அல்லாஹ் தஆலா கலீஃபாவை எவ்வாறு தேர்ந்தெடுக்கின்றான்? பாகம்-1

 

அல்லாஹ் தஆலா கலீஃபாவை எவ்வாறு தேர்ந்தெடுக்கின்றான்

தலைப்பின் முக்கியத்துவம்

இந்த தலைப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். மேலும் இறைவன் எவ்வாறு கலிஃபாவை தேர்ந்தெடுக்கின்றான் என்பதை நாம் அறிவது அவசியமாகும். மேலும் இந்த தலைப்பு அஹ்மதியாகிய நமக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது. ஏனென்றால் ஹஸ்ரத் மஸிஹ் மவ்ஊது (அலை) அவர்கள்  வருகைக்கு பிறகு இந்த அருளுக்குரிய ஜமாஅத்தில் நபித்துவ வழியிலான கிலாஃபத்தின் அடித்தளம் மீண்டும் வைக்கப்பட்டது. மேலும் நாம் கலிஃபாவிடம் பைஅத் என்ற உறுதிமொழியை வழங்குகின்றோம். ஆக நம்மீது கலிஃபாவின் அந்தஸ்தை குறித்து சரியான புரிதல் மற்றும் ஞானத்தை பெறுவது மிக அவசியமாகின்றது.  அதேபோன்று நபித்துவ வழியிலான கிலாஃபத் அமைப்பில் சர்வ வல்லமை உள்ள அல்லாஹ் எவ்வாறு கலிஃபாவை தேர்ந்தெடுக்கின்றான் என்பதை சாதாரண முஸ்லிம்களும் புரிந்து கொள்வது மிகவும் அவசியம். அதாவது கிலாஃபத்தை பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்; கிலாபத் பரம்பரை மற்றும் கட்டாய அரசாங்கமாக மாற்றப்படும் பொழுது மீண்டும் நபித்துவத்தை தொடர்ந்து கிலாஃபத் நிலைபெறும்; ஹதீஸில் வருகின்றது:

ثُمَّ تَکُوْنُ خِلَافَۃٌ عَلٰی مِنْھَاجِ النُّبُوَّةِ

அதாவது பிறகு நபித்துவத்தை தொடர்ந்து கிலாஃபத் நிலைபெறும்.

இந்த விஷயம் மிகவும் கவலைக்குரியதாகும் அதாவது, நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு கிலாஃபத் ராஃஷிதா காலத்தில் இஸ்லாத்தில் நுழைந்த அதிகமான மக்களால்; கலிஃபாவை இறைவன் தான் தேர்ந்தெடுக்கின்றான் என்ற விஷயத்தை புரிந்து கொள்ள முடியவில்லை. அவர்கள் தங்களுடைய இந்த மூடத்தனத்தின் காரணமாக மூன்றாவது கலிஃபா ஹஸ்ரத் உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் மீது தாக்குதல் தொடுத்து அவர்களை ஷஹீத் ஆக்கினார்கள்.  மேலும் அவர்களுக்குப் பிறகு முஸ்லிம்களின் கரங்களினாலே நான்காவது கலிஃபா செய்யதுனா அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் ஷஹீதானார்கள். எனவே இறைவன் நபித்துவத்தை தொடர்ந்து கிலாஃபத் என்ற அருட்கொடையை அவர்களிடம் இருந்து திரும்ப எடுத்துக் கொண்டான். இவ்வாறு கிலாஃபத் ராஷிதா முடிவுக்கு வந்தது. 

அவர்கள் கிலாஃபத்தின் அந்தஸ்தை சரியாக புரிந்திருந்தால், மேலும் இறைவன் தான் கலிஃபாவை தேர்ந்தெடுக்கின்றான் என்ற விஷயத்தை அறிந்திருந்தால்; மூன்றாவது மற்றும் நான்காவது கலிஃபாவை ஷஹித்தாக அவர்களுக்கு துணிவு வந்திருக்காது. மேலும்  முஸ்லிம்களின் ஒற்றுமைக்கு எந்த பாதிப்பு ஏற்பட்டிருக்காது.

சில கேள்விகளுக்கான பதிலை அறிவது மிகவும் அவசியமாக இருக்கின்றது.

அல்லாஹ் கலீஃபாவை மறைமுகமாக தேர்ந்தெடுக்கின்றான்....அதாவது மக்கள் அவர்களை தேர்ந்தெடுகின்றார்கள் என்று அறிய முடிகிறது. ஆக சில மக்களின் சிந்தனையில் நிச்சயம் பல்வேறு கேள்விகள் எழுவதுண்டு. உதாரணத்திற்கு; 

ஒன்று: (கலிஃபாவை) வெளிப்படையாக மக்கள் தேர்ந்தெடுக்கும்போது இறைவன் தான் தேர்ந்தெடுக்கிறான் என்று எவ்வாறு கூறப்படுகிறது?

இரண்டாவது: எலாம் வல்ல அல்லாஹ் கலீஃபாவைத் தேர்ந்தெடுக்கின்றான் என்றால், பிறகு ஏன் அவரை (கலீஃபாவை) நபி மற்றும் தூதர்களைப் போல நேரடியாகத் தேர்வு செய்வதில்லை?

மூன்றாவது: அல்லாஹ் யாரை கலீஃபாவாகத் தேர்வு செய்கிறான், அவரிடம் பிரதிபலிக்கும் முக்கியத்துவம் வாய்ந்த அந்த பண்புக்கூறுகள் யாவை?

நான்கு: கலீஃபாவை தேர்ந்தெடுக்கும்போது ஏன் ஜமாஅத்தின் அனைத்து சகோதரர்களும் பங்கு பெருவதில்லை?

ஐந்து: கலீஃபாவை தேந்தெடுக்கும் அந்த நபர்கள் யார்?

ஆறு: கலீஃபா தவறை விட்டு நீங்கியவரா? கலீஃபாவிடமிருந்து ஏதேனும் தவறுகள் ஏற்பட வாய்ப்பு உண்டா?

இந்த கேள்விகள் அனைத்தும் மிக முக்கியமானவை மற்றும் நிறைய பதில்கள் தேவையுடைதாக இருக்கின்றன. இப்போது நான் ஒவ்வொரு கேள்வியையும் தனித்தனியாக எடுத்து அவற்றின் பதில்களை முன்வைக்கிறேன்.

முதல் கேள்வி: (கலிஃபாவை) வெளிப்படையாக மக்கள் தேர்ந்தெடுக்கும்போது இறைவன் தான் தேர்ந்தெடுக்கிறான் என்று எவ்வாறு கூறப்படுகிறது?

பதில்: இந்தக் கேள்விக்கான பதிலை வழங்குவதில் இரண்டு முறைகள் இருக்கின்றன. ஒன்று மனிதன் சில வேலைகளை செய்கின்றான் ஆனால் அந்த வேலைகளில் முடிவை இறைவன் தான் ஏற்படுத்துகின்றான் என்று கூறுவது. மற்றொன்று இறைவன் சில வேலைகளை செய்கின்றான் ஆனால் அது மனிதர்கள் கைகள் மூலம் வெளிப்படுகின்றது என்று கூறுவது.

திருக்குர்ஆனிலிருந்து ஆதாரங்கள்

முதல் ஆதாரம்:

திருக்குர்ஆன் முதல் முறையை மிக நன்றாக விளக்குகிறது. மேலும் கூறுகின்றது; மனிதர்களால் செய்யப்படும் சில செயல்கள் உள்ளன, ஆனால் எல்லாம் வல்ல அல்லாஹ், அதனின் முடிவுகளுக்கான ஏற்பாட்டை செய்கிறான். அல்லாஹ் கூறுகின்றான்:

اَفَرَءَیۡتُمۡ مَّاتَحۡرُثُوۡنَ۔ءَاَنۡتُمۡ تَزۡرَعُوۡنَہٗۤ اَمۡ نَحۡنُ الزّٰرِعُوۡنَ

நீங்கள் விதைப்பதைக் கவனிக்கின்றீர்களா? அதனை நீங்கள் வளரச் செய்கிறீர்களா? அல்லது நாம் வளரச் செய்கின்றோமா? (56:64-65)

விவசாயிகள் ஒருவருக்கொருவர்; இந்த ஆண்டு நாங்கள் இதை வளர்ப்போம், அதை வளர்ப்போம். அல்லது இந்த ஆண்டு நான் பயிரிட்ட பயிர் மிகவும் நன்றாக இருந்தது என்பன போன்ற விஷயங்களை கூறுவதுண்டு. விவசாயிதான் நிலத்தை உழுது, விதை விதைத்து வயலுக்கு நீர் பாசனம் செய்து அதை நன்கு கவனித்து அது தயாராக இருக்கும் போது அதை அறுவடை செய்கின்றான். ஆனால் இறைவன் கூறுகின்றான்; நீங்கள் வளர்க்கவில்லை நான்தான் வளர்க்கக்கூடிய கூடியவனாக இருக்கின்றேன்.  இந்த வேளாண் செயலை வெளிப்படையாக மனிதன்தான் செய்கின்றான். ஆனால் இறைவன் நான் தான் காரணம் என்கின்றான். ஏனென்றால் இறைவன் நிர்ணயித்த  இந்த வேளாண் நியதியை விவசாயி பின்பற்றுவது அவசியமாகும். ஒருவேளை விவசாயி இந்த நியதிக்கு மாற்றமாக செய்தால் பிறகு எந்த விளச்சலும் வளராது. எனவே உண்மையான விவசாயி இறைவனே ஆவான். ஏனென்றால் அவனே வேளாண் அமைப்பை உருவாக்கினான். மேலும் விவசாயிக்கு இந்த அமைப்பின் அடிப்படையில் செயலாற்றுவதை தவிர வேறு வழி இல்லை.

ஆகவே, ஒருவர் இறைவணன் நியமிக்கப்பட்ட அமைப்பை பின்பற்றும்போது, ​​முடிவுகள் எல்லாம் வல்ல இறைவனின் விருப்பத்திற்கு ஏற்ப அமைகின்றன. அதைப் போலவே, கலீபாவைத் தேர்ந்தெடுப்பதற்கான ஒரு அமைப்பையும் இறைவன் உருவாக்கியுள்ளான். அதனை நாம் பின்பற்றுவதைத் தவிர வேறு வழியில்லை. மேலும் இந்த அமைப்பானது சில குறிப்பான விஷயங்களை நாடுகிறது;

முதலாவது  மற்றும் எல்லாவற்றையும் விட முக்கியமான விஷயம் என்னவென்றால்; இறைவன் புறமிருந்து ஒரு நபி வர வேண்டும். ஏனென்றால் நபித்துவத்திற்கு பிறகு கிலாஃபத் நிலை பெறுவது என்பது நபி வந்த பிறகே சாத்தியமான ஒன்றாகும். இந்த நபியானவர் தனக்கு பிறகு  உண்மையான இறையச்சம் மற்றும் நல்ல செயல்களில் நிலைத்து நிற்கக்கூடிய ஒரு நம்பிக்கை கொண்டவர்களின் ஜமாஅத்தை விட்டு செல்கிறார்.

இரண்டாவது விஷயம் என்னவென்றால்; எந்த மனிதரும் கலிஃபாவை தேர்ந்தெடுப்பதில் தனது பெயரை சுயமே முன்மொழிவது ஆகுமானதல்ல. ஏனென்றால் எவரொருவர் சுயமே தன்னை முன்மொழிகின்றாறோ அவர் மற்றவரை விட தன்னை சிறந்தவராக கருதுகின்றார். திருக்குர்ஆன் இதனை தடுத்து உள்ளது. அது கூறுகின்றது:

فَلَا تُزَکُّوۡۤا اَنۡفُسَکُمۡ ؕ ہُوَ اَعۡلَمُ بِمَنِ اتَّقٰی

நீங்களே உங்களைத் தூயவர்களென்று கூறிக் கொள்ளாதீர்கள். (உண்மையான) இறையச்சமுடையவர்களை அவன் நன்கு அறிகின்றான். (53:33)

 

இவ்வாறு ஹதீஸிலும் வருகிறது; நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அப்துர்ரஹ்மான் பின் சம்ரஹ் (ரலி) அவர்களிடம் கூறினார்கள்; "பொறுப்பை கேட்டுப் பெறாதீர்கள். நீங்கள் கேட்டு உங்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டால் பிறகு  விசாரணையில் உங்களிடம் கடுமை காட்டப்படும். மேலும் கேட்காமல் வழங்கப்பட்டிருந்தால் அப்பொழுது உதவி புரிய படுவீர்கள். (புகாரி,கிதாபுல் இஹ்காம்)

எனவே இந்த பதவியைப் பெற ஒருவர் மற்றொவருடன் போட்டியிடக் கூடாது. ஏனென்றால் இவ்விஷயத்தில்  எவர் ஒருவர் இன்னொருவருடன் போட்டியிடுகிறார்களோ; அவர் என்னை தேர்ந்தெடுங்கள் வேறு எவரையும் தேர்ந்தெடுக்காதீர்கள் ஏனென்றால் நான் அவரை விடச் சிறந்தவன் ஆவேன் என்று நாவினால் கூறுவது போல் ஆகிறது. 

மூன்றாவது: கலிஃபாவை தேர்ந்தெடுக்கும் செயலில்  இறைவன் சுயமே பொறுப்பாளியாகவும் கண்காணிப்பாளனாகவும் ஆகவேண்டும் என அவனிடம் மன்றாட வேண்டும். இறைவன் துஆவை குறித்து கூறுகின்றான்

وَاِذَا سَاَلَکَ عِبَادِیۡ عَنِّیۡ فَاِنِّیۡ قَرِیۡبٌ ؕ اُجِیۡبُ دَعۡوَۃَ الدَّاعِ اِذَا دَعَانِ ۙ فَلۡیَسۡتَجِیۡبُوۡا لِیۡ وَ لۡیُؤۡمِنُوۡا بِیۡ لَعَلَّہُمۡ یَرۡشُدُوۡنَ

(தூதரே!) என் அடியார்கள் உம்மிடம் என்னைப் பற்றிக் கேட்டால், நான் அருகில் இருக்கின்றேன்; பிரார்த்தனை செய்கிறவர் என்னை அழைக்கின்ற போது, நான் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொள்கிறேன். எனவே, அவர்களும் எனது கட்டளையினை ஏற்றுக் கொண்டு என்னிடம் நம்பிக்கை கொள்ள வேண்டும். இதனால் அவர்கள் நேர்வழி பெறுவார்கள். (என்று பதில் அளிப்பீராக)

மேலும் கூறுகின்றான்:

قُلۡ مَا یَعۡبَؤُا بِکُمۡ رَبِّیۡ لَوۡ لَا دُعَآؤُکُمۡ

கூறுவீராக நீங்கள் பிரார்த்தனை செய்யாவிட்டால் என் இறைவன் உங்களை பொருட்படுத்தவே மாட்டான். (25:78)

ஆகவே மனிதன் தேவையான அனைத்து வேலைகளையும் செய்து எல்லா கோரிக்கைகளை நிறைவேற்றும் போது அல்லாஹ் தன் அருளினால் கலீஃபாவை தேர்ந்தெடுக்கும் பணியை நிறைவு செய்கின்றான். ஆனால் மனிதன் இறைவன் அமைத்த இந்த அமைப்பை பின்பற்ற வேண்டிய விதத்தில் பின்பற்றவில்லை என்றால் பிறகு இறைவன் கலிஃபாவை தேர்ந்தெடுக்கும் பணியில் தலையிட மாட்டான். அதிலிருந்து தனது கையை உயர்த்தி கொள்கின்றான்.

இரண்டாவது ஆதாரம்:

திருக்குர்ஆனில் அல்லாஹ் அளித்த இரண்டாவது சான்று என்னவென்றால், அல்லாஹ் சில செயல்களை செய்கின்றான், ஆனால் அவை மனித கரங்களால் வெளிப்படுகின்றன என திருக்குர்ஆனில் இறைவன் கூறுகின்றான். இது ஒரு மனித செயல் போல் தோன்றலாம், ஆனால் உண்மையில் அதைச் செய்வது இறைவன்தான். அல்லாஹ் கூறுகின்றான்

قَاتِلُوۡہُمۡ یُعَذِّبۡہُمُ اللّٰہُ بِاَیۡدِیۡکُمۡ

அவர்களுடன் போரிடுங்கள். இதனால் அல்லாஹ் உங்கள் கைகளால் அவர்களுக்குத் தண்டனை அளிப்பான். (9:14)

இந்த வசனமானது வரம்பு மீறுகின்ற இணைவைப்பாளர்களுடன் போரிட்டுக் கொண்டிருந்த ஆரம்பகால முஸ்லிம்களுக்காக அருளப்பட்டது. எனவே அந்த இணைவைப்பாளர்களின் வரம்பு மீறல் இறைவனுடைய கோபத்தை அதிகரிக்கச் செய்தது. ஏனென்றால் நபிமார்களை நிராகரிக்கக்கூடியவர்கள் தங்களுடைய கிளர்ச்சியில் எல்லையை மீறும்போது இறைவனுடைய தண்டனை அவர்கள் மீது இறங்குவதும், இறைவனின் கோபம் அவர்கள் மீது இறங்குவதும் இறைவனுடைய நிரந்தரமான நடைமுறையாகும். ஆக மக்காவின் இணைவைப்பாளர்களின் கிளர்ச்சி மற்றும் வரம்பு மீறல் அளவுகடந்த போது இறைவனுடைய தண்டனையானது அவர்களுக்காக நிர்ணயிக்கப்பட்டு விட்டது.

மேற்கூறப்பட்ட வசனத்தில் இறைவன் எதிரிகளுக்கு விரைவாகவே தண்டனை வழங்கப்படும் எனக் கூறி தன்னுடைய அடியார்களுக்கு மனநிறைவை வழங்குகின்றான். ஆனால் முன் சென்ற நபிமார்கள் அதாவது நுஹ், லூத் மற்றும் மூசா அலைஹிமுஸ்ஸலாம் உடைய எதிரிகளை போலவே இறைவன் அவர்களை நேரடியாக தண்டிப்பதற்கு பதிலாக மக்காவிலுள்ள இணைவைப்பாளர்களை நம்பிக்கையாளரின் கரங்கள் மூலம் தண்டனை வழங்குவான். எனவே நம்பிக்கையாளர்களின் கைகள் மூலம் அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்பதற்காக  வரம்பு மீறிய இணைவைப்பாளர்களுடன் போர் புரிவது நம்பிக்கையாளர்கள் மீது அவசியமாகின்றது. இதிலிருந்து தெரிய வருவது என்னவென்றால்; இந்த செயல் இறைவன் உடையதாகும் ஆனால் இறைவனுடைய இந்த செயலானது நம்பிக்கையாளர்களின் கைகள் மூலம் வெளிப்படும்.

இதிலிருந்து சில செயல்கள் இறைவனுடைய ஆதிக்கத்தால் நடக்கின்றன ஆனால் அந்த செயல்களை இறைவனுடைய கட்டளைகளை பின்பற்றக்கூடிய மற்றும் அவனுடைய போதைனைகளின் படி செயல்படக்கூடிய அந்த கீழ்ப்படிகின்ற நம்பிக்கையாளர்களின் கரங்கள் மூலம் வெளிப்படுத்துகின்றான் என்ற விஷயம் மிகத் தெளிவாகின்றது. இறைவன் கூறுகின்றான்:

فَلَمۡ تَقۡتُلُوۡہُمۡ وَلٰکِنَّ اللّٰہَ قَتَلَہُمۡ ۪ وَ مَا رَمَیۡتَ اِذۡ رَمَیۡتَ وَ لٰکِنَّ اللّٰہَ رَمٰی

 எனவே அவர்களை நீங்கள் கொல்லவில்லை, மாறாக அல்லாஹ்வே அவர்களைக் கொன்றான். நீர் எறிந்தபோது நீர் எறியவில்லை, மாறாக அல்லாஹ்வே எறிந்தான். (8:18)

இந்த வசனத்தில் இறைவன்; நம்பிக்கையாளர்கள் இணைவைப்பாளர்களை கொல்லவில்லை என்ற விஷயத்தை இறைவன் வலியுறுத்துகின்றான். மாறாக இறைவன் இந்த செயலுக்கு தானே காரணம் என்று கூறுகின்றான். இறைவன் தான்தான் காரணம் என்று ஏன் கூற வேண்டும்? ஏனென்றால் முஸ்லிம்கள் இந்த செயலை இறைவனுடைய கட்டளைக்கு ஏற்ப செய்தார்கள். மேலும் அதனுடைய முடிவையும் இறைவனே உருவாக்கினான். இறைவனுடைய  விருப்பத்தை செயல்முறைப்படுத்த முஸ்லிம்கள் கருவியாக ஆக்கப்பட்டார்கள்.

திருக்குர்ஆனில் பல ஆதாரங்கள் இருக்கின்றன. அவை நமக்கு தெளிவான சான்றுகளை அளிக்கின்றது அது என்னவென்றால் மனிதன் இறைவனுக்கு கட்டுப்பட்டு  ஒரு செயலை செய்யும் போது அது மனித செயலாகத்தான் தெரிகின்றது (ஆனால் அது) இறைவனுடைய செயலாக மாறுகின்றது. மேலும்  உண்மையிலேயே இறைவன் தன்னுடைய எண்ணத்தை நிறைவேற்ற மேற்கொள்ளப்படுகின்ற ஒரு வழிமுறை மனிதனாவான். மேலும் இந்த வழிமுறையைத் தான் இறைவன் கலிஃபாவை தேர்ந்தெடுப்பதிலும் மேற்கொள்கின்றான். மேலும் இந்த வழிமுறையைக் கொண்டு தான் தன்னுடைய எண்ணத்தை மற்றும் விருப்பத்தை வெளிப்படுத்துகின்றான். (தொடரும்...)

நன்றி: அல்-ஃபஸ்ல் பத்திரிகை

மொழியாக்கம்: முரப்பி ஜாஹிர் ஹுஸைன்-ஈரோடு

1 கருத்து:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.