்கு வழிவகுத்துவிடும். இறை மறுப்புக்கு வழிவகுத்துவிடும். இறைவனை மறுப்பதற்கு அல்லது அவனது தூதரை மறுப்பதற்கு காரணமாகிவிடும். இத்தகைய கடுமையான விளைவுகளின் காரணமாகத்தான் நாங்கள் இத்தகைய நம்பிக்கைகளை வெறுத்து ஒதுக்குகின்றோம். நாங்கள் நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் எந்த மஸீஹின் வருகை முன்னர் ஏற்பட்டதோ அவர் நபி பெருமானார் அவர்களை பின்பற்றக் கூடியவர்களிலிருந்து தோன்றுவார் என்று நம்புகின்றோம். இறைவன் தான் நாடியவருக்கு இந்த பதவியை வழங்குகின்றான். 

-ஹஸ்ரத் மிர்ஸா பஷீருத்தீன் மஹ்மூது அஹ்மது ரலியல்லாஹு அன்ஹு

(Book-Invitation to Ahmadiyyath p: 34 – 41)

மொழியாக்கம்: ஜனாப் பயாஸ் அஸ்லம் சாஹிப்-சென்னை

 

 

2 கருத்துகள்:

  1. இக்கட்டுரையின் வாயிலாக அது நபி ஸல் அவர்களுடைய கண்ணியம் அஹ்மதி அல்லாத பிற முஸ்லிம்களுடைய தவறான கொள்கையில் இருந்து காப்பாற்றப்பட்டிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  2. இக்கட்டுரையின் வாயிலாக ஹஸ்ரத் நபி ஸல் அவர்களுடைய கண்ணியம் அஹ்மதி அல்லாத பிற முஸ்லிம்களுடைய தவறான கொள்கையில் இருந்து காப்பாற்றப்பட்டிருக்கிறது.

    பதிலளிநீக்கு

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.