ஹஸ்ரத் இரண்டாவது கலீஃபதுல் மஸீஹ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:
நான் இந்த இடத்திலும் கூற விரும்புவது என்னவென்றால், மறுமை வாழ்க்கை முற்றிலுமாக உடலை விட்டும் தூயதாக இருக்கும். அங்கு உள்ளத்தின் உணர்வுகளின் அடிப்படையிலேயே அனைத்து அருட்கொடைகளும் முடிந்துவிடும் என்பது எனது பொருள் கிடையாது. மாறாக திருக்குர்ஆனிலிருந்து நிரூபணமாவது என்னவென்றால் ஆன்மா தனது எல்லா நிலையிலும் ஒரு உடலின் தேவையுடையதாக இருக்கிறது. மறுமை வாழ்க்கையிலும் அதற்கு ஒரு உடல் கிடைக்கும். அது இந்த பௌதீக உலகைவிட்டு முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும். அந்த வாழ்க்கையை புரிந்து கொள்வதற்காக அல்லாஹ் இந்த உலகில், மனிதன் மறுவுலக வாழ்க்கைக் குறித்து சிறிது கணித்துக்கொள்வதற்காக கனவுலகின் தொடரை ஏற்படுத்தியுள்ளான். திருக்குர்ஆனில் அல்லாஹ், மறுமை வாழ்க்கைக்கும் கனவுலகிற்கும் ஓர் ஆழமான இணைப்பு உள்ளது என்று தெளிவாகக் கூறிவிட்டான். அல்லாஹ் கூறுகிறான்:
(அல்லாஹ்
மக்களின் உயிர்களை அவர்களின் மரணத்தின் போதும் (இதுவரை) மரணமடையாதவர்களின் உயிர்களை
அவர்களது தூக்கத்தின் போதும் கைப்பற்றுகிறான். பின்னர் மரணம் முடிவாகி விட்டவற்றை அவன்
(தன்னிடமே) நிறுத்தி வைத்துக் கொள்கின்றான். மற்றவற்றைக் குறிப்பிட்ட ஒரு காலத்திற்குத்
(திருப்பி) அனுப்பிவிடுகின்றான். சிந்தனை செய்யும் மக்களுக்கு இதில் அடையாளங்கள் உள்ளன.
(39: 43))
அதாவது நிராகரிப்பாளர்கள் மறுமை வாழ்க்கை
மற்றும் இறைவனின் தண்டனைகளை நிராகரிக்கின்றனர். உண்மையில் அவர்கள் சிந்தித்துப் பார்த்தால்
அவர்களுக்கு இதற்கான சான்று அவர்களின் வாழ்க்கையிலிருந்தே கிடைக்க முடியும். அல்லாஹ்
ஒவ்வொரு உயிரையும் மரணத்தின் நேரத்தில் கைப்பற்றி கொள்கின்றான் என்பதை அவர்களால் பார்க்க
முடியும். மரணிக்காதவற்றை உறக்கத்தின் நேரத்தில் கைப்பற்றி கொள்கிறான். பிறகு மரணம்
தீர்மானிக்கப்பட்டவற்றை தன்னிடமே வைத்துக் கொள்கிறான். பிற உயிர்களை அதாவது
உறங்குபவர்களின் உயிர்களை தீர்மானிக்கப்பட்ட நேரம்வரை திருப்பி அனுப்பி விடுகிறான்.
இந்த அனுபவ சான்றில் சிந்திக்கும் மக்களுக்கு அதிகமான அடையாளங்கள் இருக்கின்றன.
இந்த வசனத்தில் கூறப்பட்டுள்ளதாவது, மரணம் மற்றும் உறக்கம்
ஒன்றுக்கொன்று ஒத்ததாக இருக்கின்றன. மரணத்தில் முற்றிலுமாக உயிர் உடலிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு
விடுகிறது. உறக்கத்தின்
நேரத்தில் அதன் தொடர்பு தற்காலிகமாக பௌதீக உடலை விட்டும் துண்டிக்கப்பட்டு விடுகிறது
என்பது மட்டுமே வித்தியாசமாகும். இந்த தற்காலிக தொடர்பு துண்டிப்பின் வேளையில் மனித
உயிர் பல காட்சிகளை காண்கிறது. தனக்கென ஒரு புதிய உடலையும் புதிய சூழ்நிலையையும் அடைகிறது.
இதிலிருந்து மறுமை வாழ்க்கையை குறித்து அதிகமான கணிப்பை பெற்றுக்கொள்ள முடியும்.
இப்போது நாம் பார்க்கின்றோம், உறக்கத்தின் நிலையில்
மனிதனுக்கு தெரிகின்ற காட்சிகள் ஆன்மீகமானவை மட்டுமேயாகும் எனக் கூறிவிட முடியாது.
ஏனென்றால் ஒரு போதும் ஒரு மனிதர் கனவில் வெறும் உயிரை மட்டும் பார்ப்பதில்லை மாறாக
அத்துடன் ஒரு உடலையும் பார்க்கின்றார். சில நேரம் அவர் தன்னை தோட்டத்தில் பார்க்கிறார், ஆறுகளில் பார்க்கிறார், கனி உண்ணுகிறார், பால் அருந்துகிறார்.
இதில் ஆன்மீகம் மட்டும் கிடையாது. மாறாக வெளிப்படையான வடிவத்தில் தோட்டங்கள், ஆறுகள், பால் மற்றும் தேன்
போன்றவற்றை ஒத்ததாக இருக்கிறன. ஆனால் கனவிலுள்ள பால் வெளிப்படையான பால் என்றோ அல்லது
கனவிலுள்ள தண்ணீர் வெளிப்படையான தண்ணீர் என்றோ எவரும் கூறுவதில்லை. மாறாக அதன் பொருள், ஆன்மீக உலகில் வேறாக
இருக்கிறது. உதாரணமாக ஒருவர் தன்னை ஆறு ஓடும் தோட்டத்தில் காண்கிறார் என்றால், அவருடைய இந்தக்
கனவு ஏதேனும் சிந்தனையின் விளைவாக இல்லாமல் உண்மையானதாக, இறைவன் காட்டியதாக
இருக்குமென்றால் அதன் பொருள்,
அவரது ஈமான் இறையருளை ஈர்ப்பவையாக இருக்கின்றன. அவரது செயல் இறைவனிடத்தில் ஏற்கப்பட்டுள்ளன. அவருடைய ஈமான் மற்றும்
அவருடைய செயல் இறையருளை எந்த வண்ணத்தில் ஈர்த்ததோ அதனை அந்த தோட்டம் மற்றும் ஆற்றின்
வடிவத்தில் பார்த்து ஆன்மீக இன்பத்தை உணர்கிறார். அல்லது உதாரணமாக ஒருவர் மாம்பழம்
சாப்பிடுவதாக காண்கிறார் என்றால்,
அவரது கனவு உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதன் விளக்கம், அல்லாஹ் அவரின்
நற்செயலுக்கு பகரமாக அவருக்கு நல்ல சந்ததிகளை அல்லது நல்ல உள்ளத்தை வழங்குவதென தீர்மானித்துள்ளான்
என்பதாகும். அல்லது உதாரணமாக ஒருவர் திராட்சை பழம் சாப்பிடுவதாக காண்கிறார் என்றால்
அதன் விளக்கம், அவரது உள்ளத்தில்
இறையச்சம் அதிகரிக்கும்,
இறையன்பு அதிகரிக்கும்,
அவர் மீது அல்லாஹ்வின் அருள் இறங்கும் என்பதாகும். ஒருவர் வாழைப்பழம் சாப்பிடுவதாக
காண்கிறார் என்றால் அதன் பொருள்,
அல்லாஹ் அவருக்கு அனுமதிக்கப்பட்ட தூய்மையான உழைப்பற்ற 'ரிஸ்கை' வழங்க முடிவு செய்துள்ளான்
என்பதாகும்.
எனவே மனிதன் வெளிப்படையாக வாழைப்பழம்
அல்லது திராட்சைப்பழம் அல்லது மாம்பழம் உண்ணக் கூடியவராக இருப்பார். உண்மையிலேயே அவரது
ஆன்மாவில் அந்த கனிகளுடன் ஒப்புமை கொண்ட அருட்கொடைகளை
ஏற்றுக்கொள்ளும் சக்தி தோற்றுவிக்கப்படுகிறது.
கனவுகள் அசலானவையாகும். இங்கு உள்ள தண்ணீர், இங்குள்ள பால், இங்குள்ள கனிகள் அனைத்தும் மறுமை வாழ்க்கையில் கிடைப்பவைக்கு ஒத்ததாகும். அந்த அருட்கொடைகளின் வரைபடத்தை காட்டுவதற்காக இந்த கனவுகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன எனக் கூற வேண்டும். இந்த உலகம் திடப் பொருளால் ஆனது என்பதால் அவற்றிற்கு திட வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. மற்றபடி அல்லாஹ் அந்த அருட்கொடைகளினால், ஒப்பானவை இவ்வளவு சுவையாக இருக்கும் போது அசல் பொருள் எவ்வளவு சுவை மிக்கதாக இருக்கும் என்பதன் பக்கம் சுட்டிக்காட்டியுள்ளான். ஏனென்றால் ஆன்மா அதன் உணர்வின் அடிப்படையில் உடலுடன் மிக அதிக தாக்கத்தைக் கொண்டுள்ளது.
(தஃப்சீரே
கபீர், பாகம் 1, 2: 26 வசனத்திற்கான விளக்கத்தின் கீழ்)
மொழியாக்கம்: முஅல்லிம் முஸ்ஸம்மில்-தூத்துக்குடி
இவ்வுலக மறுவுலக வாழ்க்கை, இடையில் உள்ள தொடர்பை சுருக்கமாக வெளிப்படுத்தும் அருமையான கருத்து ஜஸாக்கல்லாஹ்.
பதிலளிநீக்கு