இரவுத் தொழுகைக்கு தராவீஹ் தொழுகை, தஹஜ்ஜுத் தொழுகை என பல பெயர்கள் உண்டு. ஆனால் அதிகமான மக்கள் இதில் கூறப்பட்ட ஒவ்வொரு பெயரையும் ஒவ்வொரு தொழுகைக்குரிய பெயர்களாக நினைக்கின்றனர். உதாரணமாக இஷா தொழுகைக்கு 'இஷா தொழுகை' என ஹதீஸில் பயன்படுத்தப்பட்டது போன்று 'அதமா தொழுகை' எனவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. (பார்க்க: புஹாரி; பாடம்- இஷா, அத்மா வை பற்றி) இதை வைத்து இஷா வேறு, அதமா வேறு என எவரும் புரிந்து கொள்ளமாட்டோம். அதே போன்று லுஹா தொழுகைக்கு 'அவ்வாபீன் தொழுகை' என ஹதீஸ்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. (பார்க்க: முஸ்லிம் 1361) இதை வைத்து லுஹா வேறு, அவ்வாபீன் வேறு என எவரும் புரிந்து கொள்ளமாட்டோம். நபி(ஸல்) அவர்கள் இரவில் தொழுததால் அதை 'இரவுத் தொழுகை' என அழைக்கிறோம். ஓய்வெடுத்து ஆறுதலாக தொழுத படியால் 'தராவீஹ் தொழுகை' (ஓய்வெடுத்து தொழப்படும் தொழுகை) என அழைக்கிறோம். தராவிஹ் என்ற பதம் தர்வீஹா என்ற பதத்திலிருந்து வந்த சொல் ஆகும். இதன் பொருள் ஒரு முறை இழைப்பாறுதல் பெறுதல் ஆகும். தராவிஹ் என்றால் பல முறை இழைப்பாறுதல் பெறுதல் ஆகும்.
ஆகவே தராவீஹ் என்பது தஹஜ்ஜுத் தொழுகையின் மறு பெயரே அன்றி வேறில்லை. இதுவரை நமக்கு தராவீஹ் என்றால் தஹஜ்ஜத் தொழுகையின் மறுபெயர் என்பதை அறிந்து கொண்டோம். இப்போது நாம் ஹஸ்ரத் ரசூல் (ஸல்) அவர்களின் அந்த நஃபில் தொழுகையான தஹஜ்ஜத் தொழுகை எத்தனை ரக்அத்துக்களாக இருந்தது என்பதை கீழே பார்ப்போம்:
ஹஸ்ரத் ரசூல் (ஸல்) அவர்களின் இரவு தொழுகையானது 8+3= 11 ரக்அத்துகளை கொண்டதாக இருந்தது என்பதையும் இன்னும் சில ஹதீஸ்களில் ஹஸ்ரத் ரசூல் (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகையான தஹஜ்ஜுத் தொழுகையானது 9 ரக்அத்தாகவும், ஒரு சில நேரங்களில் 13 ரக்அத்தாகவும் இன்னும் சில நேரங்களில் 7 ரக்அத்துகள் தொழுதுள்ளதாகவும் இன்னும் சில நேரங்களில் இரவின் மூன்று பகுதிகளில் ஒரு பகுதி முழுவதுமாக நஃபிலான தொழுகையான தஹஜ்ஜுத் தொழுகையை தொழுது வந்ததாகவும் கூறுகின்ற ஹதீஸ்களை நாம் ஹதீஸ் நூல்களில் பார்க்கலாம். அதில் ஒரு சில ஹதீஸை கீழே தருகிறோம்;
11 ரக் அத்:
'ரமளான் மாதத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது?' என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், 'ரமாளானிலும், மற்ற மாதங்களிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதினோரு ரக்அத்களுக்கு மேல் அதிகமாக்கியதில்லை. நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகைப் பற்றியும், நீளத்தைப் பற்றியும் கேட்காதே! பின்னர் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகைப் பற்றியும் நீளத்தைப் பற்றியும் கேட்காதே! பின்னர் மூன்று ரக்அத்கள் தொழுவார்கள்' என்று விளக்கம் அளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஸலமா (ரலி) நூல்: புகாரீ 1147, 2013, 3569
(புகாரி பாப் கியாமு லின்னபி ஸல் பில்லைல் பக் 152)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியும் எனது சிறிய தாயாருமான மைமூனா (ரலி) அவர்களின் வீட்டில் ஒரு இரவு தங்கினேன்... ....நபிகள் நாயகம் (ஸல்) அழகிய முறையில் உளூச் செய்து தொழலானார்கள். அவர்கள் செய்தது போல் நானும் செய்து அவர்களின் விலாப் புறத்தில் நின்றேன். அவர்கள் தமது வலது கையை என் தலையில் வைத்து எனது வலது காதைப் பிடித்துத் திருப்பினார்கள். (1) இரண்டு ரக்அத்கள் (2) பின்னர் இரண்டு ரக்அத்கள் (3) பின்னர் இரண்டு ரக்அத்கள் (4) பின்னர் இரண்டு ரக்அத்கள் (5) பின்னர் இரண்டு ரக்அத்கள் (6) பின்னர் இரண்டு ரக்அத்கள். பின்னர் வித்ரு தொழுதார்கள்.... அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்
(ரலி) நூல்: புகாரி 183, 992, 1198, 4571, 4572)
எனது சிறிய தாயாரும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியுமான மைமூனா (ரலி) அவர்களின் வீட்டில் ஓரிறவு தங்கினேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஷாத் தொழுது விட்டு தமது இல்லம் வந்தார்கள். நான்கு ரக்அத்கள் தொழுதார்கள். பின்னர் உறங்கினார்கள். பின்னர் எழுந்து சிறுவன் தூங்கி விட்டானா? என்று கூறி (தொழுகைக்காக) நின்றார்கள். நானும் எழுந்து அவர்களின் இடது புறம் நின்றேன். என்னைத் தமது வலது புறத்திற்கு மாற்றினார்கள். அப்போது ஐந்து ரக்அத்கள் தொழுதார்கள். பின்னர் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அவர்களின் குறட்டைச் சத்தம் கேட்கும் அளவுக்குத் தூங்கினார்கள். பின்னர் (பஜ்ரு) தொழுகைக்காகப் புறப்பட்டார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி 117, 697
இரவின் ஒரு பகுதி முழுவதும் தொழுததாக கூறும் ஹதீஸ்:
நாங்கள் ரமளான் மாதத்தின் இருபத்தி மூன்றாம் இரவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இரவின் மூன்றில் ஒரு பகுதி வரை தொழுதோம். பின்னர் இருபத்தி ஐந்தாம் இரவில் இரவில் பாதி வரை தொழுதோம். பின்னர் இருபத்தி ஏழாம் இரவில் சஹர் உணவு தவறிவிடும் என்று நினைக்கும் அளவுக்குத் தொழுதோம். அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி) நூல்: நஸயீ 1588
ஃபஜர் நேரம் வரும் வரை இரவு நேரத் தொழுகை தொழுதல் குறித்து:
1137. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் 'இறைத்தூதர் அவர்களே! இரவுத் தொழுகை எவ்வாறு?' என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் 'இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும். ஸுப்ஹை (நேரம் வந்துவிடுமென) நீர் அஞ்சினால் ஒரு ரக்அத் வித்ருத் தொழுவீராக' என்று விடையளித்தார்கள். (புகாரி)
நபி (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை பல ரக்அத்துகளை கொண்டதாக இருந்தது என்று கூறும் ஹதீஸ்:
நபி (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், 'ஃபஜ்ருடைய சுன்னத் இரண்டு ரக்அத்கள் தவிர பதினொரு ரக்அத்கள், (சில சமயம்) ஒன்பது ரக்அத்கள், (சில சமயம்) ஏழு ரக்அத்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுவார்கள்)' என்று விடையளித்தார்கள். அறிவிப்பவர்: மஸ்ரூக்,நூல்: புகாரீ 1139
ஆக நாம் இரவு நேரத் தொழுகை சம்பந்தமாக பல்வேறு ஹதீஸ்களை வாசித்து ஆராயும்போது ஹஸ்ரத் ரசூல் (ஸல்) அவர்கள் 8 ரக்அத் நஃபிலான தகஜ்ஜத் தொழுகையும் அதனுடன் மூன்று ரக்அத் வித்ரையும் மொத்தம் 11 ரக்அத் அதிகப்படியாக தொழுது வந்துள்ளார்கள் என்பதை நம்மால் அறிய முடிகிறது. அதே சமயம் மற்ற சந்தர்ப்பத்தில் நேரம் கிடைக்கும் அளவிற்கு தமது நஃபிலான தகஜ்ஜத் தொழுகையை அமைத்துக் கொண்டார்கள் என்பதையும் மேலே குறிப்பிட்டுள்ள ஹதீஸின் மூலம் அறிய முடிகிறது. எவ்வாறு இருந்த போதிலும் இது நஃபிலான தொழுகையாகும்...இதனை அதிகப்படுத்தி தொழ நினைப்பவர்கள் தொழுது கொள்வதில் எந்த தடையுமில்லை. தமது வசதிக்கேற்ப நேரத்திற்கேற்ப குறைத்து தொழுவதிலும் எந்த தவறுமில்லை என்பதை இதுவரை நாம் அறிந்ததின் மூலம் தெளிவாகிறது.
பிறகு இந்த 20+3=23 ரக்அத் தொழுகையானது எவ்வாறு வழக்கத்திற்கு வந்தது என்பதை நாம் பார்த்தோமென்றால் இதனை ஹஸ்ரத் உமர் (ரலி) அவர்கள் தமது ஆட்சியின் போது துவக்கி வைத்தார்கள் என்பதை வரலாற்றை படிப்பதின் மூலம் நம்மால் அறிய முடிகிறது.
இந்த இரவு நேரத் தொழுகையை இஷாவிற்கு பிறகு அதாவது இரவின் முதல் பகுதியில் ஹஸ்ரத் உமர் ரலி அவர்கள் இந்த இரவு நேரத் தொழுகையின் மூலம் அனைவரும் பலன் பெற வேண்டும் என்பதற்காக பிரத்தியேகமாக ரமழான் மாதத்தின் போது இஷாவிற்கு பிறகு ஜமாஅத்தாக தொழுது பலன் பெறுவதற்கான வாய்ப்பை அமைத்து கொடுத்தார்கள். பலரால் தஹஜ்ஜத் தொழுகையை கடைபிடிக்காது சிறப்பு மிகு இந்த ரமழான் மாதத்தின் அருட்களிலிருந்து விடுபட்டுவிடக்கூடாதே என்ற ஒரே காரணத்தினால் ஹஸ்ரத் உமர் (ரலி) அவர்கள் மக்களின் நலன் மற்றும் அவர்களுக்கு அல்லாஹ்வின் அருளை நாடி இவ்வாறான ஏற்பாட்டை செய்துள்ளார்கள்.
ஹஸ்ரத் உமர் மற்றும் உஸ்மான் ரலி அவர்களின் காலத்தில் மக்கள் குர்ஆனை ஓதும்போது முக்ததியாக நிற்கும் மக்கள் நீண்ட நேரம் நின்று சிரமப்படாமல் இருப்பதற்காக 20 ரக் அத்தாக அமைத்தார்கள். இதன் மூலம் ஒவ்வொரு ரக் அத்திலும் வசனங்கள் குறைவாகவே ஓதப்பட்டது. தொழுகையும் எளிதாக இருந்தது. இவ்வாறு ஒவ்வொரு இரு ரக்அத்திலும் சிறிது ஓய்வு பெற்று இழைப்பாறி தொழுது வந்ததின் காரணத்தினால் இந்த இரவு நேரத்தொழுகையான தஹஜ்ஜத் தொழுகைக்கு தராவீஹ் என்ற பெயர் இஸ்லாத்தில் இடம்பெற்றது.
ஆகவே இன்றய காலத்தில் ரமளான் மாதம் எட்டியதுமே இஸ்லாமிய பெருமக்களின் மத்தியில் தராவிஹ் எட்டா இருபதா என்று நிலவி வரும் வாதம் வீணான வாதமாகும்....ஒருவர் எட்டு + மூன்று = பதினொன்று ரக்அத் தொழுகிறார் என்றால் அதுவும் கூடும், காரணம் ரஸூல் ஸல் அவர்களின் அதிகமான நடைமுறை இதுவாக இருந்து வந்தது. ஒருவர் 20 + 3 = 23 ரக்அத் தொழுது வருகிறார் என்றால் அதுவும் ஆகுமானதே காரணம் இரவு நேரத் தொழுகை நஃபிலான தொழுகை ஆகும் அதனை எத்தனை வேண்டுமானாலும் தொழலாம் என்பதையும் நாம் மேலே குறிப்பிட்டுள்ள ஹதீஸின் மூலம் அறிய முடிகிறது. மட்டுமல்லாமல் ஹஸ்ரத் உமர் ரலி அவர்களின் காலத்தில் மக்களின் எளிமைக்காக இந்த 20 ரக்அத் ஏற்படுத்தப்பட்டது ஆகும். (ஆதாரம்: நஸபுர் ராயஹ் ஃபீ தக்ரீஜு அஹாதீஸுல் ஹிதாயஹ் பாகம் 2 பக்கம் 154 | ஆன் லைனில் இதை பார்க்க http://library.islamweb.net/newlibrary/display_book.php?bk_no=9&ID=29&idfrom=478&idto=493&bookid=9&startno=8 ) நூலின் மூல பிரதி கீழே
ஆகவே நமது வாழ்வில் அனைத்து இரவுகளிலும் குறிப்பாக ரமளான் மாதத்திலும் இந்த இரவு நேரத்தொழுகையை நாம் அதிகம் அதிகமாக கடை பிடித்து வர வேண்டும். ஹஸ்ரத் ரசூல் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்:
ரமளானில் யார் நின்று வணங்குகிறாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும் என்பது நபிமொழி. அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)நூல்: புகாரீ 37, 2008, 2009
ஒரு பக்கம் ரசூல் (ஸல்) அவர்கள் "'நமது கட்டளையில்லாமல் எந்தச் செயலையேனும் யாரேனும் செய்தால் அது நிராகரிக்கப்படும்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு எச்சரிக்கை செய்துள்ளனர்." அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: முஸ்லிம் (3243) என்று கூறியிருந்தாலும். நஃபிலான தொழுகையை பற்றி ரசூல் (ஸல்) அவர்கள் இந்த தொழுகையை இத்தனைதான் நீங்கள் தொழுது ஆக வேண்டும் என்றும் எங்குமே கட்டளை இட்டதாக நம்மால் காண இயலாது. ஆகவே இரவு நேரத் தொழுகையான தஹஜ்ஜத் (இதன் மறுபெயர் தராவீஹ்) நாம் வாழ்வில் நமது தர்ஜா கூடுவதற்காக இறை நெருக்கத்தை பெற்று அவன் வகுத்த "மகாமே மஹ்மூதை" (குர்ஆன் 17:80) பெறுவதற்காக முடிந்த அளவு கடை பிடித்து வர வேண்டும். ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) வாக்களிக்கப்பட்ட மசீஹ் & மஹ்தி அவர்கள் இரவு நேரத்தொழுகையை பற்றி கூறும்போது கூறுகின்றார்கள்: " நீங்கள் தஹஜ்ஜத் தொழுகையை கடைபிடித்து வாருங்கள். இரவு நேரத்தில் அதிகமாக தொழ முடியாவிட்டாலும் குறைந்தது இரண்டு ரக்அத் மட்டுமாவது தொழுது வாருங்கள்...." என்று கூறுகின்றார்கள்.
அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் தராவீஹ் தொழுகையை ரஸூல் ஸல் அவர்கள் அதிகமாக பேணி வந்த அந்த நடைமுறைக்கு அதாவது 8+3=11 ரக்அத்துக்கே முன்னுரிமை கொடுத்து அந்த நடைமுறையை பேணி வருகிறது. இல்லா மாஷா அல்லாஹ்.
கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None